அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றிருக்கிறார். உலகெங்கிலும் அவரது வெற்றி பெரிதும் பாராட்டப்படுகிறது. பத்திரிக்கைகள் அனைத்தும் ஒருமித்த குரலில் அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்கா ஒரு புது வரலாறு படைத்திருக்கிறது என்று வியந்து பாராட்டுகின்றன.

அடிமை வியாபாரத்திற்கு பெயர் போன அமெரிக்காவில் அந்த அடிமை வியாபாரம் குறித்து புகழ்பெற்ற "அங்கிள் டாம்ஸ் கேபின்" போன்ற புதினங்கள் எழுதுமளவிற்கு கொடுமையான அடிமை வியாபாரம் நடைபெற்ற அந்த நாட்டில் தற்போது அன்று எந்த கறுப்பர் இன மக்கள் அடிமைகளாக விற்கவும், வாங்கவும் பட்டார்களோ அந்த மக்களில் ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது உலகம் முழுவதுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் ஒரு மனநெகிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.

எந்த நாட்டில் கறுப்பர் இன மக்கள் அடிமை வியாபாரத்திற்கு கூட்டி செல்லப்படும் போது அங்கு இருந்த வெள்ளையின மக்களின் குழந்தைகள் ஓடிச் சென்று அவர்களை தொட்டு பார்த்து அவர்களின் கறுப்புநிறம் தங்கள் மேல் ஒட்டுகிறதா என்று பார்த்து பரிகசிக்கும் அளவிற்கு நிறவெறி இருந்ததோ அந்த நாட்டில் இன்று கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது அனைவரையும் மகிழ்வடையவே செய்துள்ளது.

அவரது நாட்டில் மட்டுமல்ல நம்நாட்டிலும் கூட ஒபாமா ஒடுக்கப்பட்ட ஒரு இன மக்களின்- தன்னை நிரூபித்து நிலைநாட்டிக் கொண்ட- பிரதிநிதி என்ற அடிப்படையில் பல அரசியல் தலைவர்கள் அவரை பாராட்டவும் அவரைப்பற்றி புத்தகங்கள் எழுதவும் கூட செய்கிறார்கள்.

வெற்றிக்கான காரணம்

அவரது வெற்றிக்கு உதவிய அம்சங்களில் மிக முக்கியமானவை இரண்டுதான். ஒன்று அவருக்கு முன்பிருந்த ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் நடத்திய ஈராக்கின் மீதான படை எடுப்பு, இரண்டு தற்போது அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி. இவ்விரண்டு விசயங்களிலும் தனது செல்வாக்கை இழந்த ஜார்ஜ் புஷ்க்கு எதிராக எழுந்த எதிர்ப்புணர்வே எதிர்மறை வாக்குகளாக மாறி அவரது வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. தற்போது அமெரிக்காவை சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒபாமா ஓரளவு தீர்வு கண்டுவிடுவார் என்று அமெரிக்க மக்கள் மிகவும் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சமாளிக்க முடிந்தவை அல்ல, அவர் முன்னுள்ள சவால்கள்

தற்போதைய நெருக்கடி ஒரு குறிப்பிட்ட பொருளாதார அமைப்பு சார்ந்த விசயம். அந்த அமைப்பு மாற்றப்பட்டாலொழிய அதனை ஊற்றுக்கண்ணாகக் கொண்டு எழும் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.

எனவேதான் ஒருபுறம் அவரது வெற்றியை பக்கம்பக்கமாக அது குறித்த செய்திகளை வைத்து நிரப்பி கொண்டாடும் பத்திரிக்கைகள் அவருக்கு முன் உள்ள சவால்கள் எத்தகையவை அவற்றை எவ்வாறு அவர் சந்திக்கப் போகிறார் என்ற தங்களின் அவநம்பிக்கையையும் ஆங்காங்கே தவறாமல் முன்வைக்கின்றன. மேலோட்டமாக இந்திய அரசியல்வாதிகள் மக்களின் மன உணர்வெனும் பொது நீரோட்டத்திற்கு எதிராகப் போய்விடக்கூடாது என்பதற்காக ஒபாமா-வின் வெற்றியை புகழ்ந்து பாராட்டுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் மனதில் அவரது வெற்றி ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

வேற்றிட வேலை வாய்ப்பு போய்விடுமோ என்ற பயம்

அமெரிக்க மக்களின் இன்றைய பொருளாதாரப் பிரச்னைகளுக்கு ஒரு முக்கியக் காரணம் வேற்றிட வேலை வாய்ப்பு அடிப்படையில் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலைகள், இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு செல்வதாகும்.

