சங்கீத விமர்சனமல்ல. கலை ஆராய்ச்சியுமல்ல. தமிழ் இசை வளர்ச்சியுமல்ல. அற்பமான ஒரு விஷயம், புரட்சி வீரர்களைப் பொறுத்த வரையில். ஆனால் அடிப்படையான விஷயம் என்னைப் பொறுத்தமட்டில்.

kuthoosi gurusamy 263"பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே! வெள்ளைப் பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே,” என்று எழுதினார், சுப்பிரமணிய பாரதியார். இதனாலே அவரை ஒரு பெரிய சமுதாயப் புரட்சிக்காரர் என்று கூறவில்லை. எத்தனையோ இடங்களில் ‘ஆரியர்’ என்று பெருமையாக கூறிக் கொள்கிறார். அது போகட்டும்.

“ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே;” என்ற பாடலில் உள்ளதுதான் ‘பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே’ என்பது. ஆனால் சினிமாவிலும், இசைத் தட்டிலும் இந்த அடியை மட்டும் விழுங்கி விட்டார், இன உணர்ச்சி கொண்ட பாடகியார் பட்டம்மாள்.

பல மாதங்களுக்குப் பிறகு தமிழ் இசை அரங்கில் பாடகியார் சுந்தராம்பாள் இதே பாட்டைப் பாடினார். பார்ப்பானை அய்யனென்ற காலமும் போச்சே! என்ற அடியைத் தொடங்கியதும் ஒரே கைத் தட்டலும், ஆரவாரமும்! ஏன்? பாரதியின் புத்தகத்தில் இருப்பதுதானே! எல்லோரும் சாதாரணமாகப் பாடுவதுதானே! இதற்கு ஏன் இவ்வளவு பெரிய கூச்சல்?

புரட்சிப் பிரசங்கியார்களுக்கு இவ்விஷயம் புரியாது. பிரமாண்டமான அரசியல் - பொருளாதார பிரச்னைகளைப் பற்றி மட்டுமே வேலை செய்யக்கூடிய முதிர்ந்த மூளைகளுக்கு இதன் காரணம் விளங்காது.

பார்ப்பன பாடகி விழுங்கிய பகுதியைத் திராவிடப் பாடகி பாடினார்! அதற்காகத்தான்!

இதற்காக இங்கிலீஷ் வாரப் பத்திரிகையொன்று (ஆரியரை ஆசிரியராகக் கொண்டது) துள்ளிக் குதிக்கிறது. இந்த அடி பாரதியாரால் பாடப்பட்டதில்லையாம்! இடைச்செருகலாம்! எவனோ அயோக்கியன் நுழைத்து விட்டானாம்! பிராமணர்களைத் தாக்குகிற சொற்களாம்! நாக்கிலும், மூக்கிலும் நானூறு தேள் கொட்டிவிட்டது போல அலறிக் குதிக்கிறது, அந்த ஆரியப் பத்திரிகை!

உள்ளதை மறைக்கலாமாம். ஆனால் அதை எடுத்துச் சொல்வது “பிராமணத் துவேஷமாம்"!

காந்தியாரை ஒரு பார்ப்பான் கொல்லலாமாம்! அதை எடுத்துச் சொல்வது குற்றமாம்! எல்லா அயோக்கியர்களும் மறைப்பதுபோல நாமும் மறைத்துவிட வேண்டுமாம்! விஷமிகளும் பேடிகளுந்தான் மறைத்து விட்டார்கள் பட்டம்மாள் இனத்தார் அல்லது அவர் புன்சிரிப்புக்குக் காலை நக்கும் “கயமை”க் கூட்டம்!

எனக்குப் பழக்கமான பணமூட்டை ஒருவர் பெரிய பாங்கியின் தலைவர். ஒரு நாள் தற்செயலாய் என்னைச் சந்தித்தார்.

“ஹிந்து” ஆசிரியர் என்னை மிரட்டுகிறாரே! என்ன செய்வது ஸார்?” என்று கேட்டார்.

“ஏன் மிரட்டுகிறார்? அவரை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன்.

“நான் ஒன்றும் செய்யவில்லை. மாதம் 1, 000 ரூபாய்க்குமேல் விளம்பரம்கூடத் தந்து கொண்டிருக்கிறேன். என் பாங்கியில் இந்த 3, 4 வருஷத்துக்குள்ளாக 5-6 பிராமண குமாஸ்தாக்களை எடுத்துவிட்டு தமிழர்களைப் போட்டுவிட்டேனாம்! அதற்கு நானும் புதிதாக வந்திருக்கும் திராவிடக் காரியதரிசியும்தான் காரணமாம்! ‘என்ன முதலியார் சார், ஈரோட்டு வாசனை வீசுகிறதோ? வேண்டாம். கேளும். பாங்கியே ஒழிஞ்சு போகும்’ என்று மிரட்டுகிறார். எனக்கு பயமாயிருக்கிறதே! என்ன செய்வது?” என்று கேட்டார்.

“இவ்வளவு பெரிய பணக்காரர் ஏனய்யா அவருக்காக பயப்படுகிறீர்? ‘உன் ஹிந்து’ ஆபீசிலும் நீ நிர்வாக உறுப்பினராயிருக்கும் ‘ஹிந்து ஹைஸ்கூலிலும்’ எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள்? எல்லாம் உங்கள் கூட்டமாகத்தானே இருக்கிறது? அதுமட்டும் பரவாயில்லையோ?” என்று திருப்பிக் கேட்கிறதுதானே, ஸார்?” என்று கேட்டேன்.

“ஐயையோ! அவரையா? ஓமந்தூராரே அவரைக் கண்டால் நடுங்குகிறாரே! இன்ன ஆர். எஸ். எஸ். தலைவரை விட்டு விடுங்கள் என்று சொன்ன உடனே விட்டுவிடுகிறாரே! நான் எந்த மூலை? உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேனய்யா!” என்று கூறி விட்டார்.

அத்துடன் நிற்கவில்லை. “என்னை அவர் மிரட்டிய சங்கதியை யாருக்கும் சொல்லித் தொலைக்காதீர்கள்; நான் ஒரு “பிஸினசில் உள்ளவன்”, என்று கேட்டுக் கொண்டார்.

“ஆஹா! அப்படியே ஆகட்டும். இரகசியமாகவே வைத்திருக்கிறேன்,” என்று கூறினேன்.

வாசகர்களே, யாருக்கும் கூறாதீர்கள். உங்கள் மனதிலேயே போட்டு வைத்து, உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள், போதும்! ஒரு ஆரியப் பத்திரிகாசிரியர் ஹைகோர்ட் ஜட்ஜ் நியமனம் முதல் பாங்க் கிளார்க் வேலை வரையில் என்னென்ன காரியங்களில் தன் இனத்தைக் கவனிக்கிறார், பாருங்கள்!

நம்மைச் சேர்ந்ததுகளோ, நாலுகாசு கையில் கிடைத்தவுடனே ஒரே தலை கீழாய் நிற்குதுகள்! ‘கட்சியாவது, இனமாவது', என்கிறதுகள். ‘என் சொந்த யோக்கியதையால் பெரிய மனுஷன் ஆனேன்', என்குதுகள். 'உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே யில்லை' என்குதுகள். 'இதெல்லாம் சில்லறைப் பிரச்னை; பரந்த நோக்கம் வேண்டும்' என்று பேசுதுகள்!

சீனுவாசனைப் பார்த்தாவது இதுகளுக்குப் புத்தி வராதா?

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்