ambedkhar officials 400 1

புனா ஒப்பந்தம் 1932 செப்டம்பர் 24 ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு அதே ஆண்டு செப்டம்பர் 25ல் பம்பாயில் ஒரு பொதுக்கூட்டத்தை இந்துக்கள் ஏற்பாடு செய்தனர். அந்தக் கூட் டத்தில் பின்கண்ட தீர்மானம் ஏற்கப்பட்டது:

“1932 செப்டம்பர் 24 ஆம் தேதி சாதி இந்துத் தலைவர் களுக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தவரின் தலைவர்களுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புனா ஒப்பந்தத்தை இந்த மாநாடு ஊர்ஜிதம் செய்கிறது; இந்து சமூகத்திற்கும் தனிவாக்காளர் தொகுதிகளை அமைக்கும் தனது முடிவை பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரிக்கும் என்று நம்புகிறது.

மகாத்மா காந்தி எடுத்துக்கொண்ட சபதத்தை நிறைவேற் றும் வகையில் இனியும் காலம் தாழ்த்தாமல் அவரது உண்ணா விரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உடனடியாக நட வடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அரசாங்கத்தை இம்மாநாடு வலி யுறுத்துகிறது. புனா ஒப்பந்தத்தின் மற்றும் இத்தீர்மானத்தின் முக்கிய அம்சங் களைப் புரிந்துகொள்ளும்படியும், அவற்றை நிறைவேற்ற மெய்யார்வத்துடனும், மிகுந்த அக்கறையுடனும் முயற்சி மேற் கொள்ளும்படியும் சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

“இனிமேல் பிறப்பு காரணமாக இந்துக்களிடையே எவரும் தீண்டத்தகாதவராகக் கருதப்படக் கூடாது என்றும், இதுவரை அவ்வாறு கருதப்பட்டவர்களுக்குப் பொதுக்கிணறுகள், பொதுப் பள்ளிக் கூடங்கள், பொதுசாலைகள், மற்றும் இதர எல்லா பொது நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்துக்களுக் குள்ள அதே உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இந்த உரிமை முதல் வாய்ப்பிலேயே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும், சுயராஜ்ய நாடாளுமன்ற அமைக்கப் படுவதற்கு முன்னர் இத்தகைய அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை என்றால், அந்த நாடாளுமன்றம் நிறுவப்பட்ட உடனேயே அதன் முதல் நடவடிக்கையில் ஒன்றாக இது இருக்க வேண்டும்.

“ஆலயப்பிரவேசம் சம்பந்தமாக உள்ள தடை உட்பட தீண்டத்தகாதவர்கள் எனப்படுவோர் மீது மரபுவழி ஆசாரங்களும் பழக்க வழக்கங்களும் இப்போது திணித்துள்ள சகலவிதமான சமூகத் தடைகளையும் சட்டரீதியான முறையிலும் அமைதியான வழிகளிலும் வெகுவிரைவிலேயே அகற்றுவதற்கு உறுதியாகப் பாடுபடுவது எல்லா இந்துத் தலைவர்களது கடமையாகும் என்பதும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.”

இந்தத் தீர்மானத்தை தொடர்ந்து கோவிலகளைத் தீண்டப் படாதவர்களுக்குத் திறந்துவிடுவதில் இந்துக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்; இதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டனர். எந்தெந்தக் கோவில்கள், கிணறுகள், பள்ளிக் கூடங்கள் தீண்டப் படாதவர்களுக்குத் திறந்து விடப்பட்டன என்ற நீண்ட பட்டியல் திரு. காந்தி நடத்தி வந்த ஹரிஜன் என்ற வார இதழில் வெளிவராத வாரமே இல்லை எனலாம்; இந்தக் தகவல் யாவும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் “வாரத்திற்கு வாரம்” என்ற விசேடப் பகுதியில் வெளியிடப்பட்டு வந்தன. ஹரிஜன் பத்திரிகையின் இரண்டு இதழ்களில் வெளியான ‘வாரத்திற்கு வாரம்’ என்ற பகுதிகளை இங்கு மாதிரி எடுத்துக்காட்டுகளாக தந்திருக்கிறேன்.

1933 ஆம் வருட பிப்ரவரி 18 ஆம் தேதிய ‘ஹரிஜன்’

வாரத்திற்கு வாரம்

(1933 பிப்ரவரி 7ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்)

கோவில்கள் திறந்துவிடப்பட்டன     

1) வட கல்கத்தாவில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் அண்மையில் கட்டப்பட்ட ஒரு கோவில் திறந்து விடப்பட்டது.

2) சென்னை கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபுழர் என்னும் கிராமத்தில் ஒரு கோவில் திறந்து விடப்பட்டது.

3) பஞ்சாப் ஜலந்தரில் நௌரானியாவிலுள்ள தாகூர்துவார் கோவில் திறந்துவிடப்பட்டது.

திறந்துவிடப்பட்ட கிணறுகள்

1) ஒரிசா கட்டாக் மாவட்டம் ஜெய்ப்பூர் நகரில் குரியாபூரிலுள்ள ஒரு நகரசபைக் கிணறு.

2) ஐக்கிய மாகாணங்கள் ஆக்ராவில் வாசிர்புரத்திலும் நிதிகாலியிலும் இரண்டு கிணறுகள்.

3) திருச்சிராப்பள்ளி (சென்னை) ஹரிஜனங்களும் இந்துக்களும் பொதுவாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு மூன்று கிணறுகளைத் தோண்டுவதற்கான செலவை ஒரு வைதிக பிராமணர் ஏற்றுக் கொண்டார்.

