• ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!: தமிழ்நதி


  • கருத்துப்புலிகள் அல்லது சற்றேறக்குறைய காகிதப்புலிகள்: ஆதவன் தீட்சண்யா


  • ஆதவன் தீட்சண்யா - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு: டி.அருள் எழிலன்


  • பரமக்குடி முதல் பாரீஸ் வரை வாழும் உலகத்தமிழ் எழுத்தாளர்களே!

    அது என்ன? மதுரையில் நடைபெற்ற இருநாள் இலக்கிய கூட்டத்தின் முடியப் போகும் கடைசி நிமிடங்களில் தமிழ்நதிக்கும், ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடைபெற்ற உரையாடலில் இருந்தே அனைத்தையும் துவக்குகிறீர்கள்! இக்கூட்டத்தில் முதல் நிமிடத்திலிருந்து நடந்ததை, நடக்க வைக்கப்பட்டதை உலக்குச் சொல்ல ஒரு எழுத்தாள சுயமரியாதைச் சிங்கமும் இல்லாமல் போய்விட்டதால் நேர்ந்த விபத்தய்யா இது.

    Leena Manimekalaiநான் ஒன்றும் சிங்கமல்ல. ஆனால் அசிங்கத்தை அசிங்கம் என்று கூறமுடிகிற அளவு தைரியமுள்ள சராசரி மனிதன். இலக்கியத்தை அதன் மேன்மைக்காகவும், உன்னதத்திற்காகவும் வாசித்துக் கிடப்பவன். சக மனிதன் மீதான அன்பை, அக்கறையை, நேசிப்பை பகிரும் வழியென இலக்கியச் செயல்பாட்டைக் கருதுபவன். ஆனால் இன்றைய தமிழ்ச்சூழலில் இதுபோன்ற மதிப்பீடுகள் எல்லாம் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது. அப்படி ஆவதற்கு மூன்றாம் தர எழுத்தாளர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்றால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்து எனது மூச்சு, உண்ணும் உணவு, மாலை மது, காலைக்கடன் என வசனம் பேசி, கிடைத்த பத்திரிக்கைகளில் எல்லாம் எழுதி, வாய்க்கிற மேடைகளில் எல்லாம் பேசி வருகிற எழுத்தாள பெரும்புள்ளிகளின் செயல்பாடாக இது இருக்கிறது. இந்த இலக்கிய வேடதாரிகளைப் பற்றி இப்பொழுது பேசவில்லை என்றால் எப்பொழுதுதான் பேச?

    சரி விஷயத்திற்கு வருவோம். மூன்று வாரங்களுக்கு முன்பு தமிழ்கவிஞர்கள் இயக்கத்தின் சார்பில் வால்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் "தேவேந்திரபூபதியின் பெயரில் வருகிற கவிதைகள் அனைத்தும் யவனிகா ஸ்ரீராமால் எழுதிக்கொடுக்கப்படும் கவிதை. இதனை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்" என்று கவிஞர் லீனாமணிமேகலை பேசினார். தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக எழுத்தாள நண்பர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைத் தான் லீனாமணிமேகலை முதன்முறையாக பொதுசபையில் பேசினார். மணி கட்டி வலம் வந்த பூனையைப் பார்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி விவாதித்தனர். தமிழ் இலக்கிய நடவடிக்கைகளின் மீது காறித் துப்ப முடியாமல் எச்சிலை விழுங்கியபடி அக்கூட்டம் முடிந்தது.

    கூட்டம் முடிந்து இருவாரங்களுக்குப் பிறகு, தேவேந்திரபூபதியின் கடவு அமைப்பால் மதுரையில் இருநாள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இலக்கிய மோசடி, கையாலாகாத்தனம், கீழ்மையின் உச்சபட்ச செயல்பாடு என எவ்வார்த்தையிலும் சொல்ல முடியாத அருவருப்பூட்டும் ஒரு குற்றச்சாட்டினை சம்பந்தப்பட்டவர்களும் மற்றும் சில எழுத்தாள பெருந்தகைகளும் எப்படிக் கையாண்டார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் தமிழ்ச்சூழலில் சத்தமே இன்றி நடைபெற்று வருவது தெரிய வருகிறது.

