இந்தியாவும் 1858 ஆம் ஆண்டின் சட்டமும்

                இங்கிலாந்தின் வளவாழ்வுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி பெரும் செல்வாதாரமாக இருந்தது என்ற உண்மையையும் மீறி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மற்றும் பிரிட்டிஷ் மக்களின் அவமதிப்புக்கு உள்ளாயிற்று.

                இந்திய வர்த்தகத்தில் தனது ஏகபோகத்தைப் பற்றிக் கிழக்கிந்தியக் கம்பெனி பெருமை கொண்டிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இந்தச் சலுகையை வழங்குவதற்காக முடிந்த அளவுக்கு அதிகமான லாபத்தைப் பெறுவதில் பிரிட்டிஷார் உறுதியாக இருந்தனர். நிர்வாகத்தில் ஏற்படும் ஒவ்வொரு பலவீனமும் பணம் பறிக்கவும் தலையிடவும் ஒரு காரணமாகப் பயன்படுத்தப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது என்பது அதனிடமிருந்து இந்திய வர்த்தகத்தின் ஏகபோகத்தின் மூலம் குவிந்துள்ள செல்வத்தைப் பறிக்கும் ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்பட்டது.

ambedkar in bombay                கம்பெனியின் வரலாற்றினுடைய ஆரம்ப காலத்தில் வர்த்தகத்தின் இந்த ஏகபோகம் சம்பந்தமாக ஒரு கருத்து வேறுபாடு தோன்றியது. அதன் சாதக பாதகங்களைப் பற்றிக் காரசாரமாக விவாதிக்கப்பட்டது 1833 ஆம் ஆண்டுவரை முறையாகவோ, முறையற்ற விதத்திலோ கம்பெனி தனது ஏகபோகத்தைத் தொடருவதற்குப் பெருத்த எதிர்ப்பு கிளம்பியதால், கம்பெனியும் அமைச்சர்களும் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. கிழக்கிந்திய வர்த்தகம் இங்கிலாந்தின் பொது மக்களனைவருக்கும் திறந்து விடப்பட்டது.

                1834 ஆம் ஆண்டின் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒரு வர்த்தகக் கார்ப்பரேஷனாகக் கம்பெனி செயல்படுவது முடிவுற்றது. கம்பெனியின் கடப்பாடுகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பதைப் பின்வரும் விவரங்களிலிருந்து காண்போம்.

                “உருப்படியான வர்த்தகரீதியான சொத்துக்கள் 1834 ஆம் ஆண்டின் சட்டப்படி விற்பனை செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட தொகையான 15,223,480 பவுண்டுகள் இவ்வாறு வினியோகிக்கப்பட்டது. இந்தியக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 2,218,831 பவுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டுப் பத்திரக் கடனின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்கு 1,788,525 பவுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 1874 இல் கம்பெனியின் மூலதனப் பங்குகளை (6,000,000) இறுதியில் மீட்டுப் பெறுவதற்காகக் கூட்டு வட்டி விகிதத்தில் ஒரு “பாதுகாப்பு நிதியை” ஏற்படுத்துவதற்காக பாங்க ஆஃப் இங்கிலாந்தில் 2,000,000 பவுண்டுகள் வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது. கப்பல் சொந்தக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இழப்பீடு கொடுப்பதற்காக 561,000 பவுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. மீதமுள்ள 463,135 பவுண்டுகள் இந்தியாவில் உள்ள அரசாங்கத்தின் செலவுக் காரணங்களுக்காக இங்கிலாந்தில் ரொக்கமாக வைக்கப்பட்டன. லீடன்ஹால் தெருவில் உள்ள இந்தியா இல்லம், இராணுவ நுகர்பொருள்துறையின் உபயோகத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு சேமக்கிடங்கு, இந்தியாவில் சில வீட்டு ஆஸ்தி போன்ற, 635,445 பவுண்டு மதிப்புள்ள வர்த்தக ரீதியான சொத்துக்கள் என்று கம்பெனி கூறிய சில சொத்துக்கள் கம்பெனியின் வசமே இருந்தன. ஆனால், அவை இந்திய அரசாங்கத்தின் உபயோகத்திற்குப் பயன்படுத்தத்தக்கவையாகும்.”

                ஒரு வர்த்தக அமைப்பு என்ற முறையில் கம்பெனி மறைந்து விட்ட போதிலும்கூட, அது இந்தியாவிலுள்ள தனது பிரதேசங்களில் ஓர் அரசியல் தன்னுரிமையாட்சி அமைப்பாகத் தொடர்ந்து இருந்து வந்தது. இதன்மூலம் துரதிருஷ்டவசமாகக் கம்பெனியின் நாட்கள் அதிவேகமாக எண்ணப்பட்டு வந்தன.

                1857 இல் நடைபெற்ற கலகத்தில் தெளிவாகப் புலப்பட்டது போல, அதன் திறமையின்மை காரணமாகக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒழிக்கப்பட்டது என்று கருதுவது தவறாகும். மாறாக, உண்மையில் கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே, இந்திய அரசாங்கத்தை, அரசியாரின் முடியாட்சியே நேரடியாக மேற்கொள்வது பற்றிய விவாதம் நடைபெற்றது. கலகம் நடைபெற்றதோ இல்லையோ, ஆனால், தங்களுக்கு நேரடியாக மாட்டிறைச்சிக் கொழுப்பை வழங்கிய ஒரு கார்ப்பொரேஷனைக் கசக்கிப் பிழியும் நிகழ்வுப் போக்கின் வாயிலாக இந்தியாவில் தங்களது ஆட்சியின் மூலம் மறைமுகமாக வந்த “இலைகளையும் மீன்களையும்” நேரடியாகக் கட்டுபடுத்துவதற்கு பிரிட்டிஷ் ராஜியவாதிகள் அவசரப்பட்டனர் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

                பொறுமையற்ற மனங்களுக்கு இந்தச் சுற்றி வளைக்கும் நிகழ்வுப் போக்கு அலுப்பூட்டுவதாகவும் மனதளவில் சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது. கிரிமியன் யுத்தத்தில் பெற்ற வெற்றியினால் 1857 இல் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியினால் 1857இல் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பால்மெர்ஸ்டன் பிரபு, கம்பெனியை மூடிவிட்டு இந்திய அரசாங்கத்தை முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தத் தாம் உத்தேசித்திருப்பதாகக் கம்பெனியின் இயக்குநர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் ஒரு தாக்கீது அனுப்பினார்.

