மொகரம் பண்டிகையை முன்னிட்டு சென்ற 14-5-32 முதல் பம்பாயில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் கடுமையான கலகம் நடைபெற்று வருகின்றது. கல்கத்தாவிலும் இக்கலகம் தலைகாட்டத் தொடங்கி விட்டது. எங்கும் ஒற்றுமை, சகோதரத்துவம், சமரசம், சீர்திருத்தம் என்று பேசப்பட்டு வரும் இக்காலத்தில் கேவலம் மதத்தையும், ஜாதியையும் முன்னிட்டு இவ்வாறு கலகம் விளைவித்துக் கொள்ளுவதாக உலகத்தார் கருதும்படி நடந்து கொள்ளுவதைவிட நமது நாட்டிற்கு மானங்கெட்ட தன்மை வேறு ஒன்றுமே இல்லையென்பதை எந்த இந்தியரும் வெட்கத்தோட ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும்.

periyar 745கலகம் உண்டானதற்கு மூலகாரணம் சிறுபிள்ளைகள் ஆரம்பித்த சில காரியங்கள் என்றே பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்படுகின்றது. சில முஸ்லிம் சிறுவர்கள் இந்துக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று யாசகம் கேட்டார்களாம். இந்துக்கள் யாசகம் கொடுக்க மறுத்தார்களாம். இவ்வாறு யாசகம் கொடுக்க மறுத்தவர்களையும் வற்புறுத்திக் கேட்கவே அவர்கள் கோபங் கொண்டு, தமது வேலைக்காரர்களைக் கொண்டு அச்சிறுவர்களைத் துன்புறுத்தினார்களாம். இதைக் கேள்வியுற்ற முஸ்லிம்கள் உடனே கூட்டமாகச் சேர்ந்து வந்து இந்துக்களுடன் கலகம் புரிந்தார்களாம். இதன் பின்பே கலகம் முற்றி விட்டதாம். இதுவே பத்திரிகைகளில் காணப்படும் கலகத்திற்குக் காரணமான செய்தியாகும்.

இந்த அற்ப காரணத்தால் கலகம் மூண்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் துறக்கவும் ஆயிரக்கணக்கானவர்கள் அடிபடவும், காயப்படவும் சொத்து சுதந்திரங்களை இழக்கவும், உயிருக்கு அஞ்சவும் நேர்ந்ததென்றால் இதைவிட நமது தேசத்திற்கு அவமானம் வேறு என்ன வேண்டும்? அபலைகளான பெண்மக்களும், குழந்தைகளும் காலிகளால் தாக்கப்படுகின்றனர். கடைகளும் வீடுகளும் தாராளமாக சூறையாடப்படுகின்றன. இந்துக்களுக்குச் சொந்தமான இடங்களும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடங்களும் தாராளமாக நெருப்புக்கு இரையாக்கப்படுகின்றன. இக்கலகத்தில் இந்துக்கள் பக்கம் தான் அதிகச் சேதமென்றோ, அல்லது முஸ்லிம்கள் பக்கம்தான் அதிகச் சேதமென்றோ கூறுவதற்கில்லை. கலகம் என்று ஏற்பட்டால் இரு பக்கத்திலும் கொலைகளும், அடிகளும், கொள்ளைகளும் நடந்துதான் தீரும்.

இவ்வாறு அடிக்கடி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கலகம் உண்டாவதற்குக் காரணம் எப்பொழுதும் இவ்விரு சமூகத்தாருக்குள்ளும் இருந்து வரும் அவநம்பிக்கையேயாகும். முதலில் இந்த அவ நம்பிக்கையைப் போக்கி இருசமூகத்தாருக்குள்ளும் ஒற்றுமை உணர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்யாமல் “எங்கள் நாட்டில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகி விட்டோம்; எங்களுக்குள் சாதிச் சண்டை இல்லை, மதச் சண்டை இல்லை; சுயராஜ்யம் கொடுப்பதுதான் தாமதம்; இப்பொழுதே சுயராஜ்யம் கொடுத்து விட்டால் கொஞ்ச நஞ்சமுள்ள மனப்பிணக்குகளும் ஒழிந்துவிடும்” என்று தேசீய வேஷக்காரர்கள் கூச்சலிடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?

இப்பொழுது பம்பாயில் ஏற்பட்ட கலகத்திற்குக் காரணம் சிறு பிள்ளைகள் செய்த முரட்டுத்தனமான விளையாட்டுக் காரியங்களும், அவைகளுக்கு மேல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்ட இந்துக்களின் அவசரப்பட்ட ஆத்திரமான காரியமுமே மூலகாரணம் என்று கூறப் பட்டாலும், மதப் பிடிவாதம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் கலகம் பெருகி ஓங்கியதற்குக் காரணம் ‘அரசியல்’ என்றுதான் நாம் அபிப்பிராயப் படுகின்றோம்.