    ஒரு கவிஞன் தன்னுடைய கவிதைகள் இன்னொருவனால் எழுதிக் கொடுக்கப்படுவது என்று பொதுவெளியில் விவாதிக்கப்படுவதை அறிய நேரும்போது எப்படி துடித்துப்போவான் என்பதை அனைவராலும் யூகிக்க முடியும். ஆனால் துடிப்பின் துளிகூட சம்பந்தப்பட்டவரிடம் இல்லை என்பதை கடவு கூட்டத்திற்கு வந்த அனைவரும் அறிவர். எழுதிக்கொடுப்பதாக சொல்லப்படுகிற கவிஞனோ, ‘பாவம் என்ன செய்வான்’ என்ற தோற்றத்துடனே சொல்லுவதை கிளிப்பிள்ளை எனக் கேட்டு அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

    "யவனிகா ஸ்ரீராம், தான்தான் பூபதிக்கு கவிதை எழுதிக்கொடுப்பதாக சொன்னார்" என்பதுதான் கவிஞர் லீனாமணிமேகலை முன்வைத்த வாதம். வால்பாறை கூட்டம் முடிந்து இத்தனை நாள் ஆகியும், இன்றுவரை யவனிகாஸ்ரீராம் இந்த குற்றச்சாட்டிற்கு ஒரு மறுப்போ, விளக்கமோ, கண்டனமோ எதையும் தெரிவிக்கவில்லை. பத்திரிகைகளில் எழுத்துப்பூர்வமாக கூட சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாம். கடவு கூட்டத்தில் சும்மாக்காச்சுமாவது ஒரு வார்த்தை பேசியிருக்கலாம்; பேசவில்லை. (கவிஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள் என்று உலகம் இன்றளவும் நம்புவதற்கு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது) சம்பந்தப்பட்ட மற்றொருவரான தேவேந்திரபூபதியும் அப்படியே.

    ஆனால் இதில் என்ன விஷேசம் என்றால் இடையில் நுழைந்த இரண்டு பேர் காட்டிய ராஜவிசுவாசம்தான் அனைவரையும் வாயடைக்க வைத்தது. குற்றச்சாட்டிற்கு சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் வாயைப் பொத்திக்கொண்டிருக்க, இரண்டு பீடாதிபதிகள் விஷயத்திற்குள் நுழைந்தார்கள். ஒருவர் காசு கண்ணன், "பூபதி, அவர் கவிதையை அவர்தான் எழுதுகிறார். அதனால்தான் நாங்கள் காலச்சுவடில் போடுகிறோம்" என்று நற்சான்றிதழ் வழங்கியதும், அடுத்து வந்த ஆதவன் தீட்சண்யா "தர்மபுரியில் அவர் இருந்தபோது பேப்பரும், பேனாவும் எடுத்து அவர் எழுதுவதை நானே பார்த்திருக்கிறேன். எனவே, அவர் கவிதையை அவர்தான் எழுதுகிறார்." என்று அதைவிட பெரிய சான்றிதழை வழங்கி அமர்ந்தார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த என்னைப் போன்ற பலரும் அதிர்ந்து போனோம்.

    யார் எழுதிய கவிதை யாருடைய பெயரில் வருகிறது என்பது இவர்கள் இருவரையும் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி அல்ல. இந்த கடவு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயமும் அல்ல. எவ்வகையும் சம்பந்தம் இல்லாத இவர்கள் இப்படி தானே முந்திக்கொண்டு வந்து பதில் சொல்ல வேண்டியதற்கான காரணத்தை அரங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் கிசுகிசுத்தபடி பேசிக்கொண்டார்கள்.

