ஜாதிக் கொடுமை, உயர்வு தாழ்வு ஒழிய, கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும், வினை, விதி நம்பிக்கையையும் அடியோடு ஒழிக்க வேண்டும்.

சகோதரர்களே! சகோதரிகளே!!

periyar and kamarajar 520உங்கள் சங்க ஆண்டு விழாவில், சங்க சம்மந்தமாகவும் மற்றும் உங்கள் முன்னேற்ற விஷயமாகவும் பெரியோர்களான ராவ்சாகிப் ராமச்சந்திரம் செட்டியார், சின்னப்பாவு, சுப்பையா ஆகியவர்கள் பேசியது கேட்டிருந்தீர்கள். உங்களது குறைகளை யெல்லாம் எடுத்துக் காட்டினார்கள். உங்களைத் தெருவில் நடக்கவிடாததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவிடாமல் தடுத்து கலகம் செய்ததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகள் படிப்பதனால் இந்த ஊர் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டதைப் பற்றியும், மற்றும் ராமநாதபுரம் ஜில்லாவில் ஆதிதிராவிட சமூகத்தை மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றியும் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன்னதை கேள்க்க எனக்கு மிக மிக ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்புதாரிகள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் உங்களை இக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்ல வென்றும் நீங்களும் இக் கொடுமை அனுபவத்தில் உங்கள் சமூகத்தை உத்தேசித்து பரிதாபப்பட நியாயமில்லை என்றும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின் பேரில் தங்களது பழக்க வழக்கங்களின் பேரில் தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் அவர்கள் நம்பும் - வணங்கும் கடவுளின் கட்டளை, செய்கை என்ற உறுதியின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வ புண்ணியம் - தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில் ஒரு உரிமைப் பாராட்டி அம்மாதிரி செய்கின்றார்களே ஒழிய வேறில்லை.

அதுபோலவே நீங்களும் பிறர் உங்களை நடத்துகின்ற அந்த மாதிரியான கொடுமைகளை நினைத்து மாத்திரம், அதுவும் அந்த சமயத்தில் மாத்திரம் சிறிது அக்கிரமமாகவும் கொடுமையாகவும் இருப்பதாக கருதுகின்றீர்களே ஒழிய இதற்கு காரணமென்ன? இப்படிப்பட்ட ஒரு கொடுமையானதும், அக்கிரமமானதுமான காரியம் ஏன் நடக்கின்றது என்கிற விஷயத்திலும் இதை எப்படி அடியோடு ஒழிப்பது? இதற்காக என்ன செய்ய வேண்டியது? என்கின்ற விஷயங்களை நீங்கள் நினைப்பதுமில்லை. அப்படிப்பட்டவைகளை வேறு யாராவது எடுத்துச் சொன்னாலும் அவைகளை ஒப்புக் கொண்டு நடவடிக்கையில் நடப்பதற்கு துணிவதுமில்லை.

வீணாய் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சமயங்களில் உங்களில் தனிப்பட்டவர்களுக்கு ஏதாவது சங்கடம் வந்த காலத்தில் மாத்திரம், இரண்டொரு வார்த்தைகளால் அதுவும் இதன் அஸ்திவாரத்தை கவனியாமல் தனிப்பட்ட நபர் மீதோ வகுப்பார் மீதோ குற்றம் சொல்லி கூப்பாடு போடுவதும் பிறகு நாலுநாள் கடந்து விட்டால் அது மறைந்து போய் பழையபடி ஆய்விடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது.

பொதுவாழ்க்கையில் உள்ள சில கனவான்களும் உங்களுக்குப் பரிந்து பேசுவதுபோல் வக்காலத்து பேசுவதுபோல் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு பிறகு அவரவர்கள் சொந்த வேலையை அவரவர்கள் பார்ப்பதும், பிறகு என்றும் போல் சாதாரணமாயிருப்பதும் வழக்கமாக இருக்கின்றது. என்னுடைய சுமார் 20, 30 வருஷ­ பொது வாழ்க்கைத் தொண்டில் இந்த சம்பவங்கள் அநேகம் எனக்கு அனுபவமுண்டு. உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபமிருப்பது போல் பேசி கண்களில் கண்ணீர் வடித்துவிட்டுப் போவார்கள். பிறகு அவர்கள் வீட்டிற்குப் போனவுடன் பழைய உணர்ச்சிதான் அவர்களிடம் தாண்டவமாடும். இதற்கு உதாரணம் வெளியில் போய்த் தேட வேண்டியதில்லை. உங்களிடத்திலேயே இருப்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பீர்களானால் விளங்கும்.

