kuthoosi gurusamy 263மந்திரி பதவி யென்றால் ரொம்பப் பொறுப்புடைய வேலை என்று நான் வெகு நாள் கருதிக் கொண்டிருந்தேன்! பொப்பிலி ராஜா முதல் மந்திரியாயிருந்தபோது ஒரு நாளைக்கு 4 மணி நேரந்தான் தூங்குவாராம்! சதா வேலை! சதா ‘பேட்டி’! சதா தொல்லைகள்!

காங்கிரஸ் மந்திரிகளைப் பார்த்த பிறகு நான் கூட, நீங்கள் கூட, குப்பை வண்டி ஓட்டுகிற தோழன் கூட, அங்காடிக் கூடைக்காரி கூட, மந்திரி வேலை பார்த்து விடலாம் என்றே தோன்றுகிறது! அவ்வளவு சுளுவு! சற்று அதிக வேலையாயிருந்தால், மேலும் ஒரு டஜன் (இப்போதே ஒரு டஜன் உண்டு!) மந்திரிகளைப் போட்டுக் கொண்டால் போகிறது! முன்னே மூன்று பேர் பார்த்த வேலையை இப்போது பனிரெண்டு பேர் பார்க்கிறார்களல்லவா? பிரகாசம் காருவுக்கும் அவர் கோஷ்டியாருக்கு கொடுத்தால் தானென்ன? இருந்தாலும் இவ்வளவு கருமித்தனம் பண்ணக் கூடாது!

“என்னாங்க! உங்க டப்-டுப், நடையெல்லாம் நல்லாத்தாங்க இருக்குது! வீடடிலே அரிசியில்லை! விறகில்லை! சர்க்கரையில்லை! வீட்டுக்காரன் வாடகைக்கு வந்து அலைஞ்சுகிட்டே யிருக்கான்! மண்ணெண்ணெய் ஆய்ப்போச்சு! வாங்காட்டிப் போனால் இன்றைக்கு ஒரே இருட்டுத்தான்!,”

- என்று மனைவி கோபத்தோடு சொல்கிறாள்!

“அப்படியா? நான் ஆலோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன். கவனிக்கப்படும்,” என்று கூறிவிட்டு வெளியேறுகிறார், உயர் திரு உத்யோகஸ்தர்!

மாலையில் திரும்பி வருகிறார்! இல்லை யென்ற ஒப்பாரி மீண்டும் ஆரம்பமாகிறது!

“ஆகட்டும்! அதுபற்றி யோசித்து வருகிறேன். ஆலோசனை செய்கிறேன். கனம் மனைவியார் சொல்வது கவனிக்கப்பட்டு வருகிறது.”- என்று மீண்டும் சொல்வாரேயானால் என்ன நடக்கும்?

“உங்கள் ஆலோசனை நாசமாய்ப் போக! இதுவுமென்ன சட்ட சபையா என்ன? ஏதாவது கடுகளாவாவது மனுஷனுக்குப் புத்தி வேண்டாமா? வேளா வேளைக்குச் சோறு கேட்கிறோமே! இதெல்லாம் இல்லாமே எப்படிச் சோறு கிடைக்கும் என்ற யோசனை வேண்டாமா? சரி! சரி! நீங்கள் ஆலோசனை செய்து கொண்டே யிருங்கள்! என்னால் இனிமேல் இந்தச் சமையல் வேலை பார்க்க முடியாது! இதோ, உங்களோடு புறப்பட்டு வருகிறேன்,”

என்று தானே கூறுவாள்? ஆனால் மந்திரியாயிருந்தால் இந்தத் தொல்லையில்லை!

இந்தப் பஞ்ச காலத்தில் ஒரு லோயர் கிரேடு ஆசிரியருக்கு 18 ரூபாய் சம்பளம் போதுமா?”

“போதுமா, போதாதா என்பது பிரச்சனையல்ல.”

“தங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென்று பள்ளி ஆசிரியர் சங்கத்திலிருந்து சாக்காருக்கு விண்ணப்பம் வந்ததா?”

“ஆகா! வந்தது! ஆதுபற்றி ஆலோசனை பண்ணிக் கொண்டு இருக்கிறோம்.”

எப்படியிருக்கிறது பதில், பார்த்தீர்களா? ஆலோசனையாம் ஆலோசனை! பாதி நாள் பட்டினியாயிருக்கும் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய கேள்விக்கு இந்தப் பதில்!

மந்திரிகள் தங்கள் சம்பளத்தில் 500 ரூபாய் அதிகப்படுத்திக் கொள்ளவும் உயர்திரு. கைதூக்கிகளின் தினசரிப் படிப்பணத்தில் அய்ந்து ரூபாய் அதிகப்படுத்தவும் மட்டும் இந்த ஆலோசனை இல்லையே சுடச்சுட நடந்ததே!

நல்ல ஆலோசனை! எதற்கெடுத்தாலும் இழவு ஆலோசனை!

இந்த மந்திரிகள் கண்ணுக்கெதிரே வீடு தீப்பற்றி எரிந்தாலுஞ் சரி, யாராவது ஆற்றில் விழுந்து விட்டாலுஞ் சரி, இவர்கள் கூச்சல் கூடப் போட மாட்டார்கள்!

என்ன செய்யலாம் என்பது பற்றி ஆலோசனை செய்து கொண்டே நிற்பார்கள்!

எதற்கெடுத்தாலும் இந்த ஆலோசனை பதில் தருவதென்றால், யார்தான் மந்திரியாக வரக் கூடாது?

என்ன (மந்திரியாக வந்த பிறகு) எந்த உறுப்பினராவது, “கனம் மந்திரியாருக்கு ஈவு, இரக்கம், சுய அறிவு, மனிதத் தன்மை எதுவுமே கிடையாதா?” என்று ஆத்திரத்தில் கேட்டால், என்ன பதில் சொல்வேன் தெரியுமா?

“அதுபற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன்,” என்றுதான் சுடச் சுடச் சொல்வேன்!

-  குத்தூசி குருசாமி (28-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்