    காலச்சுவடுக்கும் கடவுக்குமான உயர்தினை மற்றும் அஃறினை சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் ஊரறிந்தது. ஆனால் புதுவிசைக்கும் கடவுக்குமான கொடுக்கல் வாங்கல்கள் இனிமேல்தான் ஊரறிய வேண்டியுள்ளது. எப்படியோ மனு ஆதரவாளனையும், மனு எதிர்ப்பாளனையும் மனுவின் மச்சினிச்சி லட்சுமி ஒன்றுசேர்த்து விட்டாள் போங்கள்.

    இவ்விரு இலக்கிய நிகழ்ச்சிகளும் அதனை ஒட்டி நடைபெறும் விவாதங்களும் என் மனதில் எழுப்பிய கேள்விகளை கீழே கொடுக்கிறேன். இது ஆதவனின் பதிலுக்கானதோ அல்லது சம்பந்தப்பட்ட மற்ற எழுத்தாளர்களின் பதிலுக்கானதோ அல்ல. கேட்கப்படாமலே போய்விடுகிற கால அவமானத்தின் சாட்சியாக நானும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக.

    1. கடவுக்கூட்டத்தில் தேவேந்திர பூபதியின் கவிதைத்தொகுப்பு அரங்கத்திற்கு தலைமை தாங்கிய ஆதவன் அவர்களே, ‘வால்பாறை கூட்டத்தில் பகிரங்கமாக லீனாமணிமேகலையும், தமிழகம் முழுவதும் பல்வேறு எழுத்தாளர்களும் பேசி வருகிற இக்குற்றச்சாட்டைப் பற்றி பூபதியும், யவனிகாவும் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்’, என்றல்லவா நீங்கள் பேசியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் நீங்களாக முன்வந்து ஏன் சாட்சியம் கூறினீர்கள்? பிடித்து வரப்பட்ட சாட்சியத்திற்கு கொடுக்கப்பட்ட கூலி என்ன?

    2. இரண்டாம் நாளில் மதிய அமர்வில் நடைபெற்றிருக்க வேண்டிய கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள் மீதான கருத்துரை திடீரென காலை அமர்வுக்கு மாற்றப்பட்டு அவர்கள் இருவர் மட்டுமே மதியஇடைவெளி வரை பேசி முடித்ததும், அன்று பேசப்பட வேண்டிய மீதமுள்ள 8 நூல்களும், சாப்பாட்டிற்குப் பின் ஒரு மணி நேரத்திற்குள் சடங்கு போல அவசர, அவசரமாக பேசப்பட்டதைப் பற்றியும் நீங்கள் ஏன் நிறைவுரையில் எதையும் சொல்லவில்லை. உங்கள் ஜனநாயக, சுயமரியாதை மரபுகள் எங்கே போயின? புதிய இளம் எழுத்தாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? கனிமொழி நடத்திய சங்கமத்திற்குப் போய் ஜனநாயக போர்க்கொடி தூக்கினீர்களே, அதைவிட இது என்ன மேலானதா? செல்வப்புவியரசு நிகழ்ச்சிநிரல் பட்டியலில் இடம்பெறாத படைப்பாளர்கள் சிலரின் பெயரைச் சொல்லி, இவர்களின் படைப்புகள் ஆய்வுக்கு எடுக்கப்படாதது இலக்கிய மோசடி என தனது கருத்துக்களை வெளிப்படையாக அரங்கில் பதிவு செய்தார். அந்த அறிவு நாணயத்தை பெரும்புரட்சியாளரும், முற்போக்கு சிங்கமுமான நீங்கள் எங்கு தொலைத்தீர்கள்? கண்ணுக்குத் தெரியாக மனுவை எதிர்ப்பது எளிது நண்பரே, கண்ணுக்குத் தெரிகிற மனிதர்களின் அராஜகத்திற்கு எதிராக சின்னதாகவேனும் முனங்க கற்றுக்கொள்ளுங்கள். வேறெதற்கும் பயன்படாவிட்டாலும் உங்கள் முகத்திற்கோ, முகமூடிக்கோவாவது அது பயன்படும்.

