(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 5, 1945,, பக்கங்கள் 235-41)

            யுத்தம் முடிவடைந்ததும் கூடிய விரைவில் இந்தியாவுக்குத் தேவையான கனரக மின்விசை எந்திர சாதனங்களைப் பெறுவதற்கான ஒரு கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று அவசியமான மின்விசை உற்பத்தி ஆற்றலை இந்தியா ஈட்டுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். “பொதுப்பணித்துறை மற்றும் மின்விசை உற்பத்தித் துறை” குறித்த கொள்கைக் குழுவின் இரண்டாவது கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி புதுடில்லியில் நடைபெற்றபோது அதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

            டாக்டர் அம்பேத்கர் உரையின் முழு வாசகத்தை கீழே தந்திருக்கிறோம்:

ambedkar 286            இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் பழைய பிரதிநிதிகள், புதிய பிரதிநிதிகள் ஆகிய எல்லாப் பிரதிநிதிகளுக்கும் எனது மிகவும் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொண்டு எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன். நமது குழு சென்ற முறை கூடியபோது அதில் அப்போது உறுப்பினர்களாக இல்லாதவர்கள் இப்போது உறுப்பினர்களாக இடம் பெற்றிருக்கின்றனர்; எனவேதான் பழைய உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டேன். புதிய உறுப்பினர்கள் இந்தியாவிலுள்ள மின்விசைத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சம்மேளனத்தினாலும் இந்தியத் தொழிற்சங்க காங்கிரசாலும் நியமிக்கப்பட்டவர்கள் மின்விசைத் தொழில் நிலையங்களும் ஸ்தாபன ரீதியாக ஒருங்கு திரண்டுள்ள தொழிற்சங்க அமைப்புகளும் இந்தியாவின் எதிர்கால மின்விசைத்துறை வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டிருப்பவை.

            எனவே, இவற்றின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் கருத்துகளை உரிய முறையில் கணக்கிலெடுத்துக் கொண்டு நாம் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டும். சென்றமுறை இந்தப் புதிய உறுப்பினர்கள் பங்குகொள்ள முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பும் கோருகிறேன். ஏனென்றால் அவர்கள் விடுப்பட்டுப் போனது ஒரு பெரிய தவறாகும். இன்று அவர்கள் நம்முடன் இருப்பதற்காக நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் நம்முன்னுள்ள விஷயம் குறித்து நடைபெறவிருக்கும் விவாதத்தில் அவர்கள் உரிய முறையில் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

மின்விசைப் பொறியாளர்களின் மாநாடு

          சென்ற முறை 1943 அக்டோபர் 25 ஆம் தேதி கொள்கைக் குழு கூடிற்று. அதற்குப் பிறகு யுத்தப் பிற்கால மின்விசைத் துறை வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதை உங்களில் அநேகர் அறியாதிருக்கக் கூடும். எனவே, இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிப்பதுடன் கூட்டத் தலைவர் என்ற முறையில் எனது உரையைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கொள்கைக் குழுவின் சென்ற கூட்டத் தொடர் முடிவடைந்ததும் இந்திய அரசாங்கத்தின் மின்விசைத்துறை ஆணையரான திரு.மாத்யூஸ் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று நாட்டிலுள்ள பிரபல மின்விசைப் பொறியாளர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார்; யுத்தப் பிற்கால மின்விசைத்துறை வளர்ச்சி குறித்துப் பரிசீலிப்பதே அரசு சார்புடைய மற்றும் அரசு சார்பில்லாத பொறியாளர்கள் பங்கு கொண்ட இம்மாநாட்டின் நோக்கமாகும். யுத்தம் முடிவுற்ற உடனேயே மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதற்கு இந்தியாவுக்குத் தேவையான கனரக மின்விசை எந்திரங்களைப் பெறுவதற்கான ஒரு கால அட்டவணையைத் தயாரிப்பதே மாநாடு மேற்கொண்ட முதல் பணியாக இருந்தது. இதுவன்றி, இதுவிஷயம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள், விவாதங்களின் அடிப்படையில் அமைந்த ஒருமித்த முடிவைப் பிரதிபலிக்கும் வகையில் மாநாடு சில தீர்மானங்களை நிறைவேற்றிற்று. இந்தத் தீர்மானங்கள் நான்கு பகுதிகளின் கீழ் வருகின்றன:

மாநாட்டு உறுப்பினர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளுடன் அனுப்பியிருந்த கடிதத்தில் பின்கண்டவாறு குறிப்பிட்டிருந்தனர்: “மின்விசை வளர்ச்சித் திட்டம் முற்றிலும் ஒருங்கிணைந்த முறையில் பரிசீலிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்; இந்தியா முழுவதிலும் பல்வேறு நிலைமைகளில் அனுபவம் பெற்ற பொறியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பது பிராந்தியத் தேவைகளை ஒருமுகப்படுத்துவதில் பெரிதும் மதிப்புமிக்க அம்சமாக அமைந்துள்ளது.” 

