சூன் 26 ஆம் நாள் மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் கபில்சிபல் தனது துறையின் 100 நாட்கள் செயல் திட்ட விளக்கத்தின் போது பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யும் புதிய திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். அதற்கு மாற்றாக தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்னல் அசஸ்டெண்ட் கொண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே +2 படிக்கலாம் என்றும் மேலும் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு வழங்கப்படும் என்பதாகும்.

இந்த இடத்தில் தான் பிரச்சனைகள் எழுகின்றன. இந்த புதிய திட்டமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது அமலாக்கப்படும் எனில் எதிர்காலத்தில் பார்ப்பனியம் மேலும் கொழுக்கும். உழைக்கும் மக்களான தலித் பழங்குடியின மக்கள் மற்றும் சிறுபான்மை இன மக்களின் முன்னேற்றத்தை இந்த திட்டம் அழித்து ஒடுக்கும் அபாயம் உள்ளது.

Dalit childrenநாம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் அதன் கல்வி முறைகளைப் பற்றி ஆராயும் முன்பு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பயின்ற தொடக்கக்கல்வி இடைநிலைகல்வி என்பது மாணவர்களுக்கு கல்வி அறிவை வளர்த்துள்ளதா என்றால் முற்றிலும் இல்லை என்றுதான் கூறமுடியும்.

தற்போது பெருவாரியான மாநிலங்களில் செயல்வழிகற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறை மாணவர்களுக்கு குறிப்பாக தமிழகத்திலும் கற்பிக்கப்படும் கல்வி முறையாகும்.

செயல் வழிகற்றல் என்பது தொடக்கப் பள்ளிகளிலும் படைப்பாற்றல் கல்விமுறை என்பது இடைநிலை கல்வி முறையாக பின்பற்றப்படுகிறது. இந்த கல்வி முறை இயற்கை சூழலுடனும் தனது விருப்புடனும் மாணவர்கள் தங்களது உளவியல் அடிப்படையில் கற்றுக்கொள்ளப்படும் மேலைநாட்டு கல்வி சிந்தனையாளர்களான ருஸோ, புரோபெல், மாண்டிசோரி, ஜான்டூயியி ஆகியோர்களின் கல்வி முறை ஆகும்.

இந்த கல்வி முறை கடந்த 4 ஆண்டுகளாகதான் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த கல்வி முறைபற்றி பார்க்கும் முன்பு, பல்வேறு சாதி பாகுபாடு வன்கொடுமை மத பூசல்களுக்கு இடையே கல்வி கற்கும் தலித் பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதினாலேயே அவர்கள் கல்லூரி வரையில் அடியெடுத்துவைக்கக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.

இதற்க்கான காரணம் என்னவென்றால் கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட அடிதடி உதையுடன் கூடிய உளவியல் பாதிப்பு பாடமுறை மற்றும் தற்போதும் உள்ள குடும்ப சுற்றுசூழல்களே உழைக்கும் வர்க்க இன மக்களை கல்வி கற்றலில் இருந்து விலக்கிவைக்கிறது. அம்மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பயந்தே அந்த காலகட்டங்களில் தான் கூலி தொழிலாளர்களின் மாணவர்கள் எழுத்துக் கூட்டியும் மனப்பாடம் செய்தும் ஓரளவிற்க்கு தேர்ச்சி பெறமுடிகிறது.

இந்த உழைக்கும் வர்க்கமான தலித் பழங்குடி மற்றும் சிறுபான்மை மாணவர்கள் கபில் சிபிலின் அறிக்கைபடி நேரடியாக +2 தேர்வு எழுதுவார்கள் என்றால் இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கம் அனைத்தும் +2 தேர்ச்சி பெற முடியாமல் கல்வி இழந்து வர்ணாஸ்ரமத்தில் மீண்டும் முழுமையாக அடிமைப்பட வாய்ப்பாக அமைந்துவிடும்.

மேலும் கொண்டுவரப்படுவதாக கூறப்படும் புதிய திட்டமான பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் அசஸ்ட்மெண்ட் வைத்து தரம் தீர்மானிப்பது என்பது பெருவாரியாக அரசு பள்ளிகளில் பயிலும் உழைக்கும் வர்க்க மக்களை படுகுழியில் தள்ளுவதே ஆகும்.

அரசியல் சட்ட பிரிவு 16(5) தலித்துகளுக்கு கல்வி நிறுவனங்களில் இட ஒதுகீட்டை உறுதி செய்கிறது. ஆனால் தலித் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் பொதுக்கல்விகளில் மட்டுமே பெறுவாரியாக படிப்பதற்க்கு இடம் அளிக்கப்படுகிறதே தவிர, தொழில் கல்வியோ மற்றும் தொழில் நுட்பவியல் போன்ற வேலை வாய்ப்பு கல்விகளில் முக்கியத்துவம் தருவதில்லை. காரணம், அனைத்து பெரும்பான்மையான தொழில் மற்றம் தொழில் நுட்பவியல் கல்லூரிகள் தனியார்மயம் கையாளுகிறது.