 இந்திய சமஸ்தானங்கள்:

1.ஹரிஜனங்களுக்கு செய்து தரப்பட வேண்டிய வசதிகள் குறித்து (கத்தியவார்) பலிதானா சமஸ்தானத்தின் சட்டமன்றத் தில் மூன்று தீர்மானங்கள் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டன.

2.சந்தூர் சமஸ்தானத்தில் உள்ள ஹரிஜனங்களின் நிலைமையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு அந்த சமஸ்தானத்தின் அரசாங்கம் நிரந்தரக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

பொது

1) கோரக்பூர் மாவட்டத்தைக் சேர்ந்த கஷியாவுக்கு அருகிலுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் ஹரிஜனங்கள் ஊழ்த்த இறைச்சி உண்ணுவதைக் கைவிட்டு விட்டனர்.

2) முஸாபர்பூரில் (பீகார்) ஹரி ஜன சேவா சங்கத்தின் சார்பில் ஸ்ரீ சதுர்பூஜனாதிஜி ஆலயத்தில் ‘வசந்த பஞ்சமி’ விழாவின் போது ‘வசந்தோத்சவம்’ கொண்டாடப்பட்டது; இதில் எல்லா சாதி இந்துக்களும் கலந்து கொண்டனர்.

- ஏ.வி. தாக்கர் பொதுச் செயலாளர்.

தொடங்கப்பட்ட பள்ளிக் கூடங்கள்

1) ஐக்கிய மாகாணங்கள் மீரத்  மாவட்டத்தைச் சேர்ந்த பச்ரோ தாவில் ஓர் இலவசப் பள்ளிக் கூடம்.

2) ராஜபுதனத்தைச் சேர்ந்த மெதா மாவட்டத்தில் ஒரு பள்ளிக் கூடம்.

3) ராஜபுதனம் ஜெய்ப்பூர் சமஸ் தானத்தைச் சேர்ந்த பதேபூர், செமுன், அபய்பூர் ஆகிய இடங்களில் மூன்று பள்ளிக்கூடங்கள்.

4) ஐக்கிய மாகணங்கள் பரூகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பதேகாரில் ஒரு பள்ளிக்கூடம்.

5) ஐக்கிய மாகாணங்கள் முத்ராவில்  நகரில் மூன்று  இரவுநேரப் பள்ளிக்கூடங்கள்.

6) ஐக்கிய மாகாணங்கள் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹதா தெஷிலில் ஓர் இரவு நேரப் பள்ளிக்கூடம்.

7) சகோனியாவில் ஓர் இரவு  நேரப் பள்ளிக்கூடம்.

அகில இந்தியத் தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் தலை வரும், இந்திய தாழ்த்தப்பட்ட கழகத்தின் நிறுவன அறக்காப் மக்களது மேம்பாட்டுக்கான பாளருமான ஸ்ரீமான் வி.ஆர். சிண்டே (புனா) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார்: தீண்டாமைக் குறித்த ஸ்ரீமான் ரங்க அய்யரின் இரண்டு மசோ தாக்கங்களையும் ஆதரிக்கும்படி அக்கடிதத்தில் அவர் பெரிதும் வலியுறுத்தி இருந்தார்.

பம்பாய் தைக்கல்வாடி ‘ஜி’வட்டத்தில் அண்மையில் திடீரென ஒரு தீ விபத்து ஏற்பட்டு  48 மகர்கள் குடும்பங்களுக்குச்  சொந்தமான குடிசைகளுக்கும் உடைமைகளுக்கும் பெருத்த சேதத்தை உண்டு பண்ணிற்று.  பம்பாய் மாகாண தீண்டப் படாதோர் சேவா சங்க நிர்வாகக் குழுவின் தலைவர் இந்தக் குடும்பங்களுக்கு நிவாரண மளிப்பதற்காக ரூ. 500 வழங்க ஒப்புதல் அளித்தார்.இது சம்பந்தப்பட்ட நிவாரணப் பணியை  சங்கத்தின் ‘ஜி’ வட்டக் குழு மேற்கொண்டது. மொத்தம் 163 பேர்களடங்கிய இந்த 48 குடும்பங்களுக்கு உடனடி உதவியாக ரூ. 402.8 விநியோகிக்கப்பட்டது கிணறுகள், குளங்கள், தர்மசாலைகள் முதலியவற்றை எல்லோரும் சாதி வேறுபாடின்றிப் பயன்படுத்திக் கொள்வதற்கு  ஒப்புக்கொண்டாலன்றி இவற்றிற்கு அரசாங்க நிலங்களை ஒதுக்கித் தரும்படி ஸ்தாபன  அமைப்புகளிலிருந்து ஏற்கக்  கூடாது என்று பம்பாய் அரசாங்  கம் ஆணை பிறப்பித்துள்ளது.

1933 ஜுலை 15 ஆம் தேதியஹரிஜன்வாரத்திற்கு வாரம்

கல்வி வசதிகள்

வட ஆற்காடு மாவட்டத்தில் ஹரிஜனங்களுக்காக மூன்று வாசகசாலைகள் எஸ்.யு.எஸ் ஸால் திறக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் எஸ்.யு.எஸ் ஊழியர்கள் ஹரிஜனக் குழந்தைகளை விரகனூர் தாலுகா போர்டு பள்ளியில் சேர்க்கச் செய்துள்ளனர்.