    3. தமிழ்நதி சேலத்திலிருந்து திருச்சி வரும் பயணத்தின் பொழுது, உங்களிடம் பூபதியின் நடவடிக்கைகள் குறித்து கூறியதாக நீங்கள் உங்கள் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதையே உண்மை என்று எடுத்துக் கொள்கிறேன். தமிழ்நதியின் வார்த்தைக்குப் பின்னால் இருந்த வலியை, உங்களால் ஏன் உணர முடியவில்லை? எழுத்தாளப் பெருந்தகையாகக் கூட வேண்டாம்; ஒரு பாமரனாக இருந்தால் கூட அதனைப் புரிந்து கொண்டிருக்க முடியுமே. எவ்வளவு தோழமையுடன் அவர், இவ்விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார்? அதற்கு நீங்கள் எவ்வகையில் உண்மையாக நடந்துள்ளீர்கள்? உங்கள் ஆத்ம நண்பர் பூபதியிடம் இதைப்பற்றி என்றேனும் கேட்டதுண்டா? அல்லது உங்கள் கட்சியின் மாதர் அமைப்பில் சொல்லி போராடச் சொன்னதுண்டா? எதுவுமில்லை. சரி, உங்கள் பெண்ணுரிமைப் போராட்டம் அத்துடன் முடிந்துவிட்டால் கூட பரவாயில்லை. இன்று தமிழ்நதி உங்களைப் பற்றி விமர்சித்துவிட்டார் என்றவுடன் அதைத் தூக்கிப் போடுகிறீர்களே, அருவருப்பாக இல்லை!

    Devendra Boopathyதமிழ்நதி சொல்வதைப் போன்றே பூபதி நடப்பவராக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒன்றும் அவ்வளவு கேவலமானவர் அல்ல, உங்களைப் போல.

    4. கவிஞர் தமிழ்நதி அவர்களே, பூபதியைப் பற்றி நீங்கள் சொன்னதாக ஆதவன் குறிப்பிட்டுள்ளதை "அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்ற ரீதியில் பதில் சொல்லி பட்டும்படாமல் தப்பித்திருக்கிறீர்களே, ஏன்? தமிழின் நவீன இலக்கியவாதிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் கும்பலைச் சார்ந்த அனைவராலேயும் இந்த உரையாடலின் முன்பின் நிகழ்வுகளை எளிதில் யூகிக்க முடியுமே. அப்படியிருந்தும் நீங்கள் ஏன் இப்படி பதில் சொன்னீர்கள் என்றுகூட கேட்க மாட்டேன். எப்படி இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்து பங்கெடுத்தீர்கள் என்பதுதான். அறம் சார்ந்த செயல்பாடு பற்றி அதிகம் பேசுவதால்தான் உங்களிடம் இக்கேள்வியை வைக்கிறேன்.

    "யார் அம்பாளா பேசுறது?" என்று ஆதவன் பதில் சொன்னபோது அதிர்ந்து போய்விட்டேன் என்று எழுதியுள்ளீர்களே, இலங்கையில் நடப்பது இனஅழித்தொழிப்பே இல்லை என புதுவிசையில் பேட்டி கொடுத்த நடராஜ சுசீந்திரனின் பேட்டியை தேவேந்திர பூபதியின் வீட்டில் வைத்துத்தான் ஆதவன் எடுத்திருக்கிறார். இது புதுவிசை இதழிலும், இணையத்திலும் பதிவாகியுள்ள விஷயம்தான். ஆதவனைப் பார்த்து பொய்யாகவேனும் புன்னகைக்க முடியாது என்று நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்து, நாங்கள் புன்னகைக்கிறோம். அவ்வளவு ரோஷம் இருக்கிற ஒரு நபரின் செயல்பாடு, உங்கள் நடவடிக்கைக்கு நேரெதிரானதாகத்தான் இருந்திருக்கும். பேட்டி கொடுத்த நபரை விட்டுவிட்டு இடம் கொடுத்த நபரைப் பற்றி பேசுவது என்ன நியாயம் என்று எதுவும் தெரியாதவர் போல் எதையாவது எழுதி, மீண்டும் வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