முஸ்லிம் பொது ஜனங்களும், பொது ஜனங்களால் மதிக்கப்படும் தலைவர்களும் காங்கிரசையோ, சட்ட மறுப்பையோ, சத்தியாக்கிரகத்தையோ ஆதரிக்கவில்லை என்பது உலகறிந்த விஷயம், அன்றியும் திரு. காந்தியார் வட்டமேஜை மகாநாட்டிற்குச் சென்று வந்தபின், திரு. காந்தியும் காங்கிரசும் அரசியலில் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள முடியாதென்பதை பகிரங்கமாகக் காட்டிக் கொண்டபின் முஸ்லிம்கள் காங்கிரசை “இந்து மகாசபையின் அப்பன்” என்றே தீர்மானித்து விட்டார்கள். ஆகவே காங்கிரசின் மீது கொள்ளும் பகைமையை அதை ஆதரிப்போர்பாலும் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இதைப் போலவே காங்கிரஸ் அபிமானங் கொண்ட இந்துக்கள், முஸ்லிம்கள் சட்டமறுப்பை ஆதரிக்கவில்லை என்பதற்காகவும் முஸ்லிம் பொது ஜனங்களும், அவர்களின் தலைவர்களான மௌலானா ஷெளக்கத் தலி போன்றவர்களும், காங்கிரசையும் அதன் காரியங்களையும் வெளிப்படையாகக் கண்டித்து எதிர்க்கின்றார்கள் என்பதற்காகவும், முஸ்லிம்களின் மேல் உள்ளூர வெறுப்பில் ஆத்திரமும் கொண்டிருந்தார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இதனாலேயே “வேண்டாத பெண்டாட்டி கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம்” என்பது போலச் சிறு பிள்ளைகள் யாசகம் கேட்ட அற்பகாரணத்தை முன்னிட்டுக் கலகம் உண்டாகி விட்டதென்று கூறுவதில் சிறிதும் தவறு கிடையாது. இதுவே இந்து முஸ்லீம் கலகம் வலுப்பதற்குக் காரணம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்து முஸ்லிம் கலகத்திற்கு அரசியல் காரணமில்லை என்றும், சில பொறுப்பற்றவர்களும் வகுப்புச் சண்டை மூட்டுகின்றவர்களுமே கலகத்திற்குக் காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டுகிறோம். இந்தியாவில் அரசியல் சீர்திருத்தமும், அதிகப்படியான அரசியல் சீர்திருத்தம் வேண்டும் என்னும் கிளர்ச்சியும் ஏற்படுவதற்கு முன் இப்பொழுது நடப்பது போல இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிக்கடி பெரும் கலகங்கள் நடந்தது உண்டா என்று கேட்கிறோம். இம்மாதிரியான கலகங்கள், அரசியல் சீர்திருத்தமும், அதிகப்படியான அரசியல் சீர்திருத்தம் வேண்டுமென்னும் கிளர்ச்சியும் ஏற்படுவதற்குமுன் இல்லையென்பது உண்மை. ஆகவே இதற்கு முன்னில்லாமல் இப்பொழுது சில ஆண்டகளாக ஆரம்பித்து அதிகப்பட்டு வரும் இக்கலகங்களுக்குக் காரணம் அரசியலா? அல்லவா?

இரு சமூகத்தாரிடமுமிருந்து வரும் இத்தகைய விரோத மனப்பான்மை நீங்கி இந்து முஸ்லிம் ஒற்றுமை உண்டாவதற்குத்தான் வழியுண்டா என்று பார்த்தால் சமீபத்தில் ஏற்படுவதற்கு வழியில்லையென்று தான் கூறவேண்டும். பல வகுப்புகளும், பல மதங்களும் உள்ள ஒரு நாட்டில் அரசியல் கிளர்ச்சி அதிகமாக அதிகமாக வகுப்பு மதக்கலகங்களும் அதிகப்பட்டுக் கொண்டுதான் இருக்கக் கூடும். ஆகையால் வகுப்பு வித்தியாசங்களையும், மதக் கோட்பாடுகளையும் ஒழித்தாலன்றிக் கலகத்தை ஒழிக்கவாவது, அரசியலை நன்றாக நடத்தவாவது விரும்பும் அரசியல் சீர்திருத்தங்களைப் பெறவாவது முடியாது என்பது நிச்சயம். ஆதலால் நமது நாட்டில் இந்துக்கள் பழய இந்துக்களாகவே இருக்கும் வரையிலும், முஸ்லிம்கள் பழய முஸ்லிம்களாகவே இருக்கின்ற வரையிலும் இரு சமூகத்திற்குள்ளும் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை.