கனரக மின்விசை எந்திர சாதனங்கள்

          யுத்தம் முடிவடைந்த உடனேயே இந்தியா முழுவதிலும் மின்விசை உற்பத்திப் பெருக்கத்துக்கு மகத்தான வாய்ப்பு இருப்பதாக தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியமைக்காக மாநாட்டுக்கு நாம் மிகுந்த நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தான் செய்துள்ள பல பரிந்துரைகள் சம்பந்தமாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை மாநாடு கேட்டுக்கொண்டது. மாநாட்டின் இரு பரிந்துரைகள் எந்திர சாதனங்கள் வாங்குவது, தொழில் நுட்ப மின்விசை வாரியம் அமைப்பது சம்பந்தப்பட்டவை இந்த இரு பரிந்துரைகளும்.

            யுத்தம் முடிவடைந்ததும் கூடிய விரைவில் இந்தியாவுக்குத் தேவையான கனரக மின்விசை எந்திர சாதனங்களைப் பெறுவதற்கான ஒரு கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்று, அவசியமான மின்விசை உற்பத்தி ஆற்றலை இந்தியா ஈட்டுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்த உற்பத்தி ஆற்றல் 850 மெகாவாட்டாக இருக்கும்; இதற்கு ஏறத்தாழ 50 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மொத்த புதிய ஆற்றல் திறன் தற்போதுள்ள ஆற்றல் திறனில் கிட்டத்தட்ட 65 சதவீதமாக இருக்கும். எந்திர சாதனங்கள் விஷயத்தில் நமது தேவை நாம் பதிவு செய்திருப்பதைவிட அதிகமாக இருக்கும் என்பதை மேலும் விரிவான ஆய்வு புலப்படுத்தக்கூடும். ஆனால் இனியும் தாமதிப்பது இந்தியாவின் நலனுக்கு ஊறுவிளைவிக்குமாதலால், நமக்குள்ள குறுகிய காலத்திற்குள் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

தொழில்நுட்ப மின்விசை வாரியம்

            ஒரு தொழில் நுட்ப மின்விசை வாரியத்தை இந்திய அரசாங்கம் அமைத்திருக்கிறது என்பதை 1944 நவம்பர் 8 ஆம் தேதியிடப்பட்ட பத்திரிக்கை குறிப்பிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். தலைவரைத் தவிர இரண்டு முழுநேர உறுப்பினர்களையும் மூன்று பகுதிநேர உறுப்பினர்களையும் ஆரம்பத்தில் வாரியம் பெற்றிருக்கும். இந்திய மின்விசைத் துறை ஆணையரான திரு.மாத்யூசை தலைவராக இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது; அதோடு, அமெரிக்காவைச் சேர்ந்த திரு.டபிள்யூ.எல்.ஊர்தினது சேவையைப் பெற்று அவரை வாரியத்தின் மற்றொரு உறுப்பினராக நியமித்திருக்கிறது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் டென்னஸ்ஸி நதிப் பள்ளத்தாக்குத் திட்ட நிர்வாகத்தில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றியவர் இவர். பயனோக்கு உறுப்பினர் எனப்படும் மூன்றாவது உறுப்பினர் ஒருவரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. பயனோக்குப் பணியில் அனுபவமுள்ள தகுதிவாய்ந்த ஒரு பொறியாளரைத் தெரிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாகாண அரசாங்கங்களையும் சமஸ்தான அரசாங்கங்களையும் கலந்தாலோசித்து மின்விசை உற்பத்திப் பெருக்கத்துக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கக் கூடிய, ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய, திட்டங்களைத் தயாரிக்கக்கூடிய ஒரு வலுவான தொழில்நுட்ப அமைப்பாக இந்த வாரியத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் எவ்விதம் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கிறது என்பதை இந்த உயர்மட்ட நிபுணர்களின் நியமனம் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துவதை நீங்கள் காணலாம். கொள்கைக் குழுவின் கூட்டங்கள் நடைபெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் என்ன நடைபெற்றிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் மெய்யார்வத்தோடு, துரிதமாகவும் நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதை உங்களுக்கு புலப்படுத்துவதற்காகவுமே இவற்றையெல்லாம் இங்கு கூறினேன். 

மூன்று அம்சத் திட்டம்

            மின்விசைக் கொள்கையில் மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது; அதனை உங்கள் அனைவரின் கவனத்துக்கும் இங்கு கொண்டுவர விரும்புகிறேன். கொள்கைக் குழுவின் கடந்த கூட்டத்தில் பம்பாய் அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட திரு.காலின்ஸ் பம்பாய் ராஜதானியில் ‘கிரிட்’ முறையை நடைமுறைக்குக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்தல அளவில் மின்விசை உற்பத்திப் பெருக்கத்திற்குப் பதிலாக பிராந்திய அளவிலான மின்விசைப் பெருக்க விஷயத்தில் இந்திய அரசாங்கத்திலுள்ள நாங்கள் சென்ற ஆண்டு மிகுந்த அக்கறை காட்டினோம். மின்விசை அளிக்கும் வசதிகளை உற்பத்தியாளர்களுக்கு மட்டுமன்றி நுகர்வோருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்ய வேண்டுமானால், பிரிட்டனில் மத்திய மின்விசை வாரியம் ஆரம்பம் முதலே பின்பற்றிவரும் மூன்று அம்சத் திட்டத்தை நாம் முன்னெச்சரிக்கையோடும், படிப்படியாகவும் பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் மேன்மேலும் உணர்ந்தோம். அந்த மூன்று அம்சத் திட்டம் வருமாறு:

            (அ) பொது வழங்கீடு அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் பிரதான தொழில் கேந்திரப் பகுதிகளில் பெரிய அளவிலான மின் நிலையங்களை அமைத்தல்.

            (ஆ) பெரிய மின் நிலையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில் மின்விசை செல்லும் பிரதான அமைப்பை நிர்மாணித்தல்; பிராந்தியம் முழுவதும் வளர்ச்சியுறும் விதத்திலும், வேளாண் பிரதேசங்களும் தொலைதூர பிரதேசங்களும் பயனடையும் முறையிலும் இப்பணியைச் செய்தல்;

            (இ) மின்விசை அமைப்பு மூலம் அபிவிருத்தி செய்ய வேண்டிய பிராந்தியத்தில் மின்விசை வழங்கீட்டை முறைப்படுத்துதல்.

            இந்த மூன்று அம்சத் திட்டம்தான் ‘கிரிட்’ முறையின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிராந்திய வளர்ச்சிக்கான இத்தகையதோர் திட்டம் இந்த நாட்டில் பின்பற்றப்படுமானால், குறைந்த கட்டணத்தில் மின்விசை என்னும் மாபெரும் வரப்பிரசாதத்தை ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்குமே கூடிய விரைவில் வழங்க முடியும் என்று நம்புகிறேன்.

            ‘கிரிட்’ முறையைக் கடைப்பிடிக்க பிரிட்டனில் முதலில் உத்தேசிக்கப்பட்டபோது, 1940-41க்குள்ளாக நாட்டில் மின்விசை உற்பத்தி 2500 கோடி யூனிட்டுகள் என்னும் பிரம்மாண்டமான அளவை எட்டும் என்றும், ஒரு யூனிட் மின்விசை உற்பத்திக்கான செலவு 1925-26ல் 9.4 பென்னியாக இருந்தது 4பென்னிக்கும் குறைவாக ஆகுமென்றும், பெரிய தொழில்துறைப் பயனீட்டாளர்களுக்கு ஒரு யூனிட் மின்விசை 1/2 பென்னிக்குக் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இது உங்களுக்கு சுவையான தகவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள்

          இன்றைய நமது கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலைப் பற்றி இனி பார்ப்போம். நிகழ்ச்சி நிரலில் மொத்தம் நான்கு இனங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் முதல் இனம் உங்கள் பரிசீலனைக்கு இரண்டு திட்டங்களை முன்வைக்கிறது; ஒன்று தொழில்நுட்ப மின்விசை வாரியத்தை அமைப்பது; மற்றொன்று மின்விசைத் துறையில் பயிற்சி பெறுவதற்காக இந்தியர்களை அயல் நாடுகளுக்கு அனுப்புவது. இவற்றில் எந்தத் திட்டமும் சர்ச்சைக்குரியதன்று. எனவே, இவற்றைப் பற்றி இங்கு விரிவாக எடுத்துரைத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

            நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள இரண்டாவது இனம் நான்காவது இனத்தைப் போன்று துரதிர்ஷ்டவசமாக அத்தனை சர்ச்சைக்கு இடமற்றது அன்று. மின்விசை நிலையங்களில் வருவாய், செலவு, ஆதாயம் முதலியவை குறித்த சில கணக்குவைப்புக் கோட்பாடுகள் சம்பந்தப்பட்டது இந்த இரண்டாவது இனம். இந்த இனம் எடுத்த எடுப்பில் தோன்றுவதுபோல் அவ்வளவு சர்ச்சைக்குரியது அல்ல. இந்த இனம் இரண்டு பிரச்சினைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு பிரச்சினையை அல்ல. இவ்விரு பிரச்சினைகளையும் தனித்தனியாக ஆராய்ந்தால் சர்ச்சை பெருமளவுக்குக் குறையும்.