இந்த நிலை இப்படி இருக்க பத்தாம் வகுப்பில் பொது தேர்வுக்கு பதிலாக அஸ்ட்மெண்ட் வழங்குவது மேலும் 10, + 2 வகுப்புகளில் மாணவர்களுக்கு கிரேடு வழங்கும் முறை என்பது சாதியும், மதவெறி தீவிரமாக கடைபிடிக்கும் இந்திய நாட்டில் ஒரு பள்ளியில் பயிலும், மாணவர்களுக்கும் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் அசஸ்ட்பெண்ட் வைத்து தரம் தீர்மானிப்பார் என்றால் பெரும்பாலான மாணவர்கள் சாதியத்தாலும், மதவெறியாலும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட கூடும்.

இந்த பத்தாம் வகுப்பு ரத்து என்னும் புதிய கல்வி திட்டம் என்பது தற்போது பசித்தவனுக்கு ஏதேனும் உணவு மட்டும் போதும் என்பது போல் ஏற்கனவே தொழில்நுட்ப கல்வி மறுக்கப்பட்ட நிலையில் தலித் மக்களுக்கு கொடுக்கப்படும் பொது கல்வியும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

தற்போது தமிழ் மாநில கல்வி முறைகள் பதின்மப்பள்ளி கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, ஒரியண்டல் கல்வி முறை, நர்சிங்ப்பள்ளி கல்விமுறை போன்ற கல்வி முறைகளாகும். இந்த கல்வி முறைகள் பொருளாதார அடிப்படையில் வஞ்சகத்துடன் கூடிய ஏற்றத்தாழ்வு கல்வி முறைகளாகும். தலித் மற்றும் பழங்குடியின மக்கள் 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அவர்கள் மொத்ததில் 10% அளவே கல்வி அறிவு பெற்றிருந்தனர். ஆனால் தலித்துகள் அந்தகாலகட்டத்தில் பொது கல்விகளில் அடியெடுத்த போது மேல் சாதி வர்கம் தொழில் கல்விகளை கற்றனர். தற்போது 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு முடிவின் தலித்துகளின் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதம் 54% ஆகும். இன்று தலித்துகள் தொழில் கல்வி கற்க அவசியமான கால கட்டத்தில் அவர்களுக்கு தொழில் கல்விகளில் ஒரு சில கல்வி முறைகளிலே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் தலித் மாணவர்களால் மேல் சாதி பிரிவினருடன் போட்டிபோட்டு படிக்க முடியவில்லை. தனியார் பள்ளிகளில் பயிலும் மேல் சாதி பிரிவு மக்களுக்கு மிக தரமான கல்வி முறையினையும், அரசுப்பள்ளிகளில் பயிலும் உழைக்கும் வர்க்கத்திற்கு தரமற்ற கல்வி பயிற்றுவிப்பதே பெரும் காரணமாக அமைகிறது.

மேற்கண்ட கல்வி சிக்கல்களை தீர்க்க தற்போது நடைமுறையில் உள்ள செயல் வழிகற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறை கைக் கொடுக்குமா? தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ சுமார் 63000 தொடக்கப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த செயல் வழி கற்றல் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. செயல் வழி கல்வி முறை என்பது மாணவர்கள் கூர்ந்து அவர்கள் வழியிலே இயற்கையோடு புரிந்து கொள்ளும் கல்வி முறையாகும்.

இந்த செயல் வழி முறை கல்வி மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையில் மாணவர்களுக்கு யுடுஆ போன்ற அட்டை, பலகைகளை கொண்டு விளக்குகின்றனர். இந்த கல்வி முறையின் கீழ் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க முடியாது. எனவே அனைத்து மாணவர்களின் அறிவு திறனாய்வு கண்டுபிடித்து வளர்த்தல் என்பது ஆசிரியர்களுக்கு சிரமமான ஒன்றாகும். இந்த கல்வி முறை உளவியல் ரீதியாக அமைந்தாலும் இன்றைய அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் குறைபாடு மற்றும் சாதி, மத பாகுபாடு காரணமாகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி முக்கியத்துவம் குறித்து பெரும்பாலான ஆசிரியர்களுக்கு புரிதல் இல்லை. இதனால் மாணவர்கள் அடிப்படை கல்வி அறிவு கூட பெற முடியாமல் மாறிவிடுமா என்ற அச்சம் எழுகிறது.

இவ்வாறான தொடக்கக்கல்வி மற்றும் நடுநிலை முடித்து வரும் மாணவர்களுக்கு உயர்நிலை கல்வியை எதிர் கொள்வது சவாலாக உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து மற்றும் நேரடி +2 தேர்வு என்பது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒன்றாக மாறிவிடக்கூடும். அது பார்ப்பனியத்தை மேலும் மேலும் கொழுக்கும். உழைக்கும் வர்க்கத்தை அறவே அழிக்கும்.

- பொன்.கோ.அ. புரட்சிதாசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It