(இந்தியத் தகவல் ஏடு, டிசம்பர் 15, 1945 பக்.692-95)        

         “வெள்ளக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரிஸ்ஸா விரும்புகிறது. மேலும் மலேரியா போன்ற (அமெரிக்க வருணனையில்) வருவாய் குறைந்தோர் நோய்கள் மக்களின் நலத்தைப் பாதித்து, அவர்களுடைய ஆற்றல் திறத்தையும் குறைத்துவிடும் கொடுமையிலிருந்து விடுபடுவதற்கும் ஒரிஸ்ஸா விரும்புகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாசனம், நீர்வழிப் போக்குவரத்து, மலிவான மின்னாற்றல் ஆகியவற்றைப் பெருக்கி முன்னேற்றம் காணவும் ஒரிஸ்ஸா விரும்புகிறது. இந்த நோக்கங்கள் அனைத்தையும் ஆற்று வெள்ளத்தை அணைக்கட்டுகளில் நோக்கிச் சேமிக்கும் திட்டமொன்றின் மூலமாகவே நிறைவேற்றிட முடியும்.”

            நவம்பர் 8 இல் கட்டாக்கில் நடைபெற்ற மத்திய அரசு, ஒரிஸ்ஸா, மத்திய மாகாணங்கள், கிழக்கு சமஸ்தானங்கள் ஆகிய அரசுகளின் மாநாட்டில் இந்திய அரசின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இம்மாநாடு ஒரிஸ்ஸாவில் பாயும் ஆறுகளின் வளத்திட்டங்களை ஆராய கூட்டப்பட்டது.

ஒரிஸ்ஸாவின் பிரச்சினைகள்

         ஒரிஸ்ஸாவின் பிரச்சினைகள் குறித்து தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் குறிப்பிட்டதாவது: “வெள்ளம்தான் பிரச்சினை என்று கூறுவது பிரச்சினையை மிகவும் சாதாரணத்தனமாக்கிக் கூறுவதாகும். ஆனால் இச்சிக்கலை, நான் வேறு கண்ணோட்டத்தோடு நோக்குகிறேன். ஒரிஸ்ஸாவைப் பற்றி எண்ணும்போது அவர்கள் படும் துயரம் ஒன்றல்ல மிகப்பல என்றே எனக்குத் தோன்றுகிறது.

ambedkar and nehru            “ஒரிஸ்ஸாவின் துன்பமாக அனைவரும் அறிந்துரைக்கிற ஒன்று அம்மக்கள் வெள்ளத்தால் அடையும் உயிர், உடைமை இழப்புகளும், பாதுகாப்பின்மை எனும் அச்சமுமே ஆகும். இத்துயரத்திற்கு வெள்ளம் மட்டுமே காரணமல்ல. வறட்சியும் பஞ்சமும் கூட அவர்களுக்குத் துன்பம் விளைவிக்கின்றன. வெள்ளம் விளைவிக்கின்ற துன்பங்களுக்குச் சற்றும் குறையாத அளவில் வறட்சியும் பஞ்சமும் அவர்களை வாட்டுகின்றன. 1866 ஆம் ஆண்டின் வறட்சியின்போது பூரி மாவட்ட மக்கள் தொகையில் 40 சதவீதம் அழிந்து விட்டதாக அறிகிறோம்.

            “ஒரிஸ்ஸாவின் துயரங்களில் மற்றொன்று நலக்கேடாகும். ஒரிஸ்ஸா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 771/2 இலட்சம். மாகாணத்தின் நலத்துறை அறிக்கையின்படி 1944 ஆம் ஆண்டில் இறந்தோர் எண்ணிக்கை 2,35,581. இதில் மலேரியா முதலிய காய்ச்சல்களால் (பெரும்பாலும் மலேரியாவால்) மட்டுமே 1,30,000 பேர் இறந்துள்ளனர். அதாவது, ஒரிஸ்ஸாவின் மக்கள் தொகையில் அவ்வாண்டில் 3% மக்கள் இறந்துள்ளனர். அதில் பாதிப்பேர் மலேரியாவால் இறந்துள்ளனர். இது மிக அதிகமெனலாம். 1944 ஆம் ஆண்டில் மாணவர் தொகையில் 19% உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 8.7% மாணவர்களிடம் வைட்டமின் பற்றாக்குறை காணப்பட்டது.

            இந்தத் தகவல்கள் உண்மையெனில் ஒரிஸ்ஸாவை வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள மாநிலம் என்று கூறமுடியாது. ஒரிஸ்ஸாவின் மூன்றாவது துன்பம் (துன்பமெனக் கருதலாம் என்பது எனது கருத்து) போதிய தகவல் தொடர்பின்மையாகும். ஒரிஸ்ஸா ஒரு மூடப்பட்ட பிரதேசமாகும். கிழக்குக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ரயில்பாதை ஒன்றைத் தவிர உள்நாட்டுப் பகுதிகளோடு தொடர்பு கொள்ளத் தகுந்த வசதிகளேதும் அங்கு இல்லை.”