                துரதிருஷ்டவசமாக 1857 இல் கலகம் நடைபெற்றது. அது ஏற்கெனவே முழு வீச்சில் இருந்த கம்பெனியை ஒழித்துக்கட்டும் இயக்கத்திற்கு ஒரு வலுவான உந்துவிசையளித்தது.

                1857 டிசம்பர் 31 அன்று கம்பெனியின் தலைவரும் துணைத் தலைவரும் பால்மெர்ஸ்ட்டன்னின் தாக்கீதுக்குப் பதிலளித்தனர், இந்தியாவை நிர்வகிப்பதற்குக் கம்பெனியைப் போன்ற “ஓர் இடைக்கால, அரசியல் கலப்பற்ற, முற்றிலும் சுதந்திரமான அமைப்பு” அவசியம் என்று அதில் அவர்கள் வலியுறுத்தினர்.

                இதைத் தவிரக் கம்பெனி, நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும், ஒரு முறையான விண்ணப்பத்தை அனுப்பிற்று. அந்த விண்ணப்பத்தை வரைந்த ஜான் ஸ்டுவர்ட் மில், கம்பெனியை ஒழித்துக்கட்டும் மசோதாவைக் கொண்டுவந்தவரின் வாதங்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினார். “ஆரம்பம் முதல் கட்டுப்பாடு வாரியத்திற்குத் தலைமை ஏற்கும் மந்திரியின் மூலமாக இந்தியா அரசாங்கத்தின் மீது முடியரசு தனது கட்டுபாட்டைச் செலுத்தி வந்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசாங்கத்திற்கும் முடியரசின் மந்திரிக்கும் இடையில் இருந்த இயக்குநர்கள் மன்றத்தைத் தான், அப்புதிய மசோதா ஒழிக்கவேண்டுமென்று விரும்பியது. அனுபவத்தின் சின்னமாகத் திகழும் இந்த இயக்குநர்கள் மன்றம் (கிழக்கிந்தியக் கம்பெனியின் ஓர் அங்கம்), இந்தியாவின் நிர்வாகம் முழுவதையும் உண்மையிலேயே கட்டுப்படுத்தி வந்த முடியரசின் அமைச்சருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தது என்று மில் வாதிட்டார். நிர்வாக முறைமையில் ஏதேனும் பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக வைத்துக் கொண்டாலும், அதற்குப் பரிகாரமாக இயக்குநர் மன்றத்தை ஒழித்துவிட்டு, முடியரசின் அமைச்சரை எதேச்சதிகாரியாக்குவது என்பது, நோயைவிடப் பரிகாரம் மோசமானது என்பது போன்றது. இயக்குநர்கள் மன்றத்தின் உதவியின்றி முடியரசின் மந்திரி இந்தியாவின் நிர்வாகத்தைக் கவனித்திருப்பாரேயானால், தவறுகள் ஏதும் நடைபெற்றிருக்காது என்று கருதுவது, பொறுப்பைப் பெற்றிருந்த அவர் மிக மோசமாக நிர்வாகம் செய்திருக்கிறார், ஏனெனில், அவர் அனுபவம் வாய்ந்த பொறுப்புள்ள ஆலோசகர்களின் ஒத்துழைப்பை அவர் பெற்றிருந்தார்.”

                இங்கிலாந்துடனான இந்தியாவின் தொடர்பின் வருங்காலத்தைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவின. இங்கிலாந்தின் ஒரு முக்கியச்செய்தி ஏடான “ஸ்டான்லி ரெவ்யூ”, இங்கிலாந்தின் அரசியலிலிருந்து இந்தியாவை ஒதுக்கிவைப்பதற்குக் கிழக்கிந்தியக் கம்பெனி தொடர்ந்து செயல்படவேண்டுமென்று வாதிட்டது. இந்தியாவுக்குச் சென்ற ஆங்கிலேயர்கள் எதேச்சதிகாரிகளாக மாறினர். அதனால், ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை அது தெளிவுப்படுத்தியது. “இந்தியா ஒரு மிகப்பெரிய நீர்மூழ்கிக் குண்டைப் போன்றது, அது இங்கிலாந்தின் அனுகூலமான நடவடிக்கைகளை முடக்கிவிடும், இங்கிலாந்தின் சுதந்திர, தார்மிக வாழ்வைச் செயலிழக்கச் செய்துவிடும்” என்று துணிந்து பிரகடனம் செய்தது. “இந்தியாவை இங்கிலாந்திற்கு நெருக்கமாகக் கொணர்ந்தால், அது ஒரு மகத்தான பள்ளியாகத் திகழும். அதில் நேப்பிள்ஸ் மன்னரின் கோட்பாடுகளையும், திருமதி.ஸ்டோயியின் வெக்ரி நடைமுறைகளையும் கற்றுக் கொள்ளலாம்.”

                மற்றவர்கள், குறிப்பாகக் கோண்டியின் சீடரான ரிச்சர்டு கான்கிரீவ் என்பவர், தனது வருங்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை இந்தியாவிடமே விட்டுவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். ஒரு நாட்டுமக்கள் வேறொரு நாட்டு மக்களை ஆளுவது என்பது ஒழுக்கக்கேடானது, மானுட இனத்தின் வளர்ச்சிக்கு நன்மை பயக்காது என்று அவர் கூறினார். ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின் இந்தியாவிற்குள் வேறு எந்தநாடும் நுழைந்துவிடுவதைத் தடுப்பதற்காக, நிர்வாகத்தை ஒழுங்கமைப்பதற்கு, ஒரு சர்வதேச அமைப்பு நிறுவப்படவேண்டுமென்று அவர் யோசனை கூறினார். இறுதியில் அது, தன்னாட்சி அரசாங்கத்தை நடத்த வல்லவர்களாக இந்தியர்கள் மாறும்போது அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கும்.

