மகாத்மா காங்கிரசில் தலையிட்டு ஒத்துழையாமை கொள்கையை நாட்டில் பகிஷ்காரத் திட்டத்தையும் நிர்மாணத் திட்டத்தையும் நிறைவேற்ற உழைத்து வந்த காலத்தில் நாமும் நம்போன்ற அநேகரும் யாதொரு நிபந்தனையுமில்லாது குருட்டு நம்பிக்கையுடன் மகாத்மாவைப் பின்பற்றி உழைத்து வந்தது தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்குத் தெரியாமலிருக்காது. மகாத்மா ஜெயிலுக்குப் போனவுடன் மேற்கண்ட பகிஷ்காரத் திட்டத்திற்கும், நிர்மாணத் திட்டத்திற்கும் விரோதமாய் நமது நாட்டு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வந்த காலத்திலும் அதுகளுக்கு இடம் கொடுக்காமல் காங்கிரஸ் கட்டளை என்றும், காங்கிரஸ் கமிட்டி கட்டளை என்றும் கூட பார்க்காமல் திட்டங்களை நிலைப்பிப்பதிலும், நிறைவேற்றுவதிலுமே வேலை செய்து வந்ததும் அநேகருக்கு தெரிந்திருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில் நம்மை நமது எதிரிகளான அரசியல் பார்ப்பனர்களில் பலர் காங்கிரசுக்கு துரோகி என்றும், தேசத் துரோகி என்றும், காங்கிரசில் இருக்க யோக்கியதையற்றவன் என்றும், காங்கிரஸ் இருப்பதா இறப்பதா? என்றும் காங்கிரஸ் கமிட்டியை விட்டு நம்மை நீக்கிவிட வேண்டுமென்றும், நம்மை காங்கிரசிலிருந்து நீக்கவும், நமது நடவடிக்கையை கண்டிக்கவும் பல கூட்டங்களும் கூட்டினதும், காங்கிரஸ் விதிப்படி நாம் காங்கிரஸ் கமிட்டியிலிருக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று சொல்லி நமது ஸ்தானத்தில் வேறு ஒருவரை நியமித்ததும் அநேகருக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை.

periyar and mgrஅதோடு ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் அத்தீர்மானம் காங்கிரஸ் கட்டளைப்படி இல்லாததால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி அவரையும் ராஜினாமாக் கொடுக்கச் செய்ததும் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு அவர்கள் இஷ்டப்படி நடக்க காங்கிரஸ் இடம் கொடுக்கவில்லை என்கிற காரணத்தால் அவரும் ராஜினாமா கொடுத்து வெளியேறவும், ஆகவே இவ்வளவு பேர்கள் சம்பந்தமும் காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து விலக நேரிட்ட போதிலும் லக்ஷியமில்லாமல் காங்கிரஸ் கட்டளை, காங்கிரஸ் திட்டம், காங்கிரஸ் கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டு சுவாதீன புத்தி உள்ளவர்கள் எல்லோரையும் வெளியாக்கிவிட்டு குலாம்களையும், கூலிகளையும் கூட சேர்த்துக் கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி பதவி பெற்ற பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் காங்கிரசை மதித்திருக்கிறார்கள்? எவ்வளவு தூரம் காங்கிரஸ் கட்டளைப்படி நடக்கிறார்கள்? எவ்வளவு தூரம் காங்கிரஸ் கட்டுப்பாடுகளுக்கு இணங்குகிறார்கள்? என்பது இவ்வாரம் சட்டசபையில் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து முழு மூடர்களும் அறிந்திருக்கலாம் என்றே நினைக்கிறோம். உதாரணமாக கடைசி காங்கிரஸ், அதாவது கோகத்தி காங்கிரசின் கட்டளை என்ன என்பதை முதலில் ஆராய்வோம்.

