“3 லட்ச ரூபாய் செலவில் சென்னை கடற்கரையில் காந்தியார் நினைவுத் தூண் எழுப்பப் போவதாக 2-3 ஆண்டுகளாக விளம்பரப் படுத்தினார்களே! அது என்னவாயிற்று?” என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.

kuthoosi gurusamy 268என்னைக் கேட்டால் என்ன தெரியும்? ரா. கி. யை அல்லது முன்னாள் மேயர் செரியனை அல்லவோ கேட்க வேண்டும்!

அந்த முயற்சியே சுத்த அபத்தம்! வடிகட்டிய அயோக்கியத்தனம்! என்று நான்தான் ஆதமுதல் ஆயிரந்தடவை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்!

காந்தியார் சாம்பல் மீது அந்தத் தூணை எழுப்ப முடியாது, சாம்பலைக் கடலில் கரைத்து விட்டார்களாதலால்! தமிழனின் எலும்பின் மீதுதான் இனி எழுப்ப வேண்டும்! ஏன் தெரியுமா? காந்தி சீடர்களின் கல் நெஞ்சை உலகத்தாருக்குக் காட்டுவதற்காகத் தமிழன் காத்துக் கொண்டேயிருக்கிறான்! ஆஸ்பத்திரி வெளி “வாராண்டா” க்களில் நோயாளிகளைப் படுக்க வைத்திருக்கின்ற படத்தையும் காந்தி ஸ்தூபி அடிப்படைப் படத்தையும் அக்கம் பக்கமாக வெளியிட்டு உலகஞ் சிரிக்கச் செய்யப் போகிறான், தன்மானமுள்ள தமிழன்! ஆகஸ்ட் வீரர்கள் பொறுத்திருந்து பார்க்கட்டும்.

“யாரோ ஒருவன் எதிர்ப்பதனால் இதை நாங்கள் விட்டு விடுவோமா?”- என்று வீராப்புடன் கேட்டாராம், ஒரு காங்கிரஸ் பக்தர்!

 எதிர்ப்பவன் ஒருவனா? அல்லது ஒரு கோடிப் பேரா? - என்பது இப்போதா தெரியும்? ஸ்தூபி முயற்சி துவங்கியவுடனல்லவோ தெரியும்?

நான் சொல்கிறேன்! காங்கிரஸ் அண்ணா வீம்புக்கு வேப்பங்காய் தின்னாதே! சொல்வதைக் கேள்! சோற்றுப் பஞ்சத்தையும் பணப்பஞ்சத்தையும் உண்டாக்கி வைத்துவிட்டு வீணாக அதிக வயிற்றெரிச்சலைக் கிளப்பாதே! காந்தியார் பெயரால் ஒரு நல்ல ஆஸ்பத்திரி கட்டு! பணம் போதாவிட்டால், ஆஸ்பத்திரி வாசலில் ஒரு பெரிய உண்டியல் (திருப்பதி உண்டியல் மாதிரி!) செய்து வை! அதில் எவ்வளவு பணம் வந்து விழுகிறது என்று பார்! கட்சி-மதம்-ஜாதி-நிறம்-இனம்-மொழி ஆகிய எந்த வேற்றுமையையும் கருதாமல் எல்லோரும் அந்த உண்டியலில் பணம் போடுவார்கள் நோட்டு நோட்டாக கொட்டுவார்கள்! பணம் படைத்தவர்கள் பவுன் நகைகளைக் கூடப் போடுவார்கள்! ஆனால் உண்டியல் சாவி மட்டும் காங்கிரஸ்காரர் வசத்திலிருக்கக் கூடாது! யாராவது ஒரு கிறிஸ்துவப் பாதிரி வசம் இருந்தால் போதும்! காங்கிரஸ்காரர் மீது நம்பிக்கையில்லாத காரணமல்ல! நாயன்மார் மாதிரி, எந்தப் பணத்தை என்ன செய்வது என்ற கட்டுத் திட்டமில்லாமல் சற்றுத் தாராளமாக நடந்து விடுவார்களே, என்ற சந்தேகந்தான்! தேசபக்தர்களல்லவா? பக்தியில் ஈடுபட்டவர்கள் எதையும் செய்யலாமே - அதனால் என்க!

“காந்தி ஸ்தூபி” நிதி திரட்டியவர்கள் முட்டாள்களல்ல! அதிபுத்திசாலிகள்! ஆதலால் கழுதைகூட ஒண்டி நிற்க முடியாத ஒரு தூணுக்கா மூன்று லட்சம் செலவழிப்பார்கள்? கழுதை கூட அவர்களைச் சபிக்குமே!

ஆகையால் இனிமேல் தூண் எழும்பாது! பிரம்மாண்டமான ஒரு ஆஸ்பத்திரிதான் எழும்பும்!

அதுவும் காந்தியார் கண் ஆஸ்பத்திரி - என்ற பெயரைக் கேட்டால் ஏழை மக்கள் மனம் அய்ஸ்க்ரீம் சாப்பிட்டது மாதிரிக் குளிருமே! “ஸ்தூபி” என்று கேட்டால் எப்படியிருக்கும்? பச்சை மிளகாயைக் கசக்கிக் கண்ணில் போட்டதுபோல இருக்கும்!

- குத்தூசி குருசாமி (28-12-1951)

நன்றி: வாலாசா வல்லவன்