periyar kamarajar veeramani and karunanidhi

மணி:   ஏன்டா சேஷா ! நம்ம தலைவர்களான ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி , ரெங்கசாமி அய்யங்கார் , சீனிவாச சாஸ்திரி, சிவசாமி அய்யர், ஊ.ஞ. அய்யர் மற்றுமுள்ள பிராமணோத்தமர்கள் எல்லாம் இந்த எலக்ஷனில் எவ்வளவோ பாடுபட்டு மடாதிபதிகள் மகந்துகள் பணத்தை லட்சக்கணக்காக செலவு செய்து ஜெயித்து விட்டோம், ஜெயித்து விட்டோம் என்று தப்பட்டை அடித்தார்களே, கடைசியில் பார்க்கிறபோது பழையபடி மூன்று சூத்திரர்கள் தானே மந்திரிகளாய் விட்டார்கள். இதில் என்ன நமக்கு லாபம். ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார். ஆ.மு ஆச்சாரியார், வெங்கிட்ட ரமணய்யங்கார் இவர்களெல்லாம் மந்திரிகளாய் வருவார்கள் என்றல்லவா நாம் எல்லோரும் எவ்வளவோ பாடுபட்டோம். கணக்கு, மணியக்காரர், காப்பிக் கடை, பஞ்சாங்கம், புரோகிதம், வக்கீல் குமாஸ்தா, வக்கீல், முனிசீப், ஜட்ஜ், நிர்வாக சபை எல்லாம் பாடுபட்டும் பழையபடி சூத்திர ராஜாங்கம்தானே ஆகிவிட்டது.

சேஷன்: மணி! நீ என்ன பெரிய முட்டாளாயிருக்கிறாயே. நமக்கு எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா? இந்தப் பணகால் ராஜாவை ஒழிச்சமே அது ஒன்றே போதுமே.

மணி: பணகால் என்ன அவ்வளவு மோசமான ஆசாமியா?

சேஷன் : அட பயித்தியமே! நம்ம கூட்டத்திற்கே இந்த ஆள் பெரிய எமனாக வல்லவா 6 வருஷமாய் வந்து உட்கார்ந்துக் கொண்டு பிராமணாள் வாயில் நிரந்தரமாய் மண்ணை போடத்தக்க மாதிரி எவ்வளவோ வேலை செய்து சூத்திரர்களை யெல்லாம் கை தூக்கி விட்டார். நீயே நன்றாய் கவனித்துப் பார். பணகால் மந்திரியானபிறகு, சூத்திரன்களில் எவனாவது பிராமணனைக் கண்டால் சுவாமி என்கிறானா? கும்பிடுகிறானா? பிராமணன் என்கிற மரியாதை வைத்துப் பேசுகிறானா? இதை நினைத்தால் வயிறு எரிகிறதே.

மணி: நீ சொல்வது தப்பு. இன்னமும் கிராமாந்திரங்களில் எவ்வளவு பெரிய மிராஸ்தாரானாலும் ஒரு சின்ன பிராமணப் பையனைக் கண்டால் எழுந்து நிற்கிறான். வாங்க, வாங்க சாமி என்று குனிந்து கும்பிடுகிறான். இந்தப் பையன் அடே போடா வாடா என்று பேசினாலும் அவர்கள் அதை இழி வாய்க் கருதுவதில்லை. கிராமாந்திரங்களில் தாசிகள் பிராமணாளிடத் தில் பணமே வாங்குவதில்லை. பிராமணன் என்றால் இன்னம் எவ்வளவோ காரியங்கள் நடக்கிறது. சும்மா பனகால் மீதில் வீண் பழி சுமத்துகிறாயே.