அதாவது உங்களில் பலர் உங்களை விட உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் அய்யர், கவுண்டர், நாயுடு முதலிய ஜாதியார் உங்களைத் தாழ்மையாகக் கருதுவதை மாத்திரம் நினைத்து வருத்தப்படுகின்றீர்களே யல்லாமல் பறையர், சக்கிலியர்கள் என்பவர்களை நீங்கள் உங்களிலும் தாழ்ந்த ஜாதியாகக் கருதி அவர்களை உங்களுக்குச் சமமாக நினைத்து சுதந்திரங்கள் கொடுக்க மறுக்கின்றீர்கள். இதற்கு எல்லாம் காரணம் உங்கள் மத உணர்ச்சியும், உங்கள் கடவுள் உணர்ச்சியும், உங்கள் விதி உணர்ச்சியுமேயாகும்.

மத சம்பிரதாயப்படி நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களுடைய பூர்வஜன்ம கர்மத்தின் விதியென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர்களும் அப்படியேதான் மத ஆதாரத்தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள். இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென்மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனாயிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடனாய் இருப்பதற்கும், அயோக்கியனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனாயிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழையாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்)தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்தி கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த மாதிரி மக்களை உடைய தேசத்தில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்ய வேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடைபெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்.

சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேத காலத்தில் இருந்திருக்கின்றது. அரிச்சந்திரன் காலத்தில் இருந்திருக்கின்றது. ராமன் காலத்தில் இருந்திருக்கின்றது. எல்லா ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் இருந்திருக்கின்றது. அதற்குமேல் இனி எப்போது இருந்திருக்க வேண்டும் என்று சொல்ல ஆசைப்படுகின்றீர்கள்?

மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் கீழ் ஜாதி உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல் ஜாதி கீழ் ஜாதி உணர்ச்சிகளை காட்டப்பட்டிருக்கின்றன. இந்து மதம் என்பதில் வைணவத்திலாவது சைவத்திலாவது ஜாதிப்பிரிவு உயர்வு தாழ்வு தத்துவம் காணப்படாத கடவுள்களோ அவதாரங்களோ, திருவிளையாடல்களோ, கடவுளைக் காட்டிய பெரியார்களோ, புராணங்களோ, இதிகாசங்களோ ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமா? என்று கேட்கின்றேன். 64 நாயன்மார்களுக்கும், 64 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். 12 ஆள்வார்களும் 12 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள்.

இந்து மதத்திற்கு ஆதாரமான - சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டால், அவைகளில் அளவில்லாத ஜாதியும் அதற்கு தாரதம்மியமும் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே எந்த நிலையில் எந்த ஆதாரத்தைக் கொண்டு இன்று உங்கள் மத நம்பிக்கைக்காரனும், அதைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கைக்காரனும், அது சம்பந்தமான வேதம் சாஸ்திரம், புராணம், இதிகாச நம்பிக்கைக்காரனும் உங்களிடம் வந்து ஜாதி பாகுபாடும், ஜாதி வித்தியாசமும் இல்லை என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறேன்.

இந்து மத சம்பிரதாயப்படி ஜாதி இல்லை என்று உங்களிடம் யார் சொல்ல வந்தாலும் அவர்களை மூடர்கள் என்றோ மோசக்காரர்கள் என்றோதான் கருத வேண்டும். மற்றும் சிலர் தொழில் பாகுபாட்டைக் கண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு பிரிக்கப்படவில்லை. ஆதலால் தொழில் பிரிவு இருக்கத்தான் வேண்டும் என்று சொல்லி “கீதையில் பகவான் சொல்லுகின்றார்” என்று உங்களை ஏய்க்கக்கூடும். அவர்களும் அதுபோலவே அறியாதவர்களாகவோ, ஏய்க்க வந்தவர்களாகவோ தான் இருக்க வேண்டும்.

