kuthoosi gurusamy“தென்திரை அலை கடல் இலங்கைத் தென் நகரில்” சீதையை அநுமான் தன் கண்களால் கண்டதாக இராமனிடம் கூறுகின்ற பாடல் சிலருக்காவது நினைவிருக்கலாம்!

இந்த உவமையை இதற்குமேல் நீட்ட வேண்டாம்!

திராவிட உரிமையை அடைவதற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற திராவிடர்களை என் கண்களால் கண்டேன்!

இதற்கு முன்பு வேறு சில ஊர்களில் கண்டிருக்கிறேன்; ஆனால் இந்த வாரம் பம்பாயில் கண்டேன்!

72 மணி நேரம் ரயில் பிரயாணம்! போக, வர! முதன் முதல் ரயில் பிரயாணம் செய்கிறவனுக்குக் கூட வெறுப்பு ஏற்பட்டு விடும்! ஆனால் அறிந்துகொள்ளக் கூடிய சங்கதிகள் பல உண்டு!

வண்டிக்கு வெளியில் எச்சில் துப்புகின்ற மனிதன், குண்டக்கல் ஸ்டேஷன் தாண்டியதும் வண்டிக்குள்ளேயே எச்சில் துப்புகிற மனிதனைக் கண்டால்? தும்பைப் பூப்போலத் துணி கட்டுகிற மனிதர் கக்கூஸ் வாசனை கொண்ட துணி கட்டுகிற பாரதமாதா புத்திரரைக் கண்டால்?

“லட்சக் கணக்கான தென்னாட்டார் வடநாட்டிலும் சென்று சுரண்டுகிறதாக இரண்டொரு மேடைப் பேச்சாளர்கள் கூறுகிறார்களே! அந்தச் சுரண்டலைக் “கண்களால் கண்டேன்” ஆம்! உடைந்த சட்டிகளைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்; அவைகளில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற சோற்றுப் பறுக்கைக்காக!

பேனாக் கூலிகள் பெருத்துக் கிடக்கின்ற மதுங்கா பகுதியையும் உடல் உழைப்புக் கூலிகள் மலிந்து கிடக்கின்ற தாராவி பகுதியையும் பார்த்து விட்டுத் திரும்பியவன் சவுகார் பேட்டையிலுள்ள ஒரே ஒரு தெருவை மட்டும் பார்த்தாலே போதும்! யார் சட்டியைச் சுரண்டுகிறார்கள், யார் சக்தியைச் சுரண்டுகிறார்கள் என்பதைக் காண்பதற்கு, மீசைகள் இருந்தால் போதாது! கண்கள் இருக்கவேண்டும்! அதில் நல்ல பார்வை இருக்கவேண்டும்!

சுமார் ஒரு லட்சம் தென்னாட்டார் இருக்கிறார்களாம் பம்பாய் நகரத்தில்! இவர்களின் சராசரி தின வருமானம் பத்து ரூபாய் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்வோம்! இத்தனை பேரும் சேர்ந்து “சுரண்டுகிற” பணம் ஒரு நாளைக்குப் பத்து லட்ச ரூபாய்தான்! இந்தத் தொகை இங்கே 7-8 வடநாட்டு வியாபாரிகளால் மட்டும் தினசரி சம்பாதிக்கப்படுகிறது என்பது “கல்கி” க்கும் தெரியும்! அதன் பாடல் பெற்றவர்களுக்கும் தெரியும்!

“வடநாட்டிலுள்ள தமிழர்களெல்லோரும் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டால்?” -என்று கேட்டதே, கீழ்ப்பாக்கம் பூணூல்?

நானும் சிலரைக் கேட்டுப் பார்த்தேன்!

“எவ்வளவு இதுவரையில் சுரண்டியிருக்கிறீர்கள்? ஒழிந்தானா வட நாட்டான்? ஆமா, இதென்ன, இந்த இடம் நம்நாட்டுச் சேரியைவிட மோசமாயிருக்கிறதே?”-என்று கேட்டுப் பார்த்தேன்!

“சுரண்டலாவது, சுண்டைக்காயாவது! வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் 1000 மைல் தாண்டி வந்திருக்கிறோம்”, என்றார்கள், தென் ஜில்லா வாசிகள்!

- அது மட்டுமா?

“கோயங்கா மவுண்ட் ரோடு கட்டடங்களையெல்லாம் ஒவ்வொன்றாக வாங்கி வருகிறோரே! நீங்கள் இங்கே எத்தனை கட்டடம் வாங்கி யிருக்கிறீர்கள்?” - என்று கேட்டேன்!

“காங்கிரஸ்காரர் தலையில் அடித்துச் சொல்கிறோம்! காலணாக் காசு கூட மிச்சம் கிடையாது! “கல்கி”ப் பூணூல் ஆணையாகச் சொல்கிறோம்; கால் ரூபாய்கூட மிஞ்சுவதில்லை!” - என்றார்கள்!

“எங்கள் தாய் நாட்டுக்கே திரும்பி வந்துவிட முடியுமா? முடியாதா சொல்லித் தொலையுங்கள்,” -என்றார்கள், ஆத்திரமாக!

“நன்றாக முடியும் நிச்சயமாக முடியும்! ஆனால் காங்கிரஸ் மலைப் பாம்பு குறுக்கே படுத்திருக்கிறதே! என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”, - என்று கேட்டேன்!

“நல்ல பாம்பு துரோகிக் குட்டிகள் புற்றுக்களில் பதுங்கிக்கொண்டு சீறுகின்றனவே!”,-என்று கேட்டேன்!

கண்டேன், கண்களால்! யாரை? சீதையை! ஆனால் அவள் வடநாட்டு இராவணனுடன் சல்லாபஞ் செய்து கொண்டு இருந்ததைக் காணவில்லை! மணந்த காதலனைக் கட்டித்தழுவக் காத்துக்
கொண்டிருப்பதைக் கண்டேன்!

- குத்தூசி குருசாமி (18-5-51)

நன்றி: வாலாசா வல்லவன்