    பூபதியால் நடத்தப்பட்டு, ஆதவனால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று "அம்பாளா பேசுவது?" என்று அதிர்ச்சியுறுவதாகவெல்லாம் கதை கட்டாதீர்கள். கடவு நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றதற்கான ஒரு காரணத்தை நீங்கள் சொல்ல முற்பட்டால் கூட மேலும் அம்பலப்படுவீர்கள். எழவு வீடோ, கல்யாண வீடோ எனக்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற அணுகுமுறைதான் உங்களுடையது போலும். இந்த அணுகுமுறையை வைத்துக்கொண்டு இவ்வளவு உணர்ச்சிவசப்படக்கூடாது கவிஞரே.

    தமிழ்நதி, ஆதவன் தீட்சண்யா, அருள்எழிலன் இவர்கள் எழுதியுள்ள கட்டுரைக்கு வருகிற பின்னூட்டங்களில் புலிகளிடம் காசு வாங்கி, சொத்து சேர்த்து, ஊர் சுற்றுபவர்கள் யார்? இலங்கை அரசிடம் காசு வாங்கி, சொத்து சேர்த்து, ஊர் சுற்றுபவர்கள் யார் என்பது குறித்து விவாதப்பட்டியல் நீள்கிறது. "ஏதேதோ" காரணத்திற்காக உள்ளூர் இலக்கிய மோசடிகர்த்தாக்களிடம் காசு வாங்கி, அவர்களுக்காக அளவுகடந்த விசுவாசத்துடன் செயல்பட்டு நற்சான்றிதழ் வழங்கி, வாழ்த்து சொன்னவர்கள் வாங்கிய மற்றும் வாங்குகிறவர்கள் பற்றிய விபரங்கள் அமுங்கிப் போய்கிடக்கிறது. இருக்கட்டும், காசு கண்ணனுக்கு எத்தனையோ ட்ரஸ்ட்டுகளை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆதவனுக்கோ விசையை நடத்தி விழாவைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. நம்மைப் போன்றவர்களுக்கோ இதையெல்லாம் பார்த்து சகிக்க வேண்டியிருக்கிறது. அளவற்ற வன்முறைக் களமாக இலக்கியவெளி மாறியிருப்பதைப் பற்றி யாராவது பேசமாட்டார்களா என மனம் கனத்துக் கிடக்கிறது.

    வால்பாறையில் நடைபெற்ற கூட்டத்திற்கு யார் நிதி ஏற்பாட்டினைச் செய்தார்கள் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதைப் போல கடவு அமைப்பு நடத்திய கூட்டத்தின் பிரம்மாண்டமான செலவுக்கான பணம் எப்படிப்பட்டது என்பதும் நாடறிந்தது. இதுபோன்று கூட்டங்கள் நடத்தப்படுவது பற்றியும், மிக மிகக் குறுகிய, சுயநல நோக்கோடு இலக்கிய நேர்மையை பழிகொடுப்பவர்களின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுவது மிக அவசியமான ஒன்று. என்னைப் போன்றவர்கள் வலைத்தளத்தில் மட்டும் இருந்து தொலைக்காமல் ஏதோ ஒன்று நினைத்து கூட்டத்திற்குப் போய் விஷயத்தைக் கேள்விப்பட்டு, அவமானகரமான குற்றஉணர்வுடன் திரும்பியுள்ளோம். ஆனால் காசு கண்ணனோ, ஆதவன் தீட்சண்யாவோ, எஸ்.ராமகிருஷ்ணனோ, முருகேச பாண்டியனோ அப்படி திரும்பவில்லை. அடுத்த நாள் இருந்து கொண்டாடி முடித்தே மதுரையை விட்டு அகன்றுள்ளனர். இதுதான் தமிழ்ச்சூழலாக உள்ளது.

