தரங்கம்பாடி சமுத்திரக்கரையில் கூட்டம்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த 5, 6 வருஷ­ காலத்தில் நாட்டில் ஏற்பட்டிருக்கிற உணர்ச்சிகள் என்ன என்பதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட காரியங்கள் என்ன என்பதைப் பற்றியும், சுயமரியாதை இயக்கத்தின் பேரால் சொல்லப்பட்ட அபிப்பிராயங்களெல்லாம் முதலில் கேட்பவர்களுக்கு அதிசயமாகவும், தலைகீழ் புரட்சியாகவும் காணப்பட்ட போதிலும் சாதாரணமாக ஒவ்வொரு அபிப்பிராயங்களும் ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷங்களுக்குள்ளாகவே செல்வாக்குப் பெற்று எல்லா ஜனங்களாலும் சகித்துக் கொண்டு வரப்படுகின்றதென்றும், பார்ப்பனர்களுடைய ஆதீக்கத்திலும், பார்ப்பனீய பிரசாரகரின் ஏக நாயகத் தன்மையிலும் இருந்து வந்த காங்கிரசு முதலிய அரசியல் ஸ்தாபனங்களும் பல மத ஸ்தாபனங்களும் பல சமுதாய வகுப்பு ஸ்தாபனங்களும் இப்பொழுது இந்த அபிப்பிராயங்களையே சொல்லத் தொடங்கி விட்டதென்றும், இவைகளுக்கெல்லாம் காரணம் நாம் ஆரம்பித்த எடுப்பிலிருந்து ஒரு சிறிதும் எந்தக் கொள்கையிலும் பின் போகாமல் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு வந்ததோடு, யாருடைய பழிப்புக்கும், பகைமைக்கும் தாட்சன்னியத்திற்கும் பயப்படாமல் உறுதியுடனிருந்ததோடு, யாரானாலும், எப்படிப் பட்டவர்களானாலும், நமது கொள்கையை ஒப்புக்கொள்ள வில்லையானால் நமக்கு அவர்களைப் பற்றிய கவலை யில்லையென்றும் அலட்சியமாயிருந்ததோடு சிறிதும் ராஜிக்கு இடங் கொடுக்காமலிருந்துமே வந்ததே முக்கிய காரணமாகும்.

periyar04நம்மைப் பற்றிப் பலர் குற்றம் சொன்ன காலத்திலும் நமதியக்கம் இது வரை என்ன சாதித்ததென்று கேள்விகள் கேட்க வந்த காலங்களிலும் நாம் அவர்களை லட்சியம் செய்து பதில் சொல்லிக் கொண்டிராமல், நமது லட்சியத்திலேயே கவலை வைத்துக் கொண்டு “நாம் அப்படித்தான் செய்வோம், இவ்வளவுதான் நாம் செய்தது. இஷ்டமிருந்தால் பின்பற்றிவா., இல்லா விட்டால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டுபோ. நாம் சொல்லுவதுதான் நமது கொள்கை, அதன் பேரில், நமது கொள்கையின் பேரிலோ, நமது செய்கையின் பேரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை யில்லை” என்று சொல்லிக்கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான், நல்லதோ. கெடுதியோ நமதியக்கத்தின் தற்கால நிலைமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. ஏனெனில், நாம் யாரிடத்திலும் நமதியக்கத்திற்காக “இப்படிச் செய்கிறேன், அப்படிச் செய்கிறேன்” என்று வியாபாரம் பேசி ஒப்பந்தம் செய்து, அட்வான்சு வாங்கவில்லை. ஒருவருக்கும் கட்டுப்பட்டு எவரையும் ஏதாவதொரு விஷயத்தை நம்பச் செய்து அதனால் நஷ்டத்தை அடையுங்கள் என்று யாருக்கும் நஷ்டத்தை உண்டு பண்ணவோ, யாருடைய தயவையும் எதிர்பார்க்கவோ இதுவரையில் வைத்துக் கொள்ளவில்லை.

நாம் சொல்லுவதற்கும், செய்வதற்கும், சொல்லாததற்கும், செய்யாததற்கும், நம்மையே பொறுப்பாளியாக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் கலந்து ஒத்துழைத்ததாக சொல்லப்படக் கூடியவர்களெல்லாம் நமது கொள்கையும், அவர்களது கொள்கையும் ஒன்றாயிருக்கிற முறையில் நம்முடன் சேர்ந்து இருக்கின்றவர்களே தவிர, அவை சிறிது மாறினவுடன் பிரிந்து போய்விட வேண்டியவர்களே யாகையால், கொள்கை மாறாமலிருக்கும் வரையிலுந் தான் யாரும் ஒத்துழைக்க ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களென்று கருதி, சேர்ந்து வேலை செய்துகொண்டு வந்தவர்களென்று நினைத்தோமே யொழிய யாரையும் கூட்டு வியாபார ஒப்பந்தமாக ஒருவருக்கொருவர் எப்படி இருந்தாலும் ஒத்துப்போக வேண்டிய நிர்பந்தமுடைய குடும்ப வாழ்க்கை காரியமாக கருதவேயில்லை.

