periyar 2341929 - ம் வருஷம் காங்கிரசானது “இந்திய தேசியப் போராட்டம்” என்பதின் இரகசியத்தை வெளியாக்கி விட்டது ஒரு புறமிருக்க இப்போது ஏதோ சத்தியாக்கிரகப் போர் சமீபத்தில் தொடுக்கப் போவதாக பெரிய ஆர்ப்பாட்டங்கள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வார்ப்பாட்டங்கள் காங்கிரசுக்கோ காங்கிரஸ் அங்கத்தினர்களுக்கோ ஒரு சிறிதும் சம்மந்த மில்லாமல் திரு காந்தி அண் கோ கம்பெனியாருக்கு கன்ட்றாக்ட்டு விடப் பட்டு விட்டதாய்த் தெரிகின்றது.

இதன் கருத்து என்ன வென்றால் திரு. காந்தியால் ஏதாவது வெற்றி (ஏற்படப் போவதில்லை உறுதி உறுதி) ஏற்படுமானால் உடனே அதை தேசிய வெற்றி என்று கொட்டை எழுத்தில் போட்டு பெருமை பாராட்டிக் கொள்ளவும் தோல்வி அடைந்தால் “முன்னமேயே தெரிந்து தான் அதன் பொருப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாமல் திரு. காந்தியின் தலையில் போட்டு விட்டது” என்று சொல்லவும் இடம் வைத்துக் கொள்ள செய்த காரியமேயாகும்.

அன்றியும் மேற்படி சத்தியாக்கிரகத்தையோ சட்டம் மீறுவதையோ சர்க்கார் மதித்து ஏதாவது நடவடிக்கை எடுத்து எந்த தனிப்பட்ட நபரையாவது அல்லது எந்த ஸ்தாபனத்தையாவது கைது செய்ய ஆரம்பித்தால் “காங்கிரசுக் கும் சத்தியாக்கிரக சட்ட மறுப்புக்கும் யாதொரு சம்மந்தமில்லை” என்று சொல்லி தப்பித்துக் கொள்ள இடம் இருக்கவும் வழி செய்து கொண்ட காரியமாகும்.

முதலாவது காங்கிரசின் லட்சியம் பூரண சுயேட்சை என்றவுடன் ராஜிநாமா கொடுத்து விட்டு காங்கிரசை விட்டு ஓடின வீரர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அதோடு காங்கிரசில் இருந்து கொண்டே “காங்கிரஸ் கொள்கைக்கு நாங்கள் கட்டுப்படுகின்றோம். ஆனால், அதின் திட்டத்திற்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ் வீரர்களாய் இருந்து வந்தவர்களைப் பற்றியும் நாம் இப்போது அதிகமாய் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

ஏனெனில் இப்படி ஒரு கூட்டம் காங்கிரசில் வெகுநாளாகவே இருந்து வருகின்றது. அதாவது எவ்வித தியாகத்திற்கும் கஷ்டத்திற்கும் தயாராயில்லாமல் பாமர ஜனங்களை ஏமாற்றி வயிர் வளர்ப்பதற்கு காங்கிரசை உபயோகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தமுள்ள கூட்டத்திற்கு இதை விட வேறு வழி கிடைப்பது கஷ்டமானதால் இப்படி ஒன்று அதாவது “காங்கிரஸ் சுயராஜ்ய கட்சி” “காங்கிரஸ் தேசீயக் கட்சி” “காங்கிரஸ் சுயேச்சைக்கட்சி” “காங்கிரஸ் ஒத்துழையா கட்சி” என்கின்ற கட்சிகளின் பெயர்களின் நிழலில் இருந்து வந்த பெரும்பான்மையானவர்களின் யோக்கியதைகளைக் கவனித்தாலே இந்த உண்மை விளங்கி விடும்.

