periyar 425உயர்திரு. காந்தியவர்கள் தற்கால முற்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும், நாகரீகத்திற்கும் பொருத்தமற்றவர் என்பதோடு அவர் பழைய கால நிலைமைக்கே மக்கள் போக வேண்டும் என்கின்ற அறிவு உள்ளவர் என்றும், மூட நம்பிக்கையிலும் மூடப்பழக்க வழக்கங்களிலும் மிகுதியும் ஈடுபட வேண்டுமென்றும், ஆகவே இந்தியா விடுதலை பெறவோ முற்போக்கடையவோ நாகரீகம் பெறவோ திரு.காந்தியிடத்தில் நம்பிக்கை வைக்க முடியாதென்றும் கொஞ்ச காலமாக எழுதி வருகின்றோம். அதுமாத்திரமல்லாமல் அவர் இந்தியர்களின் பிரதிநிதியாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கூட எழுதியிருந்தோம். இவைகளையெல்லாம் அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லா தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டிலும் பல காரணங்கள் காட்டி திரு. காந்தி இடம் நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானமானது சிலருக்கு அதிருப்தியைக் கொடுத்ததாகவும் தெரிய வருகின்றது. காங்கிரசிலும் காந்தீயத்திலும் புதிதாக ஞானஸ்நானம் பெற்று மதம் மாறின சில பக்தர்களுக்கு மேல் கண்ட நம்பிக்கையில்லாத தீர்மானத்தால் மிக்க மனவருத்தமேற்பட்டதாகவும் கேட்டு மிக வருந்தினோம். பலர் துக்கம் விசாரித்ததாகவும் தெரிந்தோம். ஆனால் இவைகளுக்கு எவ்வித பரிகாரமும் செய்யக்கூடாத நிலைமையில் நாம் இருக்கின்றோம் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆயினும் அப்படிப்பட்டவர்கள் திரு.காந்தியை உணருவதன் மூலம் தானாகவே அத் துக்கங்கள் ஒழியக்கூடும் என்று நினைக்கின்றோம்.

திரு. காந்தியவர்கள் டெல்லியில் இந்திய வியாபார சங்க மகாநாட்டை திறந்து வைக்கும்போது அவர் பேசியிருக்கும் பேச்சானது (சுதேசமித்திரனில் காண்கின்றபடி) “நான் தென்னாப்பிரிக்காவில் ஜெனரல் ஸ்மட்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தென்னாப்பிரிக்காவில் வந்து குடியேறிய வெள்ளைக்காரர்கள் தங்கள் நாகரீகமானது கீழ்த் திசைக்காரர்களின் செல்வாக்கால் சீர்கெட்டுப் போகக்கூடாது என்று கருதுகின்றார்கள் என்று என்னிடம் கூறினார். அது போலவேதான் இந்தியாவும் விரும்புகின்றது” என்று பேசியிருக்கின்றார்.

‘மற்ற நாட்டு நாகரீகங்கள் இந்தியாவிற்குள் புகுந்து இந்திய நாகரீகத் தைக் குலைக்காமல் இருக்க வேண்டுமென்று (இந்தியா) நான் விரும்புகின்றேன்’ என்று பேசியிருக்கின்றார். ஆகவே திரு.காந்தியவர்களின் முற்போக்கையும் சீர்திருத்தத்தையும் நாகரீகத்தையும் அறிய வேண்டியவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். இது மாத்திரமல்லாமல் இனியும் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு பத்திரிகை நிரூபரிடம் பேசும்போது சுயராஜியம் கிடைத்தவுடன் கிருஸ்துவ பாதிரியார்கள் எல்லாம் இந்தியாவை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விடுவார்கள் என்பதாக சொல்லி இருக்கின்றார். அதுவும் எப்படிப்பட்ட பாதிரிகள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றால் கல்வி கற்பிப்பதன் மூலமாகவும், ஆஸ்பத்திரிகள் வைத்து நோய்களுக்கு சிகிச்சை செய்வதன் மூலமாகவும் மதப்பிரசாரம் செய்யும் பாதிரிமார்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆகவே திரு.காந்தியவர்கள் நம் நாட்டுப் பண்டிதர்கள் விரும்பும் சீர்திருத்தம், நாகரீகம் முதலியவை கொண்ட தொல்காப்பியனார் காலத்திய நாகரீகக்காரராகவே இருக்கின்றார் என்பதில் இனியும் யாருக்காவது சந்தேகம் இருக்கின்றதா என்றே கேட்கின்றோம்.

திரு.காந்தி நினைத்துக் கொண்டிருக்கும் கீழ் நாட்டு நாகரீகம் என்பது என்ன என்பதாக வாசகர்கள் அறிய வேண்டுமா? என்று கேட்கின்றோம். முதலாவதாக அவர் இந்து மதமே ஒரு உருவாய் எடுத்து தான் வந்திருப்பதாக தன்னைப் பற்றி அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றார். இந்திய மக்களுக்கு இந்து மதமே போதும் என்றும் வேறு மதம் வேண்டியதில்லை என்றும், இந்து மதம் என்றால் வருணாச்சிரம தர்மமும் இராமாயணத்தில் உள்ள இராமனது தர்மமும் பாரதத்தில் உள்ள கீதையினது தர்மமும் என்றும் அடிக்கடி சொல்லி வருகிறார். அது மாத்திரமல்லாமல் கீதை உபதேசமும் கீதை பிரசாரமும் செய்தும் வருகின்றார். ராமராஜியத்தை ஸ்தாபிப்பதற்காகவேதான் மூச்சு விடுவது முதல் - தூங்குவது வரையில் உண்டான காரியங்கள் செய்து கொண்டு உயிர் வாழ்ந்திருப்பதாகவும் சொல்லுகின்றார்கள்.

ஆகவே இந்த இருபதாவது நூற்றாண்டில் சைன்சு உலகத்தில் 10,000-மைலுக்கு அப்பாலும் இப்பாலும் மக்கள் இருந்துகொண்டு ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பேசிக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் ராமாயண பாரத காலத்து நாகரீகத்திற்கும் இந்து மதக் கொள்கைக்கும் ஏற்ற ராஜீய பாரம் இருக்க வேண்டும் என்றால், சொல்லுகின்றவர் ஏதோ ஒரு காரணத்தால் சொல்லுவதானாலும் இதை ஆதரித்து ஆமாம் போடுகின்றவர்களின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை வாசகர்களே யூகித்து உணர்ந்து கொள்ள விட்டுவிடுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 26.04.1931)