காரைக்குடியினின்றும் வாரந்தோறும் வெளியாகும் “தனவைசிய ஊழியன்’’ தனது சிறிய தொண்டை விடுத்து உலகிற்கெல்லாம் தொண்டு செய்தல் வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு இவ்வாரம் “ஊழியன்” என்ற பெரிய பெயர் தாங்கி வெளிப்போந்துள்ளான். “தனவைசிய ஊழியன்” முதலில் தன் சமூகத்திற்கு அதிக ஊழியம் புரிந்து வந்தானாயினும் எம்பெருமான் அறவாழி அந்தணன் காந்தி அடிகளின் ஒற்றுழையா இயக்கம் அத் தனவைசிய நாட்டின்கண் பரவி, அச்சமூகத்தினர்க்குச் சுதந்தர உணர்ச்சி யைக் கொடுத்தவன் தனவைசிய ஊழியனே. அதுவும் ஈராண்டுகளாகத் தன் சமூகத்தைவிடத் தேசமே பெரிதெனக்கொண்டு கதர், தீண்டாமை ஒழித்தல் முதலிய தொண்டுகளில் தனது கவனத்தை இடைவிடாது செலுத்தி வருகின்றான். ஊழியனின் ஆசிரியரைப்பற்றி யாம் அதிகம் கூறவேண்டுவதில்லை. நமது அன்பர் திருவாளர் ராய.சொக்கலிங்கன் அவர்கள் தமிழ் ஆராய்ச்சி மிக்குடையார். காந்தி அடிகளிடத்தில் அளவற்ற பற்றுடையார். “காந்தி பிள்ளைத்தமிழ்” என்ற ஓர் நூலும் ஆக்கியுள்ளார். சீரிய ஒழுக்க முடையார். இளம்வயது உடையவர். சுமார் நான்கு ஆண்டுகளாக இப் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்து அவர் செய்திருக்கும் தொண்டினை யாம் விரிக்கிற் பெருகும்.

தனவைசிய நாட்டில் “தேசபக்தி” உண்டாக்கியதற்கு ஊன்றுகோலாக நமதன்பரே விளங்கினார். எதற்கும் அஞ்சாது உண்மையாக நின்று தமது அபிப்பிராயத்தை வெளியிடுவார். இதற்கு இவர் குருகுல விஷயமாகத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டதே போதிய சான்றாகும். இவர் விரிந்த நோக்கத்துடன் தமிழ்நாட்டிற்குத் தனது “ஊழியன்” மூலமாகச் செய்யப்போகும் அரிய தொண்டினைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியுறுகிறோம். “ஊழியன்” டிம்மி அளவுடன் பதினாறு பக்கங்களோடு, பல பெரியார்களின் சிறந்த கட்டுரைகளோடு வெளியாகி உள்ளான். சந்தாவைச் சிறிதும் உயர்த்தவில்லை. முன்இருந்ததுபோலவே வருடம் ஐந்து ரூபாய். தமிழ் நாட்டினர் எல்லோரும் நமது “ஊழியனை” ஆதரித்தல் இன்றியமையாக் கடனாகும். ஊழியன் நீடுழி வாழ்க !

(குடி அரசு - மதிப்புரை - 19.07.1925)