சேஷன்: அட மண்டுவே! நீ பட்டிக்காட்டான் ஆனதினால் கிராமத்து சங்கதியை கட்டிக் கொண்டு அழுகிறாய். பட்டண வாசல்களில் நடக்கும் அபாயம் உனக்கு என்ன தெரியும்? காப்பிக்கடையில் போய் பார். முன்னெல்லாம் சுவாமி சுவாமி ஒரு இட்டெலி கொண்டு வாருங்கள் என்று வணக்கமாய் கேட்பார்கள். இப்போது ஓய் ஐயரே இட்டிலி கொண்டு வா என்று அதிகாரம் பண்ணுகிறான். வக்கீல்களைக் கண்டால் நடுங்குகிறவர்கள் இப்போது குடியானவன் கூட வாய்யா போய்யா என்கிறான். தாசி வீட்டிற் குப் போனால் பிச்சை எடுக்கிற பார்ப்பானுக்கு தேவடியா ஒரு கேடா என்கி றாள். பெரிய பெரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தில் எல்லாம் சூத்திரன் களே வந்துவிட்டார்கள். தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இது களில் சூத்திரன்களே நிறைந்து விட்டார்கள். ஒரு பிராமணன் அந்தஸ்துக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ திருப்தி செய்ய வேண்டியதாயிருக்கிறது. பனகாலினால் பிராமணனுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமோ? பட்டிக் காட்டான் நீ என்ன கண்டாய்!

மணி: நீ சொல்லுகிறபடி எனக்குத் தோன்றவில்லையே. எங்கு பார்த்தாலும் முனிசீப்புகள், ஜட்ஜுகள், அங்குள்ள குமாஸ்தாக்கள் எல்லாம் நம்ம பிராமணாளாகத்தானே இருக்கிறார்கள். நீ நன்றாய் கவனித்து பாரு.

சேஷன்: சரி! சரி!! அது ஒன்றுதான் நமது தலைவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சூத்திரன்கள் கைக்குப் போகாமல் வைத்திருக்கிறார்கள். அதுதான் உன் கண்ணுக்கு தெரிகிறதாக்கும். இதில் பனகாலுக்கு ஒரு அதிகா ரமும் இல்லை தெரியுமா? அல்லாமலும் அந்த இலாக்கா சட்ட மெம்பர் என்கின்ற பேரால் நமது பிரம்மஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர்வாளண்டையில் இருக்கிறது. அல்லாமலும் அந்த அதிகாரமுள்ள ஐகோர்ட் ஜட்ஜிகளுக்கு எவ்வளவோ நல்ல பிள்ளைகளாய் நம்மவர்கள் நடந்து கொண்டிருப்பதால் அதில் நம்மிடவளே ரொம்பி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் எத்தனை சாயபு முனிசீப்பாய் விடுவார்? எத்தனை கிறிஸ்தவர் முனிசீப்பாய் விடு வார்? எத்தனை கவரை நாயுடு, முதலி, செட்டி, பிள்ளை முதலிய ஆள்கள் முனிசீப், ஜட்ஜிகளாக வந்து விடுவார்கள் தெரியுமா? ஒரு மலையாளி ஐகோர்ட்டுக்கு வந்ததில் எத்தனை ஜட்ஜி, முனிசீப்புகள் மலையாளிகளாக வந்து விட்டார்கள் பார். என்னமோ நம்முடைய நல்லவேளை சுயமரியாதை உள்ள சூத்திரன்கள் ஐகோர்ட்டில் சரியானபடி இல்லாததால் நம்ம பாடு இவ்வளவிலாவது இருக்கிறது.

மணி: மற்ற இலாக்காக்களில் நம்மிடவாள் இல்லையென்றா சொல்லு கிறாய்.

சேஷன்: இருந்தென்ன பிரயோஜனம். நாமே ஏகபோகமாய் அனுப வித்து வந்தது போய் இப்போது அவர்களும் நமக்கு கிட்டக் கிட்ட சரியாய் வந்து விடுவார்களே. மெடிகல் இலாக்கா என்கிற வைத்திய இலாக்காவிலும் இந்த பனகால் வெள்ளைக்காரன்கள் தலையிலும் கையை வைத்து எல்லாம் சூத்திரன் களாகவே கொண்டு வந்தாய் விட்டது. அதனால்தான் வெள்ளைக் காரர்களுக்கும் பனகாலைக் கண்டால் பிடிக்கிறதில்லை.

மணி: வெள்ளைக்காரனை ஒழித்தது நல்லது தானே?