            டாக்டர் அம்பேத்கர் “ஒரிஸ்ஸா தொடர்ந்து நிலை தாழ்ந்த மாநிலமாகவே விளங்க வேண்டுமா?” என்ற வினாவை எழுப்பி, “தேவையில்லை; ஏனென்றால் ஒரிஸ்ஸா மாநிலம் ஏராளமான இயற்கை வளங்களைப் பெற்றுள்ளது. நிலக்கரி, இரும்பு, குரோமியம், பாக்சைட், சுண்ணாம்புக்கல், கிராப்பைட், மைக்கா போன்ற கனிம வளங்களுடன் ஏராளமான மூங்கில் காடுகளையும் கொண்டுள்ளது.”

            “இவை அனைத்துக்கும் மேலாக ஒரிஸ்ஸா மாநிலம் ஏராளமான நீர்வளம் கொண்டதாகும். ஒரிஸ்ஸாவின் ஆறுகளில் ஏராளமான அளவில் நீர் பாய்கிறது. கட்டாக், பூரி, பாலசோர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 8000 சதுரமைல் டெல்டா பரப்பில், மகாநதி, பிரமானி, பைத்தராணி ஆகிய ஆறுகளும் அவற்றின் எண்ணற்ற கிளை ஆறுகளும் பாய்கின்றன.

            “இந்த டெல்டாவில் புராபலாங், சப்ரமரேகா என்று (அவ்வளவு முக்கியமில்லாத) மேலும் இரண்டு நதிகள் பாய்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட மூன்று முக்கிய நதிகளும் டெல்டா பகுதிக்கு முன்பாய் அமைந்துள்ள மத்திய மாகாணங்கள், பீகார், கிழக்கு சமஸ்தானங்கள் ஆகியவற்றில் 69,800 சதுரமைல் பரப்பிலிருந்து நீரை வடித்துக் கொண்டு வருகின்றன. இவற்றுள் மிகப் பெரியதான மகாநதி மட்டுமே 51,000 சதுரமைல் பரப்பிலிருந்து நீரை வடித்துக் கொண்டு வருகிறது. இம்மூன்று நதிகளும் சேர்ந்து, ஆண்டுதோறும் 9 கோடி ஏக்கர் அடி நீரைக் கடலுக்குள் செலுத்திக் கொண்டிருக்கின்றன.”

நீர்ச் செல்வத்தின் பயன்பாடு

         தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் தொடர்ந்து கூறியதாவது: “இவ்வளவு வளங்களை வைத்துக் கொண்டு ஒரிஸ்ஸா ஏன் தொடர்ந்து பின்தங்கிய ஏழை மாநிலமாக விளங்க வேண்டும்? இதற்கு எனக்குத் தோன்றும் விடை என்னவெனில் ஒரிஸ்ஸா மாநிலம் தனது நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் வழியை அறியவில்லை என்பதே. வெள்ளச்சேதத்தைக் குறித்துப் பலமுறை ஆய்வு செய்துள்ளனர் என்பதில் ஐயமேதுமில்லை. 1872 ஆம் ஆண்டிலேயே திரு.ரேனந்தைக் கொண்டு ஒரு பொது ஆய்வு நடத்தப்பட்டது. அவருடைய ஆய்வறிக்கை என்னவாயிற்று என்பது தெரியவில்லை. அதன் பின்னர் 1928 வரை வேறு முயற்சிகளேதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. 1928 இல் இருந்து 1945 வரை வெள்ளப் பிரச்சினையை ஆய்வதற்காகத் தொடர்ந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

            “1928 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வங்காளத் தலைமைப் பொறியாளர் திரு.ஆடம்ஸ் வில்லியம்ஸ் தலைமையில் ஒரிஸ்ஸா வெள்ள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் திறமைமிக்க திரு.எம்.விசுவேசுவரய்யா பொறுப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அவர் 1937 ஆம் ஆண்டில் ஒன்றும், 1939 ஆம் ஆண்டில் ஒன்றுமாக இரண்டு ஆய்வறிக்கைகள் கொடுத்துள்ளார். இவரது பணி ஒரிஸ்ஸா வெள்ள ஆலோசனைக் குழுவால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டது. இக்குழு 1938 ஆம் ஆண்டில் ஒரு தொடக்கநிலை அறிக்கையும், 1942 ஆம் ஆண்டுவரை தொடர்ந்த பணியில் மேலும் மூன்று இடைக்கால அறிக்கைகளும் கொடுத்தது. அண்மைக்கால முயற்சியாக, 1945 மார்ச் 15இல் ஒரிஸ்ஸா அரசாங்கம் கட்டாக்கில் கூட்டிய வெள்ளை மாநாடு பற்றிக் குறிப்பிடலாம்.

