துணை போகும் காவல் துறை; வேடிக்கை பார்க்கும் அரசு:
.
கீழ்க்கடலூர் ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. தலித் பெண்களுக்கான இந்த ஊராட்சிக்கு, ஈச்சேரியைச் சேர்ந்த ராணி தலைவர். இதற்கு முன்பு பத்து ஆண்டுகளாகத் தலைவர்களாக இருந்து சாதி இந்துக்கள் செய்ய முடியாத பணிகளை, தலித் பெண் தலைவர் ராணி செய்து வருகிறார். இதைப் பொறுக்காத ஆதிக்க சாதியினர், கடந்த 1.9.07 அன்று ராணியை அடித்து, ஜாக்கெட்டை கிழித்து, புடவையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியுள்ளனர். சம்பவத்தன்றே ராணி புகார் தந்தும், ஒலக்கூர் காவல் துறையினர் மூன்று நாட்களாக தலித் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கைக்கூட பதிவு செய்யாமல், மேலதிகாரிகளுக்கு தகவலும்கூட சொல்லாமல் இருந்துள்ளனர்.

Rani
ராணி வசிக்கின்ற ஈச்சேரி கிராமத்தில் மொத்தம் 20 தலித் குடும்பங்களும், 150க்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்களும் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஊராட்சி மன்ற உறுப்பினர். இவருடைய மகன் கஜேந்திரனை, 2003 ஆம் ஆண்டு ஊர்ப் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்தார் என்பதற்காக சாதி இந்துக்கள் அடித்துள்ளனர். இதற்காக அப்போது புகார் கொடுக்கப்பட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் தான் உங்களுக்கு ஓட்டுப் போடுவோம் என்று தேர்தலின்போது சாதி இந்துக்கள் மிரட்டியுள்ளனர். தோற்றாலும் வழக்கைத் திரும்பப் பெற மாட்டேன் என்று கூறி, தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில்தான், கடந்த பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமலிருந்த தலித் குடியிருப்பிற்கும், சுடுகாட்டிற்கும் செல்கின்ற பாதையை அடைத்துக்கொண்டு, வழியை மறைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்த முட்களை 1.9.07 அன்று காலை முதல் ஜே.சி.பி. எந்திரம் வைத்து பிடுங்கியுள்ளனர். உறுப்பினர் செல்வம் உடனிருந்து உதவியுள்ளார். அன்று மாலை தெருவில், ஒரு மின் கம்பத்தில் ஒட்டிக் கொண்டிருந்த முட்களை, மின் கம்பத்தில் ஏறுவதற்கு வசதியாகப் பிடுங்கியுள்ளனர். அப்போது, அந்த மின் கம்பத்திற்கு அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கின்ற ராஜீ என்பவர், தன் வீட்டிற்கு வருகின்ற கேபிளை தடுக்கின்ற முட்களை வெட்டுமாறு செல்வத்திடம் கூறியுள்ளார்.

அதற்கு செல்வம், ‘அது பட்டா இடத்தில் உள்ளது. அதை நாங்கள் எப்படி வெட்டுவது’ என்று கூறியுள்ளார். அதற்கு ராஜீ, ‘அது என் பங்காளி இடம்தான். நான் சொல்லிக் கொள்கிறேன். ஒன்றும் சொல்லமாட்டார்’ என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதனால் அந்த ஒரு முள்ளை மட்டும் வெட்டியுள்ளனர். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த வன்னியரான மோகன் என்பவர் வந்து, ‘என்னுடைய இடத்தை நீங்க எப்படிடா சரி பண்ணலாம். பற நாய்களுக்கு தலைவரானதும் ரொம்பதான் திமிர் ஏறிப்போச்சு’ என்று பேசியதுடன், தலித் ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வத்தை அடித்துள்ளார்.