சேஷன்: நீ சுத்த அசடாயிருக்கிறாயே! நீ பிராமண விந்தே அல்ல போல் இருக்கிறது. வெள்ளைக்காரன் இல்லாவிட்டால் நம்ம பாடு ஆபத்து தானே. அது தெரியுமா? வெள்ளைக்காரனை எப்படியாவது சரிபடுத்திக் கொண்டு நாம் சுகமாக காலம் கழிக்கலாம். சூத்திரன்கள் வந்து விட்டால் நம்ம கதி அதோ கதிதான். அவன் சூத்திரன்களையே தேடித் தேடி உத்தி யோகத்திற்கு நியமிப்பான். வெள்ளைக்காரனைச் சரிபடுத்த நமக்குத் தெரிந்த தந்திரமும் நமக்குள்ள சௌகரியமும் சூத்திரன்களுக்குக் கிடையாது. இருந் தாலும் செய்ய மாட்டார்கள். பிராமணாதிக்கம் வேண்டுமானால் வெள்ளைக் கார உத்தியோகமும் ஆதிக்கமும் இருப்பதே மேல்.

மணி :  அப்படியானால் நம்ம பிராமணாள்தானே சுயராஜ்யம் வேணும், சுயராஜ்யம் வேணும் என்றும், இரட்டை ஆட்சி ஒழிய வேண்டும் என்றும், பூரா சுயராஜ்யம் அதாவது வெள்ளைக்கார ஆதிக்கமேகூடாது என்றும் சத்தம் போடுகிறார்கள். அப்படி இருக்க நீ வெள்ளைக்கார ஆதிக்கம்தான் பிராமணாளுக்கு நல்லது என்கிறாயே! அதன் இரகசிய மென்ன?

சேஷன்: அட கேனமே! அதெல்லாம் சும்மா, சும்மா. வெள்ளைக் காரருக்கும் நமக்கும் இரகசிய ஒப்பந்தம். “நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு” என்கிற மாதிரி சூத்திரன்களை ஏமாற்ற நம்மிட பெரியவாள் ஏற்பாடு செய்து வைத்த தந்திரம். உண்மையான சுயராஜ்யம் வந்தால் பிராமணாள் சங்கதி பெரிய ஆபத்தாயல்லவா முடியும். இவ்வளவு உத்தியோகமும், பணமும், அதிகாரமும், பதவியும் பிராமணாளுக்குக் கிடைத்து விடுமா? எல்லாவற்றையும் சூத்திரன்கள் பிடுங்கிக் கொள்வார்கள். ஒரு சப்பட்டை மந்திரி உத்தியோகப் பனகாலால் எத்தனை சூத்திரன் களுக்கு உத்தியோகம் வந்து விட்டது. இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்பதன் இரகசியம் உனக்குத் தெரியாதா? எல்லா உத்தியோகமும் அதிகாரமும் வெள்ளைக்காரன் கையிலே இருக்க வேண்டும். எங்களுக்கு கொடுத்தது தப்பு. அது சூத்திரன்களுக்கே அநுகூலமாய் போய்விட்டது. இப்படி ஆகுமென்று தெரியாமல் கேட்டு விட்டோம். ஆதலால் திரும்பவும் நீயே எடுத்துக் கொண்டு ஒத்தை ஆட்சி ஆக்கிக் கொள் என்பதுதான் அதன் தத்துவம்.

மணி : அது சரி, பூரா சுதந்திரம் என்பது என்ன?

சேஷன்: அது ரொம்ப இரகசியம். விளையாட்டுக்காவது அப்படிச் சொன்னால் தான் பாமர ஜனங்கள் நம்முடன் சேருவார்கள். தவிர, கதர், தீண்டாமை, மதுவிலக்கு இதெல்லாம் பனகால் எடுத்துக் கொண்டு வேலை செய்யப்போவதாக கேள்விப்பட்டதால் அதற்கும் மேலாக மிகவும் தீவிர மான கொள்கை நம்மிடம் இருப்பதாக ஜனங்கள் நினைக்கும்படி காட்டிக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த தோது செய்தார்கள். தவிரவும் இப்படிச் சொன்னால்தான் வெள்ளைக்காரரும் நம்மையே நம்புவார்கள். ஏனென்றால் ஒரு சமயம் அம்மாதிரி கிளர்ச்சி ஏற்பட்டு விட்டால் என்ன செய்கிறது என்று பயந்து நம்மிடவாள் இடமே எல்லா பெரிய உத்தியோகத் தையும் நம்பிக் கொடுத்து வைப்பான். சூத்திரனிடம் கொடுத்தால் ஒரு சமயம் தங்களை எதிர்த்தாலும் எதிர்த்து விடுவார்கள் என்கிற பயம் இப்போதும் வெள்ளைக் காரருக்கு உண்டு.