மதுரை எஸ்.யு.எஸ் நிறுவியுள்ள மேலச்சேரி பள்ளியின் குழந்தைகளுக்கு பனியன்கள், துவாலை, கரும்பலகைகள் முதலியவை இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

டில்லி ராம்ஜாஸ் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு ஹரி ஜன மாணவர்களுக்கு இலவச உபகாரக் சம்பளங்களையும், மாணவர் விடுதியில் இலவசமாகத் தங்கும் வசதியையும் மற்றொரு ஹரிஜன மாணவருக்கு இலவச உபகாரச் சம்பளத்தையும் கல்லூரி முதல்வர் தாடனி அனுமதித்துள்ளார்.

லாகூர் ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் மோட்சி வாயிலுக்கு வெளியே உள்ள அரிஜன குடியிருப்புகளில் வயது வந்த அரிஜனங்களுக்காக ஓர் இரவுப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவை திருமதி பிரிஜ்லால் நேரு நடத்தி வைத்தார்.

பிராமண கோடுரீல் (குண்டூர்) ஹரிஜன மாணவர்களுக்காக மற்றொரு மாணவர் தங்கும் விடுதியைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது

காகினாடாவில் படிக்கு ஹரிஜன மாணவிகளுக்காக ஒரு தங்கும் விடுதியைத் தொடங்க கிழக்கு கோதாவரி மாவட்ட ஹரிஜன சேவா சங்கம் முடிவு செய்திருக்கிறது. 15 மாணவிகளுடன் தொடங்கவிருக்கும்   இந்த விடுதிக்கு ரூ. 630ம், 20 போர்டு மூட்டை அரிசியும், ஓர் ஆண்டுக் குத் தேவையான எரிபொருளும் ஏற்கெனவே நன்கொடையாகக் கிடைத்திருக்கின்றன.

உரகொண்டாவில் ஒரு ஹரி ஜன மாணவர் விடுதியைத் தொடங்குவது என்று அனந்தப்பூர் மாவட்ட ஹரிஜன சேவா சங்கம் தீர்மானித்துள்ளது. சில உணவுப் பொருள்களும் பணமும் ஏற்கெனவே சேகரிக்கப் பட்டு விட்டன. 20 மாணவர் விடுதியைத் குவது என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குண்டூர் மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் அயராத சளையாத முயற்சியின் காரணமாக பல கிராமங்களிலும் நகரங்களிலும் சவர்ண பள்ளிக் கூடங்களில் ஹரிஜன சிறுவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கிணறுகள்

கோயமுத்தூர் மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலையிலிருந்த மூன்று கிணறுகள் தூறு வாரி சுத்தம் செய்யப்பட்டு  உபயோகத்துக்கு கொண்டு வரப்பட்டன.  

எஸ்.யு.எஸ் தேர்ந்தெடுக்கும் சேரிகளில்  நான்கு கிணறுகள் தோண்டுவதற்கு ஏற்பாடு செய்வதாக தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆந்திர தேசத்தில் 31.5.33ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் மொத்தம் 125க்குக் குறையாத  கிணறுகள் ஹரிஜனங்களுக்கு திறந்து விடப் பட்டன; 5 புதிய கிணறுகள் வெட்டப்பட்டன.

பொது

தோம்கள் வசிக்கும் ஹோக்களுடன்  மார்க்கெட்டுக்கு (கல்கத்தா) அருகிலுள்ள ஒரு பஸ்டியில் அவர்களுக்கு உணவுப் பொருள்களைக் குறைந்த விலையில் வழங்குவதற்காக ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது.

பீபி பாகன் பஸ்டியில் (கல் கத்தா) ஒரு ஹரிஜனக் குடும்பத்தின் கடன்களைத் தீர்ப்பதற்காக வங்காள எஸ்.யு.எஸ்.ரூ. 60 வழங்கிற்று.

அமிர்த சமாஜம் (கல்கத்தா) சில ஹரிஜனங்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்துள்ளது.

போல்பூரைச் சேர்ந்த (பிர்பூம்) ஹரிஜனங்கள் 450 ஹரிஜனங்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டனர்; 1,275 முச்சிகள் மாட்டிறைச்சி உண்பதில்லை என்று உறுதிபூண்டுள்ளனர்.

இந்த மாதத்தில் பங்குரா, மூர்ஷிதாபாத், 24 பர்க்கானா ஆகிய இடங்களில் எஸ்.யு.எஸ்.ஸின் மூன்று புதிய மாவட்டக் கேந்திரங்கள் திறக்கப்பட்டன.    

சேரிகளில் சென்று சேவை செய்வதற்காக திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வட ஆற்காடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் காநிதி ஹரிஜன சேவைத் தொண்டர்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ஆலந்தூரல் என்னும் கிராமத்தில் தீ விபத்து  ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கிராமத்திற்கு நிவாரணம்  அளிக்கும்  வகையில் ரூ. 25 பெறுமானமுள்ள தானியமும், ரூ. 100 பெறுமானமுள்ள ஜவுளியும், ரூ. 5. பெறுமானமுள்ள எண்ணெயும் வழங்கப்பட்டன.

சிதம்பரத்தில் ஒரு ஹரிஜன. இளைஞர் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடக்க விலையில் ஹரிஜனங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதற்காக தெனாலியில் ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது; அவர்களின் உபயோகத்துக்கு அது பயன்படுத்தப்படுகிறது.

வலான்னா பாளத்தில் அண்மையில்  ஏற்பட்ட ஒரு தீ விபத்தால் இடிந்து நாசமான ஹரிஜனங்களின் விடுகளை மீண்டும் கட்டுவதற்காக ரூ. 110 செல விடப்பட்டது.

