periyar with cadres and cow

இந்து மத பரிபாலன மசோதா என்னும் இந்து தேவஸ்தான மசோதா இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் சென்னை சட்டசபையில், நமது பார்ப்பனரின் கடுமையான எதிர்ப்பை ஜெயித்து நிறைவேறி, அரசாங்கத்தார் சம்மதம் பெற்று சுமார் 2 வருஷ காலம் அமுலிலும் இருந்து வந்த பிறகும் நமது பார்ப்பனர்கள் அதில் சில சட்ட சம்மந்தமான பிரச்சினைகளைக் கிளப்பி ஹைக்கோர்ட்டில் தங்களுக்குள்ள சட்ட ஞானத்தையும் செல்வாக் கையும் கொண்டு விவகாரம் தொடுத்து அச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்க பிரயத்தனப்பட்டதால் மறுபடியும் ஒருமுறை அச்சட்டம் சட்டசபைக்கு வர நேர்ந்தது. அந்தப்படி சட்டசபைக்கு வந்த சமயத்தில் நமது பார்ப்பனர்கள் ராஜீய இயக்கங்களையும் ஸ்தாபனங்களையும் தாங்கள் கைப்பற்றிக் கொண்ட தனால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு சில பார்ப்பனரல்லாத சட்ட சபை அங்கத்தவர்களை (அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால் இந்த தேவஸ்தான சட்டம் ஆரம்பத்தில் அதாவது 3, 4 வருஷங்களுக்கு முன்னால் தயாரிக்கும் போது கூட உதவியாயிருந்த வர்களும் இச்சட்டத்தை ஏற்படுத்தத் தீவிர முயற்சி யெடுத்துக் கொண்டவர் களுமாவார்கள்) தங்கள் சுபாவ வஞ்சகத்தாலும், பிரித்தாளும் தத்துவத் தாலும், அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி சுவாதீனம் செய்து கொண்டு அரசியல் காரணம் என்னும் பெயரையும், பொதுஜன நன்மை என்னும் பெயரையும், மத சம்பந்தமான நன்மைக்காக என்னும் பெயரையும் வைத்துக்கொண்டும் எவ்வளவு வேஷங்கள் போட்டாலும் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்திருந்தும் எப்படியாவது அதை தாமதப்படுத்தி சென்ற சட்டசபை கலைவதற்குள் நிறைவேறாதபடி செய்து விட்டால் பிறகு கலைந்து புதிதாய் கூடும் சபையில் வேறு ஏதாவது தந்திரங்கள் செய்து கொள்ளலாம் என்று சுமார் 500 திருத்தப் பிரேரேபணைகள் என்னும் பேரால் எவ்வளவோ தந்திரங்கள் செய்து பார்த்தும், ஸ்ரீமான் பனகால் ராஜா அவர்களின் உறுதியினாலும் ஸ்ரீமான்கள் ஏ . ராமசாமி முதலியார், பி.டி. ராஜன், டாக்டர் நடேச முதலியார், டி.எ. ராம லிங்கம் செட்டி யார் முதலியவர் களின் பலமான உதவியினாலும் மறுபடியும் முன்போலவே நிறைவேற்றி வைஸிராய் பிரபுவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந் நிலையில் கூட அதை எப்படியாவது ராஜப் பிரதிநிதியின் அனுமதி கிடைக்க வொட்டாமல் செய்து அச்சட்டத்தை அழிக்கவேண்டும் என்கிற எண்ணத்தின் மேல் பொது ஜனங்கள் பேரால் பல தந்திரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது, சில மடாதிபதிகளும் மகந்துகளும் பணம் செலவு செய்து பொதுமக்கள் பேரால் வைஸிராய் பிரபுவுக்கு ஒரு விண்ணப்பம் தயார் செய்து பாமர மக்களின் கையெழுத்து வாங்க பிரயத்தனங்கள் நடை பெற்று வருகிறது.

அவ்விண்ணப்பங்களை “இந்து” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் பத்திரிகைகளில் வைத்து அனுப்பி சந்தாதாரர்களாக ஆங்காங்குள்ள பார்ப்பன வக்கீல்களையும் மிராசுதாரர்களையும் கையெழுத்து வாங்கி வைஸிராய் பிரபுக்கு அனுப்பும்படியாகவும் செய்திருக்கின்றன. இது போலவே மலையாளக் குடிவார மசோதா என்று ஒரு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றி இருப்பதையும் அரசாங்கத்தாரின் சம்மதம் பெற்று அமுலுக்கு வரச் செய்யாதபடி ரகஸ்யமாக நமது பார்ப்பனர்களால் பலமான பிரசாரம் செய்யப்பட்டும் வருகின்றது. இவ் விரண்டு சட்டங்களுக்கும் விரோதமாய்ப் பிரசாரம் செய்ய முறையே மகந்துகளாலும் மலையாள ஜன்மிகளாலும் ஏராளமாக அதாவது லக்ஷக்கணக்கான பணமும் உதவப்பட்டு வருகின்றது. அப் பணம்தான் சட்ட சபை முதலிய ஸ்தாபனங்களில் பார்ப்பனக் கட்சிக்கு ஆள்சேர்க்க இப்போ தும் சென்னை மாகாணம் முழுதும் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்டு வருவதோடு பார்ப்பனரல்லாதார் தேர்தல் கூட்டங் களில் கல்லெறிதல், கலகம் செய்தல், காலித்தனம் செய்தல் முதலிய காரியங்க ளுக்கு ஆதாரமாயுமிருந்து வருகிறது. ஆதலால், இம் மாதிரியான சூழ்ச்சி களையும், போலி விண்ணப்பங்களையும், விஷமப் பிரசாரங்களையும், காலித்தனங்களையும் எதிர்த்து நிற்க வேண்டிய தோடு பார்ப்பனரின் விஷமப் பிரசாரங்களிலும் போலி விளம்பரங்களிலும் பார்ப்பனரல்லாத பாமர மக்கள் மயங்கி ஏமாந்து போகாமல் இருக்கும் படிக்கும் முயற்சிகள் எடுத்துக்கொண்டு தக்க பிரசாரம் செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுவதோடு பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் கொண்டு வரப்படும் எவ்வித விண்ணப்பங்களிலும் கண்டிப்பாய் கையெழுத்திடாம லும் இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 24.10.1926)