அன்றியும், நாமும், நாம் இதுவரை என்ன செய்து விட்டோமென்று கவலைப்பட வேண்டியதில்லை. கவலைப்படவுமில்லை. ஏனெனில், நம்முடைய லக்ஷியம் மிகப் பெரியது. இதற்காக நாம் செய்யும் முயற்சி மிகச் சிறியது. இதனுடைய நஷ்டம் நமக்கொன்றும் பிரமாதமானதல்ல. அன்னியருக்கும் நம்மால் ஏற்பட்ட நஷ்டமோ, கஷ்டமோ சிறிதும் கணக்கிடத் தகுந்ததேயல்ல. ஏதோ நமக்குத் தோன்றியதை பேசுவது, எழுதுவது, ஊரூராய்ச் சுற்றுவது என்பதைத் தவிர நாம் ஒன்றும் பிரமாதமாக கஷ்டப்பட்டு விடவுமில்லை. இதற்காக செலவழிக்கப்பட்ட பொருளோ, ஊக்கமோ எதிர்பார்க்கும் காரியத்திற்கு எத்தனையோ மடங்கு சிறியதேயாகும். முன் ஒரு சமயம் நாம் சொன்னது போல் “மலைபோன்ற ஒரு பெரிய காரியத்தைக் கொண்டு வருவதற்காக தலை முடிபோன்ற அற்ப சக்தியைக் கொண்டு கட்டி யிழுக்கப் பார்க்கிறோம். வந்தால் மலைபோன்ற கொள்கைகள் வரட்டும். வராமல் அறுந்து போனால் முடிபோன்ற நமது அற்ப முயற்சிகள் வீணாய் போகட்டும். நமக்கு அதைப் பற்றி பெரிய கவலை யொன்றுமில்லை. இதனால், பெரிய நஷ்டமொன்று ஏற்பட்டுவிடப் போவதில்லை” யென்று கருதிக் கொண்டே முன் செல்கிறோம்.

ஏனெனில் இவ்வளவு பெரிய இயக்கத்திற்கும், நமது மனஉறுதியும், நிர்தாட்சன்யமுந்தான் ஆஸ்தியாகவும் மூலப்பொருளாகவும் இருக்கின்றதே தவிர வேறில்லை. ஆதலால், தான் நாம் ஒருவருக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற கவலை ஏற்படும் படியாக எவ்வித காரியத்தையும், யாருடைய தயவையும் பிரதி பிரயோஜனத்தையும் எதிர்பார்க்கக் கூடாதென்றே இருக்கிறோம். மற்றும் நமதியக்கத்திலுள்ள, அதாவது இந்த நமது அபிப்பிராயத்தையே கொண்டுள்ள நமது நண்பர்களும், இந்த மாதிரியாகவே தங்களுடைய அபிப்பிரயங்களையும், தங்கள் சக்திகளையும், இஷ்ட சௌகரியங்களையும் பாதிக்கக்கூடிய எந்தக் கட்டுப்பாட்டிலும் விழுந்து விடக் கூடாதென்றே சொல்லுகிறோம்.

எந்தக் காலத்திலும், எந்த இயக்கமோ, எந்த அபிப்பிராயமோ, ஸ்தாபனமோ செல்வாக்குடையதாக யிருந்தால் காரணகாரியங்களை கவனியாமலும், அவ்வியக்கத்தின் பிரமுகர்களது நடவடிக்கைகளையும், அபிப்பிராயங்களையும் கவனியாமலும் வந்து தெரிந்தோ, தெரியாமலோ வந்து புகுந்து கொள்வதும், பிறகு வேறு யேதாவது செல்வாக்குள்ள இயக்கமோ, அபிப்பிராயமோ, ஸ்தாபனமோ தோன்றினால் அதில் பாய்ந்துவிடுவதும், அந்தப்படி பாய்ந்து விட்டதற்கு பிறருக்கு சமாதானம் சொல்லுவதற்காக தாங்கள் முன்போய்ச் சேர்ந்த இயக்கத்தையோ, அபிப்பிராயத்தையோ, ஸ்தாபனத்தையோ அல்லது அது சம்பந்தமானவர்களையோ குற்றம் சொல்லுவதன் மூலம் சமாதானம் சொல்லப் பார்ப்பது உலக மக்களில் பலரது இயற்கையேயாகும்.

