periyar and kamarajarசென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு. நடராஜ நாடார் பி.ஏ.பி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் தயவினால் விருத்தாசலம் (தென்னாற்காடு ஜில்லா) முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று உத்தியோகம் ஒப்புக் கொண்டார். இந்த கனவான் சுமார் ஒன்றரை வருஷத் திற்கு முன்பாகவே முன்சீப் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவர். இந் நியமனம் வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப்பட்டதன் மூலமே கிடைக்கப் பட்டதாகும்.

இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காறாகவே தான் வந்திருப்பார். இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள். சப் ஜட்ஜியாகவோ, ஜில்லா ஜட்ஜி யாகவோ பிரிட்டீஸ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நாடார் சமூகத்திற் கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறிஸ்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இனியாவது நாடார் மக்கள் கண் விழித்து கிறிஸ்தவ நாடார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களை கிறிஸ்தவர்களுக்குண்டான விகிதாச்சாரத்தில் பெற்றுக் கொள்ளும் படியும், தங்கள் சமூகத்திற்குண்டான விகிதாச்சாரத்தில் வேறு யாரும் பிரவேசிக்காத படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதம் காப்பாற்றப்படவேண்டும். ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அதில் யாரும் பிரவேசிக்கக் கூடாதென்றும், இந்த நிபந்தனையின் மீதே சுயராஜ்யமும் சுயேச்சையும் பெற விரும்பும் ஸ்தாபனங்களும், கிளர்ச்சிகளும் நடக்கும் போது நாடார் சமூகம் போன்ற வகுப்பார்கள் தங்கள் உரிமை பெறுவதில் மிக்க கவலையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியதுடன் அந்தப்படி தாராளமாய் பல்லைக் கெஞ்சாமலும் மனச் சாட்சியையும் கொள்கைகளையும் விற்காமலும் தானாகவே கிடைக்கும் படியாக அரசாங்க யந்திரத்தில் தக்க மார்க்கம் செய்து கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும்.

இது நிரந்தரமென்று நாம் சொல்ல வரவில்லை. எது வரையும் ஜாதிப் பிரிவும், மதப்பிரிவும் அவைகளுக்கு ஏற்ற தாழ்ச்சி உணர்ச்சிகளும் ஆதாரங்களும் காக்கப்படுகின்றனவோ அதுவரையில் கண்டிப்பாய் மேல் கண்ட கொள்கை இருந்தே ஆகவேண்டும் என்று சொல்லுகின்றோம். “சுயராஜ்ய அரசாங்கம் ஏற்பட்டால் எல்லாம் சரியாய் விடும்.

ஆகையால் அதுவரை யாரும் தங்கள் உரிமை கேட்கக் கூடா தென்று சிலர் அதாவது இப்போது தங்கள் உரிமைக்கு மேலாக பலன் அனுபவித்துக் கொண்டிருக்கின்றவர்களும் அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டியவர்களும் சொல்லுவார்கள்.

அதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் இப்போது இருப்பதை விட சுயராஜ்ய அரசாங்கம் என்று சொல்லுவதில் வகுப்பு உரிமையும், மத உரிமையும் அதிகமாகத்தான் வலியுறுத்தி என்றும் மாராமல் இருக்கும்படி பந்தோபஸ்து செய்ய வேண்டியிருக்குமேயொழிய இதை விட சிறிதும் குறைவாயிருக்காது என்று கோபுரத்தின் மீதிருந்து கூவுவோம்.

ஏனெனில் சுயராஜ்ய கவர்ன்மெண்டில் ஜாதியையும் மதத்தைப் பற்றியக் கொள்கை என்னவென்பதையும் அதற் காகப் பல மதக்காரர்கள் இடமும், பல வகுப்புக்காரர்களிடமும் இதுவரையும் இப்போதும் செய்து கொண்டு வந்திருக்கும் ஒப்பந்தத்தையும் ராஜியையும் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

நிற்க இம்மாதிரி வகுப்புவாரி உரிமைக்கு பார்ப்பனர்களைப் போலவே கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சிற்சில இடங்களில் சொல்ல வருவார்கள். ஏனென்றால் பார்ப்பனர்களைப் போலவே தாங்களும் (கிறிஸ்தவர்களும்) அதிகம் பேர் படித்திருப்பதாகவும் கிறிஸ்தவ ஜன சங்கைப்படி தங்களுக்கு உத்தியோகம் கொடுத்தால் அது மிகவும் போராததாகி விடும் என்றும் ஆகையால் தாங்கள் அரசாங்க மதத்தை சேர்ந்தவர்கள் என்னும் சலுகைமேல் அதிக உத்தியோ கம் பெறுவது இந்த வகுப்புவாரித் திட்டத்தினால் குறைந்து போய் விடு மென்றும் கருதி சொல்லுவார்கள்.

இதையே மற்றும் இம்மாதிரியான இரண்டொரு வகுப்பும் சொல்லக் கூடும். ஆனால் வெகு காலமாய் தாழ்த்தி கொடுமைப் படுத்தி வைத்திருக்கும் மக்களுக்குக் கண்டிப்பாய் இந்த வகுப்புரிமைத் தவிர வேறு கதியே கிடையாதலால், அவர்களும் மற்றவர்களைப் போல் வரும் வரையிலாவது இதை வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

“சர்க்கார் உத்தியோகம் பெறுவது அடிமை தனம்” என்று கூட சிலர் சொல்ல வருவார்கள். அதையும் யாரும் கவனிக்கக் கூடாது. ஏனெனில் சுயராஜ்யமே உத்தியோகம் பெறுவதற்காகத் தான் கேட்கப்பட்டது. இன்று நாம் கேட்கும் சுயராஜ்யமும் உத்தியோகம் தான். அதாவது அதிகாரம் செய்வதும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் தான். ஆதலால் இதை நம்பி முட்டாள்களாய் விடக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.10.1930)