தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தங்களுக்கு சமூக  சமநிலையை அளிக்கக் கூடிய ஒரு மதம் வேண்டும் என்பதைத்தான் கோருகின்றனர். தவறான புரிதலை தவிர்ப்பதற்காகவே நான் இதைப் பற்றி விளக்க விரும்புகிறேன். அதன் பொருட்டு, வாழ்வியல் நடைமுறைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகக் கேடுகளையும், மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சமூகக் கேடுகளையும் நான் பிரித்துக் காட்ட விரும்புகிறேன். எதுவாக இருந்தாலும் ஒரு நாகரிக சமூகத்தில் சமூகக் கேடுகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

ambedkar_243ஆனால் அப்படி அனுமதிக்கப்பட்ட சமூகக் கேடுகள், மதத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுவதைவிட – கொடுமையானதும் வஞ்சகமானதும் வேறு இருக்க முடியாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தாங்கள் உள்ளாக்கப்படும் சமத்துவமற்ற நிலைகளை தூக்கி எறிய முடியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து சமத்துவமற்றப் போக்கினை ஆதரிக்கும் மதத்தினை, இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என அவர்கள் முடிவு செய்துவிட்டனர்.

இந்து மதம் அவர்களுடைய மதமாக இருக்க வேண்டுமெனில், அது சமூக சமத்துவத்திற்கான மதமாக ஆக வேண்டும். அனைவருக்கும் கோயில் நுழைவுக்கான அனுமதியை வழங்கும் ஒரு சிறிய மாற்றத்தின் மூலம் – சமூக சமத்துவத்திற்கான மதமாக அதை ஆக்கிவிட முடியாது. அரசியலில் நன்கு பழக்கமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி நான் இதை விளக்க வேண்டுமெனில், அவர்களை வெளியோராகக் கருதாமல் சொந்த குடிமக்களாக அங்கீகரிக்கும். ஆனால் அதனால், அவர்கள் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் – தங்களுக்கு மேலும் கீழும் எவரும் அற்ற ஒரு சமூக நிலையை அடைந்து விடுவார்கள் என்று பொருளாகாது. மாறாக, மக்களை பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்று படிநிலைப்படுத்துவதன் மூலம் அது சமத்துவமின்மையை அங்கீகரிக்கிறது. இந்தப் படிநிலையானது, கீழிருந்து மேல் நோக்கி வெறுப்பையும், மேலிருந்து கீழ் நோக்கி அவமதிப்பையும் கொண்டதாக இருக்கிறது.

இந்து மதம் சமூக சமத்துவத்திற்கான மதமாக இருக்க வேண்டுமெனில், கோயில் நுழைவை அனுமதிக்கும் வகையில் அதன் கோட்பாடுகளில் ஏற்படுத்தப்படும் சிறிய மாற்றங்கள் போதாது. எது தேவையெனில், சதுர்வர்ணம் என்ற கோட்பாட்டினை அது துடைத்தெறிய வேண்டும். அதுதான் அனைத்து சமத்துவமின்மைகளுக்கும் வேராகவும், சமத்துவமின்மையின் வடிவங்களான சாதி அமைப்பு மற்றும் தீண்டாமைக்கு தோற்றுவாயாகவும் இருக்கிறது.

அதைச் செய்யாத வரை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோயில் நுழைவை மட்டும் மறுதலிக்கப் போவதில்லை. மாறாக, இந்து மத நம்பிக்கை யையுமே மறுதலிப்பர். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சுயமரியாதைக்கு முற்றிலும் நேர் மாறானதாக, சதுர்வர்ணமும் சாதி அமைப்பும் இருக்கிறது. அது, இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடாக நிலைக்கும் வரை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தாழ்வாகவே பார்க்கப்பட வேண்டியவர்களாகின்றனர். இந்து சாஸ்திரங்களிலிருந்து சாதி அமைப்பும் சதுர் வர்ணமும் தூக்கியும் துடைத்தும் எறியப்பட்டால்தான் – தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும். மகாத்மாவும் இந்து சீர்திருத்தவாதிகளும் இதை தங்கள் இலக்காக வரித்துக் கொண்டு, அதற்காகப் பணியாற்றும் துணிவை வெளிப்படுத்துவார்களா?

எனது இறுதிக் கண்ணோட்டத்தை முடிவு செய்யும் முன் இது குறித்த அவர்களுடைய அறிவுப்புகளுக்காக காத்திருப்பேன். மகாத்மா காந்தியும் இந்துக்களும் இதற்கு தயாராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதைவிட குறைவான எதுவும் தாழ்த்தப்பட்ட மக்களின் மனங்களை நிறைவு செய்யாது என்பதையும், கோயில் நுழைவை ஏற்றுக் கொள்ள வைக்காது என்பதையும் – நான் அவர்களுக்கு இறுதியாகவும் அறுதியிட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். கோயில் நுழைவை ஏற்றுக் கொண்டு அதோடு நிறைவடைந்திருப்பது என்பது, கேட்டினை சகித்துக் கொண்டு, தங்களுக்குள் வாழும் சுயமரியாதையின் புனிதத்தைப் புறந்தள்ளுவதாகும்.

நான் எடுத்திருக்கும் நிலைக்கு எதிராக, மகாத்மா காந்திக்கும் இந்து சீர்திருத்தவாதிகளுக்கும் மேலும் ஒரு வாதம் இருக்கலாம். “தற்போது கோயில் நுழைவை ஏற்றுக் கொள்வதென்பது, பின்னர் அவர்கள் சதுர்வர்ணத்திற்கும் சாதிக்கும் எதிராகப் போராடுவதிலிருந்து அவர்களை தடுத்துவிடாது'' என்று அவர்கள் சொல்லலாம். அதுதான் அவர்களின் பார்வை எனில், நான் அந்த வாதத்தை இந்த நிலையிலேயே எதிர்கொண்டு தீர்த்துக் கொண்டு, எதிர் கால வளர்ச்சிக்கான பாதையை தெளிவாக்க விரும்புகிறேன்.

நான் கோயில் நுழைவை ஏற்றுக் கொள்வது என்பது, சதுர்வர்ணத்தையும் சாதியையும் ஒழிப்பதற்காகப் போராடும் எனது உரிமையைப் பறிக்காது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் போராட்டத்தை நான் முன்னெடுக்கும்போது, மகாத்மா காந்தி எந்தப் பக்கம் நிற்பார் என்பதுதான் என்னுடைய கேள்வி. அவர் எனக்கு எதிராக நிற்பவர்கள் பக்கம் நிற்பாரானால், நான் தற்போது அவர் பக்கம் நிற்க இயலாதென்பதை அவருக்குத் தெரிவித்தாக வேண்டும். அவர் என் பக்கம் நிற்பாரானால், இப்போதே நிற்கட்டும்.

- டாக்டர் அம்பேத்கர்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(1), பக்கம் : 199)