எனவே அப்பிரச்னையில் அவர் எதுவும் செய்தால் அது நமது நாட்டின் தொழில்நுட்பம் கற்ற மத்தியதர வகுப்பினை சேர்ந்த மாணவர்களுக்கு தற்போது இருக்கும் வேலைவாய்ப்பை பாதிக்கும்; அவ்வாறு பாதித்தால் எதை வைத்து இந்தியா ஒளிர்கிறது, மிளிர்கிறது அதன் வளர்ச்சி விகிதம் இத்தனை சதவீதம் என்றெல்லாம் தங்களது சாதனைகளாக பலவற்றைக் கூறி நமது ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொண்டிருக்கிறார்களோ அது பாதிக்கப்பட்டு அதன் விளைவாக தமது அரசியல் செல்வாக்கு சரிந்துவிடுமோ என்ற அச்சம்.

அதைத் தவிர சமீபத்தில் கைஎழுத்தான இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்தும் ஒபாமா-வின் கட்சியான ஜனநாயகக் கட்சி ஒரு மன ஒவ்வாமை கொண்டிருந்தது போலவே செய்திகள் வெளிவந்தன. எனவே அவ்விசயத்திலும் ஒபாமா எத்தனை உறுதித் தன்மையுடன் நடந்து கொள்வார் என்பது குறித்த ஐயம். இவையே இந்திய ஆட்சியாளர்களின் மனதை ஆட்டிப்படைக்கும் அம்சங்கள். எனவேதான் அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளார்கள் என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

உண்மையில் ஆட்சியை நடத்துவது முதலாளி வர்க்கமே

அவர்களுடைய இந்த தோல்வி மனப்பான்மையும் எச்சரிக்கை உணர்வும் பெரிய அடிப்படைகள் எதையும் கொண்டிராதவை என்பதை நமக்கு வரலாற்றின் பல படிப்பினைகள் உணர்த்துகின்றன. உண்மையில் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி முறையில் ஆட்சியை நடத்துவது ஆளும் முதலாளி வர்க்கம்தான். ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் இப்பொம்மலாட்டத்தில் கயிற்றினை இழுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் முதலாளி வர்க்கத்தினரே. அதுவும் முதலாளித்துவ ஜனநாயகம் இன்று சீரழிந்து பாசிஸமாக உருவெடுத்துள்ள நிலையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பல சீரிய அம்சங்கள் கூட மங்கிமறைந்து விட்டன.

பென்டகனும், ராணுவ அதிகார வர்க்கக் கூட்டும்

முதலாளித்துவ அரசில் நிரந்தர அமைப்புகளான நிர்வாகம், நீதி அமைப்பு, போலீஸ் இராணுவம் ஆகியவற்றிற்கு இடையிலான அதிகாரப் பிரிவினைகள், ஒன்றின் அதிகாரத்தில் மற்றொன்று தலையிடாத தன்மை போன்றவை தற்போது எந்த முதலாளித்துவ அரசமைப்பிலும் நிலவுவதில்லை. நீதிமன்றங்களின் பங்கு பெரிதும் குறைக்கப்படுகிறது. நாடாளுமன்றங்கள் "அரட்டை மடங்களாக" ஆகிவிட்டன. உண்மையில் அரசு நிர்வாகத்தை நடத்துவது நிர்வாகமும், போலீஸ், இராணுவமும் தான்.

இதையே அமெரிக்க அரசமைப்பு குறித்த பிரபலமான சொல்லாடலின் அடிப்படையில் கூறுவோமானால் அமெரிக்க அரசை கட்டுப்படுத்துவது முதலாளிவர்க்கம் மற்றும் பென்டகனை தலைமை இடமாகக் கொண்ட இராணுவ, அதிகார வர்க்க கூட்டே. இந்த பலமான கூட்டை ஒரு ஒபாமா அல்ல எத்தனை ஒபாமாக்கள் வந்தாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது.இந்த அடிப்படையில் வேற்றிட வேலைவாய்ப்போ அல்லது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தமோ பெரும் பாதிப்பிற்கு ஆளாவதற்கு வாய்ப்பெதுவும் இல்லை.

ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்

ஏனெனில் இவ்விரு விசயங்களும் அமெரிக்க முதலாளிகளின் நலனோடு சம்பந்தப்பட்டவை. இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் மூலம் செறிவு செய்யப்பட்ட யுரேனியத்தையும், அணு உலைகளையும் தயாரிக்கும் அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்களுக்கு பெரும் வியாபார வாய்ப்பு காத்திருக்கிறது.