மற்றும் ஒரு இயக்கத்திற்கு தாராள செல்வாக்கிருக்கும் வரையிலும், அதாவது ஒரு வண்டி பள்ளத்தாக்கில் தானாக உருண்டுப் போவதாக யிருந்தால் வண்டியைத் தொங்கிக் கொண்டே வண்டிக்குப் பின்னால் ஓடுவதும், அப்படிக்கில்லாமல் மிக்க பாரத்தோடு ஒரு வண்டி சேற்றில் புதைந்து கொண்டோ, மேட்டில் ஏற வேண்டியதாகவோ ஏற்பட்ட போது அதைத் தோள் கொடுத்து தள்ளிவிட வேண்டிய கஷ்டத்திற்குப் பயந்துகொண்டு கழிபோட்டுக் கொண்டு தொல்லை கொடுப்பதும், விட்டு விட்டு ஓடபார்ப்பதும் சில சாதாரண மக்களுக்கு சகஜமேயாகும். இதைக் கண்டு இயக்கத்தின் பொறுப்புடையவர்கள் பயப்படாமலும், தங்களிடம் ஏதாவது மாறுதல் குணம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதை மட்டும் பார்த்துக் கொண்டு தைரியமாகவும், உறுதியாகவுமிருக்க வேண்டுமென்பது தான் இம் மாதிரியான சமயத்தில் நான் எனது நண்பர்களுக்குச் சொல்லும் யோசனையாகும்.

ஒரு இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷமடைந்தவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். பெருமையைக் கண்டு சந்தோஷமம் அடையாதிருந்தவன் சிறுமையைக் கண்டு துக்கிக்க வேண்டியதில்லை. எப்படி இருந்தபோதிலும் இவ்விரண்டையும் உத்தேசித்துத் தனது உறுதியான கொள்கைகளிலிருந்து பிறழாமல் இருப்பானேயானால் அவன் ஒருவகையில் காரிய சித்தியடைந்தவனே யாவான். ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியம் தனது சொந்த லாப நஷ்டத்திற்கா? அல்லது பொது ஒரு கஷ்டத்தை நீக்கும் பிறர் நலத்திற்கா? என்பதை முதலில் தனக்குள்ளாகவே யோசித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டுவித லாப நஷ்டத்திற்கும் தயாராயிருக்க வேண்டும்.

சகோதரர்களே! இன்றைய தினம் எனக்குமுன் பேசிய திருவாளர்கள் திருஞானசம்பந்தம், சாமி சிதம்பரனார், அழகர்சாமி முதலியவர்கள் ‘ஆத்மா’ ‘கடவுள்’ என்பதைப் பற்றி வெகு உறுதியாகவும், தைரியமாகவும் பேசினார்கள். இதைக் காண எனக்கு அளவில்லாத சந்தோஷமும் தைரியமும் ஏற்பட்டுவிட்டது. இரண்டு தமிழ் பண்டிதர்கள் ஆதரித்துப் பேசுவதென்றால் சாதாரணமான விஷயமல்ல. எனது இன்றைய அபிப்பிராயங்கள் பெரிதும் ஏறக்குறைய 30, 35 வருஷத்திய அபிப்பிராயங்களேயாகும். சுமார் 30 வருஷங்களுக்கு முன்பாக ஒரு வாலிப அதிகாரியுடன் இந்து மதத்தை பற்றி நான் அது ஒரு “புரட்டான மதம்” என்று சொன்னபொழுது அவர் எனது அபிப்பிராயங்களுக்குச் சமாதானம் கூறாமல் ஒரே அடியாய் “சுவாமி விவேகானந்தர் அமெரிக்கவுக்குச் சென்று எத்தனையோ படிப்பாளிகள் முன்பாக ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசி, உலகத்திலுள்ள மதங்களில் இந்து மதமே சிறந்ததென்று சொல்லி மெய்ப்பித்துவிட்டு வந்துவிட்டார். அப்படி யிருக்க நீ ஒரு சாதாரண மனிதன் இந்து மதத்தைப் பற்றிப் பேசலாமா?” என்று தான் பதில் சொன்னார்.

உடனே அதற்கு நான் அப்பொழுதே “விவேகாநந்தர் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாக அமெரிக்காவுக்குச் சென்றாரே யொழிய அவர் பிரதிநிதி முறையில் நடந்து கொள்ளவில்லை” யென்றும் “வக்கீலுக்குள்ள உரிமைகளை யெல்லாம் கையாடி, ஜெயித்துக் கொண்டு வந்தா” ரென்றும் “அமெரிக்காவிலுள்ளவர்கள் உண்மைப் பிரதிநிதிகளுக்குள்ள உரிமைகளைக் கையாடி, தோல்வியடைந்தார்க”ளென்றும், எடுத்துச் சொன்னேன். அன்றியும், சமீபத்தில் சுமார் 10 வருஷங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென்ற காலையில் ஒரு நாள் மதுரையில் இரவு 10 -மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில் ஆத்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இதே அபிப்பிராயம் சொன்னபொழுது, உடனே அவருக்கு கோபம் வந்து “உம்மிடம் சாவகாசம் வைத்ததே தப்பு” என்றும், “நீர் இவ்வளவு கீழான மனிதனென்று எனக்கு இதுவரையிலும் தெரியா”தென்றும் சொல்லி பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

