சென்ற ஒரு மாத காலமாக பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் வாலைப் பிடித்து வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும் ஒரே அடியாய் சற்றும் அறிவு, மானம், வெட்கம் இன்றி பார்ப்பனரல்லாதார் கக்ஷியையும், மந்திரிகளையும் வசைபாடும் வேலையிலேயே ஈடுபட்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல் வெளியிடங்களில் உள்ள பார்ப்பனர்களும் அவர்களிடம் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் பார்ப்பனரல்லாத வயிற்றுப் பிழைப்பு தேச பக்தர்களும் இதையே பின்பற்றிக் கொண்டு ஆங்காங்கு கூட்டம் போட்டது போலவும், மந்திரிகளையும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியையும் கண்டித்து தீர்மானங்கள் செய்தது போலவும், மந்திரிகளை ராஜீனாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வது போலவும் பலவித பித்தலாட்டத் தீர்மானங்களைச் செய்ததாக பத்திரிகைகளில் எழுதி விடுகின்றார்கள். “மந்திரிகளின் துரோகம்” என்றும் “தேசத்துரோகம்” என்றும் மற்ற பல இழிவான வார்த்தைகளை போக்கிரித்தனமாக எழுதி பாமர மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.

periyar kamarajarஎனவே இவர்கள் வையும் இந்த மந்திரிகள் யார் என்றும், எங்கிருந்து வந்தவர்கள் என்றும், எந்த கக்ஷியைச் சேர்ந்தவர்கள் என்றும் சற்று யோசிப்போம்.

ஸ்ரீமான்கள் சுப்பராயன், ரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் ஆகிய மூவர்களையும் சுயராஜ்ஜியக் கக்ஷியின் உதவியைக் கொண்டு ஸ்ரீமான்கள் ஸி.ராஜகோபாலாச்சாரியார், ஸி.விஜயராகவாச் சாரி யார், சர்.சி.பி. ராமசாமி அய்யர் மற்றும் பல பார்ப்பனர்கள், அடையாறு கோஷ்டியார் ஆகியவர்கள் ஒன்று சேர்ந்து சிருஷ்டித்தார்களா இல்லையா? என்று கேட்கின்றோம்.

இந்தப்படி பார்ப்பன கோஷ்டியார் மந்திரிகளை சிருஷ்டித்ததற்காக மேல் கண்ட மந்திரிகளிடம் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் கவலையுள்ள பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகங்களும் ஸ்தல ஸ்தாபன நியமனங்களும் கொடுக்கக் கூடாது என்றும், பார்ப்பனரல்லாதார் கக்ஷியை ஒழித்துவிட வேண்டும் என்றும் வாக்குறுதி வாங்கிக் கொண்டு அந்த நிபந்தனையின் பேரில் ஆதரிப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டது உண்டா? இல்லையா? என்று கேட்கின்றோம்.

அந்தப்படியே மூன்று மந்திரிகளையும் தங்கள் கையில் உள்ள களிமண் உருண்டைகள் போல் நினைத்து தங்களுக்கு வேண்டியபடியெல்லாம் பொம்மைகள் செய்து கொண்டார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.

மற்றும் இம்மந்திரிகள் மூலம் பார்ப்பனர்கள் தங்களுக்கு வேண்டிய மாதிரியெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்களில் புரட்டும் பித்தலாட்டங்களும் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் நன்மைக்கும் தங்களால் கூடிய உபத்திரவமெல்லாம் செய்து வந்தார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.

சட்டசபை தேர்தல் ஆனவுடன் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை மந்திரி வேலை ஒப்புக் கொள்ளும்படிக்கும் கவர்னரை ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு மந்திரி வேலை கொடுக்கும்படிக்கும் கேட்டுக் கொள்வதாக ஸ்ரீமான் வரதராஜுலு காங்கிரஸ்வாதி என்கின்ற முறையில் தந்தி கொடுத்தாரா இல்லையா என்று கேட்கின்றோம்.

மந்திரிகள் நியமனமான பிறகு மந்திரிக்கு காங்கிரசு கட்சித் தலைவர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒரு விருந்தளித்து தான் மந்திரிக்கு வேண்டியவர் என்று காட்டிக் கொண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாரா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்த விளம்பரத்தை வைத்துக் கொண்டு ஸ்தல ஸ்தாபன நியமனங்களுக்கும், உத்தியோகங்களுக்கும் மற்றும் மந்திரிகளால் ஆக வேண்டிய காரியங்களுக்கும் பீஸ் வாங்கிக் கொண்டு சிபார்சு செய்து பதினாயிரக்கணக்காக பணம் சம்பாதித்தாரா இல்லையா என்று கேட் கின்றோம்.

இம்மாதிரியெல்லாம் செய்யலாமா என்று கனம் ஸ்ரீமுத்தையா முதலியார் காங்கிரஸ் முறையில் கேட்டதற்கு ஆம் அப்படித்தான் செய்வோம். பார்ப்பனரல்லாதார் கட்சியை எப்படியாவது ஒழிப்பதுதான் எங்கள் வேலை என்றும் அதற்காக “இதுவும் செய்வோம் இனியும் என்னமுஞ் செய்வோம்” என்றும் சொன்னார்களா இல்லையாயென்று கேட்கின்றோம்.

