‘‘தூக்குல போடணும் சார் அப்பத்தான் திருந்துவாங்க முஸ்லீம் நாடுகளின் மாதிரி கைகால்கள் துண்டிக்கணும் அப்பத்தான் பயம் ஏற்படும்’’

இப்படியான குரல்கள் தற்போது பரவலாக கேட்கத் துவங்கியுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் போதும் அரசுக்கு எதிரான செயல்பாடுகள் நடக்கும் போது தேச விரோதம் என்ற நோக்கிலும் தூக்குத் தண்டனை பற்றி விவாதிக்கப்படுகிறது. ஊடகங்களும் தங்களது ஊடக பரபரப்புக்கு இது போன்ற செய்திகளை முன்னெடுத்து வருகின்றனர். அதே போல தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல்களும் ஒலித்துக் கொண்டே உள்ளன.

தற்போது ஒரு அவசரச் சட்டம் மிக அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டமாக அது உள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத இக்காலகட்டத்தில், மிக கடுமையான முறையில் தண்டனை குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. எனவே மத்திய அமைச்சரவை கேட்டு கொண்டதற்கிணங்க குடியரசுத் தலைவரும் இச்சட்டத்திற்கு தமது ஒப்புதலை தெரிவித்துள்ளார்.

 இந்த அவசரச் சட்டத்தின்படி, சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு இனி அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.

 பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை விசாரிப்பதற்காக, மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றின் ஆலோசனையுடன் புதிதாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

 மேலும் மாநிலங்களில் சிறப்பு தடயவியல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.

 சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் விரைவில் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

 மேற்கண்ட விதிப்படி 2 மாதங்களில் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும்.

 மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது.

இவ்வாறாக கடுமையான விதிகள் இந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை மேலோட்டமாக படிக்கும் நமக்கும் சரியான கருத்துருவாகவே தெரியும். ஆனால் இதனை வேறொரு பார்வையுடன் அணுக வேண்டும். ஒரு குற்றம் நடந்துவிட்ட நிலையில், அக்குற்றத்தின் மீது அரசு இயந்திரங்கள் (காவல்துறை, மாநில அரசு, வருவாய்த் துறை) நடவடிக்கை எடுக்காவிட்டாலோ, மக்கள் முறையீடு செய்வதற்கு கமிசன்கள் உள்ளன. அவை மக்களின் அடிப்படை உரிமைகளை, ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்து நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவது இந்த அமைப்புகளின் பணியாகும். இந்த அடிப்படையில் பெண்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை சரியான முறையில் அணுகி நீதி கிடைக்கச் செய்வது மகளிர் மனித உரிமை ஆணையம் ஆகும். ஆக அப்படியான ஆணையத்திற்கு தலைவராக திருமிகு.ஸ்வாதிமாலிவால் உள்ளார். இவர் பெண்குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக ஈடுபடும் நபர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் மேற்கண்ட தூக்குத் தண்டனை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவுடன் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஸ்வாதிமாலிவால் தனது போராட்டத்தை கைவிட்டார்.

இவ்வாறாக பா.ஜ.க. நடுவணரசு மேற்கண்ட வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, பா.ஜ.க. இது போன்ற பெண்கள் மீதான வன்முறைகளில் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது எனக் காண்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள முன்னேற்பாடுகளுக்கு மாறாக பா.ஜ.கவினர் ஈடுபடுவதாக செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. காஷ்மீரில் உள்ள கதுவா என்னுமிடத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் பா.ஜ. கட்சியை சார்ந்தவர்கள் என நாம் அறிய முடிகிறது. அதே போன்று இச்சம்பவத்திற்கு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக, பா.ஜ.க.வின் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பா.ஜ.க.வைச் சார்ந்த லால்சிங், சந்தர் பிரகள் ஆகிய இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் மீது பா.ஜ.க. எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் காஷ்மீர் முதல்வர் மெஷ்பூபா முஃப் கொடுத்த நெருக்கடியின் காரணமாக இருவரும் பதவி விலகினர். அதுவும் பா.ஜ.க. காஷ்மீர் கூட்டணி அரசில் பங்கேற்றிருக்கும் நிலையில்தான் இந்த பதவி விலகலும் நடந்துள்ளது.

