(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III ,1945, மார்ச்சு 29, பக்கங்கள் 2270-71.)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):

ஐயா,

“1934 ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்தின் மீதான திருத்தங்கள் குறித்த மசோதாவை, தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ள வடிவில் அவையின் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளலாம்’’  என முன்மொழிகிறேன்.

தெரிவுக்குழுவின் அறிக்கை நீண்டகாலமாகவே பேரவையின் கவனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிவுகுழு என்ன கூறுகிறது என்பதைப் படித்துத் தெளிந்து கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, என்னால் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மசோதாவில் தெரிவுக்குழு செய்துள்ள மாற்றங்களைப் பற்றி மட்டும் சுட்டிக்காட்டி அமைய விரும்புகிறேன். தெரிவுக்குழு முக்கியமான ஐந்து அடிப்படை மாற்றங்களைச் செய்துள்ளது. முதலாவது திருத்தம், மூலச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தொழிலாளர்களின் ‘ஊதியத் தோடு விடுப்பு’ உரிமையைப் பாதுகாக்க முற்படுவதுடன், சட்டம் வரையறுத்ததற்கும் கூடுதலாக, வேறு சட்டங்கள், ஒப்பந்தங்கள் வாயிலாய்க் கிடைக்கும் விடுப்பு உரிமைகளையும் பாதுகாக்க முனைகிறது. மூலச்சட்டத்தில் இல்லாத இந்தப் புதிய உரிமை திருத்தத்தின் படி பிரிவு 49 –அ-இன் இரண்டாவது துணை விதியாகத் தாக்கல் செய்யப்படுகிறது. தெரிவுக்குழு பரிந்துரைக்கும் இரண்டாவது திருத்தம் இவ்விடுமுறை உரிமைகள் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். அவையில் தாக்கல் செய்யப்பட்ட மூல மசோதாவில் இக்ருந்து இடம் பெறவில்லை. குழந்தைகளுக்கு விடுமுறைச் சலுகைகளை நீட்டித்தல் மட்டுமின்றி, மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கையையே கூடுதலாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. தொழிலாளர்களுக்கான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 7 தான்; ஆனால் குழந்தைத் தொழிலாளர்களுக்கான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 14 ஆகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்தை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் மசோதா பிரிவு 49-ஆ-இல் காணலாம். ஐயன்மீர், மசோதா தாக்கல் செய்யப்பட்ட போழ்தில், விடுமுறை உரிமை ஏதும் ஈட்டுதற்கு முன்னதாகவே, பணிநீக்கம் செய்யப்பட்ட, பணியினின்று விலகிய தொழிலாளர்களுக்கான விடுப்பு உரிமைகள் பற்றிய விதிகள் ஏதும் இடம்பெறவில்லையென்பதை அவையோர் நினைவு கூர வேண்டுகிறேன். இதுகுறித்து நல்லதென நாம் அனைவரும் கருதும் முடிவினைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாமெனவும் கூறியிருந்தேன். தெரிவுக்குழுவோ, முக்கியமான இந்த விவகாரம் குறித்து இப்போதே விதிமுறை உருவாக்க வேண்டுமென்று கருதியதால், அதற்கான புதிய விதிமுறையும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

            மசோதாவில் சேர்க்கப்படும் மற்றொரு முக்கியமான திருத்தம், தனக்கு உரித்தான விடுமுறையைப் பெறவோ, அவ்விடுமுறை நாளுக்கெனத் தனக்கு உரித்தான ஊதியத்தைப் பெறவோ இயலாத தொழிலாளர்களின் சார்பில், தொழிற்சாலை ஆய்வாளரே செயல்படுவதற்கு வழிவகை செய்கிறது. தொழிலாளர்களுக்குச் சட்டம் வழங்கும் உரிமைகளைத் தர மறுக்கும் முதலாளிகளிடம், தொழிலாளியே உரிமையியல், குற்றவியல் வழக்குகள் வழித் தன்னால் இயன்றவரை போராடி நிலைநாட்டிக் கொள்ளட்டுமென விட்டுவிடுதல் முறையாகாது எனத் தெரிவுக்குழு உணர்ந்துள்ளது. எனவே, இவ்வுரிமைகளைப் தொழிலாளர்களுக்குக் கிடைக்கச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவது அரசின் கடமையாகிறது. தொழிலாளர் சார்பில் செயல்படத் தொழிற்சாலை ஆய்வாளருக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம், இவ்வுரிமைகள் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதனை உறுதி செய்யலாம்.

            தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ள ஐந்தாவது முக்கியத் திருத்தம், விதிமுறைகளின் உருவாக்கம் பற்றியதாகும், இச்சட்டத்தின்கீழ் தேவையான கிளை விதிகளை உருவாக்கும் அதிகாரம், மூல மசோதாவில், மாநில அரசுகளுக்கு விடப்பட்டிருந்தது என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் நினைவு கூர வேண்டுகிறேன். ஆனால் தெரிவுக் குழுவோ, இந்த அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால் ஒரே சட்டத்தின்கீழ் வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு விதிமுறைகள் இயற்றப்படும் குழப்ப நிலை தோன்றலாமென்று கருதுகிறது. போட்டி போட்டுக் கொண்டு தொழிற்சாலைகள் முன்னேறிவரும் சூழலில், ஒரே தொழில் துறையில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மாறுபட்ட விதிமுறைகள் வகுக்கப்படும் விரும்பத்தகாத நிலை உருவாகுமெனில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊறுவிளையும் என்பது உறுதி. எனவே, இச்சட்டத்தின் கீழ் விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் மைய அரசிடம் இருந்தால்தான் நாடு முழுவதும் சீரான விதிமுறைகளை உருவாக்க ஏதுவாகுமெனத் தெரிவுக்குழு கருதுகின்றது. தெரிவுக்குழுவின் விரிவான விவாதங்களுக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்ட அடிப்படையான திருத்தங்கள் இவையே. மசோதாவின் ஏனைய பகுதிகள் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டவாறே விடப்பட்டுள்ளனவென்பதால் அவை பற்றி ஏதும் கூற வேண்டுவதில்லை எனத் தெரிவித்துக் கொண்டு, மசோதாவைத் தாக்கல் செய்கிறேன்.

அவைத் துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா):

            “1934 ஆம் ஆண்டின் தொழிற்சாலைச் சட்டத்தில், தெரிவுக் குழுவின் அறிக்கையின்படி மேலும் திருத்தம் செய்யலாம்” எனும் மசோதா அவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

*           *           *

1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1945, மார்ச்சு 29, பக்கம் 2276.)தீர்மானத்தின் மீது பேசிய மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் நான் தனித்தனியே பதில் கூற வேண்டியது அவசியமென்று கருதவில்லை; ஏனெனில் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகத் திருத்த மசோதா அமைந்துள்ளது. எனவே, இவற்றிற்கு நான் பதில் கூற முற்பட்டால், முழு விவாதத்தையும் நானே மீண்டும் நடத்தியது போன்று அமைந்துவிடும். எனவே, எனது கருத்துகளை ஒவ்வொரு திருத்தமும் முன்மொழியும்போது எடுத்துரைப்பேன்.

*           *           *

(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, 1945, ஏப்ரல் 2, ..2315-16.)           

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, பேராசிரியர் ரங்காவோ, திரு.ஜோஷியோ முன்மொழியும் திருத்தங்கள் எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாதென அஞ்சுகிறேன். ஒரு தொழிலாளி அவரது விடுமுறை உரிமைகளைப் பெறுவதற்கான தகுதி அவர் குறிப்பிட்ட அளவு காலம் பணியாற்றியுள்ளாரா என்பதேயன்றி, அப்பணியை அவர் ஒரு முதலாளியிடம் ஆற்றினாரா? அல்லது பல முதலாளிகளிடம் ஆற்றினாரா என்பதல்ல என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் செயல்பாட்டில் இரண்டு கூறுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முதலாவது நிருவாகச் சிக்கல். முதலாளிகளின் நிதிப் பங்களிப்புடன் இணைந்ததொரு காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்தாலன்றி விதிகளை நடைமுறையில் செயல்படுத்தல் இயலாதென நன்குணர்கிறேன். எடுத்துக்காட்டாக, உடல்நலக் காப்பீட்டுத் திட்டமொன்று நடைமுறையில் இருந்து, அடையாள அட்டைகளும், முத்திரை வில்லைகள் போன்ற காப்பீட்டு நிருவாகக் கருவிகளும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டால், நண்பர்கள் சுட்டியது போன்ற திருத்தங்களை எளிதில் செயலாக்க முடியும். ஆனால் இன்றைய நடைமுறை நிலைமையில் இத்திருத்தத்தை ஏற்கவியலாமைக்கு வருந்துகிறேன்.