            “இக்குழுக்களில் மரியாதைக்குரிய உறுப்பினர்கள் பலர் பணியாற்றி உள்ளனர் என்றாலும் அவர்கள் சரியான அணுகுமுறையில் செயல்படவில்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது. அவர்கள் அனைவருமே மிகுதியாகப் பாயும் நீரை ஒரு தீமை என்றே கருதி சேதம் அதிகமில்லாமல் அதனை கடலுக்குள் அனுப்பிவிடும் வழிமுறைகளைப் பற்றியே சிந்தித்தனர். இவையனைத்தும் மிகவும் தவறான கருத்துகள் என்பதும், மக்களின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய கருத்துக்கள் என்பதும் இப்போது உணரப்படுகிறது.

நீர்ச் சேமிப்பு

            “மிகுதியாகக் கிடைக்கும் நீர் தீங்கு செய்யும் என்பது தவறான கருத்தாகும். தீமையாக முடியும் அளவுக்கு மிகுதியான நீர் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. மக்கள் மிகுந்தநீரில் துன்பப்படுவதை விட நீர்ப் பற்றாக்குறையாலேயே மிகவும் துன்பப்பட்டு வந்துள்ளனர். இயற்கை நமக்கு நீரைத் தருவதில் கஞ்சத்தனம் காட்டுகிறது என்பது மட்டுமே துன்பமன்று. அதை, சரியான நேரத்தில் தராமையாலும் புயலும் வறட்சியுமாய் மாறிமாறித் துன்பம் விளைகிறது. இருப்பினும் நீர் என்பது மக்களின் சொத்து என்பதோடு அது சரியான வகையில் விநியோகிக்கப்படாததால், அதைப் பற்றிக் குறை கூறுவதை விடுத்து நீரைச் சேமிக்கும் முயற்சியே சரியான அணுகுமுறையாகும்.

            “மக்கள் நலநோக்கில் நீரைச் சேமிப்பதே தலையாய பணியெனில், ஆற்றுக்குக் கரைகட்ட நினைப்பது தவறான திட்டமாகும். நீரை சேமிக்க விரும்பும் நமது குறிக்கோளுக்கு உதவாமல் நீரை வீணடிப்பதிலேயே இத்திட்டம் செயல்படுமென்பதால் அதனைக் கைவிட வேண்டும். ஒரிஸ்ஸா மாநில டெல்டா பகுதி நீர் நிறைந்த பகுதி என்பதோடு, மிகை நீரால் வரும் தீமைகளும் நிறைந்த பகுதி என்பதே பொருத்தம். அமெரிக்காவிலும் மிசௌரி, மிசிசிபி, டென்னஸ்ஸி போன்ற ஆறுகளால் இத்தகைய சிக்கல்கள் தோன்றியுள்ளன.

            “எனவே, ஒரிஸ்ஸா மாகாணம் இச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா கடைப்பிடித்த வழியையே பின்பற்றலாம். அவ்வழியானது, ஆறுகளின் குறுக்கே பல்வேறு இடங்களில் அணைகளைக் கட்டி நீரை நிலையாகச் சேமித்தலாகும். பாசனத்துக்கு மட்டுமன்றி மேலும் பல வழிகளில் இந்நீர்த்தேக்கங்கள் உதவும். மகாநதியின் நீரை மட்டும் நாம் முழுமையாகத் தேக்கினால் பத்து லட்சம் ஏக்கர் பரப்பில் பாசனம் செய்ய உதவுமென்று கூறுகின்றனர். மேலும் தேக்கங்களில் சேமிக்கப்படும் நீரை மின்னுற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

            “ஏராளமான கனிம வளங்களைக் கொண்ட ஒரிஸ்ஸா மாநிலம் தொழிற்துறை வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு தேவையான மின்னாற்றல் பற்றாக்குறையே. அணை கட்டுவதன் மூலம் நீண்ட வருங்காலத்தில் ஒரிஸ்ஸாவின் தேவைக்கும் மிஞ்சியதாக ஏராளமான மின்னாற்றல் கிடைக்கப் பெறும். அத்துடன், நீர்வழிப் போக்குவரத்துக்கும் இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

            “இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்தின் வரலாறு தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறையின் திட்டங்களில் நீர்வழிப்போக்குவரத்து முதன்மையிடம் பெற்றிருந்தது. இன்று நாம் இந்தியாவில் காணும் போக்குவரத்துக் கால்வாய்கள் பலவும் (ஒரிஸ்ஸாவிலும் ஒரு கால்வாய் உண்டு) அக்காலக் கொள்கையின் விளைவே. ரயில் போக்குவரத்து பின்னர்தான் வந்தது. ரயில் போக்குவரத்து, கால்வாய் போக்குவரத்துகள் இரண்டையும் வளர்ச்சியுறச் செய்ய வேண்டுமென்ற கொள்கை சிறிது காலத்திற்கு தொடர்ந்தது.