            மின்விசை வழங்கும் ஒரு நிறுவனத்தின் ஆதாயப்பங்கு மின்விசைப் பயனீட்டுக்கான கட்டணத்துடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமா என்பது முதல் பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை நியாயமான ஆதாயப்பங்கை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதாகும். முதல் பிரச்சினையைப் பொறுத்தவரையில், அதில் சர்ச்சைக்கு அதிக இடமில்லை. மின்விசை என்பது உற்பத்தி அளவிலும் பயனீட்டு அளவிலும் மக்களுக்கு ஜீவாதாரமானது. மக்களுக்கு இவ்விதம் அத்தியாவசியமாகத் தேவைப்படும் மின்விசையின் விலையை உற்பத்தியாளர் தமது விருப்பப்படி நிர்ணயிக்க அனுமதிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு. மின்விசை மலிவான கட்டணத்தில் அதிக அளவில் கிடைப்பதற்கு இந்தியா வழிவகை செய்யவில்லை என்றால் இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியின் எதிர்காலம் முழுவதுமே மிகுந்த அபாயத்துக்கு உள்ளாகும். ஆதலால் ஆதாயப் பங்குகளை மின்விசைக் கட்டணத்தோடு சம்பந்தப்படுத்துவது மிகவும் முக்கியம். இந்தக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் கணக்குவைக்கும் விதிகளைச் செயல்படுத்துவது இன்றியமையாதது; மின்விசை உற்பத்தியாளர்களுக்கு நியாயமான லாபம் சிடைக்க இது வகை செய்யும்; அதோடு, திருட்டுத்தனமாக லாபங்கள் ஈட்டுவதற்கு வகை செய்யும் ஓட்டைகளையும் அடைத்துவிடும்.

கணக்கு வைக்கும் கோட்பாடுகள்

          அப்போது பிரச்சினை இரண்டாந்தரமானதாகிவிடும். கணக்கு வைப்புக் கோட்பாடுகள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலம் புரட்சிகரமான புதிய கருத்து எதையும் நாம் கூறிவிடவில்லை. 1925 ஆம் வருட லண்டன் மின்விசை சட்டத்திலும், 1926 ஆம் வருட மின்விசை வழங்கீடு சட்டத்திலும் மின்விசை சம்பந்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் விதிமுறைகளைத்தான் நாம் பின்பற்றுகிறோம். இந்திய அரசாங்கத்தின் மின்விசைத்துறை ஆணையர் தயாரித்துள்ள பொதுநிலை அறிக்கையில், மின்விசை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய இத்தகைய கணக்கு வைப்புக் கோட்பாடுகளை வகுத்துத் தந்திருக்கிறார். அவரது அறிக்கை மாகாண அரசாங்கங்களுக்கும், மின்விசை உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் கருதறிய சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது. இது விஷயத்தில் துரதிர்ஷ்டவசமாக சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்தக் கருத்து வேறுபாடுகளை களையும் பொருட்டு ஓர் ஆலோசனைக் குழுமத்தை அமைக்க இந்திய அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது; எத்தகைய நியாயமான, உசிதமான கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தக் குழுமம் ஆலோசனை கூறும். இது ஒரு சரியான, திருப்திகரமான தீர்வு என நீங்கள் கருதுவீர்கள் என நம்புகிறேன்.

            நிகழ்ச்சி நிரலில் நாம் இன்னும் பரிசீலிக்க வேண்டியிருப்பவை 1 ஆவது இனமும் 3ஆவது இனமுமாகும். நமது நிகழ்ச்சி நிரலில் உண்மையில் இவை மிக முக்கியமானவை; இவற்றை விளக்கிக் கூறுவதற்கு உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வதை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

            முதல் இனத்தைப் பொறுத்தவரையில், கொள்கைக் குழுவின் கடந்த கூட்டத்தில் நிலைமை எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்கு நன்கு நினைவிருக்கும். நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் குறித்த விவாதம் முடிவுற்றபோது அக்கூட்டத்தில் ஏற்பட்ட உடன்பாடு அடங்கிய ஒரு தீர்மானத்தைத் தொழிலாளர் நலத்துறை தயாரித்து கொள்கைக் குழுவின் அடுத்த கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்க வேண்டும் என்று கொள்கைக் குழு விருப்பம் தெரிவித்தது. அவ்வாறே ஒரு நகல் தீர்மானம் தயாரிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

            “இந்தியாவில் மின்விசை வழங்கீட்டை மேலும் அபிவிருத்தி செய்வதை ஓர் அரசு முயற்சியாகவோ அல்லது ஓரளவு அரசு முயற்சியாகவோ தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், மாகாண அரசாங்கங்களுக்கோ, சமஸ்தான அரசாங்கங்களுக்கோ அல்லது ஸ்தல ஸ்தாபன அமைப்புகளுக்கோ சொந்தமான மின் நிலையங்களிலும், அதேபோன்று வர்த்தக ரீதியாக தனியார் நடத்தும் மின் நிலையங்களிலும் மின்விசை உற்பத்தி ஆரோக்கியமான முறையில் வளர்வதற்கு இடையூறுகளாக இருக்கும் காரணங்களைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் பரிந்துரைக்கிறது.”

