kuthoosi gurusamyதமிழிலும் சரி, இங்கிலீஷிலும் சரி, அடிக்கடி மாறாட்டம் ஏற்பட்டு விடுகிறது. கடிதங்களைப் பிரித்துப் போடும் போஸ்டல் ஊழியர்கள் அவசரத்தில் வேலை செய்பவர்கள்! ஊரின் பெயரிலுள்ள இரண்டொரு எழுத்துக்களை மட்டுந்தான் படிப்பார்கள். ‘டபக்’ என்று ஏதோ, ஒரு புறாக் கூட்டில் (புறாக்களுக்குப் பதிலாக கடிதங்கள் இருக்கும்) போட்டு விடுவார்கள். திருவள்ளூர் கடிதம் திருவாரூருக்கும், காரைக்கால் கடிதம் காரைக்குடிக்கும், மதராஸ்கடிதம் மதுரைக்கும், வடலூர் கடிதம் கடலூருக்கும், மங்களூர் கடிதம் பங்களுருக்கும் போவது சர்வ சாதாரணம். இப்படித் தட்டுக் கெட்டுப்போய், துறவிகளைப் போல, ஊர் சுற்றிக் கொண்டே யிருக்கும்! சில சமயங்களில் சொந்த ஊருக்கே திரும்பி வருவதும் உண்டு!

புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை இரண்டும் பெயரளவில்தான் ஒரே மாதிரி இருக்கின்றன என்று நினைக்க வேண்டாம். அங்கிருந்து ஒருவர் - இங்கிருந்து ஒருவர்; இரண்டு பிராமணத் தோழர்கள் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

‘‘டேய்! குத்தூசி! காந்தியைக் கொன்றவன் பார்ப்பான் என்பதை நீ ஏன் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறாய்? உன் கூட்டம் இல்லாவிட்டால் அந்தச் சங்கதியே இங்கே பரவியிருக்காதே! ஜாக்கிரதை! எங்கள் ஜாதியைப் பற்றி எழுதாதே! உன் பத்திரிக்கையைப் பற்றியும் உன் இயக்கத்தைப் பற்றியும் படேலுக்கும் நேருவுக்கும் விவரமாக எழுதி யிருக்கிறோம். பிராமணர்கள் அத்தனை பேரும் கையெழுத்துப் போட்டு மகஜர் அனுப்பி யிருக்கிறோம். பார்! இன்னும் ஒரே மாதத்தில் உன் பேப்பர் நிறுத்தப்படும். உன் சங்கம் சட்ட விரோதமாக்கப்படும். உன் கூட்டத்தார் கைது செய்யப் படுவார்கள்!’’

இதே நடையில் அல்ல. இதைப் போன்ற வேகமான இங்கிலீஷ் நடையில்.

இந்த இரண்டு ஊர்த் தோழர்களும் ‘‘ஒரு பிராமணன்’’ என்று தான் கையெழுத்துப் போட்டிருக்கின்றனர்.

இரு கடிதங்களையும் என் நண்பரான ஒரு காங்கிரஸ் திராவிடத் தோழரிடம் காட்டினேன்.

‘‘ஆமா! சார்! இருக்கலாம்! எங்கள் தலைவர்கள்கூட கமிட்டிக் சுட்டத்தில் குசு குசு வென்று ஏதோ இது சம்பந்தமாய்ப் பேசிக் கொண்டார்கள். டில்லியிலிருந்து உத்தரவு வந்திருக்கிறதாம், காங்கிரசுக்கு எதிராக உள்ள கட்சிகளை அடக்கி நசுக்கி விடும்படியாக. இன்னும் ஒரு வருஷத்தில் புதுத் தேர்தல் நடக்கும்போது உங்களை யெல்லாம் உள்ளே வைத்திருந்தால் தொல்லையில்லாமல் ஜெயிக்கலாம் என்று வடநாட்டார் கருதியிருக்கிறார்களாம். வடக்கே சோஷ்யலிஸ்ட்களைத் தவிர காங்கிரசுக்கு வேறு எதிர்ப்பில்லையாம். அவர்களை எப்படியாவது சரிப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்களாம். இந்த மாகாணத்தில் கம்யூனிஸ்டுகளையும், உங்கள் கூட்டத்தையும் அடக்கி விட்டால் போதும் என்பதுதான் அவர்கள் நினைப்பு,’’ என்றார் காங்கிரஸ் தோழர்.

‘‘ஓஹோ! வெலிங்டன் மாத்திரையைச் சாப்பிட்டிருக்கிறாரோ பட்டேல்? அது அகோரமான வெறியை எழுப்பி விடுமே!’’, என்று சொன்னேன்.