“இந்திய சட்டசபையிலும் மாகாண சட்டசபையிலும் உண்டான காங்கிரஸ்காரர்கள் எல்லா விஷயங்களிலும் எதிர்ப்பையே முக்கிய கொள்கையாய் கொள்ள வேண்டியது”. தேசீய கோரிக்கைக்கு அரசாங்கத்தார் இணங்குகிறவரை அரசாங்கத்தால் கொடுத்து பெறுவதற்குரிய உத்தியோகங்களை மறுத்துவிட வேண்டும். மற்ற கக்ஷியார்களால் மந்திரிசபை அமைக்கப்படுவதை எதிர்க்க வேண்டும். செலவுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும். வரவு செலவு திட்டங்களை நிராகரிக்க வேண்டும். . . .” இதுகளைச் சொல்லிக் கொண்டுதான் பாமர மக்களிடம் ஓட்டு பெற்றார்கள். இதுகள் எல்லாம் பார்ப்பனீய புரட்டென்றும், மோசமென்றும், பார்ப்பனரல்லாதார் கக்ஷியை ஒழித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தச் செய்யும் சூழ்ச்சிகள் என்றும் அப்பொழுதே நாம் எழுதி இருந்தோம். அதாவது 2.1.27 “குடி அரசில்” காங்கிரஸ் தீர்மானத்தைப் பற்றி எழுதி இருப்பதாவது:-

“காங்கிரஸ் தீர்மானங்களில் முக்கியமாய் கவனிக்க வேண்டியது 4வது தீர்மானமாகிய சட்டசபை தீர்மானமேயாகும். இத்தீர்மானம் எவ்வளவு தூரம் பாமர மக்களை ஏமாற்ற ஏற்பட்ட தீர்மானம் என்பதை அறிய வேண்டுமானால் இத்தீர்மானம் விஷயாலோசனைக் கூட்டத்தில் பிரேரேபிக்க ஆரம்பித்தவுடன் அங்கு இருந்த மகாத்மா காந்தி உடனே எழுந்து வெளியேறி விட்டதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்...... தங்களுக்கு மெஜாரிட்டி வரும்வரை சர்க்கார் இணங்கி வரவில்லை என்று சொல்லிக் கொண்டு காலம் தாட்டவே இத்தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாமலும் இப்போது சுயேச்சை கட்சி மந்திரி சபை அமைத்தது என்பது பேருக்கு மாத்திரம் ஸ்ரீமான் சுப்பராயனே ஒழிய உண்மையில், “சுயராஜ்யக்கட்சி” பார்ப்பனரும் “ஒத்துழைப்பு” பார்ப்பனரும், “ஒத்துழையா” பார்ப்பனரும் ஆகிய எல்லோரும் சேர்ந்தே தான் அமைத்திருக்கிறார்கள். உண்மையில் சுயராஜ்ய கட்சியார் திருட்டுத்தனமாய் ஒத்துழைப்பதாக வாக்களித்திராவிட்டால் ஸ்ரீமான் சுப்பராயன் மந்திரி சபை அமைக்க தைரியம் கொண்டிருப்பாரா என்பதை வாசகர்களே யோசிக்க வேண்டும்......... இது “ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் காத்திருப்பதே அல்லாமல் வேறல்ல” என்று எழுதி இருக்கிறோம். அப்போது நம்ம பேரில் பலர் வருத்தப்பட்டிருந்தாலும் இப்போது எண்ணமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறோம். மந்திரிகளின் அமைப்பையே எதிர்க்க வேண்டியவர்கள் அமைப்புக்கு திருட்டுத்தனமாய் உளவாய் இருந்ததோடு மந்திரிகளின் பெயரில் ஜஸ்டிஸ் கட்சியார் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத தீர்மானங்களுக்கும் ஓட்டுக் கொடுக்காமல் துரோகம் செய்து விட்டதும், சம்பளத்தை குறைக்க ஜஸ்டிஸ் கட்சியார் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் ஓட்டு கொடுக்காமல் துரோகம் செய்ததும் வரவு செலவு திட்டங்களை நிராகரிக்காமல், நிராகரிப்பதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் கொண்டுவந்த தீர்மானங்களுக்கு விரோதமாய் காங்கிரஸ் கட்சியார், சுயராஜ்யக் கட்சியார் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றி வந்ததும் சட்டசபையில் இவ்வார வரவு செலவு திட்ட வாதத்தை கவனித்தவர்கள் நன்றாய் அறிந்திருக்கலாம்.