ஆனால் இப்போது காங்கிரசுக்கு ஆதிக்கத்திலும், நிர்வாகத்திலும் இருந்து வருகின்ற காங்கிரஸ் தலைவர்கள் என்கின்றவர்கள் இந்தமாதிரி தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது காங்கிரசின் உண்மைத் தோற்றத்தின் பரிதாப நிலையையும் பயங்காளித் தனத்தையுமே காட்டுகின்றதேயல்லாமல் வேறில்லை.

அன்றியும் ஒரு சமயம் சத்தியாக்கிரகமோ சட்ட மறுப்போ நடந்து யாராவது ஜெயிலுக்குப் போக நேர்ந்தால் அப்படிப் போனவர்களையும் இந்த காங்கிரஸ் தலைவர்கள் திரு. சி. ஆர். தாஸ் அவர்கள் முன் ஒரு சமயம் கயாவில் சொன்னது போல் “சாப்பாட்டுக்கு வகையற்றவர்களும் வேறு வேலை செய்து பிழைக்க முடியாதவர்களும் தான் வயிற்றுப் பிழைப்பை உத்தேசித்து ஜெயிலுக்கு போனார்கள்” என்று சொல்லுவதற்கும் இடம் வைத்துக் கொள்ளுவார்கள்.

இவ்வளவும் தாண்டி நாட்டில் சத்தியாக்கிரகத்திற்கோ சட்ட மறுப்பிற்கோ ஏதாவது ஒரு செல்வாக்கு (வராது) ஒரு சமயம் வந்து விடுமேயானால் அப்போதும் அதன் பலன் முழுவதையும் தாங்களே அடைவதற்கும் இடம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பல விதத்திலும் காங்கிரஸ் வெளிப்படையான பித்தலாட்டத்தில் தான் இனி இருக்க முடியும் என்பது வெளியாய் விட்டது.

இந்தியாவில் தேசீயப் போராட்டம் என்கின்ற ஏமாற்றமும் பித்தலாட்டமும் இனி யாராலும் மறைவாய் செய்ய முடியாது. ஏனெனில் இந்திய ஜனங்கள் ஒருவாறு மூடநம்பிக்கையிலிருந்து கண் மூடித்தனமாய் யாரையும் பின்பற்று வதிலிருந்தும் விடுதலை அடைய ஆரம்பித்து விட்டார்கள். மனித னுடைய லட்சியம் எனப்படும் அர்த்தமும் பலனுமற்ற வார்த்தைகளான மோட்ச மென்பதும் சுயராஜ்ஜியம் என்பதும் ஏமாற்றம் என்கின்ற ஒரே அஸ்தி வாரத்தின் மீது தான் கட்டப் பட்டிருக்கின்றது.

மோட்சத்திற்கு இதுவரை அர்த்தம் விளங்காவிட்டாலும் அதன் பேரால் வயிறு வளர்ப்பவர்கள் மக்கள் நம்பி பின்பற்றி அதற்காக எப்படி கஷ்டப்பட்டு நஷ்டமடைந்து வந்தார்களோ அது போலவே தான் சுயராஜியம் தேசீயம் என்பதற்கும் விடுதலை என்பதற் கும் அர்த்தம் விளங்காமலும் பலன் இன்னதென அறியாமலும் அதன் பேரால் வயிறு வளர்க்கும், வாழும் கூட்டத்தாரை மூடநம்பிக்கையால் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றி இதுவரை வீண் கஷ்டமும் நஷ்டமும் அடைந்து வந்தார்கள். ஆனால் இப்போது மூடநம்பிக்கையும் கண்மூடித்தனமும் ஒழிய ஆரம்பித்து விட்டதால் இனி அது பலியாது என்பது முடிவான காரியமேயாகும்.

