“இராவணன் நாடு” - 16 தலைப்புகளில் இராவணன், இராமாயணத்தின் பிற மாந்தர்களைப் பற்றிய செய்திகள், இராவணனின் நாடு, அந்நாட் டின் இயற்கைவளம், மக்கள், மொழி, பெண்கள், சமுதாயம் என்று பல்வேறு செய்திகளை நேரில் சென்று தகவல் அறிந்து, பல்வேறு நூல்களின் சான்றாதாரங்களுடன் விளக்கியிருக்கிறார், நூலாசிரியர் அகத்தியதாசன். இவரின் கடுமையான பணியை நூல் நமக்குக் காட்டுகிறது.

முக்கியமாக இந்நூலில் இரண்டு செய்திகளை மையப்படுத்துகிறார் நூல் ஆசிரியர்.

முதல் செய்தி இராவணன் திராவிடன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவன். இராமனுடன் இவன் நடத்திய போர் முதல் ஆரிய - திராவிடப் போராகும். இரண்டாவது செய்தி இராவணன் ஆண்ட நாடு மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் “லங்கா” இன்றைய இந்திரானா என்ற பகுதி.

நூலாசிரியின் முதல் செய்தி ஏற்புடையதாக இல்லை. ஆரியர்கள் இந்நாட்டில் நுழைந்தபின்னர், இங்குள்ள சில திராவிட இனக்குழுக்களுக்கும், அவர்களுக்கும் இடையே சில சிறு சண்டை சச்சரவுகள்தான் நிகழ்ந்துள்ளன. பெரிய அளவில் போர் நடைபெற்றதாகவோ, அப்போரில் திராவிடர்கள் வீழ்ச்சி அடைந்ததாகவோ ரிக்வேதத் தில் கூட சான்று இல்லை. ஆரியர்களுக்கு எதிராக புத்தரே முதல் போரைத் தொடங்கினார். ஆரியர்களின் சூழ்ச்சியும் நயவஞ்சகமும்தான் திராவிடர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை புரட்சியாளர் அம்பேத்கர், தெளிவுபடக் கூறியிருப் பதை இங்கு நினைவு கொள்வது பயன் பெறும்.

இராவணன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திராவிடனா? இதற்குப் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய “சூத்திரர் யார்?” என்ற நூலை அடிப் படையாக வைத்தே விடை காண்போம்.

வேதங்கள் உருவான காலத்தில், ஆரியர்கள், ரிக்வேத ஆரியர்கள் - அதர்வனவேத ஆரியர்கள் என்று இரு பிரிவினராக இருந்துள்ளனர். ரிக்வேத ஆரியர்கள், அதர்வனவேத ஆரியர்களை “பிராம ணர்”கள் என்றே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியரிடையே உபநயனம் என்னும் பூணூல் அணியப்பெற்றவரே பிராமணர் ஆவார். அதர்வன வேத ஆரியருக்கு இப்பூணூல் அணியும் உரிமையை ரிக்வேத ஆரியர் மறுத்துவிட்டதால், அவர்கள் “சூத் திரர்” என்று அழைக்கப்பெற்றனர்.

மகாபாரதம் சாந்தி பருவம் 60 வது இயல் படிகளை ஆய்வு செய்த அம்பேத்கர்

1.ஷித்ர பைஜவனோ நாம

2.ஷித்ர பைலவனோ நாம

3.ஷித்ர யைலனனோ நாம

4.ஷித்ர யைஜனனோ நாம

5.ஷித்ர பியஜனோ நாம

6.ஷித்ர பவுன்ஜால்கா நாம

என்று அம்மகாபாரதம் சூத்திரர்களைப் புகழ்ந்து எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். இவைகளில் முதலாவதில் சொல்லப்பட்டுள்ள சூத்திரனின் பெயர் பைஜவன். இவனின் தந்தை சுதாசன். சுதாசன் எழுதிய “ஸ்லோகங்கள்” வேதங்களாக ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ளது. அப்படியானால் சுதாசனும் அவன் மகன் பைஜவனும் ஆரியர்கள் தானே? இருந்தாலும் உபநயனம் மறுக்கப்பட்டு இந்த ஆரியர் பிரிவு சூத்திரர் என்று ஆக்கப்பட்டுவிட்டார்கள். அதாவது (ரிக்வேத ) ஆரியரே, (அதர்வன வேத ) ஆரியருக்கு எதிரியாகிவிட்டார்கள்.

ஆரிய குலப்பிரிவில் ஒன்றான பரதகுலத்தைச் சேர்ந்த விஸ்வாமித்திரனின் பிள்ளைகளை எல்லாம் கொன்று குவித்தவன் இந்த சூத்திரன் பைஜவனன் - அதாவது இன்னொரு ஆரியப்பிரிவைச் சேர்ந்த வன்.

ரிக்வேதம் (5: 60 - 3 ), “ஓ! இந்திரா! எங்களுக்குத் தீங்கிழைக்கும் தாசர்களையும், “ஆரி யர்”களையும் அடக்கி ஒடுக்கு” என்று கூறுகிறது. இதே ஆரிய எதிர்ப்பு ரிக்வேதத்தில் (5:33 - 3 ; 6:81 - 1 ; 10: 38 - 3 ) பல்வேறு இடங்களில் பதிவாகியிருக்கிறது.

ஆரிய ரிக்வேதமே ஆரியரை ஒழிக்கச் சொல்வது வியப்பாக இல்லையா? ஆனால் அது உண்மை.