            “1875இல் ரயில்பாதை வளர்ச்சிக்கும் கால்வாய் வளர்ச்சிக்கும் இடையே பெரும் கருத்துப் பூசல் மூண்டது. பெரும் சிந்தனையாளரான காலம் சென்ற சர்.ஆர்தர் காட்டன், கால்வாய்களின் முன்னுரிமைக்காக தீவிரமாகப் போராடினார். ஆனால், ரயில்வே ஆதரவாளர்களே வெற்றி பெற்றனர்.

            “கால்வாய்களைப் புறந்தள்ளி ரயில்பாதை வளர்ச்சி பெற்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. மேலும், கால்வாய்கள் போதிய வருவாய் அளிக்கவில்லையாதலால் அவை மூடப்பட வேண்டும் என்று ரயில்பாதை ஆதரவாளர்கள் வைத்த வாதமும் அறியாமையின் விளைவே என்று கருதுகிறேன். கால்வாய்களில் இருந்து போதிய வருவாய் கிடைக்கப்பெறாமைக்குக் காரணம் அவற்றைச் சரியாக பூர்த்தி செய்யாமல் விட்டதுடன் பல பகுதிகளில் சிதைவுற விட்டுவிட்டமையாலும் தானேயன்றிப் பொருளாதார காரணத்தால் அன்று. கடந்த காலத்தில் புறக்கணித்ததைப் போன்று இனியும் நாம் நீர்வழிப் போக்குவரத்தை விட்டுவிட முடியாதென்று உறுதியாகக் கருதுகிறேன். பழைய கால்வாய்களைச் சீரமைத்தும் புதிய கால்வாய்களைச் செம்மையுற அமைத்தும் ரயில் பாதைகளுக்கு குறையாத திறத்துடன் கால்வாய்ப் போக்குவரத்து நடத்துவதற்கு நாம் ஜெர்மனியிடமிருந்தும், ருசியாவிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிறப்புக் கூறு

         பாசனத்திற்கும் மின் உற்பத்திக்கும் பயன்படுவதுடன் நெடுந்தூர நீர்வழிப் போக்குவரத்துக்கும் வாய்ப்பாக அமைந்திருத்தலே ஒரிஸ்ஸா ஆறுகளின் சிறப்புக் கூறு என்பதை தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மேலும் வலியுறுத்திக் கூறினார். “சந்த்பாலியை சாம்பல்பூர் மற்றும் அதற்கப்பால் உள்ள பகுதிகளுக்கும் உள்நாட்டு நீர்வழி மூலம் இணைப்பதற்கு மூன்று அணைக்கட்டுக்களைக் கட்டி வழிவகுக்க முடியும். மலையிலிருந்து ஆறு தரையிறங்குமிடத்தில் (நராஜிலிருந்து ஏழுகல் தொலைவில்) ஓர் அணையும் திக்கிப் பாறையில் ஓர் அணையும் சாம்பல்பூருக்கு அப்பால் ஒர் அணையும் ஆக மூன்று அணைகள் கட்டினால் இவற்றை 350 மைல் நீள கால்வாய்கள் மூலம் இணைத்து, ஆண்டு முழுவதும் மலிவான பயணம் மற்றும் சரக்குப் போக்குவரத்து வழியாகப் பயன்படுத்த இயலும். கடலில் இருந்துவரும் சிறு கப்பல்கள் கால்வாய்கள் வழியே உள்நாட்டுக்குள்ளும் பயணத்தைத் தொடர்ந்து கட்டாக், சாம்பல்பூர் ஆகிய நகரங்களின் வழியே மத்திய மாநிலம் வரைத் தொடர்பு கொள்ள முடியுமெனில் நாம் பெறும் நலன்களைக் கற்பனை செய்து பாருங்கள். தீமையாகக் கருதப்படும் ஒன்றை நன்மை தரும் ஆற்றலாக மாற்றும் திறன் இத்திட்டத்தில் இருப்பதை உணரலாம்.