உண்மையான முழுச் சுதந்திரம் கேட்பவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தே நீ தெரிந்து கொள்ளக் கூடாதா? விடிந்தெழுந்தால் வெள்ளைக் காரர்களிட கச்சேரிக்கு போய் அவர்களைக் கெஞ்சி µ 10, 20 ஆயிரம் வக்கீலிலும், ஜட்ஜிலும், முனிசீப்பிலும், கலெக்டர் முதலிய பல உத்தியோகத் திலும் சம்பாதிப்பவர்கள் வெள்ளைக்காரர்களை ஓட்டுவதாக சொல்ல முடியுமா?

மணி:   சரி, அப்படியானால் பனகால் போனது பிராமணாளுக்கு நல்லதாச்சுது. சில சூத்திரன்களும் பணகால் போகணும் போகணும் என்று கத்தினான்களே அதென்ன?

சேஷன்: அதெல்லாம் நம் ஸ்ரீநிவாசய்யங்கார் மடாதிபதிகளிடம் வாங்கின பணத்தைக்கொண்டு சில சூத்திரன்களுக்கு கூலி கொடுத்து கத்தச் சொன்னது தானே. நிஜமாலுமா அவன்கள் கத்தினான்கள்?

மணி: அது சரி, மறுபடியும் வந்திருக்கும் சூத்திர மந்திரிகள் பணகால் மாதிரி ஆகமாட்டார்களா?

சேஷன்: ஒருக்காலும் ஆகமாட்டார்கள்.

மணி: அதென்ன அவ்வளவு தைரியம்?

சேஷன்            : இந்த மந்திரிகள் மூன்று பேரும் நம் தலைவர்களால் சாணியில் பிடித்த பிள்ளையார்கள் போல்தானே. நாம் சொல்லுகிறபடி கேட்டுக் கொண்டிருக்கிற வரையில் அவர்கள் பிள்ளையார்கள் (மந்திரிகள்) தான். கொஞ்சம் தவறினால் உடனே சாணிப் பிள்ளையாரை எருவாமுட்டை (நம்பிக்கை இல்லாத தீர்மானம்) தட்டி விட மாட்டார்களா? அந்த பயம் அவர்களுக்கும் உண்டு. இவ்வளவு பாடுபட்ட நம்மடவாளுக்கு இது தெரியா மல் இருக்குமென்றா நினைத்தாய்? தவிரவும் சூத்திரன்களைக் கொண்டே சூத்திரன்கள் கண்ணைக் குத்துவது நல்லதே ஒழிய நாம் பிரவேசித்தால் பார்ப்பான் செய்து விட்டான் என்று கூப்பாடு போடுவான்கள். உதாரணமாக காஞ்சீபுரம் மகாநாட்டில் ஒருவன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஒரு சூத்திரன் பிரசிடெண்டாயிருந்ததினால்தான் நமது தலைவர்கள் வெகு சுலபத்தில் அத் தீர்மானத்தை மீட்டிங்குக் கூட கொண்டு வராமல் தள்ளச் செய்ய சவுகரியமாயிருந்தது. பாமர ஜனங்களும் நம்பி னார்கள். அப்படிக்கில்லாமல் ஒரு பிராமணன் அந்த ஸ்தானத்தில் இருந்தி ருந்தால் கட்டாயம் அத்தீர்மானம் நிறைவேறியேயிருக்கும். அல்லாமலும் அத்தீர்மானத்தை ஒரு பிராமணன் தள்ளியிருந்தால் பெரிய கூப்பாடு போட்டிருப்பான்கள். ஆதலால் இப்படி இருப்பதுதான் நல்லது.

மணி: சரி !சரி! எனக்கு இப்போதுதான் புரிந்தது. நானும் இனிமேல் இம்முறைகளைக் கைக்கொள்ளுகிறேன்.

(குடி அரசு - உரையாடல் - 19.12.1926)