periyar 311சொத்துரிமை

மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்கு சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும் சொத்துக்களை வைத்து சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்.

கல்யாண ரத்து

பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து, செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டு வர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7-வருஷகாலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்டமில்லா விட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3-வருஷ­ காலம், ஒற்றுமையின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய் விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களா யிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ளவர்களாக இருந்தாலோ, ஆகிய காரணங்களால் துன்பப்படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம் ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாதவர்கள் தன்னை கல்யாணப் பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலகிக் கொண்ட 6 மாதம் பொருத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14 வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடா யிருக்கிறது.

செங்கல்பட்டுத் தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட “சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டு திட்டமில்லாமல் செய்கின்றது” என்று சொல்லி கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.06.1931)