உடனடியாக இதை தலைவரான ராணியிடம் கூறியுள்ளார் செல்வம். ராணியும் ஊர்ப் பெரியவர்களிடம் முறையிடுவதற்காக சென்றுள்ளார். ஆனால், மோகன் வழியிலேயே நின்றுகொண்டு, ராணியை பெண் என்றும் பாராமல் மிகவும் இழிவுபடுத்தியும், அசிங்கமாகவும் பேசி அவமானப்படுத்தியுள்ளார். வீட்டிற்குத் திரும்பிய ராணியை, மோகன் மற்றும் அவருடைய உறவினர்கள் வழிமறித்து அடித்து, புடவையை உருவி, ஜாக்கெட்டையும் கிழித்துள்ளனர்.

அவமானம் தாங்காத ராணி, உடனடியாக ஒலக்கூர் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்ற காவல் துறையினர் மனு ஏற்பு சான்றுகூட வழங்கவில்லை. மேலும் தலைவர் ராணியும், உறுப்பினர் செல்வமும் உள்நோயாளியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற சேர்ந்தனர். மறுநாள் 2 ஆம் தேதி மாலை ராணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சையிலிருந்த செல்வம் 3 ஆம் தேதி காலை சாப்பிடுவதற்காக வெளியில் வந்தபோது, ஒலக்கூர் காவல் துறையினர் பிடித்துச் சென்று கைது செய்துள்ளனர். மாலை வரை இவரை கைது செய்த செய்தியைக்கூட அவரது வீட்டிற்கு சொல்லாமல் மறைத்துள்ளனர். இத்தகவல் தெரியாத இவரது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சையில் இருந்தவரை காணோம் என்று தேடி அலைந்துள்ளனர்.

இது குறித்து இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியனிடம் கேட்டபோது, ‘இங்கு வட தமிழகத்தில் ஊர்களின் பெயர்ப் பலகைகளில் சாதி இந்துக்கள் தலைவராக இருந்தால்தான் எழுதுகிறார்கள்; தலித்துகள் பஞ்சாயத்து தலைவராக இருந்தால், அவர்களின் பெயர்களை எழுதுவதில்லை. இது குறித்த பிரச்சனைகளில் அரசுபோதிய அக்கறை காட்டுவதில்லை. அதனால் சாதி இந்துக்கள் தொடர்ந்து வன்கொடுமை செய்கிறார்கள். இப்போது ராணிக்கு நேர்ந்த கொடுமை குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் சொன்னோம். விசாரிக்கிறேன் என்று சொன்னாரே தவிர, வேறொன்றும் செய்யவில்லை. உலகப் பிரச்சனைகளுக்கெல்லாம் அரசாங்கத்திடம் முட்டி மோதி, சண்டை போட்டு உரிமை பேசும் மருத்துவர் ராமதாஸ், உள்ளூரில் வன்கொடுமைகளை இழைத்து மனித உரிமை மீறல்களைச் செய்கின்ற தன் கட்சிக்காரர்களிடம் இது குறித்துப் பேச மாட்டாரா?’ என்றார்.

வன்கொடுமைக்கு ஆளாகி, பாதிக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது கணவரும் தலைமையாசிரியருமான செல்வராஜ் உள்ளிட்ட 7 தலித்துகள் மீது போலிசார் பொய்வழக்குப் போட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர், தான் பாதிக்கப்பட்டது தொடர்பாக கொடுத்த உண்மையான புகாரில், இரண்டு நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத போலிசார், சாதி இந்துக்கள் கொடுத்த பொய்ப்புகாரில் உடனே வழக்குப் பதிவு செய்து, தலித் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் தரப்படும் என்கிறது அரசு. ஆனால், தலித் பஞ்சாயத்து தலைவர் என்றால் கூடுதல் தீண்டாமை போலும்!