            “வெள்ளக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரிஸ்ஸா விரும்புகிறது. மேலும் மலேரியா போன்ற (அமெரிக்க வருணனையில்) வருவாய் குறைந்தோர் நோய்கள் மக்களின் நலத்தைப் பாதித்து, அவர்களுடைய ஆற்றல் திறத்தையும் குறைத்துவிடும் கொடுமையிலிருந்து விடுபடுவதற்கும் ஒரிஸ்ஸா விரும்புகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாசனம், நீர்வழிப் போக்குவரத்து, மலிவான மின்னாற்றல் ஆகியவற்றைப் பெருக்கி முன்னேற்றம் காணவும் ஒரிஸ்ஸா விரும்புகிறது. இந்த நோக்கங்கள் அனைத்தையும் ஆற்று வெள்ளத்தை அணைக்கட்டுகளில் தேக்கிச் சேமிக்கும் திட்டமொன்றின் மூலமாகவே நிறைவேற்றிட முடியும்.

பல்நோக்கு நீர்த்தேக்கங்கள்

         “எனவே 1945இல் நடைபெற்ற ஒரிஸ்ஸா மாகாண வெள்ளக்காப்புக் குழுவின் கூட்டத்தில், ஒரிஸ்ஸாவின் வெள்ளக்கேடுகளுக்கு சரியான இறுதித்தீர்வு பல்நோக்கு நீர்த்தேக்கங்களைக் கட்டுவதே என்று தீர்மானிக்கப்பட்டதைக் குறித்து நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். நானோ, இது ஒன்றே உரிய தீர்வாகக் கருதப்பட்டு, உடனடித் திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று கருதுகிறேன். இத்திட்டத்தினால் பெறக்கூடிய வாய்ப்புகள் பலருக்கு இப்போது புலனாகாதிருக்கலாம். ஆனால், கிடைக்கும் நன்மையோ மிகப் பெரிது. எனவே, கிடைக்கக்கூடிய நன்மையின் தன்மை பற்றி ஒரிஸ்ஸா மாகாண அரசுக்கும், ஒரிஸ்ஸா மாகாண மக்களுக்கும் ஓரளவேனும் தெரிவித்து, இத்திட்டத்தில் அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

            “ஒரு ஒப்புமையின் மூலம் இதனை ஒருவாறு உணர்த்த முடியும். அமெரிக்காவில் போல்டர் அணை கட்டப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கமே, உலகின் செயற்கை ஏரிகளில் மிகப் பெரியது. அதனோடு ஒப்பிடக்கூடிய அளவில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையும், ஐதராபாத் சமஸ்தானத்தில் துங்கபத்திரை அணையும் கட்டப்படவிருப்பதாக அறிகிறோம். ஒரிஸ்ஸாவில் அணை கட்டப்பட்டால் மேட்டூர், துங்கபத்திரா அணை போல் மூன்று மடங்கு நீரைத் தேக்கக்கூடிய நீர்த்தேக்கம் உருவாகும். மகாநதி மட்டுமே ஆண்டுதோறும் 65 கோடி 50 லட்சம் ஏக்கர் அடி நீரைச் செலுத்துகிறது. அதாவது, மேட்டூர் அணையின் கொள்ளளவு போல் முப்பது மடங்கு நீர். துங்கபத்திரா அணையின் கொள்ளளவு போல் இருபது மடங்கு. இந்நீரில் எவ்வளவு பகுதியைச் சேமிக்கும் வகையில் நாம் அணைகட்ட இயலும் என்பது ஆய்வுக்குப் பிறகே தெரியும். ஒரிஸ்ஸா, அசாம் மக்களும் தங்களுக்கு நல்வாய்ப்பாகக் கிடைக்கும் இத்திட்டத்தை நடைமுறையில் செயலாக்கிப் பெருமிதம் கொள்ளலாம்.”

            டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து கூறியதாவது: “இக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் மிகவும் எளியது. அதன் கூறுகள் (1) ஒரிஸ்ஸாவில் ஓடும் ஆறுகளில் பல்நோக்கு திட்டங்களை வகுக்கும் நோக்கில் கள ஆய்வுகள் நடத்துதல் குறித்து ஆலோசித்தல். திட்டத்தின் நோக்கங்களாவன: (அ) வெள்ளக் கட்டுப்பாடு (ஆ) நீர்வழிப் போக்குவரத்து (இ) பாசனமும் வடிகாலும் (ஈ) மண் பாதுகாப்பு (உ) மின்னுற்பத்தி ஆகியன. (2) மகாநதியில் வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான கள ஆய்வுகளைத் தீவிரமாக நடத்துதல் குறித்து ஆராய்தல், (3) மத்திய நீர்வழிப் பாசனப் போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதலில் மாகாண அரசுகள் மதிப்பாய்வுகளையும், கள ஆய்வுகளையும் நிகழ்த்துதல் குறித்து ஆலோசித்தல்.