இதிலிருந்து காங்கிரசுக்கு கண்ணியம் இருக்கிறதா? காங்கிரஸ்காரருக்கு கண்ணியம் இருக்கிறதா? காங்கிரசில் ஆதிக்கம் பெற்ற சுயராஜ்ய கட்சியினருக்கு கண்ணியம் இருக்கிறதா? காந்தி சிஷ்யர்கள் ஒத்துழையாமைகாரர் என்பவர்களுக்கு கண்ணியம் இருக்கிறதா? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தால் தெரியாமல் போகாது. யாரோ நாலு பார்ப்பனர்கள் காங்கிரஸ் என்றும், காந்தி என்றும், கதர் என்றும், சுயராஜ்யம் என்றும், மிதவாதம் என்றும் ஆளுக்கொரு கட்சி பெயரை சொல்லி ஒவ்வொரு கட்சியிலிருந்து அதைக் கைபற்றிக் கொண்டு தாங்களே தேச பக்தர்கள், தாங்களே மகாத்மா பக்தர்கள், தாங்களே கதர் பக்தர்கள், தாங்களே மது விலக்கு பக்தர்கள், தாங்களே மிதவாதிகள் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு சுயநலக்காரரையும், சுயமரியாதை இல்லாதவர்களையும், வயிற்று சோற்று தேசப் பக்தர்களையும் கூலி கொடுத்து சேர்த்துக்கொண்டு பொய் பிரசாரம் செய்தும் மக்களுக்கு லஞ்சம், லாவணம், கள்ளு, சாராயம் வாங்கி கொடுத்து ஓட்டுப்பெற்று பதவிகள் அடைந்து தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளுவதோடு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழிக்க முயலுவதே இத்தனை கட்சிகளுடையவும் கொள்கைகளாக வைத்துக் கொண்டு நம்மை ஏமாற்றுவது இதிலிருந்தாவது தெரிகிறதா இல்லையா? என்றுதான் கேட்கிறோம்.

சர்க்காரையும், மந்திரிகளையும் ஜஸ்டிஸ் கட்சியார் எதிர்க்கவும் சுயராஜ்யக் கட்சியார் ஆதரிக்கவும் யாராவது சுயராஜ்யக் கட்சியாரை “ஏனையா நீங்கள் காங்கிரஸ் கட்டளைப்படி சர்க்காரையும், மந்திரிகளையும் எதிர்க்கவில்லை” என்று கேட்டால் அதற்கு கொஞ்சமாவது மானம், வெட்கம், ரோசம், சுயமரியாதை, நாணயம் ஒன்றுமில்லாமல் இந்த மந்திரிகள் போனால் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் வந்துவிடுவார்கள். அதனால்தான் எதிர்க்காமல் இருப்பதோடு சர்க்காருக்கும், மந்திரிக்கும் ஆதரவளிக்க வேண்டி இருக்கிறது என்று சொல்லுகிற ஒரு கூட்டம் இன்றைய தினம் நம் நாட்டு மக்களுக்கு அரசியல் சுயராஜ்யம் வாங்கிக் கொடுக்கிறவர்கள் என்று சொல்லப்படுவார்களானால் இந்த நாட்டுக்கு இதைவிட வேறு என்ன அவமானமும் இழிவும் வேண்டியிருக்கிறது? என்றுதான் கேட்கிறோம். தற்கால அரசியலமைப்பில் யார் தலையிட்டாலும் இப்படித்தான் நடக்க முடியும் என்று சொல்லுவது இதற்கு சமாதானமானாலும் அதை பார்ப்பனர்கள் தான் அனுபவித்துக் கொண்டு நம்மை அழிக்க வேண்டுமேயல்லாமல் நம்மவர்கள் அனுபவித்துக் கொண்டு சுயமரியாதையும் சமத்துவமும் அடையக்கூடாது என்று நம்மவர்களிலேயே சொல்லுகிற சில அசடுகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

(குடி அரசு - தலையங்கம் - 27.03.1927)