ஆக இவ்வாறாக இரட்டை நிலைப்பாட்டை பா.ஜ.க. அரசு எடுக்கிறது. ஒருபுறம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அவசரமாக நிறைவேற்றுவதும், மறுபுறம் அவர்களால் கொணரும் சட்டத்திற்கு உரிய நபர்களுக்கு ஆதரவாக நிற்பதும், சரியா வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அனுமதிக்கவே முடியாத ஒன்றாகும்.

மேலும் மரண தண்டனை மூலமாக ஒரு குற்றத்தை ஒரு மனித விரோத செயல்பாட்டைத் தடுத்திட முடியுமா அல்லது குறைக்கத்தான் முடியுமா? நாம் தீர்க்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அப்படியானால் முற்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறைந்திருக்க வேண்டும், பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் இல்லை என்ற பதிலே வருகிறது.

கருத்தியல் ரீதியாக பெண் என்பவள் பலவீனமானவள், ஆணுக்கு கீழானவள் என்ற எண்ணம் அனைவர் மனத்திலும் வேரூன்றி போயுள்ளது.

அது குழந்தை முதல் பெரியவர் வரை இந்த எண்ணமயக்கத்திற்கு ஆட்பட்டுள்ளோம். இது வாழ்வியல் சிந்தனையாகவும் மாறிவிட்டது. இது ஒரு சாராரை மகிழ்விக்கவும் ஒரு சாராரை  துன்பத்திற்கு ஆளாக்கவும் செய்கிறது. ஆண்கள் தனக்கு ஒரு அடிமை நிலையில் ஒரு பெண் கிடைத்ததற்கு மகிழ முடிகிறது. பெண் சிந்தனை வயதில் ஆக்கப்பூர்வமாக தான் இப்படி அடிமை நிலையில் உள்ளோமே என துன்புறும் நிலையில் உள்ளார்கள். ஆகவே இந்த கருத்தியல் மாந்தர் இனத்தின் இருபாலரை சிந்தனை மயமாகிவிட்டது. இத்தகைய ஆணாதிக்கக் கருத்தியல் பெண்கள் மீது வன்முறையாக வன்புணர்வாக பரிணமிக்கிறது. இத்தகைய வன்முறை இந்திய ஒன்றிய சமூக அமைப்பில் மிகுதியாகக் காணப்படுகிறது. இத்தகைய கருத்தியலை நாம் அடையாளம் கண்டு அழித்தொழிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

முதலில் நாம் நமது அறிவுக்கு விரோதமான கருத்தியல்களை அடையாளம் காண வேண்டும். பின்னர் நீக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். இதனை தனிமனிதர்கள் பலர் சிந்தித்துள்ளனர். தந்தை பெரியார் தான் ஒரு ஆணாக இருந்தாலும் பெண்களின் துயரங்களை அவர்கள் துயரும் வழிவகைகளை எளிமையான முறையில் நம் கண் முன் நிறுத்துகிறார். மேலும் அதனை நீக்கும் வழிமுறைகளையும் சொல்கிறார். மேலும் நாமும் இத்தகைய ஆதிக்கக் கருத்தியலை உணர்ந்து அகற்ற மனமுவந்து முன்வர வேண்டும்.

ஆகவே நிர்பயா முதல் கதுவா சம்பவம் வரை நாம் பார்த்தோமானால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவற்றை நாம் கடுமையானச் சட்டங்கள் மூலம் மட்டும் தடுத்துவிட முடியாது. மக்களிடையே மனமாற்றத்தின் மூலமாக நீடித்த தீர்வை எட்ட முடியும். மரண தண்டனைகள் மட்டுமே தீர்வைத் தராது. ஆகவே நிரந்தர தீர்வு நோக்கி நாம் பயணிப்போம். ஒரு போதும் மரணதண்டனை பயன்தராது.