periyar 433

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு இச்சில்லாவாசிகளில் பெரும்பான்மையான பேர்கள் மாத்திரமில்லாமல் வெளி ஜில்லா மக்களும் மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையுமே அடைந்தார்கள் என்பதாகவே அறிகிறோம். என்னவெனில் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் அவர்கள் 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் ஸ்ரீமான் ராமலிங்கஞ் செட்டியார் அவர்கள் 100 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் கேட்போருக்கு கர்ண கடூரமாயிருந்திருக்குமென்பதில் அதிசயமில்லை. ஆனால் அத்தேர்தலுக்காக ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் செய்த பணச் செலவும் முயற்சியும் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்கள் செலவு செய்ததில் 10-ல் ஒரு பாகம்கூட இருக்காது. அதாவது ஸ்ரீமான் அய்யங்கார் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகி இருந்தால் ஸ்ரீமான் செட்டியாருக்கு ரூபாய் ஐயாயிரத்துக்குள்ளாகத்தான் இருக்குமென்பார்கள்.

ஆனபோதிலும் பொது மக்களுக்கு செட்டியாரவர்கள் இடத்தில் ஒருவித மதிப்பு உண்டு. அதாவது சட்டசபை விஷயத்திலும் வரவு செலவு சிக்கன விஷயத்திலும் அநுபோகம் உள்ளவர் என்றும் அவர் மந்திரியாக வரவேண்டும் என்றும் நினைத்து விரும்புவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் முன்னால் ஸ்ரீமான் செட்டியார் தோல்வியடைந்தால் அது வருத்தப்படுத்தத்தான் செய்யும். ஆனால் இத்தோல்விக்கு அய்யங்கார் ஒரு சிறிதும் காரணரல்லர். பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏற்பட்ட கட்சியான ஜஸ்டிஸ்கட்சி பிரமுகர்களாலேயே செட்டியார் தோல்விக்கு இடமேற்பட்டு விட்டது. கோயமுத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தேர்தல் சம்பந்தமாக ஒரு கூட்டத்தார் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் மீது அதிருப்தி கொள்ள இடமேற்பட்டு விட்டது. அதோடு ஸ்ரீமான் ஐயங்கார் அதன் பயனை அடைய தந்திரங்கள் செய்து அவ்வதிருப்தியைத் தனக்கு அனுகூலமாகத் திருப்பிக் கொண்டார். அந்தக் காரணமே ஸ்ரீமான்கள் செட்டியார் தோல்வியடையவும் ஐயங்கார் வெற்றி பெறவும் பெரிதும் அனுகூலமாயிருந்து விட்டது.

டிஸ்டிரிக் போர்டு எலெக்ஷன் மனஸ்தாபம் குறைந்தது 3000 ஓட்டுகளுக்குக் குறையாமல் செட்டியாருக்கு விரோதமாய் பதிவு செய்யவும், குறைந்தது 1500 ஓட்டுகளுக்கு குறையாமல் ஐயங்காருக்கு அனுகூலமாய் பதிவு செய்யவும் இடமேற்பட்டுவிட்டது. டிஸ்டிரிக் போர்டு மனஸ்தாபம் இல்லாமலிருந்தால் செட்டியாருக்கு 17,000 ஓட்டுகள் கிடைத்திருக்கும். ஸ்ரீமான் அய்யங் காருக்கும் 10,000 ஓட்டுகளுக்கு உள்ளாகவேதான் கிடைத்திருக்கும். இந்தக் காரணத்தாலும் திருச்சி நகரத் தொகுதி தேர்தல் மாதிரியினாலும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொண்டு இருந்த சில கனவான்களிடத்தில் அவர்களது “கட்சி பக்திகள்” நன்றாய் விளங்க இடமேற்பட்டு விட்டது. சுயநலங்கள் தோன்றும் போது கட்சி வாதங்கள் பறந்துபோய் விடுகிறது என்பதற்கு இவைகள் ஓர் உதாரணம்.

நிற்க, ஸ்ரீமான்கள் இரத்தின சபாபதி முதலியார் அவர்களும் பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் அவர்களும் வெற்றி பெற்றதில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை. பதிவான ஓட்டுகளில் 100-க்கு 75 ஓட்டுகள் குடியானவர்களுடையது. அவர்கள் ஸ்ரீமான்கள் முதலியார் அவர்களையும் பட்டக்காரர் அவர்களையும் மனப்பூர்த்தியாய் ஆதரிக்கக் கடமைப்பட்டவர்களே. ஆனால் ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கும் பட்டக்காரர் அவர்களுக்கும் வெற்றி ஏற்பட்ட சந்தோஷத்தின் தன்மைக்கு மேலாகவே ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கு தோல்வியானதைக் குறித்து ஏற்பட்ட வருத்தம் அதிகமென்றே சொல்லுவோம். தோற்றவர்கள் பேரில் குற்றம் சொல்வது அதர்மமானதாலும் உண்மையாகவே நாம் ஒன்றும் சொல்வதற்குமில்லை. ஆனாலும் பொது ஜனங்களை வசியப்படுத்தத்தக்க படிப்பும் நமது செட்டியார் அவர்களுக்கு இனியும் கொஞ்சம் அதிகமாக வேண்டுமென்று மாத்திரம் சொல்லுவோம். மற்றபடி மற்றவர்கள் வெற்றி பெறுவதற்கும் செட்டியார் அவர்கள் தோல்வியுறுவதற்கும் மதிக்கத்தகுந்த வேறு வித்தியாசமான காரணங்கள் ஒன்றும் கொஞ்சமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம்.

எந்தவிதத்திலும் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் தோல்வியைப் பற்றி பொது ஜனங்கள் வருத்தப்படுகிறார்கள் என்பதையும் செட்டியாருக்கு விரோதமாக வேலை செய்தவர்களில் பெரும்பாலோரும் கூட தாங்கள் நடந்துகொண்டதை குற்றமாக எண்ணி தங்களுக்குள்ளாகவே வருத்தப்படுகிறார்கள் என்பதையும் நாம் நன்றாக அறிகிறோம். இதனால் செட்டியாருக்கு பெருத்த ஏமாற்றம் என்பதையும் தெரிவிக்கிறோம். அதாவது 100 ஓட்டில் அதுவும் தனக்கும் ஸ்ரீமான் அய்யங்காருக்கும் வித்தியாசமாக ஏற்பட்டு தோல்வியடைய நேர்ந்ததும் வெற்றி பெற்றிருந்தால் செட்டியார் அவர்களை முதல் மந்திரியாகவும் மற்ற 2 மந்திரிகளைக்கூட நியமிக்கும் அதிகாரமுடைய வராயிருக்கக் கூடிய உறுதியான சந்தர்ப்பத்தில் தோல்வி ஏற்பட நேர்ந்ததும் அவருடைய எதிரிக்கும் பரிதாபமாக இருக்குமானால் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் ஏமாற்றமடைந்ததாக நினைப்பதும் வருத்தப்படுவதும் அதிசயமாகுமா? ஆதலால் இதிலிருந்தாவது தோல்வியடைந்தவர்களும் தோல்வி அடையச் செய்தவர்களும் ஒரு படிப்பினை பெறுவர்கள் என்றே நம்புகிறோம்.  

(குடி அரசு - கட்டுரை - 05.12.1926)