எத்தனை ஆயிரம் சிங்குர் விவசாயிகளின் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தாலும் பரவாயில்லை, டாடாவின் கனவுத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்ற உறுதியிலாகட்டும்; இந்தோனேஷிய பன்னாட்டுக் கம்பெனிக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுக்கும் புரோக்கர் வேலைக்கு இடையூறாக வந்த நந்திக்ராம் விவசாய மக்களை நூற்றுக் கணக்கில் கொன்று குவிப்பதிலாகட்டும் புத்ததேவின் முதலாளித்துவ எஜமான விசுவாசத்திற்கு ஈடு இணை சொல்ல முடியாது. இந்த விசுவாசத்தில் முதலாளித்துவக் கட்சிகளின் முதல்வர்கள் கூட புத்ததேவிற்கு ஈடாக முடியாது.

தற்போது சிங்குர் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் வெடித்திருப்பதால் டாடா தனது ஆலையை வேறு மாநிலத்திற்குக் கொண்டு போகவும் தயார் என்று மிரட்டியிருக்கும் வேளையில், நமது கதாநாயகன் புத்ததேவ் இந்தியத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பில் பேசிய பேச்சுக்கள் அவரது முதலாளித்துவ சேவகன் என்ற குல்லாவில் மேலும் சில கோழி இறகுகளைச் செறுகியுள்ளன. சிங்குர் பிரச்னையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வதில் நம்பிக்கை இழந்துள்ள முதலாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக புத்ததேவ் அந்தக் கூட்டத்தில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.

விதிவிலக்காகிப்போன சிங்குர்

பெரும் முதலாளிகள் பலர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் புத்ததேவ் ‘சிங்குர் பிரச்னை விதிவிலக்கேயொழிய, மாநிலத்தின் பொதுவான நிலைமை அதுவல்ல’ என்று விளக்கியுள்ளார். அத்துடன் ‘பந்த் நடத்துவதை தான் ஆதரிக்கவில்லை’ என்றும் ‘கெரோ போராட்டங்கள் ஒழுக்கக்கேடானவை’ என்றும் ‘பந்த் நடத்துவதால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை’ என்றும் தனது மாநிலத்தில் ‘கெரோ போராட்டம் மீண்டும் வராது’ என்று தான் உறுதியளிப்பதாகவும் புத்ததேவ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். மேலும் தான் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு எதிராக இருந்தாலும் ‘தான் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால் அக்கட்சி வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கும் போது தான் மெளனமாக இருக்க வேண்டியுள்ளது’ என்று தன் ‘தவறுக்கு’ தன் எஜமானர்களிடம் தன்னிலை விளக்கம் அளித்த அவர், ‘ஆனால் அடுத்த முறை தான் மெளனமாக இருக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும்’ முதலாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசியுள்ளார்.

இத்தனை வாக்குறுதிகளுக்குப் பிறகும் அக்கூட்டத்தில் இருந்த முதலாளிகளுக்கு நம்பிக்கை வரவில்லை என்று நினைத்தாரோ என்னவோ அவர் முத்தாய்ப்பாக இன்னொரு வாக்குறுதியும் அளித்துள்ளார். அதாவது, ‘தொழிற்சங்கங்கள் ஒழுங்குமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும். மேற்கு வங்க மாநில அரசாங்கம் தன்னால் முடிந்தவரை, தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் மனநிலையை மாற்ற முயற்சித்துக் கொண்டுள்ளது’ என்று அவர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். (ஆதாரம்: ஹிந்து, 27.08.08).

இதனைப் பார்க்கும் போது நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி பதவியை இராஜினாமா செய்ய மறுத்து, தங்களுக்கு விழவேண்டிய ஒரு வாக்கை கெடுத்துவிட்டாரே என்ற கோபத்தில் கட்சியிலிருந்தே சோம்நாத்தை வெளியேற்றிய போது கட்சித் தலைமை கூறிய குற்றச்சாட்டுகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. அப்போது ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறியது’ மற்றும் ‘தொழிலாளி வர்க்க நலனுக்கு விரோதமாக செயல்பட்டது’ என்ற குற்றச்சாட்டுகளக் கூறியே கட்சி அமைப்புச் சட்டவிதிகளின்படி சோம்நாத்தை கட்சியில் இருந்து விளக்கம்கூட கேட்காமல் வெளியேற்றினர்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கட்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசுக்கு எதிராக அவர் வாக்களிக்கவில்லை என்பது மட்டுமே சோம்நாத் மீது மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு. இதில் தொழிலாளி வர்க்கநலனுக்கு விரோதமாக அவர் செயல்பட்டார் என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் அவ்வாறு கூறி அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினர்.

வேலை நிறுத்த உரிமைக்கு உள்ளார்ந்த எதிர்ப்பு

ஆனால் புத்ததேவ், பந்த் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கு தான் எதிரானவன் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றார். இந்த நாட்டில் தொழிலாளிவர்க்கம் தனது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால் தன் கைவசம் இருக்கும் ஒரே ஆயுதம் வேலை நிறுத்தம் செய்யும் உரிமைதான். அந்த ஆயுதத்தையும் பறித்துவிட்டு முதலாளிவர்க்கத்தின் காட்டுத் தாக்குதலுக்கு முன்னால் தொழிலாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக நிறுத்த முயலும் புத்ததேவின் செயல் அப்பட்டமாக தொழிலாளி வர்க்கநலனுக்கு விரோதமானது. இருந்தாலும், சோம்நாத்திற்கு எதிராகப் பாய்ந்த அதே கட்சியின் அமைப்புச் சட்டவிதி புத்ததேவின் மீது மட்டும் பாயவில்லை. பாயாதது மட்டுமல்ல, அவர்தான் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்து கட்சிக்கு அரசியல் வழியும் காட்டிக் கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் தனது நிலையை தெளிவுபடுத்திய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேலைநிறுத்தங்களை தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமையாகவே தனது கட்சி கருதுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் புத்ததேவின் தொழிலாளி வர்க்க விரோத கருத்துக்களுக்கு லேசான கண்டனம் தெரிவிக்கக் கூட அக்கட்சியின் தலைமைக்கு திராணியில்லை.

தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தங்கள் அணியில் ஒரு வாக்குக் குறைவதற்குக் காரணமான சோம்நாத்திற்கு தண்டனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவது என்றால், தொழிலாளி வர்க்க நலனுக்கு விரோதமாக செயல்பட்டது மட்டுமின்றி முதலாளிகளுக்காக கொடி பிடித்து கோஷமும் போடும் புத்ததேவிற்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கும் நேர்மையான தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Pin It