            இந்த மசோதா அமலுக்கு வருவதற்கு உறுதியான தேதியொன்றை நாம் முடிவு செய்ய வேண்டுமென்பது பேரவையின், தெரிவுக்குழுவின் அவா என்பதையும் ஈண்டு தெரிவித்துக் கொள்கிறேன். மூல மசோதாவில், திருத்தங்கள் அமலுக்கு வரவேண்டிய தேதி, மாநில அரசுகளின் முடிவுக்கு விடப்பட்டிருந்தது என்பதை மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் பின்னர் நாம் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, திருத்தம் செயல்பாட்டுக்கு வரவேண்டிய தேதியையும் இந்த அவையிலேயே முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு வந்து, 1946 ஆம் ஆண்டு, ஐனவரி முதல் தேதியையே திருத்தம் அமலுக்கு வரும் நாளாகவும் முடிவு செய்துள்ளோம். எனவே, இத்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிருவாகக் கூறுகளை 1946, ஜனவரி முதல் தேதிக்குள் உருவாக்குதல் இன்றியமையாத் தேவையாகிறது. ஆனால், நமது நண்பர்கள் விழையும் இரு திருத்தங்களையும் செயல்படுத்துதற்கான நிருவாக அமைப்புகளை இந்தக் குறுகிய கால இடைவெளியில் உருவாக்குதல், மைய அரசினாலோ, மாநில அரசுகளாலோ இயலாதென்றே நான் அஞ்சுகிறேன். எனவே, திருத்தங்களின்பால் நான் பரிவான நோக்கே கொண்டிருப்பினும் நிருவாகச் சிக்கல்களின் கடுமையைக் கருதியே தற்போது அவற்றை எதிர்க்க வேண்டியுள்ளேன்.

            பேராசிரியர் என்.ஜி.ரங்கா: கருத்தளவில் அரசுக்கு உடன்பாடு இருக்குமெனில், எனது திருத்தத்தில், “அல்லது வெவ்வேறு மேலாண்மைகளின் கீழ்” எனும் தொடருக்கு மாற்றாக, “ஒரே மேலாண்மையின் கீழ்வரும் தொழிற்சாலைகளில்” என்ற தொடரைப் பயன்படுத்தினால், திருத்தத்தை ஏற்க அரசு உடன்படுமா?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இது குறித்து நான் ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளேன். தொடரை மாற்றினாலும் சிக்கல் தீராதென்றே கருதுகிறேன்.

*                       *           *

1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): அவைத் தலைவர் அவர்களே, இத்திருத்தத்தை முன் மொழிந்தவர்களோ, ஆதரித்தவர்களோ, தங்கள் பக்க நியாயத்தைச் சரியாக நிலைநாட்டவில்லை என்பது தெளிவு.

இது தொடர்பாகப் பன்னாட்டு, தொழிலாளர் மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையே நமது தர அளவீடுகளாக ஏற்றுக் கொள்கிறோம் என்பதை அவை அறியும். 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டு, தொழிலாளர் மாநாட்டில், ஊதியத்தோடு கூடிய விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 6 க்குக் குறையாமலிருக்க வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது. இக்கண்ணோட்டத்தில் நோக்கும்போது, நாம் தாக்கல் செய்த மசோதா பன்னாட்டுத் தர அளவீட்டிலிருந்து தாழ்வடைகிறது என்று எவரும் கூறவியலாது. எனது தரப்பில் மேலுமொரு இடர்ப்பாட்டையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். தொழிலாளர் நலன் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம் பொதுப்பட்டியலில் இருப்பதை அவை உறுப்பினர்கள் நன்கறிவர். இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிருவாகப் பொறுப்போ, முழுமையாக மாநில அரசுகளுக்கே உரியது, என்பதை நாட்டின் அரசியல் சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. இது குறித்த சட்டமன்ற மரபுகளை நோக்கில், பொதுப்பட்டியல் துறைகள் தொடர்பாக மைய அரசு சட்டமியற்றும்போது, இயற்றப்படும் சட்டம் மாநில அரசுகளின் இசைவையும் பெற்றாக வேண்டுமென்பது தெளிவாக நிலைநாட்டப்பட்டுள்ள மரபாகும். மேலும், மசோதாவில் குறிப்பிட்டுள்ள கால அளவு மாநில அரசுகளின் இசைவு பெற்றே முடிவு செய்யப்பட்டது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இருப்பினும், இத்திருத்தத்தை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்பதையும், அதனை ஏற்குமாறு என்னை உந்திய காரணங்கள் எவை என்பதையும் தெளிவுறுத்த விரும்புகிறேன்.

