periyar 433சென்னை கார்ப்பொரேஷனுக்கு இம்மாதம் 12-ந் தேதி நடந்த தலைவர் தேர்தலில் திருவாளர் ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது கேட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

சென்ற வருஷத்தேர்தல் போலவே இவ்வருஷமும் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளாகவே இரு கனவான்கள் போட்டி போட்டு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குள்ளும் பிரிவினை ஏற்பட்டு அவர்களில் இரு கட்சிக்கு வேலை செய்யப்பட்டு தேர்தல் நடந்தேறியதை குறித்து விசனப்படாமலிருக்க நம்மால் முடியவில்லை.

தேர்தலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னால் நாம் எழுதியது போல ஜஸ்டிஸ் கட்சிக்கு நெல்லூரில் புதியதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இவ்விஷயத் தில் சிறிது தலையிட்டு யாராவது ஒருவர் தான் நிற்க வேண்டுமென்பதாக முடிவு செய்தோ அல்லது மற்ற பிரமுகர்களையும் சேர்த்து ஒரு முடிவு செய்தோ இருப்பாரானால் இச்சம்பவம் நேர்ந்திருக்காதென்பது நமது துணிபு.

அபேட்சகர்கள் இருவரும் தலைவருடைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்பதற்காக தலைவர் தனது முடிவை தெரியப்படுத்தவில்லை என்பதாக சொல்லப்படுவதானாலும் இம்மாதிரியான முக்கிய விஷயங்களில் நெருக்கடியான நிலைமையைக் காப்பாற்ற தலைவர் தானாகவேனும் முயற்சித்திருக்க வேண்டியது பொறுப்புள்ள தலைவர் என்பவரின் கடமை என்பதை நாம் சொல்லித் தீர வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.

இத்தேர்தலானது அபேட்சகர்களுக்கும் சென்னையில் உள்ள சில தனிப்பட்டவர்களுக்கும் தங்கள் தங்கள் தனிப்பட்ட வெற்றி தோல்வியாகக் காணப்படினும் சென்னைக்கு வெளியிலுள் ளவர்களுக்கு தோல்வியைவிட கஷ்டமான பலனையும் வருத்தத்தையும் தரக் கூடியது என்பது நமது அபிப்பிராயம்.

ஏனெனில், வெற்றி தோல்வியை விட அதனால் ஏற்படும் பலனேதான் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஆகவே, இத்தேர்தலின் வெற்றி தோல்வியைப் பற்றி கவனிப்பேயில்லாமல் இதனால் ஏற்பட்ட கட்சிப் பிரதிக்கட்சியார் பலனே ஜஸ்டிஸ் கட்சியில், புதிதாக வெளிப்படையாய், மேலும் அதிகமான பிளவு ஏற்பட்டு அது வெளி ஜில்லாக்கள் எல்லாம் தொத்து நோய் போல் பரவ ஆரம்பித்துவிட்டது.

அன்றியும், நாம் தேர்தலுக்கு முன் எழுதியது போலவே அதாவது நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கை ஒருவாறு நமது இயக்கத்தில் உள்ள கட்சிகள் இவ்வளவு என்பதை காட்டி விட்டது.

ஆனால் “அடுத்து வரும் கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தல் அக்கட்சியின் தனித்தனி வேலைத் துவக் கத்தை காட்டிவிடக் கூடியதாகிவிடுமோ என்று பயப்படுகின்றோம்” என்று எழுதியது போலவே ஏற்பட்ட கட்சிகளின் வேலைகள் துவக்கப்பட்டுவிட்டது.

உதாரணமாக அவைகளில் முதலாவது வேலையாக திரு.கண்ணப்பர், தியாகராய மிமோரியல் கட்டிடத்தின் மேல்மாடியில் இதுவரை ஜாகை வைத்துக் கொண்டு இருந்த ஒரு சிறு அறையை 30-ந் தேதிக்குள்ளாக காலி செய்யும்படி வக்கீல் மூலமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டாய் விட்டது. (அது மற்றொரு பக்கம் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது) இதில் இரண்டு உண்மையை நாம் மறைக்க முயலவில்லை.

அதாவது திரு.கண்ணப்பர் (திரு.கண்ணப்பர் மறுப்பதானாலும் சரி) கார்ப்பொரேஷன் தேர்தலில் ஒரு கட்சியில் சேர்ந்தாரோ இல்லையோ என்பதில் ஆட்சேபனை இருந்தாலும் திரு.நடேச முதலியாருக்கு அனுகூலமாக வேலை செய்தார் என்பதையும் தேர்தல் நடந்த மூன்றாம் நாளிலேயே நேரில் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வக்கீல் மூலமாக நோட்டீசு கொடுக்கப்பட்டது என்பதையும் நாம் மறைக்க முயலவில்லை.

இந்த நிலைமையானது இவ்வியக் கத்தைச் சேர்ந்த இங்கிலீஷ், தமிழ் பத்திரிகைகளையும் பாதிக்கக் கூடும் என்றும் தோன்றுகின்றது. இதற்குமேல் நடக்கக் கூடியவைகளை நாமாக ஊகத்தின் மூலம் எழுதிய காரணத்தாலேயே அவைகள் உண்மையாய் நடக்க இடம் கொடுத்து விட்டது என்று சொல்லப்பட்டு விடுமோ என்கின்ற எண்ணத்தாலும், அவைகளை இந்த அளவிலே அதாவது, வெளியில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாததற்கு முன்னமே அடக்கிவைக்க முயலலாமா என்கின்ற எண்ணத்தின் மீதும் வெளிப்படுத்தாமல் விட்டு விடுகின்றோம்.

முடிவாக நாம் இரு கட்சி யாருக்கும் எச்சரிக்கை செய்வது என்னவென்றால், முக்கியமாக காங்கிரசின் ஊழல்கள் வெளியாக நேரிட்டதாலாயேதான் ஜஸ்டிஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் கிடைத்து வந்தது. ஆகையால் இது போலவே ஜஸ்டிஸ் கட்சியின் ஊழல்களால் காங்கிரசுக்கும் மற்றும் அது போன்ற ஸ்தாபனங்களுக்கும் நமது நாட்டில் மக்களின் செல்வாக்கும் ஆதரவும் இருக்கும்படி செய்துவிடக்கூடாதென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

கடைசியாக திரு.இராமசாமி முதலியார் அவர்கள் சென்ற வருஷம்போலவே யாரும் எவ்வித குற்றமும் சொல்வதற்கில்லாமல் கார்ப்பொரேஷன் வேலையில் மிக நெருக்கடியான சமயங்களில் கூடமிக்க பொறுமையாயும் சாமர்த்தியமாயும் நடந்து வெற்றி பெற்றது போலவே இவ்வருஷமும் கார்ப்பொரேஷன் வேலையில் பொதுஜன செல்வாக்கையும் ஆதரவையும் பெறுவார் என்று உறுதியாய் நம்புகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.11.1929)