kuthuoosi gurusamyநான் பிராமணர்கள் சார்பில் எழுதவதேயில்லையென்று சிலர் தப்பாகக் கருதியிருக்கின்றனர். நான் எழுதுவதெல்லாம் அவர்களுக்காகவே தான்! அதாவது அவர்களை முன்னேற்றிப் புது வாழ்வு தருவதற்காகத்தான்.

“எங்களை எதிலும் மிரட்ட முடியாது; நாங்கள் எதற்கும் தயாராயிருப்பவர்கள்” என்ற மன உறுதியில் இன்றும் முதன்மையாயுள்ளவர்கள் பிராமணர்கள்தான். மற்றவர்கள் இதில் சுத்த சுன்னம் என்று கூடக் கூறுவேன்!

ஒரு பிராமண சிப்பந்தியைக் கூப்பிட்டு, “மிஸ்டர் ராஜகோபாலய்யர்! அந்தப் பயல் திடீரென்று நிண்ணுட்டான். மீன் இல்லாட்டிப் போனால் எனக்கு சாப்பாடே ருசியாயிருப்பதில்லை; மார்க்கெட்டில் நல்ல மீனாகப் பார்த்து ஒன்று வாங்கி வந்தால் தேவலாம். யாரைப் போகச் சொல்வது?” என்று கேட்டுப் பாருங்கள்.

“யாரைப் போகச் சொல்வதா? அதென்ன, இப்படி கேட்கிறீர்கள்? நான் போய்ட்டு வர்றேனே! இதிலென்ன தப்பு? தாங்கள் ஒன்றும் யோசனை பண்ண வேண்டாம் இதில் எவ்வித தோஷமும் இல்லை. ஆபத்து வேளையில் உதவ வேண்டியதுதானே?”
-என்றுதான் அந்தச் சிப்பந்தி கூறுவான்!

பெரிய மனுஷாரில் பலர் தங்களுடைய மனைவி - மக்களை விட்டு விடச் சொன்னாலும் தயார்! ஆனால் தங்களிடமுள்ள பிராமண சிப்பந்திகளை மட்டும் விட்டுவிட இசையமாட்டார்கள். அதாவது அவ்வளவு உபயோகமாயிருப்பவர்கள், அவர்கள்! ஒருவரை நீக்கிவிட்டால் அந்த இடத்துக்கு 5-6 பேர் நம்மவர்களை வைக்க வேண்டியிருக்குமாம்! அவ்வளவு தொழில்களில் கைதேர்ந்தவர்களாயிருக்கிறார்கள்!

சிற்சில சமயங்களில் இத்தகைய பிராமணர்கள் கூட தவறி விடுவதுண்டு.

சூரத் அருகிலுள்ள ஓர் ஊரில் ஒரு மயிர் அலங்கார தோழர் வீட்டில் மதச் சடங்கு நடத்துவதற்காக பிராமணப் புரோகிதர் ஒருவர் வர மறுத்துவிட்டாராம். உடனே சவரத் தொழிலாளர்கள், புரோகிதர்களுக்குச் சவரம் செய்வதில்லை என்று பகிஷ்காரம் செய்துவிட்டார்களாம்.

புல் ஏந்தும் கையில் வாள் ஏந்தப்போகிற பார்ப்பனர் இனத்தைச் சேர்ந்த புரோகிதர்கள் ‘டன்கர்க்’ செய்துவிட்டனர்! பகிஷ்காரத் தீர்மானம் நிறைவேற்றிய மறுநாளே புரோகிதர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனராம்.

சவரத் தொழிலாளர்களும் பகிஷ்காரத்தை நிறுத்திவிட்டனராம்!

இந்தச் சச்சரவில் யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி? சவரத் தொழிலாளர்களுக்குத்தான் படுதோல்வி என்பது என் முடிவு. புரோகிதர்களுக்குக் சவரம் செய்யாவிட்டால் அவர்களில் யாரும் சவரத் தொழிலாளியாக மாட்டார்கள்; அதாவது எல்லோருக்கும் சிரைக்கக்கூடிய தொழிலை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அதற்காக வேண்டி தாடியும் மீசையும் வளர்த்துக் கொண்டு கரடிகள் போலவும், ரிஷிகள் போலவும், காட்சியளிக்கவும் முடியாது! ஆகையால் அவர்கள் பணிந்த வந்ததில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் சவரத் தொழிலாளர் ஏன் புரோகிதர்களை வருந்தியழைத்தார்களோ, தெரியவில்லை!

மூட்டைப் பூச்சிகள் பகிஷ்காரஞ் செய்தால் யாராவது அவைகளை வருந்தி யழைப்பதுண்டா? சனி தொலையட்டும் என்றல்லவோ இருக்க வேண்டும்?

புரோகிதன் வராவிட்டால் சவரத் தொழிலாளர் உடல் சுத்தமாயிருக்காதா, என்ன? எதற்காக இந்த வீண்வம்பு? ஓடிப்போன நல்ல பாம்புக்கு யாராவது வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்து வீட்டுக்கு அழைத்து வருவாருண்டா?

வடநாட்டுப் புரோகிதர்களுக்கும் ஒரு வார்த்தை, நீங்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது பெருந்தப்பு. ஏன் நீங்களும் சவரஞ் செய்யக் கற்றுக் கொள்ளக் கூடாது? தென்னாட்டுப் பிராமணர்களைப்போல் வடநாட்டுப் பிராமணர்களுக்குச் சமயோசித புத்தி கிடையாது.

இங்கே சதிர் ஆடத் தெரியாத பிராமணப் பெண்களே இன்று இருக்க முடியாதே! சாம்பார் வைக்கத் தெரியாவிட்டாலும் சதிர் ஆடத் தெரிந்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டார்களே!

சதிர் ஆடுவது தாசிகளின் தொழில் என்று அதை ஏளனமாகவா கருதியிருக்கிறார்கள்? எந்தத் தொழிலை யார் செய்தால்தான் என்ன? பணமும் புகழும்தானே முக்கியம்!

பார்ப்பனர் மோட்டார் வண்டி ஓட்டுவதுபோல இரட்டை மாட்டு வண்டியும் ஓட்டவேண்டும்.

ட்ராக்டரால் உழுவதுபோல கலப்பை பிடித்தும் உழவேண்டும். மெக்கானிக் வேலை செய்வதுபோல விறகு உடைக்கும் வேலையும் செய்யவேண்டும்.

ஒரே சங்கதியில் பழைய தொழிலை ஏளனமாகவும் புதிய தொழிலை மட்டும் உயர்வாகவும் கருதக்கூடாது. டாக்டர்களாக வந்து உடலை அறுக்கும்போது, கசாப்புக் கடைக் காரர்களாயிருந்து ஏன் பணியாற்றக்கூடாது?

அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தப் புத்திமதி! நான் உட்பட எல்லோருக்குமே சொல்கிறேன்.

குத்தூசி குருசாமி (19-6-50)

நன்றி: வாலாசா வல்லவன்