கனவான்களே!

திரு.வி.வி.இராமசாமி அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியே யாகும்.

periyar 480நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4, 5 வருஷம் தேவஸ்தானக் கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும் இருந்தேன். தேவஸ்தான செல்வங்களை பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால் அது நல்ல வேலைதான். அங்கு போக வேண்டியதும் அவசியந் தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால் அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே நான் இராஜிநாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன்னார்கள். ஆனாலும் நான் வேறு வேலையில் இந்த கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப் படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான். இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்ட் திரு. இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கிறார். அது கைகூடுதவற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற்சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக்காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.

ஆதலால் கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும் கோவில்களின் பேராலுள்ள செல்வங்களெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தமில்லை என்று நாம் சும்மா இருந்து விட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை.

ஆகையால் இந்தவித அபிப்பிராயமுள்ள திரு. இராமசாமியைத் தெரிந்தெடுத்தவர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத்திருப்பார்கள். ஏனென்றால் திரு.வி.வி.இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால் அப்படிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு.இராமசாமி தனது கடமையைச் செய்வார் என்பதில் சந்தேக மில்லை.

இதுபோலவே கல்வி இலாகாவுக்கும் திரு. கந்தநாடார் பி.ஏ.பி.எல்., அவர்களைத் தெரிந்தெடுக்கப்பட்டது நமக்கு இலாபமேயாகும். கல்வி இலாகா பார்ப்பனீயமயமாய் இருக்கின்றது. கல்வி வருணாச்சிரமக் கல்வியாய் இருக்கின்றது. பாடப் புத்தகங்கள் புராணப் புத்தகங்களாக இருக்கின்றது. இத்துறையில் புகுந்து அவற்றைப் பகுத்தறிவுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இன்று இந்தியாவின் இழி நிலைமைக்கு மதமும், கல்வியுமேயாகும். பழைய கால கல்வியை சங்கத்தின் மூலம் அடக்கி வைத்து பார்ப்பனீயத்திற்கு எதிரான எதற்கும் இடம் இல்லாமல் செய்து விட்டார்கள். புஸ்தகங்களை அறங்கேற்றுவது என்பதே கட்டுப்பாடுயாகும் என்பது தான் அருத்தம். இப்போதைய யூனிவர்சிட்டி என்பது அக்கால சங்கமாகவும், அறங்கேற்றுவது டெக்ஸ்ட்புக் கமிட்டியில் பாசாக வேண்டியதாகவுமே இருக்கின்றது.

அந்தக் கமிட்டியில் மதம் இல்லாதவர்களும், கடவுள் பைத்தியம் இல்லாதவர்களுமான பகுத்தறிவாளர்கள் இருக்க வேண்டும். நமது யூனிவர்சிட்டிப் படிப்பு மூடநம்பிக்கையைப் பலப்படுத்துவதாகும். இதிலிருந்து யாரும் அறிவு பெற்றுவிட முடியாது. வேண்டுமானால் கிராமபோன் ஆகலாம். ஆதலால் அத்துறைகளில் சுயமரியாதைக்காரர்கள் புகுந்து முதலாவது உபாத்தியாயர்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி நியமிக்க வேண்டும். உபாத்தியாயர்களுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும். அறிவுக்கு ஆதாரமான புஸ்தகங்கள் பிள்ளைகளுக்குக் கொடுபட வேண் டும். இது முதலிய காரியங்கள் கல்வித்துறையில் செய்ய வேண்டி யிருப்பதால் அதற்கேற்றவர்கள் போக நேருவது நன்மையே யாகும்.

ஆதலால் நீங்கள் இந்தக் கருத்தின் மீதே தெரிந்தெடுத்துப் போற்றுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

(குறிப்பு : 06.07.1931 ஆம் நாள் விருதுநகர் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் திரு. கந்தநாடார் அவர்கள் கல்விச் சங்க உறுப்பினராகவும் திரு. வி.வி.இராமசாமி அவர்கள் தேவஸ்தானக்கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பேற்றதற்கு நடைபெற்ற பாராட்டுவிழா விருந்தில் தலைமையேற்று ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 19.07.1931)