உண்மையாய் அறிவுடன் இருந்து பேசுவோமேயானால் நமது நாட்டில் இந்தமாதிரி தேசீயக் கிளர்ச்சி என்கின்ற ஒரு புரட்டு ஏற்படாமலிருந்து இருக்குமானால் நம்முடைய நாட்டு நிலைமை இவ்வளவு கேவலமாக இருந்திருக்கவே முடியாது. தேசீய கிளர்ச்சி புரட்டானது மக்களின் உண்மையான தேச நன்மை சமூக நன்மை ஆகிய விஷயங்களில் உள்ள பகுத்தறிவை பாழ்படுத்திவிட்டது. அதன் காரணமே கேட்ட வரியை கொடுத்து விட்டு கண்ட அதிகாரிகளுக்கு கீழ்ப்பட வேண்டிய மிருகத்தன்மை ஏற்பட்டு விட்டது, இதற்கு உளவாளியாய் இருந்து வந்தது “நமது தேசீயக் கிளர்ச்சி”யேயாகும்.

நல்ல சம்பவமாய் இந்த வருஷம் நமது நாட்டில் ஒருவாறு தேசீயக் கிளர்ச்சி என்னும் காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங்கள் அடியோடு மறைய இருந்ததானது சிலர் சூட்சியினால் மறுபடியும் கொஞ்ச காலத்திற்குத் தொல்லை இருக்கும்படி ஏற்பட்டுவிட்டது “குடியேற்ற நாட்டு அந்தஸ்தை” ஒப்புக் கொண்டு “வட்ட மேஜை மகாநாட்டுக்கு போவது” என்பதையும் ஒப்புக் கொண்டிருந்தால் அவ்வளவுடன் காங்கிரசு தீர்ந்தது. ஏனெனில் உலகில் உள்ள மற்ற அரசியல் சமூக இயல் ஸ்தாபனங்கள் எல்லாம் மேற்படி இரண்டையும் ஒப்புக் கொள்வதால் காங்கிரஸ் என்ற ஒரு தனி ஸ்தாபனத்திற்கு தனி யோக்கியதை இருக்க அவசியமில்லாமல் போயிருக்கும்.

அதனாலேயே புதிய வழி கண்டு பிடித்து பூரண சுயேச்சை என்கின்ற புரட்டைக் கொண்டு காங்கிரசை நிலை நிறுத்தக் கருதி இந்த சூட்சி செய்தார்கள். என்றா லும் இனி அது செத்த பாம்பு ஆட்டுவதுபோல தானே ஒழிய நாட்டில் அதை மதிப்பதற்கு சிலர் கூட இல்லை என்பது வெளிப்படை. மற்றபடி சத்தியாக் கிரகமும் சட்ட மீறுதலும் அதற்கு உபகருவியாய் வந்ததற்குக் காரணம் திரு. காந்தி நிலைக்க வேண்டுமானால் அதற்கும் ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டியதாய் விட்டது.

அதுதான் சட்ட மறுப்பு சத்தியாக்கிரகம் என்பவைகள். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இவைகளை சண்டித்தன மென்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சட்ட மறுப்புக்கு நாடு தயாரில்லை என்றும் சத்தியாக்கிரகத்திற்கு மக்கள் தயாரில்லையென்றும் ஒப்புக் கொண்டதுடன் ஒரு தடவை செய்து பார்த்துத் தோல்வி அடைந்ததையும் ஒப்புக் கொண்ட பிறகு மறுபடியும் சட்ட மறுப்பு சத்தியாக்கிரகம் என்றால் அதில் ஏதாவது பொருளோ நாணயமோ இருக்க முடியுமா? இவை எதற்காக செய்வது என்பதாவது சரிவர முடிவு செய்யப்பட்டதா? ஒன்று மில்லாமல் இம்மாதிரி கிளர்ச்சி செய்வதின் கருத்து ஒன்று சண்டித்தனமாக இருக்க வேண்டும்.

அல்லது திரு. காந்தி அவர்களுக்கு “நமக்கு இந்த தகராரே வேண்டாம் போய் ஜெயிலில் சௌக்கியமாய் உட்கார்ந்து கொண்டிருக்கலாம்” என்கின்ற சுயநலமாவது இருக்க வேண்டும். இது இரண்டில் ஒன்று இல்லாமல் வேறு ஒன்றும் இருக்க இடமில்லை என்பதே நமது அபிப்பிராயம்.