இந்த மேல் கண்ட மந்திரிகள் சுற்றுப் பிரயாணம் செய்த காலத்தில் அவர்களுக்கு செல்லுமிடங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் பூரண கும்பங்கள் எடுப்பது, ஆடம்பர மரியாதை செய்வது முதலிய பல காரியங்கள் நடந்ததா இல்லையா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாத மந்திரிகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டிற்குள் இறக்கி வைத்துக் கொண்டு வேறொருவர் பார்க்காதபடி மூடுமந்திரங்கள் செய்தார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.

கவர்னர், ஸ்ரீமான்கள் அரங்கநாதம், ஆரோக்கியசாமி ஆகிய முதலியார்மார்களை வெளியில் பிடித்து தள்ளி விட்டதற்காக இந்த பார்ப்பனர் களும் அவர்கள் கூலியாகிய ஸ்ரீமான் வரதராஜுலுவும் இந்த மந்திரிகளை கவர்னர் வெளியில் போகச் சொன்னது தப்பு என்றும், மறுபடியும் அவர்களையே மந்திரியாக நியமிக்க வேண்டும் என்றும் தங்கள் பத்திரிகையில் எழுதினார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.

மேற்படி முதலியார் மந்திரிகள் விலக்கப்பட்டதற்கு ஒப்பாரி வைத்து அழுதார்களா இல்லையா? என்று கேட்கின்றோம். இப்பொழுது இருக்கும் மந்திரிகளை பாராட்டுவதற்காக காங்கிரஸ் பார்ப்பனர்கள் அதாவது ஸ்ரீமான்கள் ஏ. ரங்கசாமி, சி.வி. வெங்கட்டரமணன் முதலிய அய்யங்கார்களும் பல அய்யர் சாஸ்திரி பார்ப்பனர்களும் காஸ்மாபாலிட்டன் கிளப்பு மெத்தைக்கு போய் பாராட்டி வந்தார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.

இப்பொழுதும், மந்திரிகள் தங்களுக்கும் பகுதி நாமிநேஷனும் உத்தியோகமும் கொடுப்பதாயிருந்தால் தாங்கள் இந்தக் கூப்பாடு போடாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறோமென்று சொல்லி தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா இல்லையா என்று கேட்கின்றோம். இந்த ஸ்ரீமான் சி. ராஜ கோபாலாச்சாரியார் அதாவது புதிய மந்திரிகள் மந்திரி வேலை ஒப்புக் கொண்டது அரசியல் நாணயக் குறைவு என்று இப்போது சொல்லுபவர், இனியும் முதல் மந்திரியிடம் தனது வகுப்பு நன்மைக்காக சமாசாரப் போக்குவரத்தும் சிபார்சு போக்குவரத்தும் வைத்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்று கேட்கின்றோம்.

மற்றும் பல பார்ப்பனர்களும் காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி வீரர் என்பவர்களும், நியமனம், உத்தியோகம் ஆகிய எலும்புகளுக்கு இன்னமும் மந்திரிகளின் வீட்டைச் சுற்றிக் கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டும் திரிகிறார்களா இல்லையா என்று கேட்கின்றோம். ஆகவே இந்த பார்ப்பனர்களுக்கும் ஸ்ரீவரதராஜுலுக்கும் மற்றும் காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் மானங்கெட்ட வீரர்களுக்கும் இந்த மந்திரிகள் எந்த விதத்தில் தேசத் துரோகிகளாய் விட்டார்கள் என்று கேட்கின்றோம்.

தாங்கள் என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் கேட்பதற்கும் படிப்பதற்கும் நாட்டில் தேவையான முட்டாள்கள் இருக்கின்றார்கள் என்கின்ற ஆணவமேயல்லாமல் இந்த மந்திரிகளை இவர்கள் குறை சொல்ல வேறு ஏதாவது உண்மையான காரணங்கள் உண்டு என்று யாராலாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

“எள்ளுதான் எண்ணைக்காக காய்கின்றது. இந்த எலிப்புளுக்கை எதற்காக காய்கின்றது” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் பார்ப்பனர்கள்தான் தங்கள் வகுப்புக்கு ஆதிக்கம் போய்விடுமே, நியமனம் போய்விடுமே, உத்தியோகம் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு இந்த சமயம் ஊளையிட வேண்டியது அவர்களுக்கு அவசியமாகும். மற்றபடி தம்மை பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்ரீவரதராஜுலுக்கு இதில் ஆமா சாமி போட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் பொது ஜனங்க கண்டுபிடிக்க வேண்டிய ரகசியமாயிருக்கின்றது.