எல்ல மஞ்சிலியில் (விசாகை) ஒரு தீ விபத்தில் வீடுகளை இழந்த ஹரிஜனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ. 100 வழங்கப்பட்டது. ஹரிஜனங்களுக்கு ஒரு நல்ல இடத்தில் வீடுகளைக் கட்டித் தருவதில் உள்ளூர் ஹரிஜன சேவா சங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பொருட்டு ரொக்கமாகவும், கட்டிடப் பொருள்களாகவும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. கொல்ல பாலத்தில் ஒரு சவர்ணகனவான் ஒரு ஹரிஜன்னை தமது வேலைக்காரனாக அமர்த்திக் கொண்டிருக்கிறார்.

கோவில்களின் சொந்தக்காரர்கள் அல்லது தர்மகர்த்தாக்கள் தமது கோவில்களை தீண்டப்படாதவர்களுக்குத் திறந்துவிட முன்வராதபோது இந்துக்கள் அவர்களுக்கு எதிராக ஒரு சத்தியாக் கிரகப் போராட்டைத்தைத் தொடங்கினார். குருவாயூர் ஆலயத்தை தீண்டப்படாதவர்களுக்குத் திறந்து விட வேண்டும் என்று திரு. கேளப்பன் தொடங்கிய சத்தியாக்கிரகம் இத்தகைய கிளர்ச்சியின் ஒரு பகுதியாகும். இந்தக் கிளர்ச்சியை எதிர்த்து நிற்பதற்குத் துணிச்சல் கொண்ட கோவில்களின் தர்மகர்த்தாக்களை நிர்ப்பந்திப்பதற்கு பல இந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வந்தனர்; தீண்டப்படாத வர்களுக்கு கோவில்கள் திறந்துவிடப்படுவதை பெரும்பாலான இந்து பக்தர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது ஒரு பொதுஜன வாக்கெடுப்பில் தெரியவந்தால், தர்மகர்த்தாக்கள் அவ்வாறே ஆலயங்களை தீண்டப்படாதவர்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று கோரும் மசோதாக்களை பலர் போட்டி போட்டுக் கொண்டு தாக்கல் செய்தனர்.

இத்தகைய மசோதாக்கள் ஏராளமாக குவிந்தன. இதில் தங்கள் மசோதா முதலிடம் பெற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவியது. சென்னை மேலவை உறுப்பினர் டாக்டர் சுப்பராயன் ஆலயப் பிரவேச மசோதா ஒன்றை கொண்டு வந்தார். மத்திய சட்டமன்றத்தில் நான்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று திரு.சி.எஸ். ரங்க அய்யருடையது, மற்றொன்று திரு. ஹரபிலாஸ் சாரதாவினுடையது, மூன்றாவது திரு. லால்சந்த் நவால்ராய் சமர்ப்பித்தது, நான்காவது திரு. எம். ஆர். ஜெயகர் முன் மொழிந்தது.

இந்தக் கிளர்ச்சியில் திரு. காந்தியும் சேர்ந்து கொண்டார். தீண்டப்படாதவர்களை இந்து ஆலயங்களுக்குள் அனுமதிப்பதை 1932 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர் எதிர்த்து வந்தார். அப்போது திரு. காந்தி பின்வருமாறு கூறினார்:

”தற்போதுள்ள எல்லாக் கோவில்களிலும் அந்த்ய  ஜாக்கள் (தீண்டப்படாதோர்) பிரவேசிப்பதற்கு உரிமை  வழங்குவது எவ்வாறு சாத்தியம்? சாதி மற்றும் ஆசிரம  விதிமுறைகள் இந்து சமயத்தில் பிரதான இடம் வெற்றி  ருக்கும் வரை ஒவ்வொரு இந்துவும் ஒவ்வொரு கோவி  லுக்குள்ளும் நுழையலாம் என்று கூறுவது இன்றைக்கு  சாத்தியமல்ல”.

எனவே, ஆலயப் பிரவேச இயக்கத்தில் அவர் சேர்ந்தது பெரிதும் வியப்புக்குரிய விஷயம் என்பதில் அணுவளவும் ஐய மில்லை. திரு. காந்தி ஏன் இப்படி குட்டிக்கரணம் அடித்தார் என் பதைப் புரிந்துகொள்வது கடினமான இருக்கிறது. இது இந்து ஆல யங்களில் தீண்டப்படாதவர்கள் பிரவேசிப்பதை தாம் எதிர்த்தது தவறு என்பதை உண்மையிலேயே உணர்ந்ததால் ஏற்பட்ட மெய் யான நேர்மையான மனமாற்றமா? புனா ஒப்பந்தத்தால் இந்துக் களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள பிளவு ஆலயப் பிரவேசம் போன்ற நடவடிக்கைகளால் சீர்செய்யப்பட்டு அவர்களை மீண்டும் ஒன்றுபடுத்த வேண்டும்; இல்லையேல் இந்தப் பிளவு அவர்களிடையே கலாசார, சயமத் தொடர்புகள், பிணைப்புகள் முற்றிலும் அறுந்து போவதற்கே அது இட்டுச் செல்லும் என்ற உணர்வால் ஏற்பட்ட மனமாற்றமா இது? அல்லது தீண்டப்படாதோரை இந்துக்களிடமிருந்து பிரிக்கும் தடை மதிலைத் தகர்ப்பதன் மூலம் அரசியல் உரிமைகளுக்கான தீண்டப் படாதவர்களின் கோரிக்கையின் அடிப்படையை, அடித்தளத்தை அழித்தொழிப்பதே ஆலயப் பிரவேச இயக்கத்தில் அவர் சேர்ந்ததன் நோக்கமா? அல்லது இந்த இயக்கத்தில் சேருவதால் தமது பேரும் புகழும், சீர்த்தியும் கீர்த்தியும் வானளாவ ஓங்கும் என்ற எண்ணத் தில் வழக்கமாகச் செய்வது போல் இந்த இயக்கத்தி விரைந்தோடிப் போய்ச் சேர்ந்தாரா? இரண்டாவது அல்லது மூன்றாவது விளக்கமே உண்மைக்கு மிகவும் நெருங்கியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

