V

குருவாயூர் கதை இவ்வாறு முடிவடைந்தது. இனி அடுத்து ஆலயப் பிரவேச மசோதாக்கள் விஷயத்துக்கு வருவோம். மத்திய சட்டமன்றத்தில் இது சம்பந்தப்பட்ட பல மசோதாக்களில் திரு. ரங் அய்யர் பெயரில் இருந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏனைய மசோதாக்கள் அனைத்தும் கைவிடப்பட்டன. ஆனால் திரு. ரங்க அய்யரின் மசோதா கொண்டுவரப்படும்போதே, பிறக்கும் போதே பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.

ambedkhhar 350இந்திய அரசாங்கத்தின் அன்றைய சட்டத்தின்படி, சமயத்தையோ அல்லது சமயப் பழக்க வழக்கங்களையோ, மரபுகளையோ பாதிக்கும் எந்த மசோதாக்களையும் கவர்னர்-ஜெனரலின் முன்அனுமதியின்றிச் சட்டமன்றத்தில் கொண்டுவர முடியாது. இதன் பிரகாரம் இந்த மசோதா கவர்னர்- ஜெனரலின் அனுமதிக்காக அனுப்பப்ட்டபோது, அது மீண்டும் ஒரு குழப்பத்தை, குமுறலைக் கிளர்த்திவிட்டது; கவர்னர்-ஜெனரல் இந்த மசோதாவை நிராகரிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரப்பப்பட்டன. இந்த செய்திகளைக் கேள்விப்பட்டு திரு. காந்தி பெருமளவுக்குக் கிளர்ச்சி அடைந்தார். 1933 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி பத்திரிகைகளில் அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் திரு. காந்தி குறுப்பிட்டிருந்ததாவது.

“இந்தச் செய்திகள் வைசிராயின் முடிவு பற்றிய முன்  கணிப்பாக இருந்து உண்மையாக இருக்குமாயின் அவை  துயரமளிக்கக் கூடியவை என்று மட்டுமே இங்கு என்  னால் கூறமுடியும்..... ஆலயப் பிரவேச நடவடிக்கைகளுக்குப் பின்னால் எத்தகைய அரசியல் நோக்கமும் இல்லை என்று திட்டவட்டமாக வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.  ஐயத்துக்கிடமான, ஒரு பழக்கவழக்கத்துக்கு நீதிமன்றத்  தீர்ப்புகள் சட்ட வலுகொடுக்க வேண்டிய அவசியம்  இல்லாதபோது, அதற்குச் சட்டம் இயற்ற வேண்டிய  தேவை இல்லை.

மத விவகாரங்களில் அரசு தலையிடு  வதை சகித்துக் கொள்ள இயலாத கேடு பயக்கும் செயல்  என்று நானும் கருதுகிறேன். ஆனால் இங்கு சட்டரீதியான தடையை அகற்றும் பொருட்டு சட்டம் இயற்றுவது  அவசியமாகிறது; இத்தகைய சட்டம் மக்களின் விருப் பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்குமாதலால் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தரப்புகளுக்கிடையே  முரண்பாடு எழும் பிரச்சினைக்கு இடமிருக்காது என்றே  நம்புகிறேன்.”

அரசாங்கத்தின் முடிவு 1933 ஜனவரு 23 ஆம் தேதி அறிவிக்கப் பட்டது. சென்னை மேலவையில் டாக்டர் சுப்பராயன் ஆலயப் பிரவேச மசோதா கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க வெல்லிங்டன் பிரபு மறுத்துவிட்டார். ஆனால் மத்திய சட்டமன்றக் கீழவையில் திரு.ரங்க அய்யரின் தீண்டாமை ஒழிப்பு மசோதாவை தாக்கல் செய்ய அவர் அனுமதித்தார். இது விஷயத்தில் தாங்கள் எத்தகைய போக்கைக் கடைப்பிடிப்பது என்பது குறித்துத் தீர்மானிப்பதற்கு முன்னர் இந்துக்களின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வது அவசியம் என்று தாங்கள் கருதுவாக அரசாங்கம் வலியுறுத்திக் கூறிற்று.

இத்தகைய ஒரு நடவடிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட பிரேரணைகள் அவற்றின் எல்லா அம்சங்களிலும் முழு அளவுக்கு நுணுக்கமாக ஆய்வு செய்யப்படுவதும், அவற்றால் பாதிக்கப்படக் கூடியவர்களின் கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதும் இன்றியமையாதது என்று இந்திய அரசாங்கமும் கவர்னர்-ஜெனரலும் தெளிவுபடுத்த விரும்புகின்றனர் என அந்த அறிவிப்பு மேலும் கூறிற்று. மக்களின் கருத்தை அறியும் பொருட்டு மசோதாவை மிகப் பரந்த முறையில் சுற்றுக்கு விட்டால்தான் இந்த நோக்கம் நிறைவேற முடியும்.

ஆலயப் பிரவேசம் சம்பந்தப்பட்ட மசோ தாக்களை மத்திய சட்டமன்றத்தில் கொண்டு வருவதற்கு அனுமதிப்பதானது அவற்றில் அடங்கியுள்ள கோட்பாடுகளை ஏற்கும்படியோ அல்லது ஆதரிக்கும்படியோ அரசாங்கத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மறுநாள், திரு. காந்தி ஓர் அறிக்கை வெளி யிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

”இதில் ஆண்டவனின் திருக்கரம் எந்த அளவுக்கு படிந் துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க நான் முயல வேண்டும்.  இதனை நான் துருவித் துருவி ஆராய வேண்டும் என அவர்  விரும்புகிறார். அகில இந்திய மசோதாவுக்கு அனுமதி  அளிக்கப்பட்டிருப்பதை உள்நோக்கம் ஏதுமின்றி இந்துசமயத்துக்கும் சீர்திருத்தவாதிக்கும் விடுக்கப்பட்டுள்ள  ஓர் அறைகூவலாக எடுத்துக்கொள்ள வேண்டும். சீர்திருந்த  வாதி தான் மேற்கொண்ட நிலையில் பற்றுறுதியுடையவராக, அதிலிருந்து பிறழாதவராக இருக்கும் பட்சத்தில்  இந்து சமயம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும்.

