இம்மாதம் 15-ந்தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டி பிரசாரம் ஆரம்பிக்க வேண்டுமென்று எழுதியிருந்தோம்.   சில கனவான்கள் அதை  ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள்.  ஆனால், ஸ்ரீமான் ஞ.கூ. ராஜன் அவர்கள் சென்னையிலே தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும் அதற்குப் பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்பதாலும் குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவதை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.  தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலூகா, கான்பரன்சுகள் கூடப் போவதாகவும், பல இடங்களில் பார்ப்பனரல்லாதார் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே.

periyar and gt naidu

  ஆனால், ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதை தெரிவித்துக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.  சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும் அநுகூலம் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மகாநாடுகளுக்கு தலைமை வகிக்கவும் நாம் முன் எழுதியபடி அரசியலில் எவ்வித கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும் சிறப்பாக சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

  நாயக்கருக்கு சாவகாசம் கிடைத்தாலும் மகா நாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.  அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான  கனவான்களும் எந்த மகாநாட்டுக்காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தை பிரமாதப்படுத்திக் கொண்டு வர மறுக்காமல் சௌகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டுகோளை ஒட்டிக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927)

***

பார்ப்பனர்களின் ஒற்றுமை

கொஞ்ச நாளைக்கு முன் இந்தியாவிலிருந்து இந்தியர்களின் ஊழியராகவும், ஒரு இந்தியராகவும், இந்துவாகவும் உள்ள ஸ்ரீமான் சர்.டி. விஜயராகவாச்சாரியார் இந்திய பிரதிநிதியாக கனடாவுக்கு அனுப்பியதும் அங்கு போய் தென்னை மரம் இருக்கும் வரை குடித்துத்தான் தீருவோம்.  பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தையே இந்தியர்கள் விரும்புவதோடு, இதைக் கடவுள் அனுப்பியதாக இந்தியர்கள் பாவிக்கிறார்கள் என்றும், ஆங்கில நாகரீகத்தையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றும், அதற்கு உதாரணமாக எனது குமாரத்தியே தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் சொன்னதாக பத்திரிகைகளில் வந்தது ஞாபகமிருக்கும். அதையே ஸ்ரீமான் சு.மு. ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு திருப்பூர் முனிசிபல் சங்கத்தார் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்த காலையில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எடுத்துச்சொல்லி நமது ஸ்ரீமான் செட்டியார் அப்படிப் பேசாமல் சுதந்திரத்தோடும் ஆண்மையோடும் பேசினதாக குறிப்பிட்டிருந்தார்.

இதை மறுப்பதற்கு, இதில் யாதொரு சம்பந்தமும் இல்லாதவரும் இன்னமும் ஒத்துழையாதாரென்று வேஷம் போட்டுக்கொண்டிருப்பவருமான ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் மகாத்மாவின் “யங் இந்தியா” பத்திரிகையைப் பிடித்து அதில் மறுப்பெழுதி உலகமெல்லாம் பரவச் செய்திருக்கிறார் என்றால் பார்ப்பன ஒற்றுமை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது?  மழையில்லாமல் போனதற்கும், ரயில்வண்டி சார்ஜ் உயர்ந்ததற்கும், வெயில் அதிகமாய்க் காய்வதற்கும் பனகால் ராஜாதான் காரணம்,  ஜஸ்டிஸ் கட்சிதான் காரணம் என்று தான் பிறரைச் சொல்லும்படி செய்வதிலும், பிறரை நம்பும்படி பிரசாரம் செய்வதிலும் உடந்தையாயிருப்பவர்,  தன் இனத்தாரைக் காப்பாற்றுவதில் எவ்வளவு கவலை எடுத்துக்கொள்ளுகிறவர் என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.  பார்ப்பனரல்லாதாரில் சிலரின் யோக்கியதையையோ சொல்ல வேண்டியதில்லை.  எதை வேண்டுமானாலும் விற்று வயிறு வளர்க்கத் தயாராயிருக்கிறார்கள். என்றுதான் பார்ப்பனர் சூழ்ச்சி அறியவும் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமையாயிருக்கவும் யோக்கியதை வருமோ தெரியவில்லை.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927)

***

யாருக்கு புத்தி வந்தது?                       

சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றை குருவாகக் கொண்ட சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கு இப்பொழுது தான் புத்திவந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகின்றதுகள்.  இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால் சுயராஜ்ஜியக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுது தான் கொஞ்சம் புத்தி வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும்.  ஏனெனில் கதரைக்  கட்டாயமாக உடுத்த வேண்டும் என்று  முன்னெல்லாம் மகாத்மா கதறின  காலத்தில் முடியாது, பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும் போது கட்டிக் கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள் மதுரை மகாநாட்டில் கதரைப் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக் கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார் எல்லாரும் கதர் கட்டி விடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன் பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே காங்கிரசிலும் கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப்பனர்கள் ஒரு தீர் மானம் செய்து விட்டார்கள்.  இதிலிருந்து யாருக்கு புதிதாய் தந்திரபுத்தி வந்தது? காங்கிரஸ் பார்ப்பனருக்கா? பார்ப்பனரல்லாதாருக்கா? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்க்கவும்.

(குடி அரசு - கட்டுரை - 16.01.1927)