நாம் ஏற்கனவே நேபாளம் குறித்து எழுதியிருந்த இரு கட்டுரைகளில் தெளிவாகவே கூறி இருந்தோம். நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக திரண்டெழுந்துள்ள மக்கள் சக்தியை பல கட்சி ஆட்சி முறை என்று அங்கு உருவாகியுள்ள சூழ்நிலையில் அடிக்கடி தெருவில் இறங்கிப் போராட வைக்க வேண்டியிருக்கும் என்று. அப்படிப்பட்ட சூழ்நிலையை உழைக்கும் வர்க்க கட்சியான சி.பி.என்.(எம்)மிற்கு பிற அனைத்து முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கட்சிகளும் உருவாக்கும் என்றும் கூறியிருந்தோம்.

இது வரையில் உலகின் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்திராத புதிய யுக்திகளையும் உபாயங்களையும் கையாண்டு நேபாளத்தில் உழைக்கும் வர்க்க நலனுக்குகந்த சமூக மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்யும் சி.பி.என்(எம்) கட்சி பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியே வரும்; அக் கட்சி தனது புரட்சிப் பயணத்தை மேற்கொள்ளும் பாதை அத்தனை எளிதானதாக இராது என்றும் நாம் கூறியருந்தோம். அதே சமயத்தில் இடர்ப்பாடுகள் எத்தனை வரினும் அவை அனைத்தையும் மக்களைத் திரட்டி எதிர்கொள்ளும் அறிவும், திடமும் மார்க்சியத்தை தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ள அக்கட்சிக்கு இருக்கவே செய்கிறது என்பதையும் நாம் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

தற்போது நேபாள உடைமை வர்க்கம் அந் நாடு சி.பி.என்.(எம்) கட்சியின் தலைமையில் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை தனது நலனுக்கு முற்றிலும் விரோதமானது என்பதை புரிந்து கொண்டு பல தரப்பினரின் பலதரப்பட்ட எதிர்ப்புகளை முடிந்த வகையிலெல்லாம் தூண்டிவிடத் தொடங்கியிருக்கிறது. இதன் பொருள் சி.பி.என்(எம்) கட்சியின் நோக்கங்களை முன்பு அவர்கள் அறியாதிருந்தார்கள் என்பதல்ல. அக்கட்சியின் மையமான நோக்கத்தை அவர்கள் அறிந்திருந்தாலும் கூட அந்த இலக்கினை நோக்கி - தாங்கள் கொடுக்கும் நெருக்கடிகளையும் தாண்டி அக்கட்சி அத்தனை எளிதில் வேகமாக செல்ல முடியாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு அனேகமாக இருந்திருக்கும். இத்துடன் அவர்களுக்கு வேறொரு நப்பாசையும் இருந்திருக்கும். அதாவது ஆட்சி அதிகாரத்தை அடைந்து பதவி சுகத்தை நுகரத் தொடங்கிய பின் பலருக்கும் ஏற்படும் சபலம் இவர்களிடமும் சிறிதளவாவது ஏற்படாமலா போகும்? என்றும் மனப்பால் குடித்திருப்பார்கள். ஆனால் இதுவரை நமக்குத் கிடைத்துள்ள தகவல்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் சி.பி.என்.(எம்) கட்சி இதற்கெல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கக் கூடிய உலோகத்தாலான ஒரு இயக்கமல்ல என்பதே.