            இந்தத் தீர்மானம் அத்தனை தெள்ளத் தெளிவாக இல்லை என்பது உணரப்பட்டது. புதிதாக உருவாகப் போகும் மின் நிலையம் பற்றித் தீர்மானம் கூறியுள்ளது ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் மின் நிலையங்களைப் பற்றி அது எதுவும் தெரிவிக்கவில்லை. மின்விசை உற்பத்தி ஆரோக்கியமான முறையில் வளர்வதற்கு இடயூறாக இருக்கும் காரணக் கூறுகளைக் கட்டுப்படுத்தும் அவசியம் பற்றிக் கூறும் தீர்மானம் அந்தக் காரணக் கூறுகள் எவை என்பதை திட்டவட்டமான முறையில் எடுத்துரைக்கத் தவறிவிட்டது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள ஐயங்களை அகற்றுவதற்கு கொள்கைக் குழுவில் தீர்மானம் மீண்டும் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது விரும்பத்தக்கது என்று உணரப்பட்டது. இவ்வாறுதான் 1 ஆவது இனம் இப்போதைய நிலையை அடைந்தது.

அரசுக் கட்டுப்பாடும் உடைமையும்

          தற்போது மின் நிலையங்கள் இல்லாத இடங்களில் கட்டப்படும் மின் நிலையங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் அல்லது அவற்றின் மீது அரசாங்கக் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையே சென்ற கொள்கைக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இருந்தது; ஆனால் மின் நிலையங்கள் ஏற்கெனவே நிர்மானிக்கப்பட்டுச் செயல்பட்டுவரும் இடங்களில் அரசு எத்தகைய பங்காற்ற வேண்டும் என்பது குறித்து ஓரளவு ஐயப்பாடு நிலவியது. உதாரணமாக, இதுபற்றி சில கேள்விகள் எழுந்துள்ளன: அவசியம் ஏற்படும்போது ஒரு மின் நிலையத்தை அரசோ அல்லது அதன் அதிகாரம் பெற்ற வேறு எந்த ஓர் அமைப்போ தன் நிருவாகத்தின் கீழ் கொண்டு வருவதை ஒரு பொதுவான நியதியாக மேற்கொள்வது விரும்பத்தக்கதா? பிராந்திய வளர்ச்சியின் பொருட்டோ அல்லது மின் உற்பத்தியை ஒழுங்குப்படுத்தும் பொருட்டோ தனியார் மின் நிலையங்கள் மீது அரசு கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் செலுத்துவது உசிதமானதா? போதிய பிராந்திய வளர்ச்சியின் பொருட்டு வேறு சில மின் நிலையங்களிலிருந்து தற்போது இயங்கிவரும் சில மின் நிலையங்களுக்கு பெருமளவுக்கு மின்விசை வழங்க வேண்டியிருக்கும். இதன் மூலம் இப்போதுள்ள ஒரு மின்நிலையத்தை விரிவுபடுத்தி, அதனை பிராந்திய வளர்ச்சிக்கான பொதுத் திட்டங்களுக்கு இசைந்ததாக ஆக்க முடியும். ஆதலால், மின் நிலையங்களை எந்த அளவுக்கு அரசு உடைமையாக்க வேண்டும் என்பது பற்றி மட்டுமன்றி, உடனடியாக அரசுடைமையாக்குவது சாத்தியமில்லாத போது, சம்பந்தப்பட்ட மின்நிலையங்கள் மீது அரசு தனது கட்டுப்பாட்டைச் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்த விவாதத்தில் நாம் ஒரு தெளிவான முடிவினை மேற்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

ஜெவோனது பொருளாதார சூத்திரம்

          அரசு நிறுவனமா, தனியார் நிறுவனமா என்பது எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் திட்டமிட்ட பொருளாதாரம் என்னும் கொள்கை வழியை நாம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டதால் இந்த சர்ச்சை இந்தியாவில் தற்போது முழு வேகத்துடன் எதிரொலித்து வருகிறது. அரசும் தொழில்துறையும் என்னும் தமது ஆய்வுக் கட்டுரையில் அரசு நிறுவனத்தையும் தனியார் நிறுவனத்தையும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு பொருளாதார சூத்திரத்தை வகுத்தளிக்க ஜெவோன்ஸ் முயன்றுள்ளார்; அரசு நிறுவன எதிர்ப்பாளர்களுக்கு இந்த சூத்திரமே வேதவாக்காக அமைந்துள்ளது. ஒரு தொழிலை அரசுடைமை ஆக்குவதற்கு ஜெவோன்ஸ் நான்கு அளவுகோல்களை நிர்ணயித்து தந்திருக்கிறார்: அவை வருமாறு: (1) சிறு மூலதனக் கணக்கு; (2) வழக்கமான வேலை நடைமுறைகள்; (3) அஞ்சல் துறை, தந்தி, தொலைபேசி போன்ற பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு; (4) தண்ணீர், எரிவாயு வழங்கீடு விஷயத்தில் போன்று அனைத்தையும் உள்ளடக்கிய போதிய அளவில் அமைந்த ஒரே தொழில் நிலையம்.