ஆனால் அப்படிப் பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் அவருடைய தலைமையின் கீழ் “ஒத்துழையாமை” சம்பந்தமான பிரசங்கம் செய்த பிறகு தலைவர் முடிவுரையாக என்னைப் பற்றி அவர் பேசும்போது “ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஒரு பெரிய இராஜ ரிஷி” யென்றும், “இவர் நமக்குத் தலைவராகக் கிடைத்தது நமது பாக்கியம்” என்றும், மற்றும் பல விதமாகப் புகழ்ந்து பேசினார். மறு நாட்காலையில் அவருடைய கோபம் தணிந்த பிறகு, தானாகவே என்னுடன் பேசவந்த பொழுது “நாயக்கர்வாள்! கோபஞ்செய்து கொள்ளாதீர்கள். இராத்திரி தாங்கள் அம்மாதிரி பேசியதற்கு காரணம் இன்னதென்று தெரிந்து கொண்டேன். அதாவது, சீமைக்குச் சென்று, கல்வி கற்று வந்த உங்களுடைய குழந்தைகள் திடீரென்று இறந்துபோன வெறுப்பினால் தாங்கள் இவ்வித யெண்ணங்கொண்டு விட்டதாக உணர்ந்தேன். ஆதலால் கோபித்துக் கொள்ளாதீர்க”ளென்று சமாதானம் சொன்னார்.

நான் அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லையென்றும், அக்குழந்தைகள் எனது தமையனார் குழந்தைகளென்றுமே அவருக்கு மீண்டும் உரைத்து, எனதபிப்பிராயத்தையே பலமாக மறுபடியும் வற்புறுத்தினேன். ஆகவே, நான் இந்த விஷயங்களெல்லாம் வெகு நாளாகவே கொண்டுள்ள அபிப்பிராயங்களானாலும், அவற்றின் சம்மந்தமான சகல தொல்லைகளையும் மேற்போட்டுக் கொண்டு, பிரசாரம் செய்கிறதென்கிற வேலையாக இப்பொழுதுதான் திரிகிறேன். இதற்கு முன் நான் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிநேகமாக ஏற்பட்டவர்களிடமெல்லாம் இதைப் பற்றியே பேசியுமிருக்கிறேன்.

ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியேயொழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல., அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு, நின்றவுடன் ஒழிந்து போகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு வியாசங்கள் “குடி அரசி”ல் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது வியாசமும் சமீபத்தில் வரும்.

ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி யேற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. “எனது அபிப்பிராயங்களை சொல்லுவதை நமது கடமையாக வைத்துக் கொள்ளுவோம். மற்றவர்களுக்கு துன்பமில்லாத முறையில் பிரசாரம் செய்வோ”மென்பதைத் தவிர, வேறு விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு, அபிப்பிராயங்களை மூடி வைத்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. நமது ஆயுள்காலத்திற்கு எவ்வித அளவும், உறுதியும் பந்தோபஸ்தும் இல்லையாதலால், கூடுமான வரை சௌகரியமிருக்கும் பொழுது நமது அபிப்பிராயங்களை எல்லாம் சொல்லிவிடுவதுதான் சரியென்று நினைக்கின்றேன்.

நமது நாட்டில்தான் இவ்வித சாதாரண அபிப்பிராயங்களை வெளியிடுவதற்குக்கூட இவ்வளவு பயப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு காரணமெல்லாம் இந்த நாட்டிலுள்ள சோம்பேரி வாழ்க்கைகாரர்களின் ஆதிக்கமே யாகும். ஆனாலும் இந்தப்படி தைரியமாய் நாம் புதிய அபிப்பிராயங்களைச் சொல்வதால் நமக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படுமென்று பயப்பட வேண்டியதில்லை. லாபமடைகின்றவன் தான் நஷ்டத்திற்குப் பயப்பட வேண்டும். நமக்கு லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை. ஆதலால் அதைப் பற்றி யாரும் கவலைப்படாமல் விஷயம் சரியா, தப்பா என்கிற முறையில் கவலை செலுத்தி, யோசிக்க வேண்டியதே மக்களின் கடமையென கருதுகிறேன்.

(குறிப்பு : 25.05.1931 அன்று ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 31.05.1931)