அந்த ஒத்தையடி பாதை

வழியாத்தான் தோளில் தூக்கி

வச்சிட்டு பாட்டி வீட்டுக்கு

நடந்தே கூட்டிட்டு போனாரு அப்பா!

ரங்கசாமி ரைஸ்மில்லருந்து

குறுக்குவழியா வரப்புமேல

நடந்துபோனா பட்னங்காத்தா

கோயிலுக்கிட்ட அந்த செம்மண்

பாதையை தொட்டுறலாம்!

மேற்கால ஏரிக்கரையிலிருந்து

கெழக்கால எதங்காடு வரைக்கும்

கரும்புத்தோட்டமும் பச்சைவயலும்

கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்;

பிச்சய்யன் பம்புசெட்ல நிற்காம

மோட்டார் எறைக்கும்!

கன்னிமாரு கோயிலுகிட்ட

அந்த பெரிய ஓடை கரையில

மஞ்ச நெறத்துல குலைகுலையா

பழுத்துருக்குற ஈச்சம்பழமும்

பக்கத்துல கொத்து கொத்தாய்

காய்ச்சிருக்கிற நாவப்பழமும்

நாக்குல எச்சில் ஊற வைக்கும்!

அந்த ஆள் அரவமற்ற இடத்துல

மண்குதிரைமேல உட்காந்துருக்கிற

அய்யனார்சிலை பகல்ல போனாக்கூட

நம்மள அப்படி பயமுறுத்தும்;

சிலநேரம் கண்ணமூடித்தான்

அய்யனாரக் கடப்போம்!

தூரத்துல கலக்கா செடி

மஞ்சள் நெறத்துல கொல்லை

முழுக்க பூ எடுத்திருந்தது; இன்னும்

பத்து பதினைஞ்சி நாள்ள

பிஞ்சி எறங்கிடும்னு அப்பா

சொல்லிட்டே நடந்தாரு!

யார் வீட்டு கொல்லைனுகூட

தெரியாது;ஆனா மனசு முழுக்க

கொண்டாட்டம்!

கூட்ரோடு வந்ததுக்கு அப்புறம்தான்

தார்ரோடு கண்ணுல பட்டுச்சு;

அதுகூட அங்காங்கே என்

சட்டைபோல கிழிசலா இருந்துச்சு;

எனக்கு பரவால்ல சட்டை இருந்துச்சு; அப்பாவுக்கு தோள்ல

துண்டு மட்டும்தான்!

மாணிக்கொல்லி மோடு வர்றப்போ

தோள்ல இருந்த என்ன

கீழ எறக்கிவிட்டாரு அப்பா; 'கொஞ்சம்

தூரம் நடந்து வாடானு"

மூச்சிறைக்க நடந்த அப்பாவின்

விரல்பிடித்து அந்த மேட்டைக்

கடந்தோம்!

ரோட்டோரத்துல இருந்த

புளியமரத்துல சடைசடையா

தொங்குது புளியம்பழம்;

கீழேயெல்லாம் வேற விழுந்து

கெடக்குது;தோள்ல இருந்து

துண்டுல அப்பாதான் பொறுக்கி

போட்டாரு;" உறிச்சி நறுக்குணா

ஒரு ரெண்டு கிலோ தேறும்ணு"

சொல்லிட்டே மொடையூர் கிட்ட

போயிட்டோம்!

ஊர நெருங்க நெருங்க

டங் டங்னு ஒரே சத்தம்; என்னப்பா

சத்தம் கேட்டதுக்கு,"சாமி சிலை

செதுக்குறாங்கனு" சொன்னாரு

"கந்தன் சிற்ப நிலையம்" போர்டு

துருப்பிடித்து காட்சியளித்தது!

அப்போதான் தென்னங்கீத்து

பங்க் கடைல ரெண்டு கலர்சோடா

வாங்கி குடுத்தாரு நாலாணாவுக்கு!

தூரத்துல போறப்பவே அப்பாதான்

கைய காட்டி சொன்னாரு; "அதான்

தே(வி)காபுரத்து மலைன்னு; மலை

உச்சில கோயிலு ஒண்ணு

தெரிஞ்சது; கால் வலிக்க நாந்தான்

கேட்டேன்; "பாட்டி வீடு கிட்ட வந்துடுச்சானு," இன்னும் கொஞ்சம்

தூரம் சந்தமோடு வந்துச்சுனா அப்புறம் உங்க பாட்டி வீடுதான்னு"

சொன்னாரு!

"மலையூர் மம்பட்டியான்" போஸ்டர்

சேகர் திரையரங்கத்தின் மண்சுவரில்  கிழிந்தும்

கிழியாமலும் தொங்கிக்கொண்டிருந்தது;

மனதில் ஏக்கம் வந்து

பற்றிக்கொண்டது!

சின்னசின்ன குன்றுகள்;

மலையின் சுனைநீர்;

காட்டுப்பூக்கள்;

அடர்ந்த மஞ்சிப்புல்

கண்ணுக்கெட்டும் தூரம்

பச்சைவயல்;

எங்கிருந்தோ வரும்

ஒற்றைக் குயிலோசை;

சாலையெங்கும் கொன்றை

மரம்;

நீர் நிரம்பிய கிணறு;

கொக்குகள் மேயும்

சேடைகள்!

இதோ இவைகளைக் கடந்து

பாட்டிவீடு!

செம்மண் சுவரு

பனைஓலை கீற்று

களிமண் குதிரு

விறகுப் பரண்

அவிஞ்சி மரம்

பாட்டனின் பரம்பரைச் சொத்து!

இதோ எங்கள்தேசம்

டிஜிட்டலை நோக்கி

பயணிக்கிறது!

ஏழ்மையை துடைத்தெறிய

நேரமில்லை!

ஏழையை துடைத்தெறியுங்கள்!

இயற்கையை காக்க

நேரமில்லை!

கொன்று புதையுங்கள்!

இதோ எட்டுவழிச்சாலையில்

கொள்ளை போகிறது!

எங்கள் பாட்டனின் ஓலைக்குடிசை!

தாகம் தீர்த்த காட்டாறு!

பசியளந்த பச்சைவயல்!

மழை தந்த மலைகள்!

வழிமறித்த பனஞ்சாலை!

நிழல்தந்த தென்னந்தோப்பு!

மாமரத்து தூளிகள்!

ஆலமரத்து ஊஞ்சல்கள்!

மரங்கொத்தியின் பொந்துகள்!

ஒவ்வொன்றாய் அல்ல

ஒட்டுமொத்தமாய்!

அம்பானி - அதானி - வேதாந்தா

டாடா - பிர்லா - கோயங்கா

மாளிகைகளில் புதைந்து

போனது எமது தேசமும்

எங்கள் வாழ்வும்!

எட்டுவழிச்சாலை

இனி யாருக்கிங்கே தேவை?

கொட்டு பறைமேளம் இனி

துளிரட்டும் நம் வாழ்க்கை!