            “இப்பகுதியின் வளர்ச்சிக்கு முழுமையான திட்டமொன்றைத் தயாரிக்கும் நோக்கில் இங்குள்ள இயற்கை வளங்களையும் இயற்கை அமைப்புகளையும் விரிவாகக் கள ஆய்வு செய்ய வேண்டியதன் தேவை குறித்து நமக்குள்ளே ஒருமித்த கருத்து உருவாக்க முடியுமா என்று காண்பதே இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இப்பகுதியில் பாசனம், நீர்வழிப் போக்குவரத்து, மின்னுற்பத்தி ஆகிய வசதிகளை டெல்டா பகுதி மட்டுமின்றி வடிநிலம் முழுமைக்கும் உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விரிவான மதிப்பாய்வுகளும் கள ஆய்வுகளும் நடத்தப்பட்டால்தான் உண்மை நிலை குறித்து தெளிவானதொரு கண்ணோட்டத்தைப் பெற இயலும். இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் பெரும்பாலும் டெல்டா பகுதியிலேயே விரிவாக நடத்தப்பட்டுள்ளன. 1862 ஆம் ஆண்டில் மட்டும் மகாநதியின் துணை ஆறுகளை தெல்கோமா, இப்கோமா, மாட்கோமா, ஹஸ்து, ஜோன்க் ஆகியவற்றில் உத்தேச சிற்றணை அமைவிடங்களில் மதிப்பாய்வு நடந்துள்ளது என்பது தவிர வேறு ஆய்வுகள் செய்யப்படவில்லை.

            “புகழ் பெற்ற பாசனப் பொறியாளர் ராய் பகதூர் கோஸ்லா தலைமையில், இந்திய அரசு நியமித்த மத்திய நீர்வழிப் போக்குவரத்து, பாசன ஆணையம்”, தனது ஆய்வுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரிஸ்ஸாவில் பாயும் நீர்வள ஆய்வுகளையும் பிற ஆய்வுகளையும் விரைவில் தொடங்கவிருக்கிறது. ஆணையத்தின் ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் பெற்று, மாநில அரசுகளும் சமஸ்தான அரசுகளும் தமது பகுதிகளில் வளர்ச்சி நோக்கிய பிற ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

நிலப்பரப்புகள் மூழ்குதல்

            அம்பேத்கர் தமது உரையின் இறுதிப் பகுதியாகத் தொடர்ந்து கூறியதாவது:

            “இறுதியாக, இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் இரண்டு அம்சங்களைக் கவனப்படுத்த விரும்புகிறேன். அவை திட்டத்தின் வெற்றியோடு தொடர்பு கொண்டவை என்பதையும், அவை குறித்து விரைவில் ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டியது அவசியம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். முதலாவதாக, நிலப்பரப்புகள் நீரில் மூழ்கும் விளைவு குறித்து ஆய்வு செய்ய நீங்கள் தயாராக வேண்டும். அணைகள் கட்டி நீர்த் தேக்கங்களை உருவாக்கும்போது, ஒரிஸ்ஸாவிலும், கிழக்கு சமஸ்தானங்களிலும் பெரும் நிலப்பரப்புகள் நீரில் மூழ்க நேரிடும். துணை ஆறுகளிலும் சில அணைகள் கட்டுவதாயிருப்பின், மத்திய மாகாணங்களிலும் சில பகுதிகள் நீரில் மூழ்க நேரிடும். ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒட்டுமொத்த நலன்களின் பின்னணியில் இச்சிக்கல் குறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டும்.

            “தன் வழியே ஓடி வழியில் சேதங்களையும் விளைவித்துக் கொண்டு வீணே கடலில் கலக்கும் ஆற்றுநீரைத் தடுத்து அணை கட்டுவோமெனில் சில நீர்ப் பரப்புகள் நீரில் மூழ்குவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு நீரில் மூழ்கும் நிலப்பரப்பின் விளைவாய் நாம் அடையும் இழப்பை விட, ஒருங்கிணைந்த பல்நோக்குத் திட்டம் தரும் நன்மைகள் பல மடங்கு மிகுதியானவை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது பிரதேசம் முழுவதுக்குமான நலத்திட்டம் என்ற நோக்கில்தான் வெற்றித் திட்டமாய் அமைய முடியுமேயன்றி ஒரு குறுகிய பகுதியின் திட்டமாக ஒருபோதும் வெற்றிபெற இயலாது. இதை ஒரிஸ்ஸா மாகாணத்தின் திட்டமாகவோ, ஒரிஸ்ஸாவில் ஒரு சமஸ்தானத்தின் திட்டமாகவோ வெற்றிகரமாய்ச் செயல்படுத்த முடியாது.