 ‘‘எனக்குக்கூட அதுதான் சரி என்று படுகிறது, ஸார்! ஆனால் ஒன்று. எங்களைப் பொறுத்தவரையில் இனிமேல் எந்தப் பிராமணரையும் காங்கிரசுக்குள் ஆதிக்கஞ் செலுத்த விடமாட்டோம். அது நிச்சயம். கொஞ்ச நஞ்சம் இருந்த ஆசையும், ஓமந்தூரார் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்கிற அயோக்கியத்தனமான நடத்தைக்குப் பிறகு மறைந்தே போய்விட்டது. இனி காங்கிரஸ் தலைமை, மந்திரி பதவி, என்று தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில், எந்த பிராமணனும் நினைக்க முடியாது. ஆனால் உங்களோடு சேர முடியாது, எங்களால்.’’

‘‘அடடே! எங்களோடு சேரச் சொல்லியா கட்டாயப் படுத்துகிறோம்? அங்கிருந்தபடியே எங்கள் வேலையைச் செய்யலாமே! இப்போ நீங்கள் சொன்ன விஷயமிருக்கே, அதுவே எங்கள் புத்தகத்திலிருந்து பிய்த்த ஏடுதானே! பரவாயில்லை அந்த ஏட்டையே திருப்பித் திருப்பி படியுங்கள்! அது போகட்டும்! எங்களை உள்ளே தள்ளிவிட்ட பிறகு நீங்களே நாங்களாகி விடுவீர்களே! அப்புறம் நீங்கள் ஜெயித்தாலென்ன? நாங்கள் ஜெயித்தாலென்ன? நீங்களும் நாங்களும் திராவிட இனத்தின் இரண்டு கைகள்தானே! ஒரு கை இன்னொரு கையைப் பார்த்து பரிகசிக்கலாமா? பொறாமைப்படலாமா? இடது கைக்கு ஒரு வேலையுமே கொடுக்காதிருந்து விட்டால் சூம்பிப் போய் விடுமே! எங்களை உள்ளே தள்ளி விடுவதும் அப்படித்தான்! இரண்டு கைகளுக்கும் சரிபங்கு வேலை கொடுத்தால்தான் பார்ப்பதற்கு அழகாயிருக்கும். ஆனால் ஒன்று, பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை பிராமணர்கள் மிரட்டியிருப்பதுபோல எங்களை அடக்கி விட்டால், உங்கள் கதி என்ன ஆகும் தெரியுமா? நாங்கள் திராவிட இனத்தின் உள் தாழ்ப்பாள். அதை ஒடித்து விடாதீர்கள்! திருடன் நுழைந்து விடுவான். எங்கள் வாயையும் பேனாவையும் அடக்கி விடுவது எது போன்றது தெரியுமா? ‘‘திருடர்கள் ஜாக்கிரதை!’’ என்ற போர்டுகளைக் கழற்றி எறிவது போன்ற செய்கை! ‘‘ஜன்னலுக்கு வெளியே கை நீட்ட வேண்டாம்.’’ ‘‘கதவைத் திறந்து கொண்டு வாசலில் உட்காராதே!’’ இம்மாதிரி அபாய அறிவிப்பு போர்டுகள்தான் நாங்கள், திராவிட கழகத்தார்! இவைகளைக் கழற்றி எறிந்து விடுவது ஒரே நிமிஷத்து வேலை. ஆனால் அதன் பலனை யார் அநுபவிப்பது? பாமரர்கள் தானே! அதுமட்டும் உங்கள் நினைவிலிருந்தால் போதும்! நாங்கள் எங்கிருந்தாலென்ன?. . . அது சரி! ஜெயில் அரிசி ரேஷன் அரிசியை விடச் சுத்தமாகவும் ருசியாகவும் இருக்கிறதாமே, நிஜந்தானா? மோர்கூட தாராளமாகக் கிடைக்கிறதாமே!’’ என்று கேட்டேன்.

காங்கிரஸ் தோழர் சிரித்துக் கொண்டே போய்விட்டார். ஆனால்  போன அவசரத்தில் நான் கொடுத்த கடிதங்களையும் எடுத்துப் போய் விட்டாரே! அவர் ஒரு மாதிரியான முரட்டுப் பேர்வழி! போலீஸ் மந்திரியிடம் காட்டிவிடப் போகிறார்! காட்டினால்தான் என்ன? அவரும் தான் அசெம்பிளியில் பிராமணர்களைத் தாக்கிப் பேசியிருக்கிறாரே! நாம் ஜெயிலுக்குள்ளே போனால் அவரை மட்டும் விட்டுவிட்டா போய் விடுவோம். நடக்கிறது நடக்கட்டும். பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை பிராமணத் தோழர்களே! நடக்கட்டும் உங்கள் வேலையும்! ஆகஸ்ட் 15-ந் தேதி கிடைத்த சுதந்திரம் உங்களுக்குத்தானே! இல்லாவிட்டால் உங்கள் இனத்தான் காந்தியாரைக் கொன்றுங்கூட நீங்கள் இப்படி மஞ்சள் குளிப்பீர்களா? சரி! அடுத்த மகஜரையும் தயார் செய்யுங்கள்!

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்