II

இந்த ஆலயப் பிரவேச இயக்கம் குறித்து தீண்டப்படாதோர் எத்தகைய மனோபாவம் கொண்டிருந்தனர்? ஆலயப் பிரவேச இயக்கத்துக்கு என் ஆதரவைத் தரும்படி திரு. காந்தி என்னிடம் கேட்டுக்கொண்டார். அத்தகைய ஆதரவை அளிக்க நான் மறுத்து விட்டேன். இதுகுறித்து பத்திரிகைகளில் ஓர் அறிக்கை வெளியிட் டேன். இந்தப் பிரச்சினையில் நான் இத்தகையப் போக்கைக் கடைப் பிடிப்பதற்கான காரணங்களை வாசகர்கள் புரிந்துகொள்ள இந்த அறிக்கை உதவும் என்ற வகையில் அதனை முற்றிலுமாக இங்கு தருவது உசிதமாக இருக்கும் என்றும் கருதினேன். இதோ அந்த அறிக்கை!

ஆலயப் பிரவேச மசோதா பற்றிய அறிக்கை பிப்ரவரி 14, 1933

 ஆலயப் பிரவேசப் பிரச்சினை சம்பந்தமான சர்ச்சை முக்கிய மாக தற்போது சனாதனிகளுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே நடைபெற்று வந்து போதிலும், இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒரு முக்கியமான பங்காற்ற வேண்டியிருக்கிறது என்பதில் ஐய மில்லை; பிரச்சினைக்கு இறுதி முடிவு எடுக்கும்போது, அவர்கள் மேற்கொள்ளும் நிலை துலாக்கோலின் முள்ளை இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ சாயப்பதாக இருக்கலாம். ஆதலால் அவர் களது கண்ணோட்டத்தை திட்டவட்டமாக, தெள்ளத்தெளிவாக ஐயத்துக்கிடமின்றி வரையறுத்துக் கூறுவது அவசியமாகிறது.

திரு. ரங்க அய்யரின் ஆலயப் பிரவேச மசோதாவுக்கு இப் போதைய அதன் அதன் வடிவத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆதரவு அளிப்பது சாத்தியமில்லை, ஒரு குறிப்பிட்ட கோவில் எந்த நகராட்சி, அல்லது பேரூராட்சி எல்லைக்குட்பட்டிருக்கிறதோ அவற்றின் வாக்காளர்களிடையே கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தித், தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க லாம் என்று பெரும்பாலோர் தீர்ப்பளித்தால் கோவிலின் தர்மர்த் தாக்கள் அல்லது நிர்வாகி அந்த முடிவை செயல்படுத்த வேண் டும். இதுவே திரு. ரங்க அய்யரது ஆலயப் பிரவேச மசோதாவின் சாராம்சம். இதில் கூறப்பட்டுள்ள கோட்பாடு வழக்கமான சாராம்சம், இதில் கூறப்பட்டுள்ள கோட்பாடு வழக்கமான பெரும்பான்மை முடிவு குறுத்த கோட்பாடேயாகும்; ஆகவே, இந்த மசோதா புரட்சி கரமானதோ, தீவிரமானதோ அல்ல; சனாதனிகள் புத்திசாலிகளாக இருந்தால் எந்த முணுமுணுப்பும் இன்றி இதைத் தாராளமாக ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரு மசோதாவை தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் ஏற்க முடியாது; இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் தாழ்த்தப்பட்ட மக்காள் ஆலயப் பிரவேசம் செய்யும் நாளை இந்த மசோதா வெகு அருகில் கொண்டுவந்துவிட முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தர்மகர்த்தாவோ, நிர்வாகியோ ஆலயத்தைத் திறந்துவிடும்போது அதற்கு எதிராகத் தடை உத்தரவு வாங்குவதற்கு இந்த மசோதவின் படி சிறுபான்மையினருக்கு உரிமை இல்லை என்பது உண்மையே. ஆனால் இந்த ஷரத்து பற்றி மனநிறைவு அடைந்து, மசோதாவைத் தயாரித்தவரைப் பாராட்டுவதற்கு முன்னர் முதலாவதாக, வாக்கெடுப்பில் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக பெரும்பாலோர் வாக்களிப்பார்களா என்பதை நிச்சயித்துக் கொள்ள வேண்டும். எத் தகைய போலி நம்பிக்கையும் இல்லாத எவரும் ஆலயப் பிரவேச மசோதாவுக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைப்பது அரிது என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வர். மசோதாவைத் தயாரித்த வரே சங்கராச்சாரியாருடன் நடத்திய கடிதப் போக்குவரத்தில் இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

