kuthoosi gurusamy 268வாஞ்சி:- அடீ! வனஜா! எங்கேடி போயிட்டே! நல்ல நாளும் பெரிய நாளுமா நாலு வார்த்தைபேசி கொஞ்சலாமுண்ணா, இவள் எங்கேயோ போயிட்றாள்! சதா ஊர் வம்புதானா? அடீ! வனஜா!

வனஜா:- (குளியலறைக்குள் இருந்தபடியோ!) ஏன் இப்படிக் கூச்சல் போடறேள்? இப்பத்தான் ஸ்நானம் செய்ய வந்தேன்! அதற்குள் இந்தக் கூக்குரல் போடறேளே! கொஞ்சம் இருங்க வந்துட்டேன்!

வாஞ்சி:- (தனக்குள்ளாக) அடாடா! பேஷான தீர்ப்பு! சட்ட நிபுணர்கள் இரண்டு பேரும் மடக்கி மடக்கிப் பேசியான பிறகு இந்தத் தீர்ப்புத்தானே கிடைக்கும்? எதிர்பார்த்தது தானே? இனி என்ன செய்வான்கள், இந்தச் சூத்திரப் பயல்கள், பார்க்கலாமே! மறுபடியும் பழைய காலத்தைப் போல் மாடு மேய்க்கணும்! அல்லது சட்டிபானை செய்யணும்! அல்லது மேளம் வாசிக்கணும்! அல்லது உழணும்! பத்தாவது வரையிலே படிச்சுப்பிட்டுக்கூட இனி இந்த வேலைதான் செய்யணும்! காலேஜாம் காலேஜ்! இவன்கள் கெட்ட கேட்டுக்கு காலேஜ்! 1950 ஜூலை 27-ந் தேதி! புண்யதினம்! வகுப்பு வாதம் கொல்லப்பட்ட விசேஷ தினம்! பிராமணாளுக்குக் கொண்டாட்ட தினம்! பேஷ்! பேஷ்! (வனஜா வருகிறாள் குலைந்த உடையுடன்!)

வனஜா:- என்ன இப்படி ஒரே குஷியாயிருக்கேளே இன்னிக்கு? ஏதாவது ப்ரமோஷன் உத்தரவோ?

வாஞ்சி:- போடி போ! ப்ரமோஷனாம்! எனக்கு அல்லடீ ப்ரமோஷன்!! நம் குலத்துக்கே ‘ப்ரமோஷனடீ!’ துணியைச் சரியாக உடுத்தீண்டுவா! யாராவது திடீருன்னு வந்துடப் போறா! வரும்போது என் கோட் பாக்கெட்டிலிருந்து 10 ரூபாய் பணம் எடுத்திண்டு வா!

வனஜா:- (ஒழுங்காகக் கட்டிய உடையுடன் வருகிறாள்) இந்தாருங்கோ, பத்து ரூபாய்! எதற்காக?

வாஞ்சி:- நாளைக்கு வன போஜனத்துக்குப் போகலாம் வனஜா! குடும்பத்தோடு போகலாம்! முன்ஷியின்வன மகோத்சவத்துக்குப் பிறகு நம் வன போஜனம்! வக்கீல் விஸ்வநாதய்யர் ஆத்திலே! டாக்டர் சந்திரசேகரய்யர் ஆத்திலே! எஞ்சினியர் ஏகாம்பரய்யர் ஆத்திலே! வாத்தியார் வைத்தியநாதய்யர் ஆத்திலே! - இவாளெல்லாம் கூட வன போஜனத்துக்கு வருவாளாம்! எல்லாம் பேசி முடிச்சாயிடுத்து! நான் சாமான் வாங்கீண்டு வர்றேன். நம் ஆத்திலேயுள்ள ஆறு பேருக்கும் ஷோக்கான சித்திரான்னங்கள் செய்யணும்! சர்க்கரைப் பொங்கல் கட்டாயமாய் சேயணும்! தெரிஞ்சுதோ?

வனஜா:- வனபோஜனமா? எதற்காக? ஏன் இப்படி ஒரே குதியாய்க் குதிக்கிறேள்? என்ன வந்துடுத்து? அது சரி அரிசி எங்கேயிருக்கு, சித்திரான்னத்துக்கு? வீட்டில் கால்படி அரிசிகூட இல்லையே!

வாஞ்சி:- அரிசியா? அதைப் பற்றினோக்கென்ன? நானல்லவோ கொண்டு வர்றேன்? சப் இன்ஸ்பெக்டர் கிட்டு இருக்கானோன்னோ? அவன் அரை மூட்டை அரிசி தருவன். சினிமா ஸ்டார் சீமா ஆத்திலே 8 படி தருவா! போதாதா?

