சென்ற 22.7.25 ல் வெளியான சுதேசமித்திரன் மதுவிலக்கு விஷயமாகச் “சென்னை பிஷப்பின் யோசனை” என்று மகுடமிட்டு எழுதிய குறிப்பைக் காண எமக்கு பெரும் நகைப்பு உண்டாயிற்று. கட்டாயப்படுத்திக் கட்குடியைத் தடுக்க முடியாதெனப் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோதரர்களை முக்திக்குச் செலுத்தும் உபதேசியாகிய ³ பிஷப் கூறியது சுதேசமித்திரனுக்கு அடக்கமுடியாத ஆத்திரத்தையும் கோபத்தையும் மூட்டி விட்டது. சுதேசமித்திரனின் இக்கோபக்குறிப்பு எமக்கு வெறுஞ் சிரிப்பையே விளைவித்தது.

“கண்ணாடி வீட்டில் வசிப்பவன் பிறன் வீட்டின் மேல் கல் எறிதல் கூடாது”என்ற சிறிய அறிவும் சுதேசமித்திரனுக்கு இல்லாமற் போனது எமக்குப் பெருத்த ஆச்சரியம். அதே சுதேசமித்திரனின் இதழில் முதல் பக்கத்தில் கண்ணைப் பறிக்கும் பெரிய எழுத்துகளில் ‘புட்டி’ படத்துடன் “எக்ஸ்ஷாஷ்” பிராண்டியைப் பற்றிப் புகழ் மிகுந்த விளம்பரஞ் செய்து பொருள் சம்பாதித்துவரும் சுதேசமித்திரன் மெய்மறந்து பாவம் எழுதி விட்டான் என்றே நினைக்கிறோம். இத்தகைய விளம்பரங்களின் வாயிலாகத் தான் நமது சுதேசமித்திரன் மதுவிலக்குப் பிரசாரம் செய்து வருகின்றான் போலும்! சுதேசமித்திரன் அகராதியில் ‘மதுவிலக்கு’ என்பதற்கு ‘மதுவருந்த விளம்பரஞ் செய்தல்’ என்பதுதான் அர்த்தம் போலும்.

பணத்திற்குமுன் அறிவு, தேசாபிமானம், சுயஉணர்வு எல்லாம் பறந்து விடுவது சகஜமே. பணமென்றால் பிணமும் வாய் திறக்குமல்லவா? சொல்வதொன்று செய்வதொன்று என்பதுதான் எமது கொள்கை என்று சுதேசமித்திரன் பெரிய விளம்பரஞ் செய்துவிடுவானாகில் எமக்குக் கவலையே இல்லை. “கட்டாயத்தினால் குடியை வெருட்டினாலொழிய கல்வி அறிவைக் கண்டு அது ஓடுமென்று நினைக்க உலகின் அனுபோகம் இடங்கொடுக்கவில்லை” என்று வெகு சமத்காரமாகச் சுதேசமித்திரன் செய்த முடிவை நாமும் ஆமோதிக்கிறோம். சுதேசமித்திரனின் சொந்த அனுபோகமே இடங்கொடுக்காமல் இருக்கிறதை நேரில் அறிந்திருந்தும் உலகின் மீது குற்றத்தைச் சுமத்துவானேன் என்று நாம் கேட்கிறோம்? சுதேசமித்திரனின் கல்வியறிவைக் கண்டு ஓடாத கட்குடி, பாமர ஜனங்களின் கல்வியறிவைக் கண்டு ஓடுமென சென்னை பிஷப் கூறியது மிகுதும் அறியாத்தனம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

(குடி அரசு - தலையங்கம் - 26.07.1925)