என்றே கருத வேண்டும். இது பிரச்சினையைத் தெளிவாக்குகிறது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும்  அறப்போராட்டத்தின் மகத்தான முக்கியத்துவத்தை இந்தி யாவும் உலகமும் புரிந்து கொள்ள இது துணைபுரிகிறது.  சனாதனிகள் எத்தகைய முடிவு எடுத்தாலும் ஆலயப்  பிரவேச இயக்கம் தற்போது தென் கோடியிலுள்ள குருவா யூரிலிருந்து வடக்கே ஹரித்துவார் வரை விரிந்து பரந்து  வியாபித்து வருகிறது; எனது உண்ணாவிரதம் மேலும் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் தற்போது அது குருவா  யூருடன் நில்லாமல், பொதுவாக எல்லாக் கோவில்களுட னும் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.”

இந்த மசோதா தனது சட்டமன்றப் பிரவேசத்தை எத்தகைய எக்காள முழக்கத்துடன் தொடங்கிற்று என்பதை அனைவரும் அறிவர். 1933 மார்ச் 24 ஆம் தேதி திரு. ரங்க அய்யர் விதிமுறைப்படி சட்ட மன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்தார். இது திரு. காந்திக்கு சாதகமான மசோதா ஆதலால் சட்டமன்றா காங்கிரஸ் உறுப்பினர் கள் அதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தனர். மசோதா எத்தகைய தங்கு தடையுமின்றி சட்டமாவதை உறுதிசெய்யும் பொருட்டு காங் கிரசல்லாத உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் பணியை திரு. ராஜ கோபாலாச்சாரியரிடமும், திரு. ஜி.டி. பிர்லாவிடமும் திரு. காந்தி ஒப்படைத்திருந்தார்.

ஆதரவைத் திரட்டும் பணியில் அவர்கள் தம்மை விடத் திறமை வாயந்தவர்கள் என்று கூறினார். மசோதாவை முன் மொழியும் தீர்மானத்தை கொல்லங்கோடு ராஜாவும் திரு. தம்பானும் எதிர்த்தனர்; இந்த மசோதா சட்டமன்றத்தில் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் ஆட்சேபம் எழுப்பினர். இந்த ஆட் சேபம் அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதன் பேரில் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு அவை அனுமதியளிதத்து.

அடுத்த படியாக, ஜுலை 30 ஆம்தேதி வாக்கில் பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக மசோதா வைச் சுற்றுக்கு விட வேண்டும் என்று கோரும் ஒரு திர்மானத்தை திரு. ரங்க அய்யர் கொண்டு வந்தார். மசோதாவைச் சுற்றுக்கு விடக் கோரும் இந்தத் தீர்மானத்தை ராஜா பகதூர் கிருஷ்ண மாச்சாரி எதிர்த்தார்; உத்தேச சட்டத்தை அவர் மிக வன்மையாகக் ஜுலை 31 என்று இருப்பதற்குப் பதிலாக டிசம்பர் 31 ஆக மாற்ற வேண்டும் என்று அவர் கோரினார். மசோதாவை சுற்றுக்கு விடக் கோரும் தீர்மானத்தை திரு. குஞ்சால் எதிர்த்தார்; மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டாம் என்று அவையைக் கேட்டுக் கொண்டார்.

ஏற்கெனவே மாலை 5 மணியாகி விட்டதாலும், அந்தக் கூட்டத் தொடரில் அரசு சார்பற்ற அலுவல்களுக்கு அதுவே கடைசி நாள் என்பதாலும் அன்றைய தினம் சபை நடவடிக்கைகளை மேலும் நீடிப்பது சம்பந்தமாக உறுப்பினர்களின் கருத்தை அறிய அவைத் தலைவர் விரும்பினார். இதற்கு அவையிலுள்ள பெரும்பாலோரின் ஆதரவு கிட்டாததால் தலைவர் அவையை ஒத்திவைத்தார். இதனால் மசோதாவும் சட்டமன்றத்தின் இலையுதிர் காலத் கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய சட்டமன்றத்தின் இலையுதிர் காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வந்தபோது மசோதா மீதான விவாதம் 1933 ஆகஸ்டு 24 ஆம் தேதி மீண்டும் தொடங்கிற்று. மசோதாவை சுற்றுக்குவிடக் கோரும் தீர்மானத்துக்குத் தாங்கள் அளிக்கும் ஆதரவை அதன் ஷரத்துக்களைத் தாங்கள் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசாங்கத்தின் சார்பில் சர். ஹார்ரி ஹெய்க் விளக்கம் அளித்தார். அரசாங்கம் தாழ்த்தப்பட்ட பட்ட வகுப்பினர்களில்பால் ஆதர வும் பரிவும் கொண்டிருந்தது என்பதிலும், அவர்களது சமூக, பொரு ளாதார மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் தங்களால் முடிந் ததைச் செய்ய ஆவல் கொண்டிருந்தது என்பதிலும் ஐயமில்லை. இது சம்பந்தமாக கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையை அவர் மேற்கோள் காட்டிப் பேசினார்; அரசாங்கத்தின் கருத்து அதில் முழு அளவுக்கு விவரிக்கப்பட்டிருந்தது.