                இக்கருத்துக்கள் எவையும், வேறுவிதமாகச் சிந்தித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்புடையவையாக இல்லை. கிழக்கிந்தியக் கம்பெனியை ஒழித்துவிடுவதிலும் இந்திய அரசாங்கத்தை முடியரசின் கீழ் உடனடியாகக் கொணருவதிலும் அவர்கள் உறுதியாக இருந்தனர். இரட்டை அரசாங்கங்களுக்குப் பதிலாக நேரடி அரசாங்கத்தை நடத்த அவர்கள் விரும்பினர். இதன் விளைவாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் விண்ணப்பமோ அல்லது சுதந்திரமான பொதுக்கருத்தோ எந்தப் பயனையும் அளிக்கவில்லை. கம்பெனியை ஒழிக்கும் மசோதாவையும் இந்தியா அரசாங்கத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தமது மசோதாவையும் பால்மெர்ட்ஸ்டன் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் முன்னமே தேசத்துரோக மசோதாவினால் பால்மெர்ஸ்டன் அரசாங்கம் பதவி இழந்தது. டெர்சி பிரபுவின் தலைமையில் கன்சர்வேடிவ் அரசாங்கம் பதவி ஏற்றது. பார்மெர்ட்ஸ்டன் பிரபுவின் ஆட்சி பதவியிழந்த பின்னர் அவருடைய மசோதாவையும் நிறைவேறவில்லை, லார்டு டெர்பியின் கீழ் கான்சலராக இருந்த பென்ஜமின் டிஸ்ரேலி தமது இந்திய மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த இரு மசோதாக்களின் சாதக பாதகங்களைப் பற்றி ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஒப்பீடு மிகவும் ஆர்வமூட்டுவதாகும், பின்னாளில் நடைபெற்ற சம்பவங்கள் அவரது கூற்றுக்களை நியாயப்படுத்தின. அவர் கூறுவதாவது:

                “இச்சிரமங்களைச் (ஒரு நாட்டை மற்றொரு நாடு அரசாள்வது) சமாளிப்பதற்காக இந்த மசோதாக்கள் வழங்கிய வழிவகைகளில் ஒரு அமைச்சரின் தங்குதடையற்ற அதிகாரங்கள் அடங்கியுள்ளன. இந்த வகையில், இந்த இரு மசோதாக்களுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் இல்லை. அந்த அமைச்சருக்கு உதவ ஒரு கவுன்சிலும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், மிகமோசமான கொடுங்கோலர்களும்கூடக் கவுன்சில்களைக் கொண்டிருக்கின்றனர். ஒரு கொடுங்கோலரின் கவுன்சிலுக்கும், ஓர் ஆட்சியாளரைக் கொடுங்கோலராக மாறுவதிலிருந்து தடுக்கும் கவுன்சிலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவெனில், முதலாவது கொடுங்கோலரைச் சார்ந்திருக்கிறது. மற்றது சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஒரு கவுன்சிலருக்கு என்று சொந்தமாகச் சில அதிகாரங்கள் உள்ளன. மற்றொன்றிற்கு இல்லை. முதலாவது மசோதாவின்படி (லார்டு பால்மெர்ஸ்டனின் மசோதா) கவுன்சில் முழுவதும் அமைச்சரால் நியமனம் செய்யப்படுகிறது. இரண்டாவது மசோதாவின்படி (டிஸ்ரேலியின் மசோதா) கவுன்சிலின் பாதி உறுப்பினர்களை அமைச்சர் நியமனம் செய்கிறார். அந்தக் கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்புகளை, இரு மசோதாக்களும் சற்றே மாறுபட்டு, சொந்த விருப்பத்தினடிப்படையில் அமைச்சரே தீர்மானிக்கிறார்.”

                லார்டு பால்மெர்ஸ்டனின் மசோதாவை விட டிஸ்ரேலியின் மசோதா மிகமோசமான முடிவைச் சந்தித்தது. அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. ஆகவே 1858 ஆகஸ்டில் ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு “இந்தியாவின் சிறந்த அரசாங்கத்திற்கான சட்டம்” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டது.

                இச்சட்டத்தின் ஷரத்து (பிரிவு 75இன்) இந்தியாவின் நிர்வாகத்தை இன்னமும் பெருமளவுக்கு ஒழுங்குபடுத்துகிறது. அவற்றின் தன்மையைக் கொண்டு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கிறது.

  1. கடந்தகால விவகாரங்கள் சம்பந்தப்பட்டது.
  2. வருங்கால விவகாரங்கள் சம்பந்தப்பட்டது.

கடந்தகால விவகாரங்கள் சம்பந்தப்பட்டவற்றை முதலில் பரிசீலிப்போம் – முக்கியமாகக் கம்பெனியின் நிதிசார்ந்த மற்றும் வர்த்தகரீதியான கட்டுப்பாடுகளுக்குத் தீர்வு காண்பது. இச்சட்டத்தின் பிரிவு 42 “கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலதனப் பங்குகளின் மீதான லாபப்பங்கீட்டுத் தொகையை இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து மட்டுமே செலுத்தமுடியும், செலுத்த வேண்டும்” என்று கூறுகிறது.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உள்ள நேர்மையான முறையில் தீர்க்கப்படவேண்டிய எல்லாப் பிரச்சினைகளிலும், இந்தியக் கடன் பிரச்சினையைவிட அதிக முக்கியமான பிரச்சினை வேறு எதுவும் இல்லை. இந்தியக் கடன்சுமையை யார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அக்காலத்தின் அனல் பறக்கும் கேள்வியாக இருந்தது. அதற்கு யார் பொறுப்பு, அதன் நோக்கம் என்ன என்பதுதான் பிரச்சினையின் மையக் கருவாக இருந்தது.

இப்பிரச்சினை குறித்து மிகவும் அறிவார்ந்த முறையில் விமர்சனம் செய்தவர் மேஜர் வின்கேட் என்பவராவார். கலகம் நடந்து முடிந்த உடனேயே அவர் பின்வரும் வாதத்தை முன் வைத்தார்.

