periyar kamarajarதேவஸ்தான போர்டு நிர்வாக கமிஷனர்கள் நியமனமும் சர்க்கிள் கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங்களை பொறுத்தமட்டில் ஏற்பட்ட விசேஷம் என்ன வென்றால் தேவஸ்தான போர்டு தலைவர்கள் ஐந்து பேரும் பார்ப்பனரல்லாதவராக நியமிக்கப் பட்டிருக்கின்றனர்.

அதோடு நீலகிரி ஜில்லா தேவஸ்தான கமிட்டிக்கு ஒரு ஆதி திராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரசுரமாகிவிட்டது.

“தேவஸ்தானம்” என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றித் திரியும் சில ஆஸ்தீகக் கூலிகளுக்குமே உரியது, மற்றையோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கவும் கூடாதென்ற கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப்பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர் எண்ண ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டியாக முன்வந்து நியமனங்களைத் துணிகரமாகச் செய்துள்ள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய தைரியத்தையும் நிர்வாகத்தையும் சுயமரியாதை உலகம் பாராட்டற்பாலது.

தொட்டதற்கெல்லாம் தன் இஷ்டப்படி கைத்தூக்க இரட்டை மெஜாரிட்டி வைத்திருந்த ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலும் செய்வதற்குப் பயப்படும் படியான காரியங்கள் இந்தக் காலத்தில் வெகு தாராளமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.05.1930)