அன்றியும் சாத்வீக சட்ட மறுப்பு என்பதற்கு போடப்படும் திட்டங்களும் சர்க்காருக்கு ஏதாவது ஒரு வழியில் தொந்திரவு கொடுப்பதின் மூலம் விளம் பரம் ஏற்படவேண்டும் என்கின்றது போல் இருக்கின்றதே தவிர ஜனங்களுக்கு கஷ்டம் நீங்குவதற்கு என்கின்ற முறையில் எந்தத் திட்டமும் போடப்படுவதாய் இது வரையில் எந்த சேதியும் வெளிவரவில்லை, தவிர “சாத்வீகத் தில் நம்பிக்கை உள்ளவர்களும் காங்கிரசில் இருப்பதால் அவர்கள் இஷ்டப் படி செய்ய காங்கிரஸ் இடங்கொடுக்கின்றது.” என்பதாகக் காரியக்கமிட்டித் தீர்மானித்திருப்பதால் தெரிகின்றது.

இந்த சமயத்தில் காங்கிரசில் சாத்வீகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வேலை என்ன என்பது வாசகர்களே யோசித்துப் பார்க்க வேண்டிய காரியமாகும். சாத்வீகத்தில் மக்களுக்கு அல்லது காங்கிரசிலிருப்பவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிந்தபிறகும் சாத்வீக சட்ட மறுப்புக்கு காங்கிரஸ் எப்படி உத்திரவு கொடுக்கலாம்? நிற்க காங்கிரசானது சாத்வீக சட்ட மறுப்பை திரு. காந்தியார் சொந்த சொத்தாக விட்டிருப்பதாயும் தெரிகின்றது. திரு. காந்தி அவர்களுக்கு நமது மாகாணத்தைப் பொருத்தவரை திரு. ராஜாகோபாலாச் சாரியும் கதர் இயக்கத்தின் மூலம் ஜீவனம் நடத்தும் பார்ப்பனர்களும் தான் மந்திரிகளும் சிஷ்யர்களுமாய் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் தமிழ் நாட்டுத் தொண்டர்கள் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவர்களாவார்கள். அவர்கள் சிறை செல்லு வதையாவது தியாகம் செய்து, கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பதையாவது நாம் தடுக்க வரவில்லை. இந்த இரண்டு தான் நமது இயக்கத்திற்கும் ஆதா ரமே ஒழிய அதிகாரமோ பதவியோ அல்ல என்பதை நாம் நன்றாய் உணர்ந்தி ருக்கிறோம்.

ஆனால் அவைகளை பலனுள்ள காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றோம். ஜாதிகளை அழிக்க கோவிலை ஒழிக்க உற்சவங்களைத் தடுக்க மற்றும் மக்களுக்கு செலவைக் கொடுப்பதும் அறிவைக் கெடுப்பதும் இழிவைத் தருவதுமான காரியங்களை ஒழித்தல் முதலாகிய ஏதாவது காரியங்களுக்கு நாம் சிறை செல்வதையோ அடிபடு வதையோ இறப்பதையோ அனுபவிக்கத் துணிவதை கடமையான காரியமென்றே சொல்லுவோம். அப்படிக்கில்லாமல் வீணான காரியங்களில் “உப்பளங்களை முற்றுகை போடுவது” என்கிற அர்த்தமற்றதும் பைத்தியக் காரத்தனமானதுமான காரியங்களில் தலையிட்டு நமது ஆற்றல்களை எல்லாம் வீணாய் செலவழித்து விடக் கூடாது என்பதுடன் இது தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத தொண்டர்களுக்கு இது சமயம் இருக்கும் ஊக்கத்தையும் ஆற்றலையும் ஒருவாறு மாற்றி அவைகளை வேறு வழிகளில் திருப்பி வீணாக்கவே திரு. காந்தியின் “தமிழ்நாடு” சிஷ்யர்கள் செய்த சூழ்ச்சியாய் இருக்கக்கூடும் என்று தொண்டர்களுக்கு ஞாபக மூட்டுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 23.02.1930)