    எந்த கூச்ச நாச்சமுமின்றி விலைபோகிறவர்களின் எழுத்துக்களை வியந்து படிக்கும் வாசக முட்டாள்களே, இனியேனும் விழிப்படைய முடியுமா பாருங்கள்! இவ்விரண்டு கூட்டங்களிலும் பங்கெடுத்த எழுத்தாளர்களே, உங்களின் மனசாட்சியைத் திறந்து இப்பொழுதாவது உண்மையைப் பேசுங்கள். நீங்கள் வலியுடன் திரும்பினீர்களா அல்லது வாங்கிக் கொண்டு திரும்பினீர்களா? இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வாசல் அந்த அரங்குக்கு இல்லை என எல்லோருக்கும் தெரியும். எனவே, எப்படித் திரும்பினீர்கள் என்று எழுதுங்கள்.

    பெரிய எழுத்தாளர்கள் என்று தலைக்குப் பின்னால் ஒளிவட்டத்துடன் அலையும் யாரும் இதற்குப் பதில் அளிக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இளம் எழுத்தாளர்களே, மனம் திறந்து விவாதியுங்கள். எல்லா காலத்திலும் மனசாட்சியின் குரல் சன்னமாகத்தான் ஒலித்திருக்கிறது. ஆனால் அதுதான் காலத்தின் குரல்.

    தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்கும் நிகழ்ந்த உரையாடல் சம்பந்தமாக நான் எதுவும் கூறவில்லை என்பதற்காக வேறு அர்த்தப்படுத்தி விடாதீர்கள். கடவு கூட்டத்தின் கலந்து கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். தமிழ்நதி சொல்லியிருப்பது போன்றுதான் உரையாடல் நடைபெற்றதா என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஆதவனின் பேச்சின் சாரம் தமிழ்நதி சொல்லியிருப்பதுதான். பழிக்குப் பழி எடுக்கும் பயங்கரவாத மனநிலையின் வெளிப்பாடே. மனித உடல்களை பிணங்களாகப் பாவித்து அதன் மேல் நின்று லாப, நஷ்ட கணக்குகளை சரிசெய்யும் அதிகார மனநிலையே என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். அதே நேரத்தில் ஆதவன் போன்ற தமிழ்இன விரோதிகளின் கருத்துக்களுக்குப் பதில் சொல்லும் அவசரத்தில் எழுத்தின் நேர்மையை குழிதோண்டிப் புதைக்கும் இலக்கிய விரோதிகள் தப்பித்து விடக்கூடாது என்பதை கொஞ்சமாவது கவனப்படுத்துங்கள்.

    இறுதியாக... பேரும், புகழும், பணமும் இன்னும் பிறவற்றை எல்லாம் அடைய எத்தனையோ வழிகள் சமூகத்தில் உண்டு. அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துத் தொலையாமல் ஏன் இலக்கியத்திற்கு வந்து இழவைக் கூட்டுகிறீர்கள்? விலைக்கு வாங்கப்படும் கவிதைகள், வாடகைக்கு விடப்படும் பேனாக்கள், எழுத்தாளர்களைக் குத்தகைக்கு எடுக்கும் அதிகார முதலைகள், எல்லாவற்றுக்கும் சாட்சியாக வால்பிடிக்கும் வங்கோத்துகள், அருவருப்பிற்கு அளவில்லையா எந்தன் தமிழ்ச்சாதியே! 

    - கமலக்கண்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

    Pin It