periyar 296“ஸ்தலஸ்தாபன சட்டத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மான விதி மிகவும் அவசியமாய் இருக்க வேண்டிய தொன்றாகும். அதை நான் நல்ல நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான அம்சமென்று கருதுவதோடு அதை எந்தக் காரணம் பற்றியும் எடுத்து விடக்கூடாது என்று கருதுகின்றேன். அதோடு ஒவ்வொரு ஜில்லா போர்டுக்கும் ஒவ்வொரு நிர்வாக அதிகாரி (எக்ஸ் கூட்டிங் ஆபீசர்) இருக்க வேண்டுமென்று எனக்கும் இச்சட்டம் செய்யும் பொழுது தோன்றியது போலவே இப்பொழுதும் தோன்றுகிறது.

அவ்விதம் செய்யப்படுமானால் போர்டின் தலைவர்களுக்கு இப்பொழுது ஏற்படும் அநேக இயற்கைக் கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கி தாக்ஷண்ணியமில்லாமல் தனது கடமையைச் செய்ய இடமுண்டாகும். ஆகையால் சர்க்கார் இந்த ஏற்பாட்டைச் சீக்கிரம் அதாவது அடுத்த வருஷத்திலாவது செய்வார்களென்று நம்புகிறேன்” என்றும்

தனது நிர்வாகத்தில் தனக்கும், மெம்பர்களுக்கும் நடந்து வந்த சம்மந்தத்தைப்பற்றி அவர் சொல்லும்போது,

“இந்த இருபத்தைந்து மாத காலத்தில் றாமநாதபுரம் ஜில்லா போர்ட் நிர்வாக நடவடிக்கைகளில் இது வரையும் ஒரே ஒரு விஷயம். அதாவது விதியின் அர்த்த சம்மந்தமான விஷயம் சம்மந்தப்பட்ட ஒரே ஒரு விஷயம் தவிர மற்றப்படி விஷய அட்டவணைகளில் கண்ட விஷயங்கள் எல்லாம் ஓட்டுக்கு விடாமல் ஏகமனதாகவே பைசலாகி இருக்கின்றது என்று கூறுகின்றேன்” என்று சொன்னார்.

குறிப்பு :- நாமினேஷனில் வந்த தலைவர்கள், எலக்ஷனில் வந்த அங்கத்தினர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இதற்குமேல் பெற்றவர்களை இத்தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பார்த்ததில்லை. இனியும் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமேயாகும். ஸ்தல நிர்வாகம், பொருப்பு பணக்கார ஆதிக்கத்தையும், ஜாதி ஆதிக்கத்தையும் விடுத்து ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சம உரிமை இருக்கும்படியான ஆதிக்கத்திற்கு வருங்காலத்தில் திரு. பாண்டியன் அவர்கள் போன்ற சுயமரியாதை வீரர்களின் ஆட்சிக்குள் வந்து சேர முடியும். அவர்களைப் போன்றவர்களால் தான் ஸ்தல ஸ்தாபன ஆக்ஷி பயன்படத்தக்கதாகவும், நல்ல ஆக்ஷியாகவும் இருக்க முடியும்.

( ப-ர். )

குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 04.01.1931