மசோதா நிறைவேறிய பிறகு பெரும்பான்மையினர் வேறுவிதமாக நடந்துகொள்ளப் போகிறீர் களா? அத்தகைய நம்பிக்கை ஏதும் எனக்கு இல்லை. குருவாயூர் கோவில் சம்பந்தமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவுகளை நான் ஒன்றும் மறந்துவிடவில்லை. ஒரு பொதுமக்கள் வாக்கெடுப் புக்கு வழக்கமாக அளிக்கப்படும் மதிப்பைவிட இந்த வாக்கெடுப் புடன் ஏதோ மகாத்மா காந்தியின் வாழ்க்கையே சம்பந்தப்பட் டிருப்பதுபோல் இதற்கு அளவுக்கு மீறி மதிப்பளித்து அதனை ஏற்க நான் தயாராக இல்லை. இத்தகைய எந்த மதிப்பீடுகளிலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையைக் கழித்துவிட வேண்டும். இரண்டாவ தாக, கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை ஒரு தீய வழக்கமாக இந்த மசோதா கருதவில்லை. மாறாக, இதனை ஒரு வெறும் சமூகத் தீமையாக, அதிலும் மற்ற எத்தனையோ வகையான சமூகத் தீமையைப் போல் அவ்வளவு மோசமில்லாத தீமையாகவே இதனை அது கருதுகிறது.

தீண்டாமையைக் சட்டவிரோதமானதாக அது அறிவிக்க வில்லை. ‘பெரும்பான்மையோர் முடிவு செய்தால் மட்டுமே’ என்னும் நிபந்தனை விதிக்கப்படுவதால் மசோதாவின் ஜீவனே பறிக்கப்பட்டு விடுகிறது; அதன் கட்டுப்படுத்தும் ஆற்றல் சிதைக்கப்படுகிறது. பிறருக்குத் தீங்கிழைத்தல், ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளுதல் போன்ற கெட்டப் பழக்கங்களுக்குப் பெரும் பான்மையினர் அடிமையாகிவிடுவதால் அல்லது பெரும்பான்மை யினர் அவற்றைக் கைக்கொள்வதால் அந்தத் தீய பழக்கங்கள் சகிக்கக் கூடியவையாகிவிட முடியாது. தீண்டாமை என்பது நெறியற்ற தீயப் பழக்கம் என்றால், அப்போது என்ன செய்யவேண்டும்?

தீண்டாமை பெரும்பான்மை இனத்தினருக்கு ஏற்புடையதாக இருந்தாலும் அதனை எத்தகைய தயக்க மயக்கமுமன்றி அழித்தொழிப்பதுதானே முறை, நியாயம் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாதிடுகின்றனர். இவ்வாறுதான் நீதிமன்றங்கள் நடந்துகொள்கின்றன; ஏதேனும் பழக்க வழக்கங்கள் நெறிகெட்டவையாக, பொதுமக்களின் கொள்கைக்கு முரணானவையாக இருக்குமாயின் அவற்றைக் கண்டிக்கின்றன; தண்டிக்கின்றன. இதைத்தான் இந்த மசோதா செய்யத் தவறிவிட்டது. குடிப்பழக்கம் எப்படி ஒரு தீமையாகக் கருதப்படுகிறதோ, அதே போன்றுதான் இம்மசோதாவின் கர்த்தா தீண்டாமையையும் கருதுகிறார்; இதற்குமேல் தீண்டாமையின் பால் அவர் ஆழ்ந்த கவனம் எதுவும் செலுத்தவில்லை. அது மட்டுமல்ல, அவர் இரண்டு தீமை களையும் ஏறத்தாழ சமமாகப் பாவிப்பதோடு, குடிப்பழக்கத்தை ஒழுப்பதற்கு ஸ்தல மக்களின் விருப்பத்தை அனுசரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குடிப்பழக்க எதிர்ப்பு இயக்கத்தினர் கூறும் வழிமுறையையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

குடிப்பழக்கத்தை விட தீண்டாமை அப்படி ஒன்றும் மோசமானதல்ல என்று தாழ்த்தப் பட்ட மக்களின் நண்பர் எனத் தம்மைக் கூறுக் கொள்ளும் திரு. ரங்க அய்யர் கருதுவது விசித்தரமாக இருக்கிறது. தீண்டாமை ஒழிக்கப் படவில்லை என்றால் தாம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்னர் மகாத்மா காந்தி அறிவித்ததை திரு. ரங்க அய்யர் மறந்திருக்க மாட்டார்; அப்படி மறந்திருக்க வில்லை என்றால் இந்த சாபத்தீட்டைப் பற்றி, சாபக்கேட்டைப் பற்றி மிக ஆழமாக சிந்தித்திருப்பார்; அந்தக் கோரக் கொடுமையை அடியோடு, ஆணிவேர் சல்லிவேரோடு வெடியெறிவதற்கு வகை செய்யும் மிக உறுதியான திட்டத்தை முன் வைத்திருப்பார். பல னளிக்கும் விஷயத்தில் பல குறைபாடுகளைக் கொண்டதாயினும் தீண்டாமை ஒரு கொடிய தீமை என்பதைக் குறைந்தபட்சம் கொள்கை அளவிலாவது மசோதா ஏற்றிருக்க வேண்டும் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு, கருத்து.

தீண்டாமை ஒரு சாபக்கேடு என்று நெடுகிலும் வலியுறுத்திவரும் மகாத்மா காந்திக்கு இந்த மசோதா எவ்விதம் மனநிறைவு அளிக்கிறது என்பதை என்னால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியவில்லை; இது எப்படியிருப்பினும் இம்மசோதா தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக அறுதியிட்டு உறுதியாகக் கூறம் முடியும். இந்த மசோதா நல்லதா கெட்டதா, போது மானதா இல்லையா என்பது இரண்டாந்தரப் பிரச்சினை. இங்கு பிரதானமான பிரச்சினை தாழ்த்தப்பட்ட இனத்தினர் ஆலயப் பிரவேசத்தை விரும்புகிறார்களா, விரும்பவில்லையா என்பதே ஆகும்.