ambedkar 184என்னை உந்திய முக்கிய காரணி புவியியல் கூறு என்பேன்; தொழிற்சாலை அமைவிடங்களும் மக்கள் குடியிருப்பு மையங்களும் வெவ்வேறாய்ப் பிரிந்து வெகுதொலைவுகளில் அமைந்திருப்பதை நன்கு உணர்கிறேன். பம்பாய் நகரில் அமைந்திருக்கும் தொழிற்சாலைக்கு, ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து பணியில் சேர்ந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமை நிலவுகிறது. இத்தொழிலாளர்கள் நீண்டதூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, மசோதாவில் அதற்கேற்பச் சிறு திருத்தம் செய்யத் தயாராகவுள்ளேன். எனவே, இக்காரணத்தை முன்னிட்டு, இக்குறிப்பிட்ட திருத்தத்தை ஏற்க உடன்படுகிறேன். அதேசமயம் நான் ஒரு நிபந்தனையையும் விதிக்க வேண்டியுள்ளது. பேராசிரியர் ரங்கா, திருமதி சுப்பராயன் ஆகியோர் பெயரில் உள்ள மற்றொரு திருத்த முன்மொழிவு, தெரிவுக்குழுவால் ஒதுக்கப்பட்ட, “குறைந்த அளவில்” என்ற தொடர் சேர்க்கப்படக் கோருகிறது. இதையேற்றால் ஒருங்கமைவு குலைந்துவிடும். இதுபோன்ற முக்கியமான சட்டங்களை இயற்றும்போது ஒருங்கமைவுக்கு ஊறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்னும் அடிப்படைக் கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்ற வேண்டுமென்பதால், இத்திருத்தத்தை முன்மொழிந்தவர்களே விலக்கிக் கொண்டால் பத்து நாட்கள் என்ற காலவரையை நிர்ணயிக்கும் திருத்தத்தை ஏற்க உடன்படுகிறேன்.

பேராசிரியர் என்.ஜி.ரங்கா (குண்டூர் நெல்லூர் மாவட்டங்களின் முகமதியரல்லார் சார்பாளர்): மற்றைய திருத்தத்தைத் தற்போதைக்கு விலக்கிக் கொள்ள இசைகிறோம்.

அவைத் தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரகீம்): தங்கள் தீர்மானத்தை நீங்கள் வலியுறுத்தப் போவதில்லையா?

பேராசிரியர் என்.ஜி.ரங்கா: ஒரு திருத்தத்தை மட்டுமே விலக்கிக் கொள்கிறோம்.

அவைத் தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரகீம்):

            “மசோதாவின் பிரிவு 49B யில் துணைப்பிரிவுகள் (1), (2) ஆகியவற்றிலுள்ள விதி 3 இல் ஏழு என்ற சொல்லுக்கு மாற்றாக, “பத்து” என்ற சொல் இடம் பெறலாம்”

என்பதற்கு அவையின் முடிவு கோரப்படுகிறது.

அவை தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: துணைப் பிரிவு 2 இல், “ஏழு” என்பதற்குப் பதிலாக, “பத்து” எனும் சொல் இடம் பெற வேண்டுமென்றோரு துணைத் திருத்தமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

அவைத்தலைவர் (மாண்புமிகு அப்துல் ரகீம்): மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தக்கதொரு திருத்த முன்மொழிவைப் பின்னர் தாக்கல் செய்யலாமெனக் கருதுகிறேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: துணைப்பிரிவு-2 இன் கடைசி வரியில் ‘ஏழு’ எனும் சொல்லுக்கு பதிலாக ‘பத்து’ எனும் சொல் இடம்பெறலாம்.