வேதங்கள் நான்கு என்பது தவறு, உண்மையில் அவை இரண்டு என்கிறார் அம்பேத்கர். ரிக் - அதர்வண ஆகியவை மட்டுமே பார்ப்பன வேதம். யஜுர், சாமவேதகங்கள் என்பவை ரிக்வேதத்தின் மறுபதிப்பு அல்லது ரிக்கின் பொழிப்புரை. இதில் ரிக்வேத ஆரியர்கள், அதர்வன வேதத்தையும் (ஆரியர்களையும்) ; அதர்வணவேத ஆரியர்கள் ரிக்வேதத்தையும் (ஆரியர்களையும்) ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் ஏற்பட்ட ஆரியப் பிரிவு சண்டையினால் ஒருபிரிவு ஆரியர்கள் சூத்திரர் ஆக்கப்பட் டார்கள்.

அதிலும் மிகக் கவனமாக அவர்கள் தீண்டா மையினால் சூத்திரர் ஆக்கப்படாமல் சத்திரியரான சூத்திரராக வைக்கப்பட்டார்கள் - வேத காலத்தில். (ரிக் - அதர்வண ஆரியர்கள் ஒரு கட்டத்தில் சமரசம் செய்து ஒன்றானபின்னர், சூத்திரப்பட்டம் ஆரியரிடம் இருந்து நீக்கி இழிவாக திராவிடர்கள் மீது திணிக்கப்பட்டுவிட்டது.)

இப்படிப்பட்ட ஆரியப் பிரிவின் ஒன்றான (சூத்திரகுல) சத்திரியர் வழிவந்த மன்னர்களுள் ஒருவன்தான் வால்மீகி ராமாயனம் சொல்லும் வடநாட்டு இராவணன்.

இந்நூலாசிரியர் தரும் ஒரு செய்தி “மத்தியப் பிரதேசம் விதிசா மாவட்டம், ராவண் கிராமம் 1,100 மக்கள் தொகைகொண்டது. இங்குள்ள மக்கள் தங்கள் குலத்தின் மூத்த நபராகக் கருதி இராவணனை வணங்கி வருகின்றனர். இவர்கள் கன்யாகுமரி பிராமணர்கள்” (பக்கம் 65 ) என்கிறார். இராவணன் பார்ப்பன வழிச் சூத்திர மன்னன் என்பதற்கு இது பலம் சேர்க்கிறது.

தவிர இராவணன் வாழ்ந்த நாடு “லங்கா” என்கிறது இராமாயணம். அந்தநாட்டை நூலாசிரியர் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார். இந்தக் கருத்து முழுமையாக ஏற்புடையதே!

இந்திரானா என்ற 193 அடி உயரமுடைய மலையை வால்மீகி ராமாயணம் ஆரண்ய காண்டம் இயல் 47, பாடல் 29 ன் மூலம் அடையாளம் காட்டும் நூலாசிரியர் கோதாவரி லங்கா,சோனா லங்கா, ரூப்யா லங்கா போன்றவைகளையும், தால் - உலார் ஏரி போன்றவைகளின் திட்டுகள் கூட லங்கா என்று அழைக்கப்படுவதாக விளக்கம் தருகிறார். தொடர்ந்து, நர்மதா ஆற்றின் துணை ஆறான கெரன் ஆறுதான் இந்திரானா என்ற நாட்டைச் சுற்றி நீர்ப்பரப்பை உருவாக்கியுள்ளது என்றும் கூறுகிறார்.

ஜெபல்பூர் கெசட்டியர் கிரன், பனகர் ஆறுகளால் இந்திரானா மலையாகிய “தீபம்” 17 மைல்கள் வரையும் பழங்காலத்தில் நீர் சூழ்ந்திருந்தது என்ற தகவலைத் தருகிறது.

இவைகளை எல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்த நூலாசிரியர் அகத்தியதாசன் மத்தியப் பிரதேசம், சபல்பூர் மாவட்டத்தில் பனகர் மஞ்ச கோலி சாலையின் இந்திரானா மலைக்குன்று, மலைத் தீவுதான் வால்மீகி இராவணன் வாழ்ந்த ஆண்ட லங்கா நாடு என்பதை உரிய சான்றுகளு டன் நிறுவியுள்ளார்.

வால்மீகி கால இராவணனின் “லங்கா” நாடு இன்று மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்திரானா பகுதி என்பது மிகவும் சரியே!

எனவே இராவணன் மலைவாழ் பழங்குடித் திராவிடன் என்பதும், இவன் இராமனுடன் நடத்திய போரே முதல் திராவிட ஆரியப் போர் என்ற ஆசிரியரின் கூற்று வலுவுடையது அல்ல!

இராவணன் வட நாட்டுப் பார்ப்பனச் சத்திரியன் என்பதும், ஆரியருடன் நடந்த முதல் திராவிடப் போர் புத்தரால் ஏற்பட்ட பவுத்தமே என்பதும்தான் உண்மை.

இராவணன் நாடு மத்தியப்பிரதேச இந்திரானா என்ற லங்காதான் என்ற ஆசிரியரின் கருத்து வரவேற்புக்குரியது.

இவை தவிர இராவணன் நாட்டு (இந்தி ரானா) இயற்கை வளம், நாட்டு மக்கள், அவர்களின் மொழி, இலக்கியம், சமூகம், மதம், பெண்கள் என பல்வேறு செய்திகளையும் இந்நூல் ஆய்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது!

படிக்க வேண்டிய நூல் ; படித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நூல் - இராவணன் நாடு!

Pin It