“தங்களது விவகாரங்களை நிர்வகிப்பதில் இந்திய மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனரா அல்லது இந்த நாட்டின் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தலையீடோ அல்லது குறுக்கீடோ இன்றி இந்தியாவின் வளவாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தின் வரிவிதிப்பு மற்றும் செலவினங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனவா? நிச்சயமாக இல்லை, இந்திய அரசாங்கத்தை அதன் வடிவங்கள் அல்லது அதிகாரங்கள் சம்பந்தமான கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஆரம்பம் முதல் இன்றுவரை அது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உருவாக்கமாகவே இருந்து வந்துள்ளது. கடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக இந்திய அரசாங்கத்திற்கு வழக்கப்பட்ட அதிகாரம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வழங்கிய அதிகாரமேயாகும். அது இந்த நிமிடம்வரை, கடைசி ஈட்டுப்பத்திரக் கடன் விஷயத்தில் நிகழ்ந்ததைப் போல, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள உரிமையை வலியுறுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியை பிரிட்டிஷ் நாட்டின் வெறும் டிரஸ்டிகளாகச் செயல்படுமாறுதான் நாடாளுமன்றம் பிரகடனம் செய்தது. அது, இக்கண்ணோட்டத்திற்கேற்ப அவ்வப்போது தங்களது டிரஸ்டின் நிபந்தனைகளை மாற்றியமைத்தது. இறுதியில் டிரஸ்டிகளைப் பணியிலிருந்தே விடுவித்தது. இந்த விஷயத்தை மிகக் கவனமாகப் பரிசீலிக்கும்போது, இந்திய அரசாங்கமானது இதுவரை ஒரு வேற்றுநாட்டு அரசாங்கமாக இருந்ததிலிருந்து, ஆரம்பம் முதல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு துறையாகத் தான் இருந்து வந்துள்ளது என்பதைக் காணலாம்.

கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மூலம் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அமைச்சகம், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த இந்திய நிர்வாகங்களின் கொள்கைகளைத் தீர்மானித்த மெய்யான உந்துசக்தியாக அமைந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி ஒரு வெறும் வசதியான மூடு திரையாகத்தான் இருந்தது. உண்மைகள் இவ்வாறு இருக்க அவற்றை மறுத்துப் பேச முடியாது, ஆரம்பத்திலிருந்து கடைசிவரை இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நாட்டின் நடவடிக்கைகளாகவே இருந்து வந்துள்ளன என்ற உண்மையை நாம் காண மறுப்பதுபோல் தோன்றுகிறது. இந்தியாவின் மீது ஒரு அரசியல் சட்டத்தின் நிழல் படிந்ததில்லை. அல்லது ஒரு தேசிய அரசாங்கத்தின் நிழல்கூட விழுந்ததில்லை. ஆனால், போரில் கைப்பற்றப்பட்ட நாடு என்ற முறையில்தான் இந்தியா தொடர்ந்து வரும் பிரிட்டிஷ் நாடாளுமன்றங்களின் பிரிட்டிஷ் நிர்வாகிகளின் கண்ணோட்டங்களுக்கேற்ப ஆளப்பட்டு வந்துள்ளது. இந்தியக் கடன் உண்மையில் இந்த நாட்டின் அரசாங்கத்தினால்தான் ஏற்பட்டது. அப்படியிருக்க இந்தியக் கடனுக்காக பொறுப்பிலிருந்து நாம் ஒதுங்கிக் கொள்வது சாத்தியமாகுமா?”

இங்கிலாந்துக்கான அனுகூலங்களையும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களையும் விளக்கி, பிரிட்டிஷ் மக்களின் மனித நேயத்திற்கு திரு.வின்கேட் அறைகூவல் விடுத்தார்:

“இந்த அனுகூலங்களைப் பரிசீலனை செய்வதற்கு முன்னர் மற்றுமொரு முக்கியமான உண்மை உள்ளது என்பதை வாசகர் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும். அந்த அனுகூலங்கள் பெரியவையாக இருந்தாலும் அல்லது சிறியவையாக இருந்தாலும் அவற்றினால் நாட்டுக்கு எந்தச் செலவும் ஏற்பட்டதில்லை. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆங்கிலேயர்களுக்கு இது ஒரு பிரமிப்பூட்டும் விஷயமாகத் தெரியக்கூடும். ஏனெனில் இவர்கள் கனடாவில் கலகங்களுக்காகவும், காஃபரே போர்களுக்காகவும், சிலோன் கிளர்ச்சிகளுக்காவும் மற்றும் மேற்கத்திய அடிமைகளின் பல பெரும் நடவடிக்கைகளுக்காகவும், செலுத்த வேண்டியிருந்த பெரும் தொகைகளை இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் நிதி அறிக்கைகளின் மூலம் நமது காலனிகளையும் சார்பு அரசுகளையும் ஆளுவதற்கு அல்லது பாதுகாப்பதற்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆனாலும், இந்தக் கூற்று கண்டிப்பாகவும் தாராளமாகவும் சரியானதேயாகும்.

‘நமது காலனியாதிக்க உடைமைகளின் மீது எவ்வளவோ செலவழித்திருக்கும் நாம், நன்றியில்லாத வெளிநாட்டவருக்காகப் பெரும்செலவில் பல போர்களை நடத்தியிருக்கிறோம். அப்படியிருக்க நமது மாபெரும் இந்திய சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதில் அல்லது மேம்படுத்துவதில் பணத்தைச் செலவழித்திருக்கக்கூடாது என்பது விந்தையே’ என்று நாம் வியக்கக் கூடும். “இது அவ்வாறு இருக்கக் கூடாது. இது நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது”. உண்மையில் இது அதிர்ச்சியூட்டக்கூடியதுதான். இதற்குப் பின்னால் இன்னும் அதிக ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம் இருக்கிறது. நம் நாட்டிற்கு ஒரு ஷில்லிங் செலவின்றி இந்தியா கைப்பற்றப்பட்டது என்பது உண்மை. நமது நாட்டின் செலவினங்களைப் பொறுத்தவரை இந்தியா, கிரேட் பிரிட்டனுக்குப் பெருந்தொகையைச் செலுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் மட்டும் இந்தியா, நமக்கு நம்பற்கரிய தொகையான 10கோடி ஸ்டெர்லிங்கிற்குக் குறையாமல் கப்பம் கட்டியுள்ளது என்று நம்புவதற்கான காரணங்கள் உள்ளன” இந்த இந்தியக் கப்பத்தை நீதியின் துலாக்கோலால் எடை போட்டாலும் அல்லது நமது சொந்த உண்மையான நலன்களின் வெளிச்சத்தில் பார்த்தாலும், அது மானுட இனத்திற்குப் பொது அறிவுக்குப் பொருளாதார அறிவியலின் மூதுரைகளுக்குப் புறம்மானதாக இருப்பதைக் காணமுடியும்.”

இந்தியாவின் குறைகளைத் தொட்டுக்காட்டிய திரு.வின்கேட் இங்கிலாந்து மக்களைப் பின்வருமாறு வினவுகிறார்.