            “இத்திட்டம் பிராந்திய அளவிலேயே கருதப்பட வேண்டிய ஒன்றாதலின், மாகாண, சமஸ்தான அரசுகள் தங்கள் இறையாண்மையைத் தேவையான அளவுக்கு விட்டுத்தர வேண்டியிருக்கும். நான் கூற முனையும் இரண்டாவது அம்சமாவது, ஒரிஸ்ஸா மாகாணமும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த சமஸ்தான அரசுகளும் தமது பகுதியில் பாயும் ஆற்றுப் பகுதிகளின் மீதான இறையாண்மையை விட்டுத் தர வேண்டியிருக்கும் என்பதே. அப்போதுதான் இத்திட்டத்தை ஒரே ஆணையத்தின் கீழ் மாகாண மற்றும் சமஸ்தான அரசுகளின் குறுக்கீடுகளின்றி ஆய்ந்து, வடிவமைத்து நிறைவேற்ற முடியும். ஒரிஸ்ஸா மாகாண அரசுக்காகட்டும், இந்திய சமஸ்தான அரசுகளுக்காககட்டும் தமது இறையாண்மையில் சிறிது இழப்பதை விடப் பொது மக்களின் நலன் பேணலே முக்கியமானதென்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவர்களது இறையாண்மை மக்கள் நல மேம்பாட்டுக்கு உதவப் பயன்பட வேண்டுமேயன்றி, அத்திட்டங்களுக்குத் தடையாக முட்டுக்கட்டையாய் நிலவக்கூடாது. மத்திய அரசுடன் மாகாண மற்றும் சமஸ்தான அரசுகளும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் நெருங்கிப் பணியாற்றினால், இன்றைய சூழலில் வீணாகக் கடலுக்குள் பாய்ந்து, ஒரிஸ்ஸாவுக்குப் பெருந்துன்பம் விளைவித்து வரும் ஆற்றுநீராம் அருஞ்செல்வத்தை மக்களுக்குப் பெரும் பயன்தரும் வற்றாத செல்வ ஊற்றாக மாற்றிவிட முடியும்.

ஒரிஸ்ஸாவில் பாயும் ஆறுகளின் மதிப்பாய்வு குறித்து மாநாட்டின் தீர்மானங்கள்

            ஒருங்கிணைந்த பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதற்கு உதவும் வகையில் ஒரிஸ்ஸாவில் பாயும் ஆறுகளைக் குறித்த தொடக்க நில மதிப்பாய்வுகளை நடத்தலாம் என்று மாநாடு முடிவு செய்தது. தொடக்க மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து வகுக்கப்படும் திட்டத்தில் வெள்ளைக் கட்டுப்பாடு, நீர்வழிப் போக்குவரத்து, நீர்ப் பாசனம், வடிகால் அமைப்பு, மண்காப்பு, மின்னுற்பத்தி ஆகிய கூறுகள் அடங்கும்.

            முதல் கட்டமாக, மகாநதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதற்கான நில மதிப்பாய்வுகள் நடத்தப்பட வேண்டுமென மாநாடு ஒப்புக்கொண்டது. மேலும், மத்திய நீர்வழிப் போக்குவரத்து, பாசன ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின்கீழ் மாநில அரசுகள் இந்த நில மதிப்பாய்வுகளை நடத்த வேண்டுமென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

            தொடக்கத்தில், ஆணையம் மகாநதியின் நீள முழுவதிலும் மேலோட்டமான மதிப்பாய்வு ஒன்றை நடத்தி, மாகாணத்திற்கும் சமஸ்தானங்களுக்கும் நலம் தரும் திட்டம் அமைவதற்கு வாய்ப்புண்டா என்று கண்டறிந்த பின்னர், அவ்வாறு உண்டெனில், விரிவான நில மதிப்பாய்வு நடத்தப்படுமென விளக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் நிருவாகம், நிதித் தரப்புகளைச் சார்ந்தோரின் முழுமையான பங்கேற்பு தேவைப்படும். அதுவரை, அண்மையில் உருவாக்கப்பட்ட மாகாண அரசின் ஒரிஸ்ஸா ஆறுகள் பிரிவின் உதவியை மட்டும் கொண்டு மத்திய நீர்வழிப்போக்குவரத்து, பாசன ஆணையம் தொடக்க, மதிப்பாய்வுகளை நடத்திவரும். மேலும், மத்திய மாகாணங்கள் அரசும், கிழக்கு சமஸ்தான அரசுகளும், தங்களிடம் ஏற்கெனவே கிடைத்துள்ள தகவல் விவரங்களை மத்திய நீர்வழிப் போக்குவரத்து, பாசன ஆணையத்திற்குத் தந்து, மகாநதியின் வளர்ச்சித் திட்ட வாய்ப்புகளை ஆராய்வதில் முழுமையான ஒத்துழைப்பு தருவர் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