மசோதாவை ஜுன் இறுதிக்குள்ளாகச் சுற்றுக்கு விடுவது மக்களின் கருத்தைப் பரந்த அள வில் அறிய உதவும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். கோவிலுக்கு வழக்கமாகச் செல்லும் இந்துக்களைப் பொறுத்தவரையில், அவர் களுக்கிடையே மசோதாவைச் சுற்றுக்கு விடுவதற்கு ஒரு வரையறை நிர்ணயிப்பது சரியல்ல, ஏனென்றால் எதார்த்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உத்தேசிக்கப்பட்டிருப்பது போன்று அவர்கள் மீது எத்தகைய கட்டுப்பாடும் விதிப்பது காரிய சாத்தியமல்ல என்று சர் ஹார்ரி ஹெய்க் குறிப்பிட்டார். இந்த விஷயத்தை இந்துக்களில் அனைத்துத் தரப்பினருமே முழு அளவுக்கு விவாதிக்க வேண் டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

எனவே, திரு. சர்மா கொண்டு வந்துள்ள திருத்தத்தை ஆதரிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார். இதன்பேரில், மசோதாவை 1934 ஜுன் இறுதிக்குள் சுற்றுக்கு விட வேண்டும் என்ற திரு. சர்மாவின் திருத் தத்தை அவை ஏற்றுக்கொண்டது. இதன்படி கருத்துகள் சேகரிக்கப் பட்டன. அவை அனைத்தும் சேர்ந்து ‘புல்ஸ்கேப்’ அளவில் ஆயி ரத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய தொகுதியாகி விட்டது. மசோதா அடுத்த கட்டத்திற்குத் தயாராக இருந்தது; அதா வது ஒரு பொறுக்குக் கமிட்டியை அமைக்கும் நடவடிக்கை மேற் கொள்ளும் கட்டத்தை அடைந்தது. இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முன் அறிவிப்பையும் கூட திரு. ரங்க அய்யர் தந்துவிட்டார். இச்சமயம் ஓர் எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது.

சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பு திரு. ரங்க அய்யரின் மசோதா சம்பந்தமாக மத்திய சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த போக்கில் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்கள் அனைவரும் ஒன்றுபோல் மசோதா வுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்; ம்சோதாவை மேற்கொண்டு ஆதரிக்கவும் மறுத்துவிட்டனர். வாக்காளர்களிடம் அவர்களுக்கிருந்த

அச்சமும் திகிலும் கிலியுமே இதற்குக் காரணம். திரு. ரங்க அய்யரின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. கடைசியில் விஷத்தைக் கக்கி விட்டார்கள் என்று தமது நிலையை மிகக் கசப்பான மொழி யில் அவர் வெளியிட்டார். அவர் தமது நிலைமையை மிகத் தத் ரூபமாக எடுத்துரைத்தார் என்றே கூற வேண்டும். எனவே, அவரது உரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு வெளியிடுவதற்கு நான் எத் தகைய தயக்கமோ, மயக்கமோ கொள்ள வேண்டியதில்லை; எவ ருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. திரு. ரங்க அய்யர் தமது தீர்மானத்தை முன்மொழிந்து கூறியதாவது:

”ஐயா,தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்று அறியப்  படுகிற மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளை,  தடங்கல்களை, இடையூறுகளை அகற்றும் பொருட்டு  ஆலயப் பிரவேச மசோதா எனப்படும் மசோதாவை முன்  மொழிவதற்கு இப்போது முன்வந்திருக்கிறேன். ஐயா,  பின்கண்ட தீர்மானத்தை பிரரேபிக்கிறேன்:

”இந்து கோவில்களில் பிரவேசிப்பது சம்பந்தமாக  தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்ப்படுவோருக்குள்ள தடை  களை அகற்றக் கோரும் இந்த மசோதா மாண்புமிகு சர். நிர்பேந்திர சர்க்கார், மாண்புமிக சர். ஹென்றி கிரேய்க்,  பாய் பரமானந்த, ராவ் பகதூர் எம்.சி. ராஜா, திரு. டி.என்.  ராமகிருஷ்ண ரெட்டி, ராவ் பகதூர் பி.எல். பட்டீல் மற்றும்  இம்சோதாவைக் கொண்டு வருபவர் ஆகியோரடங்கிய  பொறுக்குக் கமிட்டியின் பரிசீலனைக்கு முன்வைக்கப்  பட வேண்டுமென்று முன்மொழிகிறேன்.

“கமிட்டியினர் இருவாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்ற வாசகத்தை உங்களது அனுமதி  யோடு நீக்கி, தீர்மானத்தின் எஞ்சிய பகுதி பின்வருமாறு  இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 “கமிட்டியின் கூட்டம் கூட்டப்படுவதற்கு ஐந்து  உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருப்பது அவசியம்.’

“ஐயா, இந்தத் தீர்மானத்துக்கு நான் முன்னறிவிப்பு  தந்தபோது, இன்னும் இரு வாரத்தில் நாம் பதவியில்  இருக்க மாட்டோம் என்று நினைக்கவில்லை. ஆதலால் இந்தத் தீர்மானத்திற்குள்ள குறுகிய காலவரம்பை நான்  உணர்கிறேன்; இத்தீர்மானத்தைப் பொறுக்குக் கமிட்டிக்கு அனுப்புவதற்குக் கூட அவகாசம் இருக்காது என்பதையும்  அறிவே. எனினும், இந்த விஷயம் குறித்து நமது கருத்  துக்களை வெளியிட இது வாய்ப்பளிக்கிறது என்று கருதுகிறேன்.