அவைத் தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரகீம்): முறையான திருத்த முன்மொழிவு தேவையென்றே கருதுகிறேன்.

*           *           *

1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, இத்திருத்தத்தினை என்னால் ஏற்க இயலவில்லையென மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.இன்ஸ்கிப் “உடல் நலக்குறைவு” என்பதற்கு வரையறை கிடையாதென்றார். அதனை வரையறை செய்தல் இயலுமெனின் நன்றென்பேன்; நானும் உடல் நலக் காப்பீட்டுச் சட்டத்தில் அச்சொல்லுக்கு வரையறையைத் தேடியதில் அது வரையறுக்கபடாத சொல் என்பதையுணர்ந்தேன்; எனவே அதனை வரையறுக்க முனைதல் இயலாச் செயல். உடல் நலக்குறைவு என்பது சான்றளிக்கப்பட வேண்டிய விவகாரமே. ஒரு மனிதர்க்கு உடல் நலக்குறைவு என்று மருத்துவர் ஒருவர் சான்றளித்தால் மற்றையோர் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியோரே. சான்றிதழ் முறையான வகையில் அளிக்கப்பட வேண்டும் என்பதில் மதிப்பிற்குரிய நண்பர் அக்கறை கொண்டுள்ளார் எனில், அவரது அக்கறையைப் போற்றுவதுடன், சான்றிதழ் தகுதியானதாய் அமைவதை உறுதிசெய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்கக் கருதியுள்ளோம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்; சான்றிதழ் தரத் தக்கவர் யார்? அவரது (கல்வித்) தகுதிகள் என்ன என்பவை தெளிவாக வரையறுக்கப்படும். தக்க வருவாயில்லாமல் போலிச் சான்றிதழ் தரலே வருவாய்க்கு வழியாகக் கொள்ளும் மருத்துவர்களுக்கு இடங்கொடாத வகையில் முற்றிலும் குறைகளற்ற விதிமுறைகள் வகுக்கப்படும். ஆனால் மருத்துவர் தரும் சான்றிதழ் முதலாளியின் மதிப்பீட்டிற்குப் பின்னரே ஏற்கப்படலாமென்று மதிப்பிற்குரிய நண்பரின் திருத்தம் முன்மொழிவதால் அதனையேற்பதில் இடர்ப்பாடு காண்கிறேன். தகுதியுள்ள மருத்துவரின் சான்றிதழ் இருந்தாலும் முதலாளி விரும்பினால்தான் விடுமுறை என்ற நிலையை உருவாக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இஃது முதலாளிகளின் வசம் அளவுக்கு மீறிய அதிகாரத்தை ஒப்படைப்பதாகும். எனவே, இத்திருத்தத்தை ஏற்பதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.

பணியாளர் இச்சலுகையைத் தவறாகப் பயன்படுத்த இடமுண்டு என்பது மதிப்பிற்குரிய நண்பரின் மற்றொரு வாதம். உடல் நலக்குறைவு, விபத்து, அனுமதிக்கப்பட்ட இயல் விடுமுறை ஆகிய மூன்று கூறுகளுக்குமாய் மொத்தம் 90 நாட்களே என நாம் வரம்பு விதித்துள்ளமையால் தொழிலாளர் எவரும் வரம்பு கடந்து விடமுறை எடுத்துவிட இயலாது; விடுப்புக்காலம் 90 நாட்களைத் தாண்டுமெனில், சட்டம் தரும் சலுகையைத் தொழிலாளி இழந்து விடுகிறாராதலின் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பில்லையென்பதால் இத்திருத்தத்தை நான் எதிர்க்கிறேன்.

அவைத்தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரகீம்): “முன்மொழியப்படும் பிரிவு 49 ஆ, விதி 3இன் இறுதிப் பகுதியிலுள்ள விளக்கத்தில், “உடல்நல குறைவு, விபத்து அல்லது அனுமதிக்கப்பட்ட விடுமுறை” என்பதற்கு பதிலாக, “உடல்நலக்குறைவு, விபத்து பரிவு ஆகியவற்றுக்காக அனுமதித்து ஏற்கப்படும் விடுமுறை’’ எனும் தொடர் இடம்பெறலாம்’’

என்ற திருத்தத் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.

தீர்மானத்தை அவை தள்ளுபடி செய்தது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)