“இந்தியாவில் நமது கொள்கை, அந்த நாட்டின் மக்களுடைய அப்பட்டமான, சுயநலமற்ற, தர்மசிந்தனையுள்ள எண்ணத்தினால், அது நமது சொந்த நலன்களைப் பாதிக்கக்கூடும் என்ற விதத்தில் மிகச் சிறிய அளவு மதிப்பு கூட இல்லாமல் தீர்மானிக்கப் பட்டுள்ளதா? இந்திய உற்பத்தியாளர்களின் பண்டங்களை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வதன் மீது அபரிதமான சுங்கத் தீர்வை விதிப்பதிலும் இக்கோட்பாடுதான் வழிகாட்டியதா? இந்தியாவிலிருந்து கிரேட் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்திக்கு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டது. அதேசமயம் இங்கிலாந்தைத் தவிர உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் போது அதற்கு வரி விதிக்கப்பட்டது. இது இந்தியாவின் பாலுள்ள மதிப்பினால் செய்யப்பட்டதா? பிரிட்டிஷ் கப்பல்களில் இந்தியாவுக்குக் கொண்டுவரும் சரக்குகளில் மீதான இறக்குமதி வரிகள், வேறு எந்த நாட்டுக்கும் கப்பல்களில் கொண்டு வரப்படும் இதேபோன்ற சரக்குகளின் மீது விதிக்கப்படும் வரியில் சரிபாதியாக நிர்ணயிக்கப்பட்டதும்கூட இந்திய நலனில் கொண்ட அக்கறையினால் தானோ? சாதாரணக் குற்றவியல் நீதிமன்றங்களின் வரையறைகளிலிருந்து இந்தியாவிலுள்ள ஐரோப்பியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதன் மூலம் பிரிட்டிஷார் புரியும் குற்றங்களுக்குப் பரிகாரம் காணுவது என்பது நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது வழக்குகளில் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியிருப்பதும் இந்திய மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதானோ?

வரிசெலுத்தும் இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் கல்விக்கு அல்லது அவர்களுக்கு அறிவொளியூட்டுவதற்காக எதையும் செய்வதற்கு முன்னர் இந்தியாவிலுள்ள அதிகாரப்பூர்வ ஐரோப்பியர்களுக்கு மிகுந்த செலவில் மத நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதும் கூட இந்தியமக்களின்பால் கொண்ட பரிவினால்தானோ? பிரிட்டிஷ் கருவூலத்திலிருந்து தங்களது இராணுவ பந்தோபஸ்துக்கான செலவினங்களை வழங்குவதற்காக, எல்லா பிரிட்டிஷ் சார்பு நாடுகளிலும் நிலவும் சட்டத்திற்கு எதிரான முறையில், இந்தியாவில் வசூலிக்கப்பட்ட வரிகளின் மூலமாகக் கிழக்கில் பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளைக் கைப்பற்றி, நிலைநாட்டி, விஸ்தரிக்கும் கொள்கையும் கூட அந்தந்த நாட்டுமக்களின்பால் கொண்ட சுயநலமற்ற மதிப்பினால்தானோ? கடைசியாக, இந்த நூற்றாண்டில் இந்தியாவில் வரியாக வசூலிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10 கோடி ஸ்டெர்லிங் பணத்தை கிரேட் பிரிட்டனுக்கு எடுத்துச் சென்றதும், இந்திய வருவாயிலிருந்து “உள்நாட்டுச் செலவினங்கள்” என்ற பெயரில் செலவழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததும்கூட இந்திய மக்கள் மட்டும் பயன்பெறுவதற்காக உருவாக்கப்பட்டதுதானோ? நேர்மையான வாசகர்கள் இக்கேள்விகளுக்கான பதிலைச் சிந்தித்து மனச் சாட்சிப்படி தாங்களாகவே சொல்லிக் கொள்ளட்டும், பின்னர் பிரிட்டிஷ் நலன்களும் அதேபோன்று இந்திய நலன்களும் நமது இந்தியக் கொள்கையைத் தீர்மானிப்பதில் பங்காற்றியுள்ளனவா இல்லையா என்பதைக் கூறட்டும்.”

சட்டரீதியான மானுடநேயங்கொண்ட வாதங்கள் அனைத்தைம் செவிடன்காதில் ஊதிய சங்காகவே இருந்தன. சாம்ராஜ்யத்தின் அடிமை நாடுகளை உருவாக்கிய இந்தியக் கடனைப் பகிர்ந்து கொள்ள ஆங்கிலேய நாடாளுமன்றம் அப்பட்டமாக மறுத்து விட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கடன் சுமையான 69,473,484 பவுண்டுகள் முழுவதும் – பெரும்பாலும் இது பயனற்ற செலவினங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. கம்பெனியின் செயல்பாடுகளில் எந்தவிதமான பங்கும்பெறாத ஏழ்மையில் வாடிய துணை நாட்டு மக்களின் மீதே சுமத்தப்பட்டது. இதுமட்டுமல்ல. துரதிருஷ்டவசமான கலகத்தினால் 40,000,000 பவுண்டுகள் செலவாயின. நியாயமாகப் பார்த்தால் சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதற்கான நியாயமான செலவினம் என்ற முறையில் இங்கிலாந்துதான் நியாயப்படி கலகத்திற்கான செலவினத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்திய வரி செலுத்துவோரை அடிக்கடி ஆதரித்துப் பேசிய ஜான்பிரைட் நாடாளுமன்றத்திற்குப் பின்வரும் வேண்டுகோளை விடுத்தார், “புரட்சியினால் செலவான நான்கு கோடி பவுண்டுகளின் பளுவை இந்திய மக்களின் மீது சுமத்துவது நியாயமற்றது. அது நாடாளுமன்றத்தின் முறையற்ற நிர்வாகத்தினாலும் இங்கிலாந்து நாட்டு மக்களினாலும்தான் நிகழ்ந்தது. ஒவ்வொரு நபரும் நேர்மையுடன் சிந்தித்தால் அந்த 4 கோடி பவுண்டுகளையும் இந்த நாட்டு மக்கள் (இங்கிலாந்து) மீது விதிக்கப்பட்ட வரிகளிலிருந்துதான் செலுத்த வேண்டும் என்பதில் ஐயமில்லை.”