இதனால் வேறு வழியின்றி வெளிப்படையாகவே உடைமை வர்க்கம் அவ்வர்க்கத்தின் நலனை அரசில் இருந்து கொண்டே பிரதிபலிக்கும் ராணுவத் தலைவர் மூலம் ஒரு வகையான முரண்பாட்டை செய்யத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் பிரதம ராணுவத் தளபதியான கத்தவால் இப் பிரச்னையை தோற்றுவித்திருக்கிறார். ராயல் நேபாள் ராணுவம் என்று அழைக்கப்படும் பழைய நேபாள அரசு இயந்திரத்தின் கூலிப்பட்டாளமே தேசிய இராணுவம் என மன்னராட்சி முடிவிற்கு வந்த பின் ஆனது. அத்துடன் லட்சிய வேட்கை கொண்ட சி.பி.என்.(எம்) கட்சியின் மக்கள் விடுதலைப் படையை இணைப்பது ஏழு கட்சி கூட்டணியில் ஏற்பட்ட ஒரு உடன்பாடாகும். அதைச் செய்வதில் தங்களுக்கிருக்கும் தயக்கத்தை ராணுவத் தலைமை அவ்வப்போது தெரிவித்து வந்தது.

ஆனால் சி.பி.என்.(எம்) கட்சியுடன் ஏழு கட்சி கூட்டணி செய்து கொண்ட உடன்பாட்டின் ஒரு சரத்து என்ற ரீதியில் அதனை அந்த ராணுவத் தளபதிகளால் அத்தனை எளிதில் புறக்கணிக்கவும் முடியவில்லை. ஆனால் அதிகார வர்க்க மனநிலை கொண்ட அந்த தேசிய ராணுவம் மக்களிடமிருந்து விலகி அவர்களை அச்சுறுத்தும் சக்தியாகவே பலகாலம் விளங்கியது. ஏழை எளியவர்களின் அணியில் இருந்து உருவானதும் மக்களின் நலனுக்காக தங்களது உயிரையும் மனப்பூர்வமாக வழங்க முன்வரும் தன்மைவாய்ந்ததும் தொனிதோரணை எதுவுமில்லாததுமான மக்கள் விடுதலைப் படையோடு அது கைகோர்த்து செயல்படுவதோ கைகுலுக்கி ஒன்றியிருப்பதோ சிரமம் தான்.

அதற்காக ஒரு சிவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபின் அதாவது மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுபவராக ஆகிவிட்டபின் ஒரு தளபதி தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மக்கள் விடுதலைப் படையினரோடு இணைந்து இராணுவத்தைப் பங்கேற்க விடமாட்டேன் என்று கூறுவது எத்தனை அசிங்கமான நிலப்பிரபுத்துவ கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதும் சிவில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட மறுக்கும் அடாவடித்தனமான செயல் என்பதை யாரும் விவரித்துக் கூறத் தேவையில்லை. அத்தகைய முரண்பாட்டை அரசாங்கத்துடன் முதலில் வளர்த்த அவர் அதன் பின்னர் எந்தவகையான ஒளிவுமறைவுமின்றி சி.பி.என்.(எம்) கட்சியினால் தலைமை தாங்கப்படும் சிவில் நிர்வாகத்துடனான மற்றொரு முரண்பாட்டினை உடைமை வர்க்க சக்திகளின் தூண்டுதலின் பேரில் உருவாக்கி இருக்கிறார்.

சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளாத போக்கு

முதலில் அவர் மற்றும் ஏழு பிரிகேடியர் ஜெனரல்களினுடைய பதவிக்காலம் முடிய இன்னும் 3 மாதமே உள்ள நிலையில் அவர்களின் பதவி நீட்டிப்பு 3 ஆண்டுகளுக்குச் செய்யுமாறு சி.பி.என்.(எம்)-ன் பொறுப்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டிருந்தார். அதிகார வர்க்கத்தன்மை பொருந்திய கத்தவாலுக்கு கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்த்தபடியே பதவி நீட்டிப்பு தரவில்லை. ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தில் கூட சிவில் நிர்வாகத்தின் மேலாண்மை நிலைநாட்டிப் பராமரிக்கப்படுவதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம் ஆகும். ஆனால் இவ்விசயத்தில் அவரது முடிவை மீறி பதவி நீட்டிப்பிற்காக அவர் நேபாளத்தின் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். முதலாளித்துவ அதிகாரவர்க்க அரசு எந்திரத்தின் ஒரு அங்கமான நேபாள உச்சநீதி மன்றமும் அவருக்கு சாதகமானதொரு தீர்ப்பினை வழங்கி ஒரு அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கியது.

புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கும் அரசியல் சட்டம் இன்னும் முழுமையாக அனைத்துக் கட்சிகளாலும் ஏகோபித்த விதத்தில் எழுதி ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வராத நிலையில் இத்தகையதொரு தீர்ப்பினை இவ்விசயத்தில் வழங்குவது நேபாளத்தின் உச்ச நீதி மன்றத்திற்கு சாத்தியமாக இருந்தது. இந்த அரசியல் சிக்கல் தீர்க்கப்படாத நிலையிலேயே தன்னிச்சையாக ஏழு கட்சி கூட்டணியின் ஒப்பந்தத்தை மீறி நேபாள ராணுவத்திற்கு 2400 பேரைச் சேர்க்கும் முடிவை கத்தவால் வெளியிட்டார்.

அப்பட்டமாக சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையை துச்சமெனக் கருதும் இப்போக்கினை ஐ.நா.பிரதிநிதி இயன்மார்ட்டின் உட்பட பலரும் தவறென்று கூறியுள்ளனர். இந்த முயற்சியை முறியடிக்கும் விதத்தில் கத்தவாலை பதவி நீக்கம் செய்வதென்ற முடிவினை பிரதமர் பிரச்சந்தா மிகச் சரியாகவே எடுத்துள்ளார். அப்பட்டமாகச் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு மக்கள் சக்தியால் தூக்கிஎறிப்பட்ட மன்னர் ஞானேந்திராவின் தந்தையின் வளர்ப்பு மகன் போல் இருந்தவர் தான் இந்தக் கத்தவால் என்பதையும், அவருடைய ஜனநாயக விரோத அதிகார வர்க்கப் பின்னணியையும் நன்கறிந்திருந்தும் நேபாளத்தில் உள்ள கட்சிகள் கத்தவாலை பதவிநீக்கம் செய்யும் முடிவை எதிர்த்துள்ளன.

ஜனநாயகத்தை ஓரளவு ஏற்றுக் கொள்பவர்கள் கூட இந்த பதவி நீக்க முடிவை நிச்சயம் தவறெனக்கூற மாட்டார்கள். இருந்தாலும் இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத சிவில் நிர்வாக மேலாண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அபாயகரமான ராணுவ சர்வாதிகாரப் போக்கு தலைதூக்கி உள்ளதை நேபாளத்தின் 16 கட்சிகள் ஆதரித்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் அவை ஜனநாயக சக்திகளே அல்ல என்பதை திட்டவட்டமாக வெளிக்காட்டியுள்ளன. தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று அறிவித்துக் கொள்ளும் சி.பி.என் (ஐக்கிய மார்க்ஸிஸ்ட் லெனிஸ்ட்) கட்சியும் இவ்விசயத்தை அடிப்படையாக வைத்து தனது ஆதரவினை வாபஸ் பெற்றுள்ளது. இந்த அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கும் பிரச்னை இதுதான்: இந்த நடவடிக்கை வெற்றி பெற அனுமதித்தால் அது சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையை மட்டுமல்ல, சி.பி.என் (எம்) கட்சியின் சித்தாந்த மேலாண்மையையும் நேபாள மண்ணில் அசைக்கமுடியாத வகையில் நிலைநாட்டிவிடும் என்பதுதான்.