இந்த நாட்டிலுள்ள ஜெவோன்ஸ் ஆதரவாளர்கள் இந்த அளவுகோல்களுடன் வேறுசில அளவுகோல்களையும் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்; அரசுத் துறைத் தொழில் நிலையங்களை விஸ்தரிக்கக் கூடாது, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்; எனினும் இதற்கு ஒரு விதிவிலக்கு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்; தனியார் துறைக்கு இலாபகரமற்றவையாக உள்ள தொழில் நிலையங்களை அரசுத் துறைக்குத் தந்துவிடலாம் என்று கூறுகிறார்கள். தனியார் துறை ஓர் யதார்த்தமாயிருக்குமாயின் இந்தச் சர்ச்சைக்கு உறுதியான ஆதாரம் இருக்கிறது எனக் கருதலாம். ஆனால் இன்று தனியார் துறை ஓர் இடைப்பட்ட வளர்ச்சிக் கட்டத்திலேயே இருந்து வருகிறது. ஒரு தொழில் மாபெரும் பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனங்களால் நடத்தப்படும் ஒரு பொருளாதார அமைப்பில் தனியார் துறை என்று எதுவும் இருப்பதற்கில்லை. இதேபோன்று, துணிச்சலுக்குப் பதில் முன்னெச்சரிக்கைப் போக்கு தொழில் அல்லது வாணிபத்தின் ஆதார சுருதியாக அமைந்திருக்கும் ஒரு பொருளாதார அமைப்பில், இப்போதைய பொருளாதார நிலைமைகளில் ஒழுங்குமுறையிலமைந்த செயல்பாட்டைப் பராமரிப்பதன் மூலம் லாபங்களை ஸ்திரப்படுத்துவதையே பிரதான குறிக்கோளாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பில் தனியார் துறை என்று எதுவும் இருப்பதற்கில்லை. இந்தச் சர்ச்சையில் நான் ஈடுபடுவது அவசியமற்றதாகும். ஏனென்றால் அரசுத் துறையையும், அரசுக் கட்டுப்பாட்டையும் எதிர்ப்பவர்கள் மிகச் சிலரே உள்ளனர். மின்விசைத் துறையை அரசுடைமையாக்குவதை இவர்கள் எவ்வகையிலும் எதிர்க்கவில்லை.

            மின்விசை வழங்குவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மின்நிலையத்துக்கு அளிக்கப்பட்ட உரிமம் காலாவதியாகிவிடும் போது அது சம்பந்தமாக முடிவெடுக்கும் பிரச்சினையை 3ஆவது இனம் எழுப்புகிறது; அதாவது ஒரு மின்விசை நிலையத்தை வாங்குவது சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. இந்திய மின்விசை சட்டம் 7 ஆவது பிரிவில் கண்டுள்ள விதிகளின் படி இப்பிரச்சினைக்குத் தற்போது தீர்வு காணப்படுகிறது. இந்தப் பிரிவின்படி ஒரு மின் நிலையத்தை வாங்குவதா, இல்லையா என்பதை ஸ்தல நிர்வாகம் தன் உசிதம் போல் முடிவு செய்யலாம்; இவ்வாறு அது முடிவு செய்யவில்லை என்றால், மாகாண அரசாங்கம் தீர்மானிக்கலாம். இதே போன்று தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்துக்கு அளிப்பது விரும்பத்தக்கதல்லவா, அந்த அதிகாரம் எந்தக் கட்டத்தில், எத்தகைய நிலைமைகளில் வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் உள்ள இந்த 3ஆவது இனம் முன்வைக்கிறது. மின்நிலையத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் உரிமை மத்திய அரசாங்கத்துக்கும் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மின்விசை என்பது பொதுமக்களின் உபயோகத்துக்குரியது என்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இத்தகைய உரிமையை மத்திய அரசாங்கத்துக்கு வழங்குவதில் சிரமம் ஏதும் இருக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு.

மாகாணக் கட்டுப்பாடா அல்லது மத்திய கட்டுப்பாடா?

            துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கோட்பாட்டை ஏற்பதில் ஓரளவு தயக்கம் நிலவுவதாகத் தோன்றுகிறது. இந்தியாவில் திட்டமிடுதல் என்பது இரண்டு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது: அரசுத்துறை நிறுவனமா தனியார் துறை நிறுவனமா என்பது ஒரு பிரச்சினை; மாகாணக் கட்டுப்பாடா மத்தியக் கட்டுப்பாடா என்பது இன்னொரு பிரச்சினை. இந்த இரண்டு பிரச்சினைகளையும் நாம் நன்கு அறிவோம்; எனினும் 3ஆவது இனம் இரண்டாவது பிரச்சினையைத்தான் பிரதானமாக கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறது. அரசுத்துறை நிறுவனக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மாகாண கட்டுப்பாட்டில் இருந்தாலும் அல்லது மத்தியக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதனை ஒரு பிரச்சினையாக்க மாட்டார்கள்; இத்தகைய கட்டுப்பாட்டை மாகாண அரசு தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள விரும்பாதபோதோ அல்லது ஒரு மாகாணத்தின் எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய வளர்ச்சியின் நலன்களை முன்னிட்டோ அவசியமாகும்போது மத்திய அரசிடம் அந்தக் கட்டுப்பாட்டை விடுவதையும் அவர்கள் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீர்வழி விஷயத்தில் போன்று எந்தத் தகுந்த, உகந்த திட்டங்களையும் மாகாண எல்லைகளுக்குள்ளாகக் கட்டுப்படுத்திட இயலாது மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டும் என்றபோதிலும், பிராந்திய வளர்ச்சியின் பொருட்டு அரசுக் கட்டுப்பாடு அவசியமாகும் சந்தர்ப்பங்களிலும், குறிப்பிட்டதொரு தொழில் நிலையத்தை அரசுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மாகாண அரசாங்கம் விரும்பாத சந்தர்ப்பங்களிலும் மத்திய அரசு இந்தப் பொறுப்பை ஏற்பது உசிதம் என்றே தோன்றுகிறது.