வேற்றிட வேலை வாய்ப்பைப் பொருத்தவரையில் உழைப்புத்திறன் மலிவான விலைக்கு கிடைக்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைகளை அனுப்பி அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவன முதலாளிகள் பெரு லாபம் ஈட்டிக் கொண்டுள்ளனர். எனவே இவ்விரு விசயங்களிலும் ஒபாமா ஒரு போதும் கைவைக்கத் துணியமாட்டார். ஏனெனில் அவரது வெற்றி எத்தனை மகிழ்வினை தருவதாக உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்களின் மனதில் இருந்தாலும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்காக அமெரிக்க மக்களை ஒருங்குதிரட்டி போராடிய ஒரு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெறவில்லை.

மாறாக அமெரிக்க முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகவே நின்று வெற்றி பெற்றுள்ளார். இவ்விரு கட்சிகளும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் ஒரு குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளே.

இனவெறியைக் காட்டிலும் கூடுதலாக நிலவும் பணவெறி

அவர் தேர்தலுக்காகச் செய்த செலவும் கொஞ்ச நஞ்நசமல்ல. அமெரிக்க முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு இருந்ததன் காரணமாகத்தான் அவர் இத்தனை பெரும் பொருளை செலவு செய்து தேர்தலில் போட்டியிட முடிந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி, ஈராக்கின் மீதான படை எடுப்பு ஆகியவை அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்தியிருந்த பெரும் கசப்புணர்வை மாற்றுவதற்கு அமெரிக்க முதலாளிகளுக்கு ஒபாமா என்ற ஒரு இனிப்பு பதார்த்தம்! இந்த சூழ்நிலையில் தேவைப்பட்டிருக்கிறது.

மற்றபடி நிறவெறி என்பது முதலாளித்துவத்திற்கு அடிப்படையில் இருக்க முடியாது. அதற்கு எப்போதும் மாறாமல் இருக்கும் ஒரே வெறி அதிகபட்ச லாப வேட்கை எனும் பண வெறிதான். ஆனால் உழைக்கும் மக்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி அப்பிரிவினையில் சுகம் காண்பதற்காக ஆளும் முதலாளிவர்க்கம் தனது பிரித்தாளும் சூழ்ச்சி தந்திரத்திற்கு சாதகமாக பயன்படுத்தவே செய்யும். அவ்வாறு பயன்படுத்துவதற்காக சில வெறி வாதங்களை அவ்வப்போது விசிறிவிட்டு ஊக்குவிக்கவும் செய்யும்.

ஒதுங்கிவிட்ட மண்டேலா

ஒபாமா குறித்து பத்திரிகைகளால் செய்யப்படும் பிரச்சாரத்தின் விளைவாக எவ்வளவு தயக்கம் நமது மனங்களில் இருந்தாலும் ஒபாமா என்ற மனிதர் அவர் தனிப்பட்ட முறையில் நல்லவராகவே இருந்தாலும்-தற்போது ஆளும் முதலாளி வர்க்கத்தின் கையில் ஒரு கருவியாக ஆக்கப்பட்டிருக்கிறார் என்பதே ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.

இந்த முதலாளித்துவ ஆட்சிமுறையில் நிறவெறிக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடி தன் வாழ்நாளில் மிக முக்கிய பெரும்பகுதியை சிறையில் கழித்து தியாகத்தின் திருவுருவமாக விளங்கிய நெல்சன் மண்டேலே போன்றவர்கள் கூட தாங்கள் சம்பாதித்த நற்பெயரை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக 'ஆப்ரிக்கன் நேசனல் காங்கிரஸ்' அமைப்பிலிருந்தும் அதன் ஆட்சியிலிருந்தும் ஒதுங்கியே நிற்கின்றனர்.

அந்நிலையில் ஒபாமா-வால் இந்த ஆளும் வர்க்க அரசியலில் இருந்து எதிர்நீச்சல் அடிக்கவோ சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உருப்படியாக எதுவும் செய்யவோ முடியும் என்று எண்ணுவது ஒரு நப்பாசையாகவே இருக்கும். உண்மையில் அவரது வெற்றி தற்காலிகமாக அமெரிக்க அரசியல்வானில் செவ்வானம் போன்ற ஒரு அழகிய ஆனால் தற்காலிக தோற்றத்தையே உருவாக்கியுள்ளது. செவ்வானம் அதிகநேரம் நீடிப்பதில்லை. அதைப்போல் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வல்லவர் என்று மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒபாமா-வின் இந்த சுந்தரத் தோற்றம் அதிக காலம் நீடிக்க வாய்ப்பில்லை.

அவருக்கு மட்டுமல்ல முதலாளித்துவ அடிப்படையை அகற்ற விரும்பாமல் அதனை அப்படியே வைத்துக்கொண்டு அதில் ஆளும்கட்சி அரசியல் செய்ய முனையும் அனைவரின் விதியும் அதுதான்.

வாசகர் கருத்துக்கள்
kesavmurthy
2009-03-05 06:39:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

obama = III Bush nothing yes maatrukaruthu or maaratha karuthu

Pin It