இந்த நேர்மையற்ற ஏற்பாடுகளின் நடைமுறை விளைவினால் இந்தியமக்கள் பலகோடி பவுண்டுகள் கொடுத்து சாம்ராஜ்யத்தை விலைக்கு வாங்கினார், ஏனெனில், இக்கடன் அதற்கான செலவில் ஒரு பகுதியேயாகும். அதேப் பிரிட்டிஷ் முடியரசுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர். வேறுவிதமாகச் சொன்னால், அந்த சாம்ராஜ்யம் ஒரு வெகுமதியாகவோ அல்லது அறக்கட்டளையாகவோதான் இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குகள் சம்பந்தமான ஏற்பாடுகள் இதே நேர்மையற்ற முறையில்தான் இருந்தன. ஒரு கடன் மூலமாகத்தான் கம்பெனியின் பங்குகள் மீட்கப்பட்டன, அக்கடனும்கூட இந்திய அரசாங்கக் கடன் என்று அழைக்கப்பட்ட ஏற்கெனவே இருந்த ஏராளமான கடனுடன் சேர்க்கப்பட்டது.

உண்மையில் அச்சட்டம் செய்தது கட்டுப்பாட்டு வாரியத்தை ஒழித்ததுதான். சட்டரீதியாகக் கம்பெனி மறைந்துவிட்டபோதிலும் கூட, நடைமுறையில் இது இன்னமும் இருந்துவருவதுடன், இந்திய வருவாய்களிலிருந்து செலுத்தப்படும் வட்டியின் வடிவில் இன்றளவும் லாபப்பங்கீட்டைப் பெற்று வருகிறது. இக்கொள்கையின் வியத்தகு முடிவு என்னவெனில் இங்கிலாந்துக்கு ஆதாயங்கள், இந்தியாவுக்குச் செலவினங்கள் என்பதேயாகும். இந்தியாவுக்கு நியாயம் வழங்கும் எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போனபோது, இந்தியாவின் இந்த ஏராளமான கடனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும், அதனடிப்படையில் வரி விகிதம் குறைக்கப்பட்டு இந்திய வரி செலுத்துவோரின் பளு குறைக்கப்படும் என்றும் ஒரு மசோதாவை டெர்பிபிரபு முன்வைத்தார். அவர் கூறியதாவது,

“இந்த நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஒரே சீரான கொள்கை, இந்தியக் கருவூலமே பொறுப்பு என்று கூறப்படும் இந்தியாவின் கடன் சம்பந்தமான எல்லாப் பொறுப்புகளையும் மறுப்பதுதான் என்பதை நானறிவேன். இப்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, அக்கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் நான் பரிந்துரைக்கப்போவதில்லை என்று உடனடியாக என்னால் கூறமுடியும். இத்தகைய எந்த ஒரு ஏற்பாடும் எத்தகைய அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நானறிவேன். அதேபோல, அத்தகைய ஏற்பாடு எத்தகைய மறுதலிப்பைத் தவிர்க்க முடியாதவாறு பெறும் என்பதும் எனக்குத் தெரியும். திரும்பத் திரும்பத் தோன்றும் இப்பிரச்சினையை வருங்காலத்திலும் நிகழ்காலத்திலும் பரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும்.

இந்த வகையில் ஏற்கெனவே நடப்பிலிருக்கும் கொள்கையில் மாற்றம் ஏற்படுமானால், அக்கடன் பொறுப்புகளுக்கு ஒரு தேசிய உத்தரவாதம் வழங்கப்படும்போது, அந்த உத்தரவாதம் இந்தியக் கடன் மீதான வட்டியை 750,000 பவுண்டுகள் அல்லது 1,000,000 பவுண்டுகளாகக் குறைப்பதற்குப் பாடுபடும். அவ்வாறு செய்யும்போது அது கடனடைப்பு நிதியாக உருவாக்கப்பட்டு மொத்தக் கடனையும் தீர்ப்பதற்குச் செலுத்தப்படும் விதத்தில் செயல்படும்.”

குறுகிய கண்ணோட்டத்துடன் இதை எதிர்த்த ஜான் பிரைட் கூறினார்.

“இந்த அடிப்படையில் ஓர் ஏகாதிபத்திய உத்தரவாதத்தை நான் ஆட்சேபிக்கிறேன். இந்தியாவின் செல்வாதாரங்களை வற்றடித்தபின், இந்தியாவின் சேவைகளிலிருந்து நாம் விலகி விட்டோமானால், ஆங்கிலேய மக்களின் பாக்கெட்டுகளில் அவர்கள் கைவைக்க வேண்டியிருக்கும். இந்தியச் செலவினங்களின் மீது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாதிருக்கும் இங்கிலாந்து மக்கள், எந்த அளவுக்குக் கற்பனைக்கும் எட்டாத ஊதாரித்தனத்திற்குச் செல்வார்கள் என்று கூறுவது கடினம். இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில் இங்கிலாந்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லாதிருப்போமாக!”

இந்த அபாயத்தைத் திரு.பிரைட் இந்த அளவுக்குப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமல்ல, “இந்தியாவின் விவகாரங்களை இங்கிலாந்து மக்கள் அசட்டை செய்வதை விரைவிலேயே நிறுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதைக் காணவும், இந்தியக் கடன் மீதான பொறுப்புகளின் ஒரு பகுதியைத் தங்கள் மீது சுமத்தினாலும் கூட, இந்தியச் செலவினங்களின் மீது அவர்கள் ஒரு மெய்யான கட்டுப்பாட்டைப் பெற்றிருப்பார்கள் என்பதைக் காணவும்” அவர் தவறிவிட்டார்.

விவாதங்களனைத்தும் பயனற்றவையாக இருந்தன, பேசிப் பேசிக் காலவிரயம்தான் ஏற்பட்டது. இந்த வகையிலும் இந்திய மக்களுக்கு “எண்ணற்ற துன்பங்களிலிருந்து” எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

அந்தக் கூட்டம் எதிர்காலத்தில் என்ன செய்வதாக உத்தேசித்திருந்தது என்பதை இப்போது பார்ப்போம். பிரிவு 55 கூறியதாவது,

“மேதகு மகாராணியின் இந்திய ஆஸ்திகளின் மீது உண்மையிலேயே போர்தொடுக்கப்படும்போது அதை எதிர்க்கவும் அல்லது தடுக்கவும். அல்லது இதர அவசரத் திடீர்த் தேவை ஏற்படும்போதும் தவிர, நாடாளுமன்றத்தின் இரு சபைகளுடைய ஒப்புதல் இன்றி இந்தியாவின் வருவாய்கள் இத்தகைய ஆஸ்திகளின் எல்லைகளுக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் எந்தவித இராணுவ நடவடிக்கைக்காகவும் செலவழிக்கப் பயன்படுத்தக்கூடாது.”

