periyar ANNA 600உப்பு சத்தியாக்கிரகத்தின்போது வேதாரண்யத்திற்கு சென்று சிறை சென்ற திருப்பூர் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலிருந்த திரு. சிதம்பரய்யர் என்னும் பார்ப்பனர் இப்பொழுது திருப்பூர் அகில பாரத சர்க்கா சங்கத்தைச் சேர்ந்த காதி வஸ்திராலயத்தில் ரூபாய் 50 சம்பளத்தில் காஷியர் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். யாரை வேதாரண்யத்திற்கு அனுப்பும்போது யாரை உபசரித்து அனுப்புவதற்காக கூடிய கூட்டத்தில் திரு. N.S.வரதாச்சாரியார், திரு.சிதம்பரய்யரைப் பற்றி வானமளாவப் புகழ்ந்தது எல்லோருக்கும் தெரியும், 

“திரு. சிதம்பரய்யர் அவர்கள் ரயில்வே உத்தியோகத்தில் இருந்த போதிலும் ஒழிந்த நேரங்களில் கதர் வாங்கிக் கொண்டு போவதும் கதர் விற்பனை செய்வதும் கதரின் மேல் அவருக்குள்ள பற்றுதலும் மிகவும் சிலாகிக்கத்தக்கது என்றும், இப்படிப்பட்டவர்கள் தேசத்துக்கு பாடுபட வந்திருப்பது நம் பாக்கியமே” என்றும், பலவாராக புகழ்ந்து பேசினார். அப்போதே கூட்டத்திலுள்ளவர்கள் உப்பு சத்தியாகிரகம் தீர்ந்து ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் திரு. சிதம்பரய்யருக்கும் சர்க்கா சங்கத்தில் ஒரு வேலை கிடைக்கும் என்றும் பலபேர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதுபோலவே நினைத்த காரியம் கைகூடிவிட்டது. திரு. சிதம்பரய்யர் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். இன்றுவரை 100க்கு 90 பார்ப்பனர்கள் சர்க்கா சங்க நிர்வாகத்தில் இருந்தும் ஒரு முஸ்லிமுக்காவது அதில் இடம் கிடையாது. சர்க்கா சங்கம் என்றால் பார்ப்பன அக்கிராரம் என்று திரு. ஈ.வெ. ராமசாமியார் பொருள் சொன்னது திரு. N.S.வரதாச்சாரியார் காலத்தில்தான் முற்றுப்பெற்றது.

சுமார் நாலு வருஷ காலமாக சர்க்கா சங்கத்தில் வேலை பார்த்து வந்த திரு. கண்ணாயிரம் பிள்ளையவர்கள் சர்க்கா சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு காரியதரிசிக்கும் அவருக்கும் கடிதப் போக்குவரத்து நடந்து இப்போது உள்ளூர் பிரமுகர்களுடன் சமாதான பேச்சு நடந்து வருகிறது. முடிந்த விபரம் பின்னர் விபரமாக பிரசுரிக்கப்படும்.

- ஒரு நிருபர்

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 10.05.1931)