“திரு. முதலியார் உரையாற்றியபோது நான் குறிக்கிட்  டமைக்காக திரு. சத்தியமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்க  நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதை ஏற்கெனவே தெரி  வித்திருக்கிறேன். திரு. முதலியார் மிக வேகமாக உரையாற்றிக் கொண்டிருந்தமையால், என் நிலையை முழு  வதுமாக விளக்கிக் கூற இயலாது போயிற்று. அவ்வாறு  நான் செய்திருந்தால், அது அவருக்குப் பாதகமானதாக  இருந்திருக்கும்.

ஆலயப் பிரவேச மசோதாவை எக்காலத்  திலும் ஆதரித்திராத திரு. சத்தியமூர்த்தி காங்கிரஸ்  அதனைக் கைகழுவும்படிச் செய்வதில் வெற்றியடைந் திருக்கிறார் என்றே கூற வேண்டும். சென்னை ஹிந்து  பத்திரிகையில் ஆகஸ்டு 16 ஆம் தேதியிட்டு திரு. சி. ராஜ  கோபாலாச்சாரி தமது கைப்பட எழுதி வெளியிட்ட  அறிக்கையை இங்கு உங்களுக்கு வாசித்துக் காட்ட  விரும்புகிறேன். ஹிந்து மிகவும் பொறுப்பான செய்தி  ஏடு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அவர்  அளித்த பேட்டி தந்தி மூலம் அளித்ததன்று; மாறாக அவர்  கைப்படவே எழுதித் தந்த அறிக்கையாகும். எனவே திரு.  ராஜகோபாலாச்சாரியரின் இந்த அறிக்கையைத் துல்லிய  மானதாக எடுத்துக்கொள்ளலாம் என்று கருதுகிறேன்.  தீண்டப்படாதோரின் நலன்களைக் காட்டிக் கொடுத்  தமைக்காக பொதுமக்களிடம் திரு. ராஜகோபாலாச்சாரியர்  மன்னிப்பு கேட்டு வருகிறார். மகாத்மா காந்தியின் பிரதான  தளபதி என்ற முறையில் அவரது நம்பிக்கைத் துரோ  கத்தை இங்கு பதிவு செய்வது அவசியம். அவர் கூறுகிறார்:

“சமய வினைமுறைகளில் எத்தகைய சட்டரீதியான  தலையீட்டையும் காங்கிரஸ் ஆதரிக்காது என்று காங்கிரஸ் வேட்பாளர்கள் உறுதிமொழி அளிப்பார்களா  என்று சில சனாதனிகள் கேட்கிறார்கள். பல்வேறு விஷயங்கள் குறித்து அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் இதே  போன்று கேள்விகள் கேட்கக் கூடும். காங்கிரஸ் வேட்  பாளர்களிடம் மட்டுமே இத்தகைய கேள்விகளைக்  கேட்பதும், மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களிட  மும் சுயேட்சை வேட்பாளர்களிடமும் இதேபோன்று  விளக்கம் கோராததும் காங்கிரசுக்கு அளிக்கப்படும் மிகப்  பெரிய பாராட்டு என்றே கூறவேண்டும்.”

”இவ்வாறு கூறுகிறார் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார். அவர் குறிப்பிட்ட பாராட்டைப் பின்தொடர்ந்து  செல்லுங்கால், அவர் தெரிவித்த மக்கள் விரும்பாத ஒரு  நடவடிக்கைக்கு எதிராகப் பொதுஜன அபிப்பிராயத்தைக்  கிளர்த்தி விடாமல் இதோ ஒரு மாபெரும் காங்கிரஸ்  தலைவர் தமது மருமகன் தேவதாஸ் காந்தியுடன் என்  வீட்டின் முன் தர்ணா செய்தார்; அவருடைய மருமகனோ  டில்லியில் என்னை அடிக்கடிக் சந்தித்து ‘இந்த சட்ட  நடவடிக்கைக்கு நாங்கள் கூட்டு ஆதரவை தருகிறோம்  என்று கூறினார் – ஷேக்ஸ்பியரின் மொழியில் கூறுவதானால் ‘நண்டுபோல்’ பின்வாங்கும் ஒரு மனிதரை  இதோ பார்க்கிறோம்.ஒரு பரந்த துறையின் பல்வேறு  பிரச்சினைகளில் அரசியல் கட்சிகள் வேறுபட்ட கொள்கை  களைக் கொண்டுள்ளன என்று தென்புலத்தைச் சேர்ந்த  இந்த சூட்சுமமான, நுட்பமான முளையிலிருந்து விளக்கம்  வருகிறது:

‘எனினும் எந்த ஒரு சமயத்திலும் இவை அனைத்  துமே தேர்தல் பிரச்சினைகள் ஆக்கப்படுவதில்லை’.

“ஐயா, இந்த காங்கிரஸ் தலைவர் தாமே உசுப்பி  விட்ட பொதுஜன அபிப்பிராயத்தை எதிர்கொள்ள அஞ்சு கிறார்.

'வீழ்ந்துபட்டவர்களுக்காக, நலிந்தவர்களுக்காக பேச  அஞ்சுபவர்கள் அடிமைகளே’.

“மில்டன் கூறியதுபோல், ‘சொன்னதை மாற்றிச்  சொல்லுபவர்கள் பொய்யர்கள் அல்ல, சுத்தக் கோழைகள்.....”