            நிகழ்ச்சி நிரல் காரணமாக எழக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே நான் கூறியதற்கும் அதிகமாக பயனுள்ள எதையும் என்னால் கூறமுடியும் என்று கருதவில்லை. எனினும் என் உரையை முடிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; நீங்கள் எத்தகைய முடிவை மேற்கொண்டாலும் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து நாட்டில் நிலவும் பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு இசைந்ததாக அந்த முடிவு இருப்பது அவசியம் என்பதை நீங்கள் மனத்திற் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொதுஜன அபிப்பிராயம் ஏதுமில்லை என்று கருதுவது தவறு. பலர் நினைப்பதை விட அது அதிக இடதுசாரிப் போக்குடையது என்பது என் திடமான கருத்து; எனினும் அதற்கு வறட்டுத்தனமாக சித்தாந்த சகாயம் பூச நான் விரும்பவில்லை.

            நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் நாடு இந்தியா; இத்தகையதொரு நாட்டில் திட்டத்திற்கும் பொதுமக்கள் அபிப்பிராயத்துக்கும் இடையே உடன்பாடு இருக்க வேண்டிய அவசியத்தை மிகைப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். திட்டமிடும் முறை ரஷ்யாவில் வெற்றியடைந்து வருவதாகப் பலர் பேசுகிறார்கள். ரஷ்யா நாடாளுமன்ற அரசாங்க அமைப்பைப் பெற்றிராததே இதற்குப் பிரதான காரணம் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். நாடாளுமன்ற அமைப்பில் திட்டமிடுவதில் பல சிரமங்கள் இருக்கின்றன; திட்டமிடுபவர்கள் எந்த நேரம் தங்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுமோ என்ற அச்சத்தில் எப்போதும் இருந்துவருவார்கள்; மேலும், தங்கள் திட்டங்கள் நிறைவேற்றப்படும் காலம்வரை தாங்கள் பதவியில் இருக்க முடியுமா என்ற ஐயம் அவர்களை சதாவும் அலைக்கழித்துவரும். திட்டமிட்ட பொருளாதாரம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒவ்வாததா, அவ்வாறானால் அவை இரண்டையும் எவ்வாறு இணக்கமுறச் செய்வது என்பது நீண்ட நெடிய பிரச்சினையாகும்; அது குறித்து விவாதிப்பதற்கு இது உரிய இடமல்ல. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எச்சரிக்க விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அதாவது நமது திட்டங்கள் நமக்குப் பிறகு வருபவர்களால் ரத்து செய்யப்படாதிருக்க வேண்டுமானால் மிக அதிகமான மக்களுக்கு மிக அதிகமான நன்மை என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்திருக்கும் மிகப் பெரும்பாலான மக்களுக்கு உடன்பாடானதாக அவை இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழுவின் பரிந்துரைகள்

            தற்போது உரிமம் பெற்ற பிரதேசங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு மின்விசை வழங்கும் பணியை அரசுத்துறை நிறுவனத்தின் மூலமோ அல்லது ஓரளவு அரசுத்துறை சார்ந்த நிறுவனத்தின் மூலமோ தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று “பொதுப்பணித்துறை மற்றும் மின்விசைத் துறைக்கான கொள்கைக்குழு” பரிந்துரைத்துள்ளது. ஏதேனும் காரணங்களுக்காக இத்தகைய பணியை எந்த ஒரு பகுதியிலும் உரிய காலத்திற்குள் மேற்கொள்ள அரசு தயாராக இல்லை என்றால், அப்பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம். திறமையான முறையிலும், குறைந்த கட்டணத்திலும் பொதுமக்களுக்கு மின்விசை வழங்கீட்டை உத்தரவாதம் செய்யக்கூடியதும், இப்போதைய உரிமத்தின் கீழ் செயல்படக் கூடியதுமான ஒரு நிறுவனத்தை வாங்கலாம். ஆனால் அதேசமயம் மாகாண அரசுக்கோ, மத்திய அரசுக்கோ, ஸ்தல அமைப்புக்கோ சொந்தமான அல்லது வர்த்தக ரீதியிலான மின்விசை நிலையங்கள் பிராந்திய அளவில் ஆரோக்கியமான முறையிலும் சிக்கனமான முறையிலும் வளர்ச்சியுறுவதற்குத் தடையாக இருக்கக்கூடிய காரணக் கூறுகளைக் களைவதற்கு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