திரு.கோகலேயின் உரை

            டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த திட்டத்தை வரவேற்று, ஒரிஸ்ஸா மாகாண ஆளுநரின் ஆலோசகர் திரு.பி.கே. கோகலே “ஒரிசா மாகாணமே தற்போது இந்தியாவின் மிகப் பிற்பட்ட பகுதியாய் உள்ளது. வேறெந்தவொரு திட்டத்தையும் விட, நாம் இப்போது உத்தேசித்துவரும் பல்நோக்கு வளர்ச்சித் திட்டமே, ஒரிஸ்ஸாவின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு உகந்த திட்டமாகும்” என்று கூறியதுடன், அண்மைக்காலம் வரையிலான ஒரிஸ்ஸாவின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைத்து, பிராந்திய வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது புதிய சிந்தனை, வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த வருங்கால ஒரிஸ்ஸாவை படைக்க உதவுமென்று கூறினார்.

*          *                       *

போர்ப் பிற்காலப் பாசன, நீர்மின் திட்டங்கள்

         “பாசனத் துறையில், இந்தியா, உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறதென்பதில் ஐயமில்லை. வேகமாகப் பெருகிவரும் நமது மக்கள் தொகை வளமாய் வாழப் பாசன வளர்ச்சித் திட்டங்களே உயிர் நாடியாய் விளங்கும்” என மாட்சிமைமிகு வைசிராய், நவம்பர் 26 ஆம் நாள் தமது இல்லத்தில் அமைந்துள்ள ஆலோசனை அறையில், மத்தியப் பாசன வாரியத்தின் 16வது கூட்டத்தின் தொடக்கவுரையில் கூறினார். இக்கூட்டத்திற்கு இந்திய அரசின் வல்லுநர்களுடன் மாகாண மற்றும் சமஸ்தானப் பொறியாளர்களும், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும், தொழிலாளர் நலத்துறை செயலர் மாண்புமிகு எச்.சி.பிரியோர் ஆகியோரும் வந்திருந்தனர்.

            வைசிராய் மேலும் பேசுகையில்,

            “மத்திய பாசனவாரியத்தின் 16வது கூட்டத்தைத் தொடங்கி வைப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். பொறியியல் துறைகளின் தொன்மையும் மதிப்பும் வாய்ந்த முதன்மையான துறை நீர்ப்பாசனத்துறையே. பாசனப் பொறியாளர்களே உலகின் பழமையான வல்லுநர்கள். (பைபிளில்) தோற்றவியல் இரண்டாம் அதிகாரத்தில் “ஈடனிலிருந்து, தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதற்காக ஓர் ஆறு புறப்பட்டுச் சென்றது” என்று கூறப்பட்டுள்ளது. இதுவே, நாமறிந்த முதல் பாசன எடுத்துக்காட்டாகும். எகிப்து, மொசப்டோமியா ஆகிய இரு நாகரிகங்களும் முற்றிலும் பாசனத்தின் அடிப்படையில் உருவாகியவையே. பாசனத்துறையில் உங்கள் முன்னோடிகளாய் விளங்கிய பாசனப் பொறியாளர்களே, அக்கால நாகரிகங்களில் தலைசிறந்த பெருமக்களாய் மதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

            “பண்டைய பாசன வல்லுநர்களில் முதன்மையான வல்லுநராய் விளங்குபவர் மோசஸ் எனலாம். ஆரைப்பில் பாறையை உடைத்து நீர் வரவழைத்து நீரையருந்தி உயிர் வாழுங்கள் என்று அங்கிருந்த கூட்டத்தார்க்கு அளித்ததையும், மாராவில், கெட்ட நீர் வரத்தைத் தடுக்க அணைகட்டி, கசந்த குடிநீரை இன்னறு நீராக்கியதையும் அவரது இருபெரும் சாதனைகள் எனலாம். 

இந்தியாவின் சாதனைகள்

            வைசிராய் மேலும் தொடர்ந்து, “பிறநாட்டுப் பொறியாளர்கள் விரைந்த பயணத்திற்கான வாகனங்களையும், குடியிருக்க வசதியான வீடுகளையும் படைத்திருக்கலாம்; ஆனால் உங்கள் சாதனைகளோ உயிரையே கொடுப்பதற்கு ஒப்பானவை. உங்கள் சாதனைகளின் சிறப்பைப் புகழ்ந்துரைக்கச் சொற்களைத் தேடினோம் எனில், “எனது மக்கள் அருந்தும் பொருட்டாகக் காடுகளில் நீரையும், பாலைவனத்தில் ஆறுகளையும் அளிக்கிறேன்” என்ற இசையாவின் கவிதை வரியைக் காணலாம்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)