ஜஸ்டிஸ் பத்திரிகைக்காக இதுவரை சுமார் 4, 5 லக்ஷ ரூபாய் வரையில் பொதுமக்களிடமிருந்து உதவித் தொகையாகவும் மந்திரிகள் சம்பளத்திலிருந்து பார்ட்டி (கக்ஷி) உதவித் தொகையாகவும் பெற்றிருக்கலாம். இது தவிர இன்றும் பொப்பிலி ராஜா அவர்களால் N 2000, 3000 கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு இருந்தும் அப்பத்திரிகை ஒரு தடவை "இன்சால்வெண்டு" கொடுத்தாய் விட்டது. பலரது கடனுக்கு நாமம் சாத்தியுமாய் விட்டது. மறுபடியும் பொப்பிலி ராஜா சுமார் 50 ஆயிரம் ரூபாய் போல் செலவழித்துமாய்விட்டது. இந்த நிலையில் பத்திரிகை எவ்வளவு போகின்றது என்று சொல்ல நமக்கே வெட்கமாய் இருக்கிறது. இவ்வளவு யோக்கியதையில் அது பிரசுரிக்கிற முறையும் சிரிப்புக்கிடமானது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.maniammai with periyarதோழர் சர். ஷண்முகம் அவர்களுடைய பிரசங்கங்களையும், நடவடிக்கைகளையும் கூட சரிவரப் பிரசுரிப்பதில்லை. சுயமரியாதைக்காரரின் சமூக சம்மந்தமான வேலைகளைக் கூட சரிவர பிரசுரிப்பதும் இல்லை. இன்னும் அதன் யோக்கியதை சொல்வதென்றால் நமது பல்லைக் குத்தி நாமே முகர்ந்து பார்ப்பது போல் இருக்குமாதலால் விட்டு விடுகிறோம்.

மாதம் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஜஸ்டிஸ் பத்திரிகையின் பேரால் பாழாக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமோ? தெரியாதோ? என்று சந்தேகிக்கின்றோம். இதைப் பற்றி பல தடவை ஞாபகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் இதுவே முதல் தடவையாகவும் கடைசித் தடவையாகவும் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையின் பேரில் இதை எழுதுகிறோம்.

(பகுத்தறிவு செய்தி விளக்கக் குறிப்பு 23.09.1934)