            மின்விசைத் துறையின் பயனோக்கையும் பொதுமக்களின் பயனோக்கையும் கருதி மின்விசை உற்பத்தியையும் வழங்கீட்டையும் கண்காணிப்பதற்கு சில நிதிக் கோட்பாடுகள் வகுத்தளிக்கப்பட வேண்டிய அவசியத்தை குழுவின் மற்றொரு பரிந்துரை ஏற்றுக் கொள்கிறது. இத்தகைய கோட்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும், அவற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும், இது சம்பந்தமாக எத்தகைய முறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பவை குறித்து அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற மின்விசைச் சட்டத்தின் 35ஆவது பிரிவின்படி ஓர் ஆலோசனைக் குழுமம் அமைக்கப்படுவது அவசியம். மத்திய அரசாங்கத்தின் இரு பிரதிநிதிகள், மாகாண அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து நியமிக்கப்படும் இரு பிரதிநிதிகள், மின்விசை நிறுவனங்களது சம்மேளனத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோர் இந்தக் குழுமத்தில் இடம் பெற்றிருப்பர். தேவையான எண்ணிக்கையில் மதிப்பீட்டாளர்களை குழுமம் நியமித்துக் கொள்ளலாம்.

            மின்விசை அதிகரிப்புக்குத் திட்டமிடுவதற்காக ஒரு திட்டமிட்ட, ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்கும் பொருட்டு 1910 ஆம் வருட இந்திய மின்விசைச் சட்டத்தின் 7ஆவது பிரிவைத் திருத்தும் யோசனை குறித்து விவாதம் நடைபெற்றது; இந்த விவாதம் மத்திய அரசாங்கத்தின் பரிசீலனைக்குப் பல விஷயங்களை முன் வைத்துள்ளது. ஒரு மின் நிலையத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்கு மாகாண அரசாங்கத்துக்கு முதல் உரிமை அளிக்கும் விதத்தில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை குழு ஏற்றுக்கொண்டது. மாகாணங்களின் பரஸ்பர வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு இருப்பது அவசியம் என்று கருதப்படும்போது, அத்தகைய மின் நிலையங்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தும் பிரச்சினையும் விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சினையின் சில அம்சங்கள் குறித்து கருத்து வேறுபாடு நிலவிற்று; எனவே, மாகாணங்களுடன் கலந்தாலோசித்து இந்தப் பிரச்சினையை மேற்கொண்டு பரிசீலிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் பயிற்சித் திட்டங்கள்

          மத்திய மின்விசைத் தொழில்நுட்ப வாரியம் அமைக்கப்படுவதையும், மின்விசைத் தொழிலின் வாணிக நிர்வாகத் துறைகளில் அயல்நாடுகளில் பயிற்சி பெறுவதற்கு பத்து இந்தியப் பொறியாளர்களை அனுப்பும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தையும் கொள்கை குழு வரவேற்றது. இவர்களில் நான்கு பேர் பிரிட்டனிலும், நான்கு பேர் அமெரிக்காவிலும் டென்னஸ்ஸிப் பள்ளத்தாக்கு ஆணையத்திலும், இருவர் கனடாவிலும் பயிற்சி பெறுவர். இந்த அதிகாரிகளில் இருவர் மத்திய அரசாங்கத்தையும், நான்கு பேர் மாகாண அரசாங்கங்களையும், இருவர் சமஸ்தான அரசாங்கங்களையும், இருவர் பொது மின்விசை நிலையங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பர். இரண்டு மத்திய அரசாங்க அதிகாரிகள் பயிற்சி பெறுவதற்கு ஆகும் செலவு முழுவதையும் இந்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். இந்தத் திட்டத்தின்படி, மின்விசைத் தொழிலின் வாணிக, நிர்வாகத் துறைகளில் இந்தியப் பொறியாளர்கள் பயிற்சி பெறும் அதேசமயம் தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சி பெறுவதற்கு இரண்டு கோஷ்டிகளை அனுப்புவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் திட்ட, அபிவிருத்தித் துறை உறுப்பினர் மாண்புமிகு சர் அர்தேஷிர் தலால், வங்க மாகாண வாணிக, தொழிலாளர் நல மற்றும் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.ஷாபுதீன், சிந்து மாகாண பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு ராய் பகதூர் கோகுல்தாஸ், சர் மிர்ஸா இஸ்மாயில், ராஜா தரம்கரம் பகதூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களையன்றி மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், மின்விசை நிலையங்கள் சம்மேளனம், இந்தியப் பொறியாளர் சங்கம் போன்றவற்றைச் சேர்ந்த அதிகார சார்பற்ற பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)