தமிழ் செம்மொழி மாநாடு கோவை கொடீசியா பகுதியில் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கோவையை அழகுபடுத்தும் பணியில் கோவை மாநகராட்சியும், அரசுத்துறைகளும் ஈடுபட்டுள்ளன.

சுமார் 60 கோடி ரூபாய் செலவில் சாலைகள்மேம்படுத்தப்படுவதாக அதிகாரப்  பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளை அகலப்படுத்தல், சாலையின் நடுவே பூச்செடிகளை வளர்த்தல், சாலை ஓர சுவர்களில் வண்ணப்படங்களை வரைதல், போக்குவரத்து சிக்னல்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் இதன் கீழ் நடைபெறுகின்றன.

இதற்கிடையே செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா வளாகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த பல மரங்கள் தேவையின்றி வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங் களின் விளம்பர பெயர்ப் பலகைகளை மறைத்து நின்ற மரங்கள், செம்மொழி மாநாட்டின் பெயரால் வெட்டப்பட்டுள்ளன. இதனால் சாலையோர பிரியாணி கடை முதல் பன்னாட்டு கைபேசி நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளன.

சுமார் ஐந்து ஆண்டுகள் முதல் அறுபதாண்டு வரை வயது உடைய, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிப்போன மரங்கள், ஏராளமான பறவைகளுக்கும் சிறு விலங்குகளுக்கும் ஜீவாதாரமாக விளங்கிய மரங்கள்,  தமிழின் பெயரால் வெட்டிப்பட்டுள்ளன. அரசு, வேம்பு, வாகை, புங்கம், பூவரசு, பெத்தோடியா (பயர் ஆஃப் பாரெஸ்ட்), பூங்கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் ஆக்ஸிஜனை வழங்கியதோடு, நகரத்தின் தொழிற் பெருக்கத்தால் ஏற்படும் வெப்பக்காற்றை கிரகித்துக் மக்களுக்கு குளிர்ச்சியையும் வழங்கி வந்தன. கோவை மக்களுக்கு சில ஆண்டு காலமாகவே கோடை மிரட்டி வருகிறது. செம்மொழி மாநாட்டின் விளைவால் அது மேலும் சூடாகப் போகிறது. மரங்கள் வெட்டியதன் பலன் விரைவில் தெரிய வரும்.

வெட்டப்படும் மரங்களால் பாதிக்கப் படுவது மனிதர்கள் மட்டுமல்ல! இந்த மரங்களை நம்பியிருந்த ஏராளமான பறவைகளும், சிறு விலங்குகளும்தான். இதனால் ஏற்படும் உயிர்ச்சூழல் பாதிப்பின் பலன்களை கோவை விரைவில் அனுபவிக்கும் என்கிறார்கள் தாவரவியல் நிபுணர்கள். சென்னை போன்ற நகரங்களில் வழக்கொழிந்து போன சிட்டுக்குருவிகளை கோவையில் பார்க்க முடிந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நகரின் குப்பைகளையும் இறந்துபோன உயிரினங் களையும் உண்டு துப்பரவுப் பணி செய்யும் காக்கைகளுக்கும் இந்த மரங்களே அடைக் கலம்.

இயற்கைச் சூழலை அழிப்பதாக  இந்த செம்மொழி மாநாடு அமைந்து விடுமோ என்பது தமிழ் மீதும், இயற்கை மீதும் பற்று கொண்டவர்களின் பெருங்கவலையாக இருக்கிறது. எதிர்ப்புகளை மீறி மரங்கள் சாய்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இயற்கையை அழிப்பதை கோவை மாநகராட்சியும் அரசுத்துறைகளும் ஓர் இயக்கமாகவே செய்து வருகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்“ என்று எழுதிய திருவள்ளுவன் வாழ்ந்த மண்ணில் காட்டின் அடிப்படை அம்சங்களான மரங்களை அழித்துத்தான் தமிழை வளர்க்க வேண்டுமா என்று அனைவரும் சிந்திக்க வேண்டும்.

-(பேருந்து நடத்துநராக பணியாற்றும் கட்டுரையாளர், அப்பணி தவிர்த்த நேரங்களில் மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய குடியரசுத் தலைவரால் “சுற்றுச்சூழல் போராளி’’ விருது அளிக்கப்பட்டது)

Pin It