“பொதுத் தேர்தலுக்கு முன்னர் திரு. ராஜகோபாலாச்  சாரியார் ஒவ்வொரு மேடையிலும் பின்கண்டவாறு கூறி  யதை இப்போது மறுத்துக் கூறுகிறார்:

“திட்டமிட்டு நன்கு வரையறுக்கப்பட்ட கொள்கை  யுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில்  வாக்காளர்களிடம் செல்லுகின்றனர்”.

“வேறுவிதமாகச் சொன்னால், தாங்களே வழிதவறி  இட்டுச் சென்ற வெகுஜனங்களின் தப்பெண்ணங்களுக்குத்  துதிபாடி துணைபோகும் நோக்கத்தோடு அவர்கள் வாக்  காளர்களிடம் செல்லுகின்றனர்; இதனால் தங்களைத்  தாங்களே புதைசேற்றில் அமிழ்த்திக் கொள்கின்றனர்.  இந்நிலைமையில் வில்லிங்டன் பிரபுதான் அவர்களுடைய  உதவிக்கு வந்தார். இந்த சட்டமன்றத்தைக் கலைந்து,  அவர்களுக்குக் கைகொடுத்து புதைசேற்றிலிருந்து அவர்  களைக் கரையேற்றினார்; அரசியலமைப்பை அனு  சரித்துப் போகும் வைசிராய் என்ற முறையில் அரசிய  லமைப்புக் கோட்பாடு என்னும் புகலிடத்தில் தஞ்சம் புகுந்துகொள்ளும் வாய்ப்பினை அவர்களுக்கு வழங்கினார்.

எனவே, அவர்கள் தங்களது பற்றுக்கோள்களிலிருந்து, பிரகடனப்படுத்தப்பட்ட கோட்பாடுகளிலிருந்து  பின்வாங்கி, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிக எண்ணிக்கையில் சட்டமன்றத்திற்குத் திரும்பி வருவதற்கு  எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் செய்துவருகின்றனர்.  அவர்கள் ஆலயப் பிரவேச மசோதாவையோ, தீண்  டாமை ஒழிப்பையோ பின்பற்றிச் சென்றிருப்பார்களேயானால் அவர்கள் ஏராளமான வாக்குகளை இழந்திருப்  பார்கள்; ஏனென்றால் பொதுமக்கள் ஆதரவைப் பெறாத  பிரச்சினை இது. நான் கூறியதை அச்சமயம் மகாத்மாகாந்தி பகிரங்கமாக மறுதலித்தாலும் நான் கூறியதிலிருந்து பின்வாங்காமல் அதையேதான் கூறினேன்; பாலக்காட்டில் என் சகோதரர் இல்லத்தில் சங்கராச்சாரியார் தங்கி  யிருந்த போதும் அதையேதான் கூறினேன். மசோதாவை எதிர்ப்பதற்கு ஒரு தூதுக்குழுவினருடன் என் சகோதரர் வைசிராயிடம் வந்தார்.

“மலபாரில் சீர்திருத்தவாசிகள் பெரும்பான்மையினராக இல்லை என்பது எனக்குத் தெரியும்” என்று அப்போது கூறினேன். சீர்திருத்தவாதிகள் எங்குமே பெரும்பான்மையினராக இல்லை; எனினும் பெரும்பான்மையினரை அறிவுறுத்தித் தங்கள் வழிக்கு ஈர்க்க முடியும் என்று சீர்திருத்தவாதிகள் நம்புகின்றனர். மலபாரில் கோவில்களுக்குச் செல்லும் மக்களில் பெரும் பாலோர் கோவிலகளுக்குள் தீண்டப்படாதோரை அனு மதிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. எனினும் அவர் களை எதிர்த்துப் போராட நான் தயாராக இருந்தேன்; அவர் களுடன் வாதாடி, அவர்களை என் வழிக்குத் திருப்பி, தீண்டப்படாதோரின் நலன்களில் அவர்களை அக்கறைக் கொள்ளும்படிச் செய்வதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொள்வதென முடிவு செய்தேன்; ஏனென்றால் தீண்டப் படாதோர் என் சமூகத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கம், உயிருள் உயிர், ஜீவனுள் ஜீவன் என்று திடமாக நம்புகிறேன்.

ஐயா, என் சமூகத்தில் மூன்றிலொரு பகுதியினர் ஒதுக்கப்படிருந்தால், விலக்கப்பட்டிருந்தால் அந்த சமூகம் நீடித்திருப்பதற்கு, உயிரோடிருப்பதற்கு அருகதை யற்றது என்று எப்போதுமே நான் உணர்ந்து வந்திருக் கிறேன். இப்போதும் அவ்வாறே உணர்கிறேன். வேதகாலத் தில் தீண்டாமை இருந்ததில்லை; அப்படிப்பட்ட கடந்த காலத்தின் மீது இந்த சமுதாயத்தினது மகத்தான எதிர் காலத்தை நிர்மாணிக்கும் நோக்கத்தோடு, இந்த இந்து சமுதாயத்தை ஒன்றுபடுத்தும், ஒற்றுமைப்படுத்தும் நோக் கத்தோடு தீண்டப்படாதோரின் நலனுக்காகப் போராட முன்வந்திருக்கிறேன்.