தொழிலுக்காக வந்தாலும் ஏன் பாகுபாடு இருக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், மத்தியானம் வியாபாரியாகவும், இராத்திரியில் உபாத்தியராகவும், ஒருவனை ஒருவன் இம்சைப்படுத்துகின்ற காலத்தில் அவனை உபத்திரவத்தில் இருந்து மீட்பவனாகவும் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். மறுநாள் காலையில் உழுகின்றவனாகவும், பகலில் நெய்கின்றவனாகவும், மாலையில் விற்கின்றவனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன். ஆகவே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லுகின்றவர்களும், அந்தணர், அரசர், வணிகன், வேளாளர், குடிமக்கள் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் பிறவியினால் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் தொழிலினால் என்று சொல்லுகிறவர்களும், ஒரே மாதிரியானவர்களே தவிர இவர்களில் அறிவாளிகளோ அல்லது யோக்கியர்களோ இருக்க முடியாது என்றே சொல்லுவேன்.

இந்தப்படி ஒரு முறையும் நமக்கு வேண்டியதில்லை என்றும் சொல்லுவேன். அது மக்களுக்கு எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் பயன் விளைவிக்க வேயில்லை. இவை யெல்லாம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, எஜமான், அடிமை, முதலாளி, கூலி முதலிய கொடுமைத் தன்மைகளைத்தான் உண்டாக்க பயன்படுகின்றனவே ஒழிய மக்கள் சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன்படவில்லை. ஆகையால் மக்களில் எந்த வகையிலும் உயர்வு தாழ்வு உணர்ச்சி ஏற்பட முடியாத மாதிரியில் தான் உலக வாழ்க்கை நடப்பு ஏற்பட வேண்டும், அதற்கு தகுந்த மார்க்கமே செலாவணியாகப் பார்க்க வேண்டும். இல்லாதவரை இன்றைய கொடுமைகள் ஒழிய மார்க்கமே இல்லை.

இத்தொண்டில் தயவு தாக்ஷண்ணியம் பார்ப்பதும் முன்னே செய்த வேலையை பின்னே அழித்துக் கொண்டு போவதாகும். இந்த விஷயங்கள் வரவர ரத்தக்களரியும் மண்டை உடையவும், உயிர்ச் சேதமும் ஏற்படத் தேவையான நிலைக்கே கொண்டுவந்து விட்டுக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்டு யாரும் பயந்து விடக்கூடாது.

இன்றைய அஹிம்சா தர்மம் என்பவைகள் எல்லாம் பெரிதும் புரட்டுகளாகவே முடிந்துகொண்டு வருவதை நேரில் பார்க்கின்றோம். தந்திரசாலிகள் எல்லாம் அடிபடாமல் தப்பித்துக் கொள்ளவும் சாதாரண ஜனங்களும் யோக்கியர்களும் அடியும் உதையும் மண்டை உடைவும் துப்பாக்கி வெடியும் அடையவும்தான் அஹிம்சா தர்மமாய் இருக்கின்றது. அது எப்படியிருந்தாலும் மனிதன் மனித சுதந்திரம் அதாவது, தெருவில் நடப்பது, குளத்தில் தண்ணீர் மொள்ளுவது, மனிதனுக்கு மனிதன் தொடுவது, முதலிய சுதந்திரங்கள் கூட கொடுப்பதற்கு தன்தன் நாட்டினனாலேயே தன் இனத்தாலேயே தடைப்படுத்தப்பட்டிருக்கும் போது அதுவும் மதத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடக்கும்போது வேறு நாட்டானிடம் அரசாக்ஷி சுதந்திரம் என்று கேட்கப்படுவதைப் பார்த்தால் இதை எதற்கு ஒப்பிடுவது? என்பது எனக்கு புலப்படவில்லை.

ஒன்றா உங்களுக்கு மனித சுதந்திரம் கிடைக்கவேண்டும். அல்லது நீங்கள் இந்த நாட்டிலாவது இதை மதத்திலாவது இந்த சமூகத்திலாவது இல்லாமல் இருக்க வேண்டும். இந்த முடிவைத் தவிர எப்படியோ உயிர்வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு இப்படியே இருப்பது மிகவும் மானங்கெட்டத்தனமாகும்.

இவ்விஷயத்தில் பொருத்துப் பொருத்து பார்க்கலாம் என்பதும் பேடியின் கொள்கையேயாகும். எவ்வளவு நாள் பொருப்பது? எவ்வளவு மெள்ளப் போவது? இவற்றிற்கு ஏதாவது நாணையமோ யோக்கியப் பொறுப்பான அர்த்தமோ வேண்டாமா? இந்த நிலைக்காக இதற்கு முன் எத்தனையோ பேர் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் வக்காலத்துப் பேசியாய் விட்டது. எத்தனையோ பேர் தர்ம நியாயம் பேசியாய் விட்டது. அவ்வளவும் பழய நிலையை பலப்படுத்தவே முடிந்தது.

“தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆய்விட்டது” என்பதுபோல் தேசீயமானது ஒரு பக்கம் அரசியல் சுதந்திரம் கேட்டுக் கொண்டும் மற்றொரு பக்கம் வர்ணாசிரம சுயராஜ்ஜியமும் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழிப்பாசை மயக்கத்தில் கூட “ஜாதி வித்தியாசம் இருக்க வேண்டும், பரையர் வேண்டும், தீண்டாமை வேண்டும், மனுதர்மம் வேண்டும்” என்று மகாநாடுகள் கூடிப் பேசப்படுகின்றன. இதை ஏன் என்று கேட்க ஆட்கள் இல்லை. தேசிய வீரர்களில் வெள்ளைக்காரன் ஒடிப் போக வேண்டும் என்று சொல்ல மாத்திரம் அனேக ஆட்கள் இருக்கின்றனர்.

சகோதரர்களே! இன்றைய தினம் வெள்ளைக்காரன் இருப்பதா? போவதா? என்பது நமது கவலையல்ல. உங்களுக்கும் அந்தக் கவலை வேண்டாம். நம்மீதும் உங்கள் மீதும் நமது மக்களால் சுமத்தப்பட்ட இழிவுகளும் நடத்தப்படும் கொடுமைகளும் ஒழிவதாக வேண்டும் என்பதை முடிவான லக்ஷியமாய்க் கொள்ளுங்கள். அதற்காக உயிரைவிட நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் தயாறாயிருங்கள்.

இன்றைய தினம் உலகத்தில் பல தேசங்கள் பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசமும் எஜமான் கூலிக்காரன் வித்தியாசமும் இருக்கக்கூடாது என்று முடிவு கட்டி வேலை செய்து வெற்றியடைந்து கொண்டு வருகிற காலத்தில் நீங்கள் பார்ப்பார ஜாதி, பரச்சாதி ஒருவரை ஒருவர் பார்த்தால் தொட்டால் தெருவில் நடந்தால் தீட்டு என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருந்தால் நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்கிறதை யோசித்துப் பாருங்கள். இந்த உணர்ச்சிகள் உங்களுக்கு தோன்றாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் முட்டாள்தனமும் அதற்கு ஆதரவான உங்கள் மத நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையுமே ஆகும். ஆதலால் அதை முதலில்விட்டு விரட்டி அடியுங்கள். பிறகு தானாகவே சுயமரியாதை தோன்றி நியாயமும் சமத்துவமும் கிடைத்துவிடும்.

கடைசியாக சென்ற வருஷம் உங்கள் சங்கத்தை திறந்து வைத்து பல உபன்யாசங்கள் புரிந்து பல உதவியும் புரிந்து உங்கள் முன்னேற்றத்தில் சதா கவலையும் கொண்டு உழைத்து வந்தவரும் இன்றும் இங்கு வந்து உங்களுக்கு அரிய உபன்யாசம் செய்தவருமான திரு. சி.எம். ராமச்சந்திரம் செட்டியார் அவர்களுக்கு அரசாங்கத்தில் ராவ் சாகிப்பட்டம் அளிக்கப் பட்டிருப்பதைக் கேட்க நீங்கள் எல்லோரும் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். ஆகவே அக்கனவானை உங்கள் சார்பாக நான் பாராட்டுகின்றேன். மற்றும் கோவை சிவிக் அசோசியேஷன் செகரட்டரி திரு. சின்ன அப்பாவு அவர்கள் உங்கள் முற்போக்கில் கவலை கொண்டு அடிக்கடி கவனித்து உங்களுக்கு அரிய புத்திமதிகள் சொல்லி வந்ததற்கும் உங்கள் சார்பாய் நான் மனப்பூர்வமாய் பாராட்டுகின்றேன். கோவை திரு. சுப்பன் அவர்கள் இன்று உங்களுக்கு முக்கியமான பிரசங்கம் செய்ததற்கும் அவரையும் பாராட்டுகிறேன். இந்த முதலாவது ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து நடத்தும் பெருமையை எனக்குக் கொடுத்து எனக்கு செய்த வரவேற்புக்கும் நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு : கோவை, இருகூரில் 03.01.1931 அன்று நடைபெற்ற இருகூர் ஆதி திராவிட சமூகத்தினர்களால் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்ற சங்க ஆண்டு விழா தலைமையுரை.

குடி அரசு - சொற்பொழிவு - 11.01.1931