நெல்லையில் தலித் மக்கள் மீது தொடரும் வன்கொடுமைகள்

Sudalimuthu's wife and child
சுடலைமுத்து -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட இளைஞர் பெருமன்ற செயலாளர். துடிப்பான தலித் இளைஞர். கட்டப் பஞ்சாயத்து, மணல் கொள்ளை, அடாவடிச் செயல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து பணி செய்தவர். அரிகேச நல்லூர் என்ற கிராமம், சேரன் மாதேவிக்கு அடுத்துள்ள வீரவ நல்லூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது. சுடலைமுத்து, கடந்த பஞ்சாயத்து தேர்தலில் அயூப்கான் என்பவர் வெற்றிபெற பணி செய்தார்.

இதனைப் பொறுக்காத ஆதிக்க சாதியினர், மானவர நல்லூர் சங்கர பாண்டி தேவர் மகன்கள் பழனி, அவரது தம்பி மாரியப்பன் மற்றும் முருகன், ராமச்சந்திரன், சுரேஷ் மற்றும் சிலர் சுடலை முத்துவை குறிவைத்து காத்திருந்தனர். இதற்கிடையில் பழனி தன் சாதிக்காரரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனையில் இருந்தவர், சில நாட்களிலேயே ‘பரோலில்' வெளியே வந்தார். இந்தச் சூழலில்தான் 14.8.2007 அன்று இரவு டி.வி.எஸ். 50 வண்டியில் சுடலை முத்துவும் இளைஞர் பெருமன்ற உறுப்பினரும், அதே ஊரைச் சார்ந்த வருமான நாகராசனும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இரவு 9 மணி அளவில் கால்வாய் பாலத்தின் நடுவில் வந்து கொண்டிருந்த சுடலைமுத்துவை பழனியும் அவரது கூட்டாளிகளும் ஆயுதங்களால் தாக்கினர். வண்டி ஓட்டிவந்த சுடலை முத்து வெட்டிக் கொல்லப்பட்டார். தடுக்க முயன்ற நாகராசனது வலது கை மூன்று விரல்களும் துண்டாயின. உடம்பின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய கும்பல், இவரும் இறந்து விட்டார் என விட்டுவிட்டு ஓடிவிட்டனர். நாகராசனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு வந்து காவல் துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்று, கொலை -கொலை முயற்சி மற்றும் சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை 6 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ‘பழனி என்ற கொலை வெறியனுக்கு ‘பரோல்' கிடைக்க, தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஆவுடையப்பன் உதவினார்' என்ற செய்தி ஏடுகளில் வந்துள்ளன.

சுடலை முத்துவுக்கு மூன்று குழந்தைகள்; மூன்றாவது கைக் குழந்தை. இதுவரை இந்த குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிவாரணம் கொடுக்கவே இல்லை. மதுரையிலிருந்து வழக்கறிஞர்கள் ரத்தினம், பிலமின் ராஜ், ராகுல், பகத்சிங், வெங்கடேசன், கதிர், வின்சென்ட் மற்றும் ஈரோடு, கோவை போன்ற பகுதிகளிலிருந்து ப.பா. மோகனுடன் கட்சி வழக்கறிஞர்களும் சேர்ந்து 26.8.07 அன்று அந்த கிராமம் சென்று விபரம் அறிந்தனர். நிதி திரட்டி கணவனை இழந்துள்ள அந்தோணியம்மாளிடம் சேர்த்தனர்.

இந்த கொடூர கொலை நடந்த பிறகும், அரசு எந்திரம் எருமை மாட்டு மந்தமாகவே செயல்படுகிறது. இதைவிட அதிர்ச்சி தருவது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் தவணை முறை செயல்பாடுகள்தான். கொலை யுண்ட சுடலை முத்துவும், சிகிச்சை பெறும் நாகராசனும் பெற்றுள்ள அனுபவங்கள், நம்மை உலுக்கக் கூடியவைதான். தலித்துகளை குறிவைக்கும் சாதிய வன்கொடுமை வெளிப்படுவதை நெல்லை மாவட்டம் புதுப்பித்துக் கொண்டுள்ளது என்ற உண்மையை உணர வைக்கிறது, சுடலை முத்துவின் உயிரிழப்பு.

-ரா. முருகப்பன்