ஆனால் நேற்றுவரை தீண்டாமை ஒழிப்புப் பற்றி வானளாவ, வாய்கிழியப் பேசிவந்த காங் கிரஸ்காரர்கள் இப்போது இந்தப் போராட்டத்தில் ஏன் இருக்கவில்லை என்பதற்கு ஏதோ நொண்டிச் சமாதானங் கள் கூறிவருவதைப் பார்க்கிறேன். ராஜா சாகேப் அல்லது சர் சத்திய சரண் முகர்ஜி போன்ற நாட்டின் பல்வேறு சனாதனக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் விரும்பியதைப் போன்றே ஆலயப் பிரவேச மசோதாவின் சவப்பெட்டியில் திரு. ராஜகோபாலாச்சாரியார் கடைசி ஆணியை அறைந்துவிட்டார்.

“ஐயா, ஆங்கிலேய-வெறுப்பு, பிரிட்டிஷ்-எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளில் அன்றி ‘வேறு எந்தப் பிரச் சினையின் அடிப்படையிலும்’ அதாவது ஆலயப் பிரவேசப் பிரச்சினையில் சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்டுவரக் கூடாது என்று தாங்கள் கேட்டுக் கொண்டிருப்பாதாக திரு. ராஜகோபாலாச்சாரியார் கூறு கிறார். இவ்வாறு அவர் கூறுவதற்குக் காரணம் உண்டு: பொதுமக்களின் உணர்வைக் கிளர்த்தி விட்டு காங்கிரஸ் காரர்கள் அதனைத் தங்கல் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்; அகிம்சையின் பெயரால், ஏன் இன்னும் சொல்லப்போனால் மதத்தின் பெயரால் கூடிய மட்டுமெ மிகுந்த வெறுப்புணர்வைக் கிளர்த்தி விட்டுள் ளனர்; ஏனென்றால் அகிம்சை என்பதற்கு சில சமயங் களில் மத சாயம் பூசப்படுகிறது; நாட்டின் இத்தகைய அவநம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்து வளர்ந்து விட்ட நிலைமையில், பெரிய, தெளிவான, உயர்ந்த பிரச்சினையின் அடிப்படையில் அதாவது தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினையின் அடிப்படையில் தேர்தல் களத் தில் இறங்கினால் அத்தகைய சூழ்நிலைமை தங்களுக்கு உதவிகரமாக இருக்காது எனக் கண்டு அவர்கள் திசை திரும்பிச் செல்லுகின்றனர்; தங்கள் பிரகடனம் செய்த கொள்கைகளையே குழிதோண்டிப் புதைத்துவிட்டுப் பின்னோக்கி ஒடுகின்றனர்:

“நேர்மையின் பக்கம் இருவர் அல்லது மூவருடன் இருப்பதற்குத் துணிச்சல் இல்லாதவர்கள் கோழைகள்.”

“அடுத்து, காந்திஜியின் பிரதான தளபதியான அவர் மேலும் பின்வருமாறு கூறுகிறார்:

”தேர்தல்களில் வெற்றி பெற்றால் வேறு எந்தப் பிரச் சினைகளிலும் வாக்காளர்களின் உரிமைக் கட்டளை கிட்டும் என்று நாங்கள் நம்பவில்லை”.

“அதாவது வேறுவிதமாகச் சொன்னால் ஆலயப் பிரவேச மசோதாவுக்கு ஆதரவாக அவர்கள் வாக்காளர் களின் உரிமைக் கட்டளையைப் பெறவில்லை என்று இதற்குப் பொருளாகும். மிகவும் கூக்குரலிட்டுக் கொண்டு எங்கள் இல்லங்களுக்கு ஓடோடிவந்து, எங்கள் ஆதரவை மன்றாடிக் கேட்டவர் இந்த மனிதர்; ஆலயப் பிரவேச மசோதாவைக் கைவிட்டு விடாதீர்கள். அதற்காக தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்று எங்க ளிடம் இறைஞ்சிக் கேட்டுக்கொண்டவர்கள் இவரும் ஏனைய காங்கிரஸ் ‘லட்சிய பிச்சைக்காரர்களும்’ அப்படிப்பட்டவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? தீண்டப்படாதோரின் நலன்களுக்கு இரண்டகம் செய்வ தோடு அவர்கள் நிற்கவில்லை; மகாத்மாவின் கோட்பாடு களுக்கே வஞ்சகம் செய்கின்றனர்.

இத்தனைக்கும் தீண்டப்படாதோரின் நலனுக்காக, மேம்பாட்டுக்காக உண்ணா விரதம் மேற்கொண்டு, வகுப்புத் தீர்ப்பு சம்பந்தமாக அவர் களுக்கு மேலும் சலுகைகள் பெற்றுத் தந்தவர் மகாத்மா. எனவே, தீண்டாமைப் பிரச்சினையில் இதற்கு நேரடிச் சம்பந்தம் உண்டு என்பதையும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு மகாத்மா, தலைசிறந்த மகாத்மா நாடு முழுவதும் பிரயாணம் செய்ய விரும்பினார் என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் அப்படியிருக்கும்போது இன்று என்ன நடைபெறுகிறது? சட்டமன்றங்களைப் பகிஷ்கரிப் பதாக ஆடம்பர ஆர்ப்பாட்டமாக ஆர்ப்பரித்துவிட்டு, பிறகு பதவி வேட்கை காரணமாக அதே சட்டமன்றங் களில் பிரவேசிக்கழ் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்ததன் மூலம் முதலில் அவரைக் காட்டிக் கொடுத்த காங்கிரஸ் இப்போது அருடைய சம்பந்தி யான ராஜகோபாலாச்சாரியாரின் உதவியோடு மேலும் அவருக்குத் துரோகம் செய்துள்ளது; மக்களின் உரிமைக் கட்டளை இல்லாமல், தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினை யிலும் ஆலயப் பிரவேச மசோதா விஷயத்திலும் மேற் கொண்டு நடவடிக்கை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று அது அறிவித்துள்ளது!