இந்து சமூகத்திலும் முஸ்லிம் சமூகத்திலும் மாறுதலை உண்டாக்கினால்தான் இருசமூகத்திற்கும் ஒற்றுமை உண்டாக முடியும் இருசமூகத்தினருடைய பழக்க வழக்கங்களிலும், மனப்பான்மைகளிலும் மாறுதலை உண்டாக்கப்பாடுபடுவதே உண்மையான தேசவூழியமாகும். ஆனால் தேசீயத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த ஸ்தாபனமும், எந்த மனிதர்களும் இதற்காகப் பாடுபடக் கொஞ்சமும் கவலையெடுத்துக் கொள்ளவே இல்லை யென்பது உண்மை. இதற்கு மாறாக, இரு சமூகத் தலைவர்களும்; மத விஷயத்திலும், வகுப்பு விஷயத்திலும், இரு சமூகத்தாருக்குள்ளும், மூடநம்பிக்கைகளையும், பிடிவாதத்தையும் அதிகப்படுத்தி வருகிறார்கள் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. இப்படியானால் எப்பொழுதுதான் இரு வகுப்பினருக்குள்ளும் சமரச உணர்ச்சி உண்டாக முடியும் என்று யோசனை செய்து பாருங்கள்!

அன்றியும், சுலபமாக இந்து முஸ்லிம் கலகம் உண்டாவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது என்று நாம் நினைக்கின்றோம். சாதாரணமாக ஓடுகின்ற ஒருவனை ஓட ஓட விரட்டுவதே உலக இயல்பு. எவ்வளவு அடித்தாலும் எதிர்க்க முடியாமல் தாங்கிக் கொள்ளுகின்ற ஒருவனை அடிக்கின்றவன் பயமில்லாமல் அடிப்பதுதான் இயல்பு. ‘நாம் விரட்டினால் நம்மை எதிர்த்து விரட்டுவான்’ என்ற பயமிருந்தால், ‘நாம் அடித்தால் நம்மையும் திருப்பி அடிப்பான்’ என்ற அச்சமிருந்தால் விரட்ட எண்ணுகின்றவனும், அடிக்க நினைக்கின்றவனும், நினைத்தவுடன் விரட்டவோ, அடிக்கவோ, துணிய மாட்டான் என்பது உறுதி. இந்த முறையில் இந்துக்களின் நிலைமையையும், முஸ்லிம்களின் நிலைமையையும் எடுத்துக் கொண்டால், இந்துக்கள் சமூகம் ஜாதிமத விஷயங்களில் நெல்லிக்காய் மூட்டைகளாய் இருப்பதனால், ஒற்றுமையோடு எதிர்க்கின்ற கூட்டத்தைக் கண்டால் முதலில் பயந்து ஓடக் கூடிய நிலையிலும், அடிபடக் கூடிய நிலையிலுமே இருக்கின்றது என்பதில் ஐயமில்லை. இக்காரணத்தினால் தான் முஸ்லிம்கள் சிறுபான்மையினரா யிருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கவும் இந்துக்கள் முதலில் யோசனை யில்லாமல் கலகம் உண்டாவதற்குக் காரணமாயிருந்து விட்டுப் பிறகு அடிபட்டு ஓடவும் நேருகின்றது. இதற்கிடையில், கலகக்காரர்களும் கொள்ளைக்காரர்களும் புகுந்து கலகத்தை அதிகப்படுத்திப் பொருள்களைக் கொள்ளை யடிக்கின்றார்கள்.

ஆகவே, ஒருவன் அடிப்பதைப் பொறுத்துக் கொண்டிருப்பது, அல்லது ஒருவன் விரட்டுவதைக் கண்டு ஒருவன் பயந்துகொண்டு ஓடுவது என்ற நிலை இருக்கும் வரையிலும் இது மாதிரியான வகுப்புக் கலகங்களும் மதச்சண்டைகளும் இருந்துதான் தீரும் என்பதில் யாரும் சந்தேகமே படவேண்டியதில்லை.

