"அம்மா! ஆலங்கன்றைப் பிடுங்கி ஏறியட்டுமா?” என்று கேட்டான் பையன்.

kuthoosi gurusamy 268“சே! சே! வேண்டாமடா, தம்பீ! தளதளவென்று கண்ணைப் பறிக்கும் விதமாக வளர்கிறதே! பெரிதானால் பயன்படுமே!” என்றாள் வயது முதிர்ந்த தாயார்.

“அது சரியம்மா! அழகாயிருந்தால் போதுமா? அதுவும் வளர வேண்டிய இடத்தில் வளர வேண்டாமா? வீட்டின் சுவர் ஓரத்தில் வளர்கிறதே! தோட்டத்தில் வளரும் மாங்கன்றை அலட்சியப்படுத்திவிட்டு இந்த ஆலங்கன்றுக்குத் தண்ணீர் ஊற்றி எருப்போடுகிறாயே! ரொம்ப ஆபத்தம்மா! ஆபத்து!” என்றான், பையன்!

தாயார் அவன் பேச்சைக் கேட்கவில்லை. அந்த ஆலங்கன்றின் மீது அவளுக்கு ஏனோ அவ்வளவு ஆசை! மரங்கன்றைவிட ஆலங்கன்று வெளித் தோற்றத்திற்கு அழகாயிருக்கிறதல்லவா? அதனாலிருக்கலாம்! வீட்டுக்கு வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் ஆலங்கன்றின் அழகைப் பற்றிக் கூறி பிரமாத விளம்பரப்படுத்தினாள், தாயார்! பையன் சொல்லிச் சொல்லி சோர்ந்து போனான்!

4-5 ஆண்டுகள் கழிந்தன! ஆலங்கன்று வளர்ந்தது! அழகும் வளர்ச்சியும் அபாராம்! அதைப் புகழாதவர்களில்லை! ஆனால் வீட்டுச் சுவரின் உட்புறத்தில் வீற்றுக் கண்டிருந்தது யாருக்குத் தெரியும்? மேலும் 5-6 ஆண்டுகள் சென்றன; தாயார் ஆலங்கன்று சிறு மரமாக வளர்ந்திருந்ததைக் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கியிருந்தாள்!

ஒரு நாள் திடீரென்று நள்ளிரவில் பெருங்காற்றும் கனமழையும் கலந்து அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் சுவர் திடீரென்று வீழ்ந்தது. நல்ல வேளையாக தாயாரின் காலில் சிறு காயம் ஏற்பட்டதோடு நின்றது. சுவர் ஓரத்திலிருந்த பாத்திரப் பெட்டி மட்டும் அப்பளமாக நசுங்கி அதிலிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் காகிதம் போலக் காட்சியளித்தன! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று!

இதிலிருந்து எதையும் அற்பமென்று நினைத்து விடக்கூடாது என்பதை நீங்களெல்லோரும் தெரிந்து கொண்டிருப்பதுபோல் நானும் இன்றுமுதல் தெரிந்து கொண்டு விட்டேன்!

லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் பெருவாரியான எறும்புப் புற்றுக்கள் இருக்கின்றனவாம். அவைகளை அழிப்பதற்கு விவசாய இலாகா நிபுணர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லையாம்! விதவிதமான விஷ மருந்துகளைக் கொட்டிப் பார்த்து விட்டார்களாம்! எறும்புகள் சாகவில்லையாம்! ஆகையால் புதிய எறும்பு - எதிர்ப்புக் கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறார்களாம்!

அற்பமானது என்று எதையும் இலட்சியப்படுத்தாதே! கருத்தரை!

போர்ட்மாஸ்ட் என்ற நகரத்திலுள்ள தென்னை மரங்களில் அதிகமான வண்டுகள் இருந்து கொண்டு தென்னை மரங்களையே பாழாக்குகின்றனவாம்! இவைகளை அழிக்கவே முடியவில்லையாம்! ஆகையால் கடைசியாக அவைகளைப் பிடித்துக் கொன்று விடுவதுதான் சரியான வழி என்று முடிவு செய்தார்களாம். அதற்காக ஓர் அபூர்வமான ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்! அதிகப்படியான வண்டுகளை யார் பிடித்துத் தருகிறார்களோ, அவர்களுக்கு இலவசமாக சினிமாப் படம் காட்டப்படும் என்பதுதான் அந்த ஏற்பாடு!

அற்பமான வண்டுக்காக எவ்வளவு பெரிய முயற்சி பார்த்தீர்களா?

சென்ற போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தெருவில் கிடக்கும் பழைய லாடங்களைப் பொறுக்கித் தருகிறவர்களுக்கு லாடம் ஒன்றுக்கு அரையணா, முக்காலணா வீதம் சர்க்கார் கொடுத்து வந்தது பலருக்குத் தெரியும்! அற்பமான ஒரு லாடம் 500-600 ரூபாய் பெறும் படியான மோட்டார் டயர்களைப் பொத்துவிடும்போது ஏன் தரக் கூடாது?

இவைகளையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், அற்புத் தொல்லைகளை ஒழிப்பதென்றால் கூடப் பெருமுயற்சி செய்தால்தான் முடியும் என்பதைக் கூறத்தான்!

நம் ஊர்களிலும் இம்மாதிரி முறைகளை ஏன் பின்பற்றக் கூடாது?

உதாரணமாக, தென் இந்திய ரயில்வே, மூன்றாம் வகுப்பு வண்டிகளிலுள்ள கக்கூஸ்களில் தண்ணீர் வருமாறு செய்கிறவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச ரயில்வே ‘பாஸ்’ கொடுப்பதாக விளம்பரஞ் செய்யலாம்!

சென்னை கார்ப்பரேஷனின் தெருக் கடிகாரங்களில் ஏதையாவது ஒன்றை 24 மணி நேரத்திற்கு ஓடுமாறு செய்கிறவர்களுக்கு 200 ரூபாய் கைக்கடிகாரம் இனாம் என்று விளம்பரஞ் செய்யலாம்!

தண்ணீர் கலக்காத பால் விற்கிறவரைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொடுக்கிறவர்களுக்குப் பழைய கோட்டைப் பசுமாடுகள் மூன்று இனமாகத் தரப்படும் என்று விளம்பரப்படுத்தலாம்!

கம்யூனிசத்தை எதிர்க்காத காங்கிரஸ்காரர்களின் விலாசத்தைக் கூறுகிறவர்களுக்கு ஒரு ‘பஸ் பர்மிட்’ அல்லது “லைசென்ஸ்” அல்லது ஒரு புது உத்யோகம் (குறைந்த பட்சம் ஒரு ஸ்தானிகர் வேலை!) தரப்படும் என்று கெஜட்டில் வெளியிடலாம்.

- குத்தூசி குருசாமி (09-08-1949)

நன்றி: வாலாசா வல்லவன்