திரு.ஆர்.சி.தத்தின் அறிவாற்றலுக்கு ஆழ்ந்த மதிப்பளிக்கும் ஒருவரால், இப்பிரிவைப் “பாராட்டத்தக்கதொரு நிதி சார்ந்த ஷரத்து” என்று எந்த அடிப்படையில் அவர் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளமுடியாது. கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி நிர்வாகத்தைவிட மேம்பட்டது என்பதில் யாரும ஐயுறமுடியாது. ஆனால் இதைப் பாராட்டத்தக்கது என்று எந்தவகையிலும் கூறமுடியாது. ஏனெனில், இச்சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் கூட இந்தியாவின் வருவாய்கள் இந்தியக் காரணங்கள் அல்லாதவற்றிற்காக இந்தியாவுக்கு வெளியேயும் செலவழிக்கப்பட்டுவந்தன. மிக மோசமான தவறு இதில்தான் உள்ளது. இந்தியாவுக்கு வெளியே இந்திய வருவாயைச் செலவழிக்க அனுமதிக்கும் மேற்கூறிய பிரிவில் உள்ள விதிவிலக்கு அளிக்கும், உட்பிரிவு ஜீவாதாரச் சொல்லான முந்தைய என்பதைத் தவிர்க்கிறது. அந்த உட்பிரிவு பாராட்டுக்குரியதாக இருக்க வேண்டுமெனில் அது பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும். “நாடாளுமன்றத்தின் இரு சபைகளுடைய முன் அனுமதியின்றி இந்தியாவின் வருவாய்கள் பயன்படுத்தப்படமாட்டாது போன்ற…..” மேற்கூறப்பட்டது போல் அல்ல. ஒரு அடையாளம் தெரியாத எழுத்தாளர் கூறுகிறார், “மூலநகலில் அந்த அத்தியாவசிய ஷரத்து இடம்பெற்றிருந்திருக்கக் கூடும், ஆனால் பின்னர், வெளியுறவுத் துணை அமைச்சரின் விலக்கையும், பொறுப்பின்மையையும், தனிப்பட்ட ஏதேச்சதிகாரத்தையும் பெறுவதற்காக பிரிவுகள் 26,27,28 ஆகியவற்றை உருவாக்கிய அதே குறும்புத்தனமான கரம்தான் அதை நீக்கியிருக்கக் கூடும்.”

நீக்கப்பட்ட ஷரத்தைச் சேர்ப்பதில் ஒன்றுபட்டு நின்ற லார்டு ஸ்டான்லியும், டெர்பியின் ஏர்லும் தான் அச்சட்டத்தை வடிவமைப்பதற்கு அரும்பாடுபட்டனர் என்பதை எடுத்துக் கூறிய அந்த எழுத்தாளர், பிரிவு 55 தொடர்பாகத் திரு.கிளாட்ஸ்டோனின் கருத்தையும் பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்.

“மிகக் கவனமாக விளக்கப்பட்ட சில குறிப்பிட்ட விசேட சந்தர்ப்பங்களைத் தவிர, இந்திய எல்லைக்கப்பால் இந்தியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக இந்தியப் பணத்தை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஆரம்ப சம்மதம் தேவை என்பதைக் கூறுவதுதான் இந்த உட்பிரிவின் நோக்கம் என்பது எனது கருத்தாகும். உண்மையில் அது இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கேயாகும். இது என் நினைவுக்கு வருகிறது. இந்த உட்பிரிவை வகுத்துக் கொடுத்தது நான்தான். இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த இப்போதைய லார்டு டெர்பி, அதன் குறிக்கோள்கள் சம்பந்தமாக என்னுடன் ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தார்.”

அதே எழுத்தாளர் தொடர்ந்து கூறுகிறார்;

“சட்டத்தின் இந்த வெறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஷரத்துக்களின் கீழ் மிகப்பகட்டாகச் செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை சற்றும் மதியாமல் நடந்துகொண்டதைவிட “மகாராணியின் இந்தியா”வுக்குப் பேரழிவையும் நிதி சார்ந்த சேதத்தையும் விளைவித்த சில காரணங்களும் உண்டு. அப்பிரிவில் “முந்தைய” என்ற சொல் சேர்க்கப்பட்டிருந்தாலும் கூட, அரைவேக்காட்டு ஏகாதிபத்திய நலன்களின் சார்பாக எழுந்த கூச்சல் அல்லது கட்சித் திட்டங்களின் உடனடித் தேவைகள் போன்றவை, இந்திய மக்களின் உரிமை கோரல்களையும் உரிமைகளையும் புறக்கணிப்பதற்குப் போதுமானவையாக இருந்திருக்கக் கூடும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், அச்சொல் குறைந்தபட்சம் மதிப்பிடற்கரிய ஒரு தாமத்தைப் பெற்றுத்தந்திருக்கும், அப்போது நியாயத்தின் குரல் செவிமடுக்கப்பட்டிருக்கும்.”

இச்சட்டத்தின் நிதி சாராத பிரிவுகள் வருமாறு:

1) கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதேசங்கள் மேதகு ராணியாரின் கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியும் கட்டுப்பாட்டு வாரியமும் பிரயோகித்துவந்த அதிகாரங்கள் இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர் 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலை நியமித்தார். அந்த உறுப்பினர்கள் நன்னடத்தையுடன் பதவி வகித்தனர். ஒவ்வொரு உறுப்பினரும் இந்தியாவின் வருவாய்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 1200 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்றனர். வெளியுறவுத்துறை அமைச்சரின் ஊதியம் மற்றும் அவரது அமைச்சகத்திற்கான செலவினங்கள் முழுவதும் இந்திய வருவாயிலிருந்து செலுத்தப்பட்டன.

2) ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிரக் கவுன்சிலின் பெரும்பான்மை முடிவுக்கு எதிராகச் செயல்படுவதற்கு வெளியுறவுத் துறைச் செயலர் அதிகாரம் பெற்றிருந்தார். சமாதானம் மற்றும் போர் சம்பந்தமான பிரச்சினைகளிலும் கூட (இதுவரை இப்பிரச்சினைகளை இயக்குநர்கள் மன்றத்தின் ரகசியக் கமிட்டியின் மூலமாக கட்டுபாட்டு வாரியம் கையாண்டு வந்தது) தனது கவுன்சிலைக் கலந்தாலோசிக்காமல் உத்தரவுகளை அனுப்பவும் அல்லது உறுப்பினர்களுக்கு அந்த உத்தரவுகளைத் தெரிவிக்கவும் வெளியுறவுத்துறைச் செயலர் அதிகாரம் பெற்றிருந்தார்.

3) இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மதராஸ் மற்றும் பம்பாயின் கவர்னர்களை இனி மேதகு ராணியார் நியமிப்பார். மேதகு ராணியாரின் சம்மதத்துடன் லெப்டினன்ட் கவர்னர்களை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். போட்டியின் மூலம் இந்தியாவின் சிவில் சர்வீசுக்கு அனுமதிப்பதற்கான விதிகளை வெளிவிவகாரத்துறைச் செயலர் உருவாக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட நிர்வாகப் பிரிவின் தீயபோக்குகள் 1.எதேச்சதிகாரம், 2.ரகசியம் மற்றும் 3.பொறுப்பின்மை ஆகியவற்றுக்குச் சான்று பகருகின்றன. இவையனைத்தும் நாட்டின் நல்ல நிர்வாகத்திற்கு எதிரானவையாகும். தங்களது சொந்த நாட்டின் நிர்வாகத்தில் சொந்த நாட்டு மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் ஷரத்து எதுவும் அச்சட்டத்தில் இல்லை என்பது வருத்தற்குரியது. இந்த முக்கிய விஷயத்தில் கம்பெனியின் நிர்வாகம் முடியரசின் நிர்வாகத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது என்று எவரேனும் கூற முடியுமா?

இச்சட்டத்தின் ஷரத்துக்களுக்கு விளம்பரம் கொடுப்பதற்காக விக்டோரியா ராணி, லார்டு டெர்பியை (அதன் முதலாவது நகலில் திருப்தியடையவில்லை என்பது தெளிவாகிறது) ஒரு பிரகடனம் வெளியிடுமாறு பணித்தார். அது “பெருந்தன்மை, இரக்க குணம் மதசகிப்புத்தன்மை போன்ற உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும், பிரிட்டிஷ் முடியரசின் பிரஜைகளுக்குச் சமமாக இந்தியர்கள் பெறவிருக்கும் சலுகைகளையும், நாகரிகத்தின் வழியில் கிடைக்கவிருக்கும் வளவாழ்வையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

இந்தியாவில் இப்பிரகடனம் வாசித்தளிக்கப்பட்டது. இந்தியாவின் அரசியல் உரிமை ஆவணமாகவும் அது கருதப்பட்டது. அந்த அரசியல் உரிமை ஆவணத்தில் மக்கள் உரிமைகள் அடங்கியிருக்கவில்லை. ஆனாலும் அது ஒரு மகத்தான ஆவணமாக இருந்தது.

இந்தியாவுக்கு இங்கிலாந்தின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இங்கிலாந்திற்கு இந்தியாவினுடைய பங்களிப்பின் அளப்பரிய தன்மையைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு இங்கிலாந்தின் பங்களிப்பு கெட்டி இல்லை என்பது திகைப்படையச் செய்வதாக உள்ளது. பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது இந்த இரு கூற்றுகளுமே உண்மைதான். மற்றொரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, இந்தியாவின் பங்களிப்பை நீதி மற்றும் மானுடநேயம் என்ற துலாக்கோலில் நிறுக்கமுடியாது எனில், இங்கிலாந்தின் பங்களிப்பைத் தங்கம் வெள்ளி என்ற தராசில் எடை போடமுடியாது. கடைசியில் கூறப்பட்ட கூற்று உயர்வு நவிற்சியின்றியும் உருவகமாகவும் உண்மையானதாகும். இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளிச் சேமிப்பைப் பெருக்குவதற்கு இங்கிலாந்து எதுவும் செய்யவில்லை. மாறாக “உலகின் சாக்கடைக்குழி”யான இந்தியாவை அது வற்றடித்து விட்டது.

அதன் பங்களிப்பு பொருளாதாரமில்லாத துறையில்தான் இருக்கிறது. ஆனாலும் கூட அது நாணயத்தினால் அளவிட முடியாத அளவுக்கு மகத்தானது.

“இந்தியாவில் தாங்கள் ஆற்றிய பணிகளை ஆங்கிலேயர்கள் கலப்படமற்ற திருப்தியுடன் இல்லாவிடினும் நியாயமான பெருமிதத்துடன் திரும்பிப் பார்க்க முடியும். இந்திய மக்களுக்கு அவர்கள் மகத்தான மானுடக் கொடையாம் அமைதியை வழங்கியுள்ளனர் மேற்கத்தியக் கல்விமுறையை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர், தொன்மையான நாகரிகத்தைக் கொண்ட நாட்டை நவீன அமைப்புகளுடன், நவீன வாழ்வுடன் தொடர்புபடுத்தினர். அவர்கள் உருவாக்கியுள்ள நிர்வாக அமைப்பில் காலப்போக்கில் சீர்திருத்தம் தேவைப்பட்டபோதும் கூட, அது வலுவானதாகவும் திறமையுடன் செயல்படக்கூடியதாகவும் உள்ளது. அவர்கள் அறிவார்ந்த சட்டங்களை இயற்றியுள்ளனர். நீதிமன்றங்களைத் தோற்றுவித்தனர், இந்த நீதிமன்றங்களின் தூய்மையை உலகின் எந்த நாட்டு நீதிமன்றங்களுடனும் ஒப்பிடமுடியும். இந்தியாவில் பிரிட்டிஷார் ஆற்றியுள்ள பணிகளின் இப்பலன்களை விமர்சிப்பவர் எவரும் உயர்வாகப் பாராட்டாதிருக்க முடியாது”

ஆனால், வெறும் மிருகத்தனமான அமைதிக்குப் பதிலாகப் பொருளாதார ஏழ்மையை விரும்பமுடியுமா என்பதை ஒவ்வொரு வரும் முடிவு செய்து கொள்ளட்டும்.

(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)