மந்திரிகள் விஷயத்தில் ஸ்ரீ வரதராஜுலு கொள்கை என்ன? தேசீய விஷயத்தில் ஸ்ரீவரதராஜுலு கொள்கை என்ன? தொழிலாளர் விஷயத்தில் ஸ்ரீ வரதராஜுலு கொள்கை என்ன? மத விஷயத்தில் ஸ்ரீ வரதராஜுலு கொள்கை என்ன? என்று இந்த உலகத்தில் யாராலாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். இம்மாதிரி தனக்கும் புத்தியில்லாமல் வேறொருவர் சொல்லுவதையும் கேட்காமல் உயிருடன் இருப்பதற்காகவே பார்ப்பனர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் ஆமா சாமி போட்டுக் கொண்டும் காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து கொண்டும் பார்ப்பனரல்லாத சமூகத்தையே காட்டிக் கொடுத்துக் கொண்டும் இருப்பவர்களுக்கு மந்திரிகள் பேரில் ஆத்திரம் வருவதற்கு ஏதாவது அர்த்தமிருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

தவிர கனம் ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் சுயேச்சை கட்சியைச் சேர்ந்தவர். மந்திரிகளுக்காகவே அக்கக்ஷி காங்கிரஸ் பார்ப்பனரால் உண்டாக்கப்பட்டது. இந்த கனம் ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் சுயராஜ்யக் கட்சியின் பேரால் அதாவது மந்திரி வேலை ஒப்புக் கொள்வதில்லை, மந்திரிகளை ஆதரிப்பதில்லை என்கின்ற கொள்கையின் பேரால் சட்டசபைக்கு நின்று எதிர்ப்பு இல்லாமல் வெற்றி பெற்றவர். அப்படிப்பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளும் கட்சிக்கு போய்விட்டாரே அந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களின் வாயும் கையும் என்ன செய்தன என்று கேட்கின்றோம். ஒரு பார்ப்பனராவது ஒரு பத்திரிகையாவது ஸ்ரீமான் “சேதுரத்னமைய்யர் கட்சி மாறிவிட்டார்” என்று கூட சொல்லவில்லையே, அதுவும் இல்லாமல் காங்கிரஸ் பார்ப்பனர்கள் தானே அவரை அந்தக் கட்சிக்கு அனுப்பினது. அப்பேர்பட்ட ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் இப்போது கனம் சேதுரத்னமய்யரானவுடன் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஏன் இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்று கேட்கின்றோம்.

தவிர ஸ்ரீமான் முத்தையா முதலியார் சட்டசபை மெம்பர் ஆனவுடன் மந்திரிகளை ஆதரிப்பது காங்கிரஸ் கொள்கைக்கு விரோதம் என்று தொண்டையைக் கிழித்துக் கொண்ட காலத்தில் ஒருவராவது அவருக்கு செவி சாய்க்காமலும் அவர் ஒரு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “சுயராஜ்யக் கட்சியார் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள். தேர்தல் வாக்குறுதிகளுக்கு விரோதமாய் திருட்டுத்தனமாய் மந்திரிகளை ஆதரிக்கிறார்கள்” என்று சொல்ல எழுந்தபோதெல்லாம் அவரை தலையில் அடித்து உட்கார வைத்ததை ஒரு பார்ப்பனப் பத்திரிகையாவது அவர்கள் வால்களாவது கண்டிக்காமல் இருந்துவிட்டு அவர் திருட்டுத்தனமாய் வேறு ஒருவரை ஆதரிக்காமல் நேரடியாய் தைரியமாய் ஒப்புக் கொண்டதற்கு மாத்திரம் இவ்வளவு ஆத்திரப்படுவதின் அர்த்தமென்ன என்று கேட்கின்றோம்.

முன்னால் தங்களாலேயே சிருஷ்டிக்கப்பட்டு தங்களாலேயே ஆதரிக்கப்பட்டு தங்களாலேயே பூரண கும்பம் எடுக்கப்பட்டு வந்த டாக்டர் சுப்பராயன் இப்போது இவர்களுக்கு கசந்து போகக் காரணமென்ன என்பன வைகளை நடுநிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால் பார்ப்பனரல்லாத கட்சியை ஒழிக்க இந்த மந்திரிகள் இப்போது ஒப்புக் கொள்ளவில்லை என்கின்ற காரணம் தவிர வேறு ஏதாவது உண்டா? என்று கேட்கின்றோம்.

ஆகவே பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் எதுவரையில் இம்மந்திரிகளை வைகின்றார்களோ அதுவரையில் இந்த மந்திரிகளை ஆதரிக்க வேண்டியதும், அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களிடமிருந்து பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு ஆன வேலை வாங்கிக் கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு அறிவுள்ள பார்ப்பனரல்லாதார் கடமை ஆகும் என்று தைரியமாய்ச் சொல்லுவோம். மற்றபடி பார்ப்பனர்கள் காட்டும் சுயராஜ்ஜியம், தேசீயம், தேசத் துரோகம் என்கின்ற பூச்சாண்டிகளைக் கண்டு யாரும் பயப்படக் கூடாது என்றும் மற்றபடி அவர்கள் கூலிகளையும் காலிகளையும் வால்களையும் லட்சியம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 15.04.1928)