ஆனால், திரு. காந்தியின் - காங்கிரசின் ஆதிக்கம் ஏற்பட்டபின் இந்த நிலைமாறி, கலகத்தை எதிர்த்து நின்று அடக்கும் சக்தி உண்டாவதற்கு வழியே இல்லாமல் போய்விட்டது. திரு. காந்தியின் உபதேசமும், காங்கிரசின் பிரசாரமும் “சத்தியாக்கிரகம் பண்ணுங்கள்! தடியடி வாங்குங்கள்! எவ்வளவு அடித்தாலும் பட்டுக் கொள்ளுங்கள்! ஆத்மசக்திதான் பெரிது! ஆத்மசக்தியினால் எதிரிகளை வெற்றி கொள்ளுங்கள்” என்று கோழைத்தனத்தை ஊட்டிக் கொண்டு வருகின்றது. இந்தக் கோழைத்தனமான பிரசாரம் நடைபெறுகின்ற வரையிலும், இதை மக்கள் பின்பற்றிக் கொண்டு அடிபடுகின்ற வரையிலும் எந்த வகுப்பினரானாலும் சரி, எந்த மதத்தினரானாலும் சரி, கலகம் நேரும் போது அடிபட்டு மானங்கெட்டுச் சாவ வேண்டியது தான்.

ஆகவே, இந்து முஸ்லிம் கலகத்திற்குக் காரணம் அரசியலும், மூட நம்பிக்கைகளும், ஒரு சார்பாரின் கோழைத்தனமும் காரணமாயிருப்பதை உணராமலும், உணர்ந்து அவைகளை ஒழிக்க வழி தேடாமலும், இரந்து கொண்டு வீணாக அரசாங்கத்தின் மேல் பழி போடுவது எவ்வளவு ஒழுங்கான செய்கையாகும்?

கலகம் நேர்ந்தபின், அதை அடக்க அரசாங்க அதிகாரிகள் சரியான முறைகளைக் கையாளவில்லை; பாராமுகமாக இருக்கிறார்கள் என்று தேசீயவாதிகளும், தேசீயப் பத்திரிகைகளும் கூச்சலிடுகிறார்கள். ஆனால் அரசாங்கத்தாருடைய அடக்கு முறைகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாமல் சட்டமறுப்புச் செய்யக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? இந்தத் தேசீயத் தலைவர்களும் பத்திரிகைகளும் அல்லவா? அரசாங்கத்திற்கு விரோதமாகக் காங்கிரஸ்காரர்கள் சட்டமறுப்பும் கலகமும் செய்வது போலவே, இந்துக்கள் முஸ்லிம்களுக்கு விரோதமாகவும், முஸ்லிம்கள் இந்துக்களுக்கு விரோதமாகவும் கலகம் புரிகின்றார்கள். சட்ட மறுப்புக்காரர்கள் அரசாங்கத்தாருடைய தடியடிகளையும், பிரம்படிகளையும், கடுமையான தண்டனைகளையும் மீறிக் கலகம் பண்ணுவது போலவே, இப்பொழுது இந்துக்களும், முஸ்லிம்களும் அரசாங்க அதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் கலகம் பண்ணிக் கொள்ளுகிறார்கள். ஆகவே இந்தக் குற்றத்திற்கும் அரசியல் கிளர்ச்சியே காரணம் என்பதை யார் மறுக்க முடியும்?

அன்றியும் இந்த இந்து முஸ்லிம் கலகம் நடந்த காலத்தில், அந்த பம்பாய் நகரத்திலேயே போஸ்டாபீஸ்களுக்குத் தீ யிடுவதும், தபால் பெட்டிகளுக்குத் தீ யிடுவதும் ஆகிய காரியங்களும் நடந்திருக்கின்றன. இதைக் கொண்டே இக்கலகம் சட்ட மறுப்புக்காரர்களால் உண்டானதா? அல்லவா? என்பதை எளிதில் தீர்மானிக்கலாம்.

ஆகவே இனியாவது உண்மையில் இந்து முஸ்லிம் ஒற்றுமை உண்டாக வேண்டுமானால், இருவகுப்பினரிடமுள்ள மூட நம்பிக்கைகளையும் முரட்டுப் பிடிவாதங்களையும் ஒழிப்பதும், அரசியலில் முஸ்லிம்கள் விரும்பும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேசீயவாதிகள் சம்மதிப்பதும், இந்துக்கள் கோழைகளாயில்லாமல் முஸ்லீம்களைப் போல் ஒற்றுமையாகவும், தைரியமாகவும் இருக்கும்படி செய்வதும், பொது ஜனங்களிடம் சட்டத்தை மீறுவது, கலகம் பண்ணுவது என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்கச் செய்வதும் ஆகிய காரியங்களாலேயே முடியுமென்று கூறுகிறோம்.

இதைவிட்டு விட்டு இப்பொழுதே வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை விட்டு ஓடி விட வேண்டுமென்று பிரசாரம் பண்ணுவதும், இன்றைக்கே பூரண சுயேச்சை கொடுத்துவிட்டால் வகுப்புச் சச்சரவுகள் ஒழிந்து சமரசம் ஏற்பட்டு விடும் என்று சொல்லுவதும் வீண் என்பதையும், அதனால் ஒரு பலனும் உண்டாகப் போவதில்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 22.05.1932)