“ஐயா, ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியாருக்கும் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாருக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்று கேட்கிறேன். ‘மக்களின் ஆணையைப் பெற்று, பிறகு வந்து சட்டம் இயற்றுங்கள்’ என்று ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் எப்போதுமே கூறுவந்திருக்கிறார். ஐயா, அவர் ஒரு கோழையல்ல; ஒரு மாபெரும் சனாதனி, தம்மை குறைகூறுபவர்களைத் தீரத்துடன் எதிர்த்து நிற்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் இவர்களோ சனாதன தர்மம் நிலைபேறுடைய, சாசுவத மான மெய்ம்மை என்பதை மறந்து, அதனை நாடெங் கும், மூலை முடுக்கெங்கும் இழித்துப் பழித்து வருகின்றனர். சனாதனிகள் இந்தப் போக்கை ஏற்கமாட்டார்கள்; ஏனென்றால் சனாதன தர்மம் நித்தியமான உண்மை, அந்த உண்மைக்கு வாய்மையற்றவர்கள்தான் பச்சைத் துரோகம் செய்வார்கள்! நமது தேசிய லட்சியத்தை எய்துவதற்கு வகை செய்திருக்கக் கூடிய எத்தனையோ லட்சியங்களைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தீண்டப்படாத வர்களின் பிரச்சினையை அரைமனத்தோடு எடுத்துக் கொண்டுள்ள மாபெரும் காங்கிரஸ் தலைவர்கள் – இதில் மகாத்மா காந்தி மட்டும் விதிவிலக்கு – வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரசின் பிரதம ஒருங்கிணைப்பாள ரான ராஜகோபாலாச்சாரியாரின் மூலம் பின்வருமாறு கூறச் செய்துள்ளனர்:

“இதனை அதிகாரப்பூர்வமான காங்கிரஸ் மசோதா வாக ஆக்குவதற்கு முன்னர் இந்த விஷயத்தை அனைத் துக் காங்கிரஸ்காரர்களும் உரிய முறையில் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வரக் கடமைப்பட்டுள்ளனர்’.

”தீண்டப்படாதோருக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்தத் துரோகத்தை மனத்திற் கொண்டு அரசியலமைப்பு ஆதரவாளர்கள் அனைவரும், அவர்கள் இந்துக்களாயினும் மூஸ்லீம்களாயினும் ஒன்றுபடுவார்கள் என்று நம்பு கிறேன். வகுப்புப் பிரச்சினைகளில் பின்னால் கருத்து வேறுபாடு கொள்ள அவர்கள் இணங்கக் கூடும், ஆனால் அவர்கள் இப்போது ஒன்றுபட்டு காங்கிரசுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்துவார்கள்; வேஷதாரி களின் இந்த அமைப்பை மண்டியிடச் செய்வார்கள். ஐயா, தீண்டப்படாதவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்க ளுக்குக் கொடிய துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகக் கருதுகிறேன்; மகாத்மா காந்தி இந்த இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்னால், அல்லது திரு. இராஜகோபா லாச்சாரியார் டில்லியில் வீடு வீடாக ஏறியிறங்குவதற்கு முன்னால் இந்த இயக்கத்தில் நான் நம்பிக்கையும் பற்று தலும் கொண்டிருக்கா விட்டால் நான் இந்த மசோதாவை முன்மொழிவதற்கு இங்கு வந்திருக்க மாட்டேன்.”

 VI

புகழின் உச்சாணிக் கொம்பிலிருந்து ஒரு பெரும் வீழ்ச்சியை, சறுக்கலை இங்கு காணுகிறோம்! எத்தகைய இழிவினும் இழிவான அவமானகரமான பின்னடைவு! திரு. காந்தி இதனை எவ்வாறு எடுத்துக்கொண்டார்? 1932 நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில் திரு. காந்தி கூறியதாவது:

“கிராமங்களிலுள்ள தீண்டப்படாதவர்கள் தங்களைப் பிணைத்திருக்கும் தளைகள், சங்கிலிகள் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன, ஏனைய கிராம மக்களுக்குத் தாங்கள் எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல, பிற கிராமவாசிகள் வழிபடும் அதே தெய்வத்தையே தாங் களும் வழிபடுகிறோம், சக கிராமவாசிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளையும் சலுகை களையும் தாங்களும் பெற உரிமை படைத்தவர்கள் என்பதை உணரும்படி செய்ய வேண்டும்.

“ஒப்பந்தத்தின் இந்த ஜீவாதாரமான ஷரத்துகள் சாதி இந்துக்களால் செயல்படுத்தப்படவில்லை என்றால் நான் ஆண்டவனையும் மனிதனையும் எதிர்கொள்வதற்கு எப்படி உயிரோடிருக்க முடியும்? ஒப்பந்தத்தின் ஷரத் துக்களை சாதி இந்துக்கள் உரிய முறையில் நடைமுறைப் படுத்துவார்கள் என்பதற்கு என்னை நீங்கள் பிணையாகக் கருதலாம் என்று டாக்டர் அம்பேதகர், ராவ் பகதூர் எம். சி.ராஜா மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தவரைச் சேர்ந்த ஏனைய நண்பர்களிடம் கூறியிருக்கிறேன்.