வனஜா:- ஆமாம் என்ன விசேஷம் இன்னிக்கு?

வாஞ்சி:- விசேஷமா? புண்ய தினம்டீ! காலேஜிலே இடம் கிடைக்கமே நம்மளவாளெல்லாம் தவிச்சாளே! இனிமேல் அந்தப் பயம் ஒழிஞ்சு போயிடுத்து! கேஸ் போட்டிருந்தாளே, அது நமக்கே ஜெயமாயுடுத்து! இன்னிக்குத் தீர்ப்புக் கூறி விட்டா! அப்படிச் செய்வது சட்ட விரோதமாம்! இனிமேல், எந்தக் காலேஜிலாவது அந்தப் பயல்களிலே ஒருவனாவது நுழைய முடியுமா? ஒரு கை பார்க்கத்தானே போறோம்!

வனஜா:- பூ! இவ்வளவு தானே! உத்யோகத்திலே ஏதோ கம்யூனல் ஜீ. ஓ. என்கிறாளே! அது ஒழிஞ்சால் தானே தேவலாம்? “ஆனந்த விகடன்”லே கூட அடிக்கடி எழுதுறாளே?

வாஞ்சி:- வனஜா, கொஞ்சம் பொறுத்துக்கோ! அடுத்த மாசத்திலே அந்த சங்கதியும் தெரிஞ்சுபோயிடும்! காலேஜிலேயே இடமில்லாமல் செய்துட்டா, உத்யோகத்துக்கு எங்கே போறது? ஆணி வேரையே பிடிங்கிட்டா செடி எங்கேடீ வளரப்போறது? அதை விட இது தாண்டி முக்கியம்! அந்தப் பயல்களைப் படிக்கவிட்டது தானே ஆபத்தாப் போயிடுத்து?

வனஜா:- இனிமேல் அவா காலேஜிலே அவாளையே சேர்த்துண்டு நம்ம பையன்களுக்கு இடமில்லாமல் செய்திடுவாளே?

வாஞ்சி:- இவ்வளவு புத்தி அவன்களுக்குக் கிடையாதடீ! பாரேன்! புதுசா காஞ்சீபுரத்திலே அவன்கள் ஒரு காலேஜ் திறந்தான்களே! யாரைப் பிரின்ஸ்பாலா போட்டிருக்கா தெரியுமோன்னோ? நம்மளவாளைத்தான்! அந்தப் பயல்களுக்குக் கடுகளவு புத்தி கூடக் கிடையாதுடீ! அப்படி யிருந்தால் நம்மாலே வெளியில் தலை காட்ட முடியுமோ?

வனஜா:- இனிமேல் சூத்திரனுக் கெல்லாம் ஆத்திரம் வந்து, தெலுங்கு - தமிழ் - மலையாளம் என்கிற வித்தியாசத்தை யெல்லாம் மறந்து ஒண்ணாயிட்டால் நம்ம கதி என்னாவது?

வாஞ்சி:- போடீ! பைத்தியக்காரி! அவன்களாவது ஒண்ணாகிறதாவது? அவன்களைத்தான் தனித் தனி ஜாதியாய் - சில்லறை சில்லறையாய் - உதிரி உதிரியாய் - ஆக்கி வைத்திருக்கிறாளே, நம் மூதாதைகள்? போதாக் குறைக்கு பாஷைச் சண்டை வேறே இருக்கு! ஒரே ஒரு பிராமணன் உயிரோடிருந்தாலும் போதும்! அவாளை ஒன்று சேர விடவே மாட்டான்! அதிலே கொஞ்சங்கூட சந்தேகம் வேண்டாம்! சரி! நான் போகட்டுமா? வரும்போது அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் படம் ஒன்று வாங்கி வர்றேன்! அதோ அந்தக் காந்தி படத்தை எடுத்து எறிஞ்சுட்டு அந்த இடத்திலே மாட்டணும்! தெரிஞ்சுதோ? யாரேனும் அரிசி கொண்டுவந்தா வாங்கி வை! வனஜா! எனக்கிருக்கிற சந்தோஷத்திலே ஜன்னல் மட்டும் சாத்தியிருந்தால் கட்டாயம் உனக்கொரு முத்தம் கொடுக்காமலிருக்கவே மாட்டேன்!

வனஜா:- போதும் போதும்! இரண்டு பிள்ளைக்குத் தகப்பனான பிறகு கூட முத்தமும், தாழ்வாரமும் வேண்டியிருக்கு! உங்களைச் சொல்லிக் குற்றமில்லே! வாரத்திலே மூணு சினிமா பார்க்கிறேளே! இந்தப் பலனாவது இருக்க வேண்டாமா?

- குத்தூசி குருசாமி (28-7-50)

நன்றி: வாலாசா வல்லவன்