இதற்கு ஆதரவாக மக்கள் சக்தி சி.பி.என்.(எம்)ஆல் திரட்டப்பட்டு ஒரு மகத்தான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. மார்க்சிஸ கவசம் தரித்தவர்கள் இந்த சந்தர்ப்பவாத சக்திகளின் சித்துவிளையாட்டுகளுக்கெல்லாம் மசியப்போவதில்லை. நேபாள மக்களின் தலைவர் பிரச்சந்தா அத்தகைய கவசம் தரித்தவர் ஆவார். அவர் எவ்விதத் தயக்கமுமின்றி ஜனாதிபதியிடம் கத்தவாலின் பணி நீக்க ஆணையை அவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருக்கிறார். அதை நேபாள ஜனாதிபதி வாங்கிக் கொண்டு அமுல்படுத்தாது கத்தவாலை பதவியில் நீடிக்க கோரியுள்ளார். இது தெரிந்தவுடன் தோழர் பிரச்சந்தா தனது பதவியைத் துச்சமென தூக்கிஎறிந்துள்ளார்.

மக்கள் ஆதரவு போரட்டப் பேரலைகள் நேபாள மண்ணில் தவழத் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ சக்திகள் அனைத்தும் அம்பலமாகி உள்ளன. அவற்றின் ஜனநாயக முழக்கம் வெறும் உதட்டளவில் ஆனது என்பது வெளிப்பட்டுள்ளது. பெயரளவில் ஜனநாயகம் என்ற ஒரு ஆட்சிமுறையை வைத்துக் கொண்டு முதலாளி வர்க்க்த்திற்கு சேவை செய்வதை நோக்காக கொண்டுள்ளவர்களே யு.எம்.எல் உள்பட அனைத்து கட்சியினரும் என்பது நிரூபணமாகியுள்ளது.

தோழர் பிரச்சந்தாவின் நடவடிக்கையை நாடாளுமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் கட்டுப்படுத்தி இந்த சுரண்டல் வர்க்க சக்திகள் நடத்த நினைத்த நாற்றமடிக்கும் முதலாளித்துவ ஜனநாயக கூத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார் அந்த மாபெரும் தோழர். உண்மையான பாட்டாளி வர்க்க ஜனநாயகம் நாடாளுமன்ற வளாகத்தில் அல்ல; நேபாள நாட்டின் போராட்டப் பாரம்பரியம் படைத்த தெருக்களில் அரங்கேறப் போகிறது. 17 கட்சி கூட்டணி நடத்த எத்தனித்திருக்கும் புது அமைச்சரவை கூத்து காவியத்தன்மை வாய்ந்த மக்கள் எழுச்சியின் முன் மண்டியிடப்போகிறது.

சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் வீழ்ச்சியடைந்ததற்குப் பின் இருண்ட வானில் ஒரு ஒளி கீற்றுப் போல் மார்க்சிஸம் லெனினிஸம் தன்னை ஒரு வெல்லற்கறிய ஆயுதம் என்று நிரூபித்துள்ளது நேபாள மண்ணில்தான். இன்று உலக முதலாளித்துவம் அது இதுவரை சந்தித்துள்ள பொருளாதார நிதி நெருக்கடியிலெல்லாம் மிக மோசமானதொரு நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ள வேளையில் நேபாளில் தலைகாட்டியுள்ளது போன்ற ஒரு சோஸலிச மாற்று உலக மக்கள் கண்களில் பட்டுவிடக்கூடாது என்று பெரிதும் விரும்பவே செய்யும். அந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுக் கண்ணசைவின்றி கத்தவால் இத்தகைய துணிச்சலான செயல்களில் நிச்சயம் ஈடுபடமாட்டார்.

இவ்வேளையில் உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களும் அவர்களின் ஒன்று திரண்ட சக்தியும் நேபாளத்தின் உள்விவகாரத்தில் அந்நிய ஏகாதிபத்திய சக்திகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவதை மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும். அது உலகளாவிய உழைக்கும் வர்க்கத்தின் சகோதரக் கடமையாகும். அத்தகைய உழைக்கும் வர்க்கத்தின் கடமையினை நிறைவேற்றத் தயாராகுமாறு கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை இந்திய உழைக்கும் வர்க்கத்தை அறைகூவி அழைக்கிறது.

வாசகர் கருத்துக்கள்
kkannan
2009-06-11 07:59:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

cpn maoist is going to right way we are all support to maoist

Pin It