ஒருக்கால் உண்ணாவிரதம் நடைபெறுமானால், சீர்திருத்தத்தை எதிர்ப்போரை நிர்ப்பந்தப்படுத்துவதாக அது இருக்காது, மாறாக என்னுடைய தோழர்கள் அல்லது தீண்டா மையை ஒழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்போரை செயல்படும்படித் தூண்டுவதை நோக்கமாக அது கொண்டிருக்கும். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறி  னாலோ, அவற்றைச் செயல்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றாலோ அல்லது அவர்களது இந்து  மதப் பற்று வெறும் ஏமாற்று வித்தை என்றாலோ நான்  உயிரோடிருப்பதில் அர்த்தமில்லை.”

இதனைக் திரும்பத் திரும்பக் கூறுவதில் அவர் என்றும் சளைத் ததில்லை. இந்துக் கோவில்களிலிருந்து தீண்டப்படாதவர்களை விலக்கிவைப்பதை தமது ஆன்மாவின் வேதனை என்று அவர் வரு ணித்தார். அவ்வாறாயின் இது சம்பந்தமாக அவர் என்ன செய்தார்? ஹரிஜன ஆலயப் பிரவேசத் திட்டம் நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கையில் எனக்கு எந்தப் பிடிப்பும் இல்லை என்று கூறிய அவர் ராஜகோபாலாச்சாரியர் அந்தத் திட்டத்துக்கும் இரண்டகம் செய்த போது அதனைக் கண்டித்தாரா? தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் செய்த இந்தத் துரோகத்தை திரு. காந்தி கண்டிப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர்; இது முற்றிலும் இயல்பு. ஆனால் உண்மையில் இதற்கு நேர்மாறாகத்தான் நடைபெற்றது.

திரு. ராஜ கோபாலாச்சாரியரைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அவரது சீற்றம் திரு. ரங்க அய்யர் மீது பாய்ந்தது. அவர் செய்த குற்றம்தான் என்ன? மசோதாவுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென்று திரும்பப் பெற்றுக் கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியை வன்மையாகக் கண்டித்ததே அவர் செய்த குற்றம்! இது சம்பந்தமாக 1931 ஆகஸ்டு 31 ஆம் தேதிய ஹரிஜன இதழில் திரு. காந்தி எழுதியதாவது:

“ஆலயப் பிரவேச மசோதாவின் பிதாமகர் கையில் அது பட்டுள்ள சீரழிவை விட அந்தக் கேடு பயக்கும் மசோதாவை ஆழக் குழிதோண்டிப் புதைப்பதே சிலாக் கியம். அது சீர்திருத்தவாதிகளால், அவர்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட மசோதா அல்ல். உண்மையில், இம் மசோதாவின் கர்த்தா சீர்திருத்தவாதிகளுடன் கலந்து பேசி, அவர்களது ஆலோசனையுடன் இதனைத் தயாரித்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரை அவர் காங்கிரஸ்காரர்கள் மீது இவ்வளவு வக்கிரமாக அனலும் கனலும்கக்குவதற்கு எத்தகைய முகாந்தரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் 1932 செப்டம்பர் 25 ஆம் தேதி பண்டித் மாளவியாஜி தலைமையில் பம்பாயில் நடைபெற்ற இந்துக்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் ஏற்கப்பட்ட பிரகடனத்தில் மதம் சம்பந்தப்பட்ட இத்தகைய ஒரு நட வடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்பட்ட.

ஹரிஜன இதழில் ஒவ்வொரு வாரமும் இந்தப் பிரகடனம் பிரசுரிக்கப்பட்டு வருவதை இப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் படிக்கலாம். எனவே, ஒவ்வொரு இந்துவும், அவர் சாதி இந்துவாக இருந்தாலும் சரி, ஹரிஜனாக இருந்தாலும் சரி இப்படிப் பட்டதொரு நடவடிக்கையில் ஆர்வம் கொண்டிருக் கிறார்கள் என்பது தெளிவு. இது இதர இந்துக்களை விட காங்கிரஸ் அதிகம் அக்கறை காட்டும் நடவடிக்கை அல்ல. ஆகவே, காங்கிரசின் பெயரை விவாதத்தில் இழுத் திருப்பது துரதிர்ஷ்டவசமானது, உணர்ச்சிவசப்படா மல் அமைதியான முறையில் மசோதா ஆராயப்பட வேண்டும்.”

 ஆலயப் பிரவேசப் பிரச்சினையை ஒரு விந்தையான, விபரீதமான அரசியல் செப்படிவித்தை என்றே கூறவேண்டும்! திரு. காந்தி ஆரம்பத்தில் ஆலயப் பிரவேசத்திற்கு எதிராக இருக்கிறார். தீண்டப்படாதவர்கள் அரசியல் கோரிக்கைகளை முன் வைக்க ஆரம் பித்ததும், அவர் தமது நிலையைத் திடீரென மாற்றிக் கொண்டு ஆலயப் பிரவேசத்தின் தீவிர ஆதரவாளராக மாறுகிறார். பிறகு, இதே நிலையை இறுதிவரை மேற்கொண்டால் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்போம் என்று இந்துக்கள் அச்சுறுத்தியதும் காந்தி மீண் டும் ஒரு புதிய அவதாரம் எடுக்கிறார். அரசியல் அதிகாரத்தை காங் கிரசின் கைகளில் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு ஆலயப் பிரவேசத் திட்டத்தைக் கைகழுவி விடுகிறார். இது வாய்மையா, நேர்மையா? இது மெய்யமையில் கொண்டுள்ள பற்றுறுதியைக் காட்டுகிறதா? திரு. காந்தி அடிக்கடி குறிப்பிடும் ‘ஆன்மாவின் சோதனை’ என்பது வெறும் ஆடம்பர ஆர்ப்பாட்ட சொற்சிலம்பம் தானா?

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 4)