periyar 332மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை கு.ஆ.ளு. பாரிலும் வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்கு கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபனை சொன்னதாகவும் அவ்வாட்சேபனை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத்துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன்னார்களாம்.

அதற்கு பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் சிறை செல்ல நேரிட்டதென்றும் மதராஸ் ஹைகோர்ட் டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிஸ்டர் என்றும் எடுத்துக்காட்டினாராம். இதற்காக கனம் ஜட்ஜி அந்த விண்ணப்பத்தை பைசல் செய்ய 2 µ வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த விஷயத்தில் இவ்வித ஆட்க்ஷபனை கொண்டுவந்ததை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம். வக்கீல்கள் அரசியல் சம்மதமான கிளர்ச்சிகளில் ஈடுபடுவதும், தண்டனைகள் அடைவதும் அவர்களின் இப்போதைய தொழில் முறையில் முக்கிய அம்சமாகிவிட்டது. இந்தியாவில் அனேக வக்கீல்கள் தண்டனை அடைந்து இப்பொழுது வக்கீல்களாகவே இருக்கின்றார்கள்.

இது ஒருபுறமிருக்க, திரு. மு. ஞ. கேசவமேனன் அவர்கள் ராஜத்துவேஷ விஷயமாய்ச் சிறைச் சென்றவர் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லுவோம். சென்னை ஹைகோட்டில் அவர் மிக்க பிரபல வக்கீலாக இருந்தவர்.

இந்தியாவில் பிரபலமாயிருந்த கனவான்கள் யாராவது தேச சேவையின் பலனாய் உண்மையான தியாகம் செய்தவர்கள் இருப்பார்களானால் அவர்களில் திரு. மு.ஞ.மு. மேனன் முதன்மையானவராவார். மலையாள தேச முழுமையும் மு.ஞ.மு. மேனன் என்றால் கண்களில் நீர் விடுவார்கள். அப்பேற்பட்ட உண்மையான தியாகியானவர்.

திருவாங்கூர் ராஜியத்தில் வைக்கம் என்னும் ஒரு பிரபல கோயில் உள்ள ஊரில் உள்ள பொதுத் தெருவில் ஈழவர்கள் நாடார்கள் முதலியவர்கள் கூட நடக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்டத் தெருவில் அவர்களுக்குத் தெருப் பாத்தியம் வாங்கிக் கொடுக்கச் செய்யப்பட்ட முயற்சியில் திருவாங்கூர் அரசர் என்னும் சுதேச ராஜாவால் 6 µ தண்டிக்கப்பட்டு ஜெயிலிலும் மிக்க மரியாதையாய் நடத்தப் பட்டவர்.

அத்தண்டனையின் போது நாமும் அவரும் திருவாங்கூர் ஜெயிலில் ஒன்றாகவே தண்டனை அனுப்பவித்தவர்களாவோம். கடைசியாக காலாவதி தீருமுன் எங்களை விடுதலை செய்து விட்டதோடு திரு. கே. பி. கே. மேனனை எதற்காகத் தண்டித்தார்களோ அந்த காரியமான வைக்கம் ரோட்டுகளை எல்லோரும் நடக்கும்படியாக உத்தரவு கொடுத்து விட்டார்கள்.

ஆகவே திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் செய்த காரியம் குற்றமா அல்லது திருவாங்கூர் அரசாங்கம் அவரை சிறைபடுத்தினது குற்றமா என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே இப்படிப்பட்ட திரு. மேனன் அவர்களை மலாய் வக்கீல்கள் சிலர் ஆட்சேபிப்பதிலிருந்து அவர்கள் தேசீயமும், சமூக சீர்திருத்தமும், அரசியல் முற்போக்கு முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம்.

நம்மைப் பொறுத்தவரை இவ்வித ஆட்சேபனைகள் அறியாமையினாலோ அல்லது பொறாமையாலோ தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றோம். இது வக்கீல் தன்மையின் பிறவிக் குணமாம் போலும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.08.1930)