இந்தப் பிரதான பிரச்சினையைத் தாழ்த்தப்பட்ட மக்கள் இரண்டு கண்ணோட்டங்களிலிருந்து பார்க்கிறார்கள். ஒன்று பொரு ளாதாரக் கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப் படையில் சிந்திக்கத் தொடங்கும் அவர்கள் தங்களது மேம்பாட் டிற்கான நிச்சயமான மார்க்கம் உயர்கல்வி, அதிக வேலை வாய்ப்பு, சிறந்த வாழ்க்கைத் தொழில் ஆகிய இவற்றில்தான் அடங்கி யிருக்கிறது என்று கருதுகிறார்கள். சமூக வாழ்க்கைப் படிகளில் அவர்கள் தகுந்த, உலந்த இடத்தைப் பெற்றுவிட்டால், மதிப்புமிக்க வர்களாகி விடுவார்கள்; மதிப்புடையராகிவிடும்போது சனாதனியர் அவர்கள்பால் கொள்ளும் சமய மனநிலைச்சார்பு நிச்சயமாக மாற்றமடையும்; இவ்வாறு நிகழாதுபோயினும் அதனால் அவர்களது பொருளாதார நலன்களுக்கு எத்தகைய தீங்கும் நேரிடாது. இந்த அடிப்படையில் சிந்திக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசம் போன்ற ஒன்றுக்கும் உதவாத விஷயத்தில் தங்கள் சக்தியை வீண் விரயம் செய்ய விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடுவதில் அவர்கள் அக்கறை காட்டாததற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதுதான் சுயமரியாதை, இந்தியா வில் ஐரோப்பியர்கள் நடத்திவரும் பொழுதுபோக்குக் கூடங்களிலும் ஆரோக்கிய நிலையங்களிலும் சில காலத்திற்கு முன்னர் வரை ஓர் அறிவிப்புப் பலகைக் காணப்படும்; ‘நாய்களும் இந்தியர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று அதில் எழுதப்பட்டிருக்கும். இந்து கோவில்களிலும் இதேபோன்ற அறிவிப்புப் பலகைகள் இன்று காணப்படுகிறது. ஒரே வித்தியாசம் இந்துக் கோவில்களின் பலகை களில் காணப்படும் வாசகம் சற்று மாறுபட்டது. அது கூறுவதாவது: “நாய்கள் உட்பட எல்லா விலங்களுடன் அனைத்து இந்துக்களும் அனுமதிக்கப்படுவார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் அனுமதிக் கப்பட மாட்டார்கள்.”

இவை இரண்டிலும் நிலைமை ஒன்றுதான். ஆனால் ஒரு விஷயம்: இந்தியர்களுக்கு அனுமதியில்லை என்று ஐரோப்பியர்கள் அகம்பாவத்தோடு ஒதுக்கியுள்ள இடங்களில் தங் களை அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டதில்லை. அப்படியிருக்கும் போது இந்துக்கள் அகந்தை யோடு, திமிரோடு ஒதுக்கி யிருக்கும் இடங்களில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் ஏன் இறைஞ்சிக் கேட்க வேண்டும்? தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பொருளாதார சுபிட்ச நலனின் அக்கறை காட்டுவதற்கு, கண்ணும் கருத்துமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

அவர்கள் இந்துக்களிடம் பின்வருமாறு கூறவும் தயாராக இருக்கிறார்கள்: ”உங்கள் கோவில்களைத் திறப்பதோ திறக்காம லிருப்பதோ உங்கள் இஷ்டம்; அது நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விஷயம்; அதற்காக நாங்கள் கிளர்ச்சி எதுவும் செய்யப் போவதில்லை. மனித ஆளுமையின் புனிதத்தை, தூய்மையை மதிக் காதிருப்பது சரியல்ல, முறையல்ல என்று நீங்கள் கருதினால் உங்கள் கோவில்களைத் திறந்து விட்டுப் பண்பாளர்களாக, பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாக, பெருந்தன்மையுடையோராக நடந்து கொள்ளுங்கள், அப்படியில்லை நாங்கள் பண்பாளர்களாக இருப்பதைவிட இந்துக் களாகத்தான் இருப்போம் என்றால் கதவுகளை அடைத்துவிட்டது எக்கேடாவது கெட்டுப்போங்கள். ஏனென்றால் கோவில்களுக்கு வரவேண்டும் என்று நாங்கள் ஒன்றும் துடித்துக் கொண்டிருக்க வில்லை.”

“சாதி இந்துக்களின் ஆதரவைத் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பண்டித மதன் மோகன் மாளவியா போன்றோர் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தைப் போக்கும் பொருட்டே எங்கள் வாதத்தை மேற்கண்ட வடிவில் தருவது அவசியமாயிற்று. அடுத்து, இரண்டாவது கண் ணோட்டம் ஆன்மீகம் சம்மந்தப்பட்டது. சமயநோக்கு கொண்ட வர்கள் என்ற முறையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆலயப் பிர வேசத்தை விரும்புகிறார்களா? அல்லது விரும்பவில்லையா? இது தான் கேள்வி. ஆன்மீகக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, பொருளாதயக் கண்ணோட்டம் மட்டுமே மேலோங்கி அவர்கள் ஆலயப் பிரவேச விஷயத்தில் அவ்வளவாக அக்கறை இல்லாமல் அலட்சியாமக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இதில் அவர்களது இறுதி முடிவு பின்கண்ட கேள்விகளுக்கு மகாத்மா காந்தியும் இந்துக்களும் அளிக்கும் பதிலையே பொறுத்திருக்கிறது:

இந்த ஆலயப் பிரவேச நடவடிக்கைக்குப் பின்னாலுள்ள தூண்டுதல் என்ன? ஆலயப் பிரவேசம் என்பது இந்துக்களின் அர வணைப்பில் தாழ்த்தப்பட்ட மக்களது சமூக அந்தஸ்து மேம்பாட் டின் இறுதிக் குறிக்கோளாக இருக்கப்ப்போகிறதா? அல்லது இது இத்திசை வழியில் மேற்கொள்ளப்படும் முதல் நடவடிக்கையா? இது முதல் நடவடிக்கையாக இருக்குமாயின் இறுதி குறுக்கோள் யாது? ஆலயப் பிரவேசம்தான் இறுதிக் குறுக்கோள் என்றால் தாழ்த்தப் பட்ட இனத்தோர் அதனை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். அதனை அவர்கள் நிராகரிப்பார்கள்; அதுமட்டுமல்ல, இந்து சமு தாயத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்வார்கள்; தங்கள் எதிர்காலத்தை வேறு எங்கேனும் நிர்ண யித்துக் கொள்ள உரிமை பெற்றிருப்பார்கள்.

அதேசமயம் ஆலயப் பிரவேசம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களது முன்னேற்றம் என்னும் திசை வழியில் எடுத்துக் கொள்ளப்படும் முதல் நடவடிக்கைதான் என்றால் அதை வரவேற்பார்கள். அப்போது இது இந்திய அரசியலில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்ச்சிப் போக்கினை ஒத்ததாக இருக் கும்; இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து வேண்டும் என்று இந்தியர்கள் கோருகிறார்கள். இந்தக் கோரிக்கையை பிரிட்டிஷார் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு இப்போது சில சீர்திருத்தங் களை வழங்க முன்வந்தால் பல இந்தியர்கள் அதை ஏற்றுக் கொள் வார்கள். ஏன்? ஏனென்றால் குறிக்கோள் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பிறகு அக்குறிக்கோளை ஒரே பாய்ச்சலில் அடையாமல் படிப்படி யாக அடைவதில் தவறேதும் இல்லை. ஆனால் குடியேற்ற நாட்டு அந்தஸ்து குறிக்கோளை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்றால் நிலைமை என்னவாகியிருக்கும்? ஒரளவிலான சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள இப்போது தயாராக இருப்பவர்களே அப்போது அவற்றை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.

இதே போன்று இந்து அரவணைப்பின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நிலைமையை மேம்படுத்துவதற்கு எத்தகைய குறிக்கோளை வகுத்திருக்கிறார்கள் என்பதை மகாத்மா காந்தியும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் அறி வித்தால் ஆலயப் பிரவேச விஷயத்தில் தங்கள் நிலையை நிர்ண யித்துக் கொள்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எளிதாக இருக்கும் அதேசமயம், சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் குறிக்கோளை திட்டவட்டமாக, தெளிவாக அறிவிப்பது அவசியம். தங்களுக்குச் சமத்துவ அந்தஸ்தை வழங்கக்கூடிய ஒரு சமயத்தையே தாழ்த்தப் பட்ட மக்கள் விரும்புகின்றனர். தப்பெண்ணத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்த விஷயத்தை மேலும் விளக்கும் வகையில், சமயச் சார்பற்ற காரணங்களினால் விளையக்கூடிய சமூகத் தீமைகளையும் சம்ய சித்தாந்தங்களின் அடிப்படையில் எழக் கூடிய சமூகத் தீமை களையும் இங்கு வேறுபடுத்திக்காட்ட விரும்புகிறேன். எத்தகைய சமூகத் தீமைகளாயினும் அவற்றை ஒரு நாகரிக சமுதாயத்தில் எவ் வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

அதிலும் இன்று நிலவும் எந்தச் சமூகத் தீமைகளையும் சமய அடிப்படையில் நியாயப்படுத்த முயல்வது மிக மிக இழிவானது. அறவே வெறுக்கத்தக்கது, முற்றி லும் அருவருக்கத் தக்கது. தங்களுக்கு இழைக்கப்படும் கோரக் கொடுமைகளை, அவலங்களை, அக்கிரமங்களைத் தாழ்த்தப்பட்ட டோர் வீழ்த்த முடியாதிருக்கலாம். ஆனால் இந்தக் கொடுமைகள் தொடர்வதற்கு ஆதரவளிக்கும் ஒரு மதத்தைப் பொறுத்துக் கொள்வ தில்லை, சகித்துக் கொள்வதில்லை என அவர்க்ள் மதமாக இருக்க வேண்டும். எல்லோரையும் கோவிலுக்குள் அனுமதிப்பதற்கு வகை செய்யும் ஒரு ஷரத்தை இந்து சட்டத்தொகுப்பில் சேர்த்து விடுவதால் மட்டும் இந்து மதம் சமத்துவ சமூக அந்தஸ்தை வழங்கும் மதமாகி விடாது.

தற்போது அரசியலில் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துப்படும் பதங்களைப் பிரயோகித்துக் கூறுவதனால் அது செய்யக்கூடியது எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களை அந்நியர்களாக அல்லாமல் இந்நாட்டவ ராக அங்கீகரிப்பதே ஆகும். ஆனால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடின்றி சுதந்திரமும் சமத்துவமுமிக்க ஒரு நிலையை அவர்கள் அடைந்துவிடுவார்கள் என்று இதற்குப் பொருள் அல்ல: ஏனென்றால் இந்து சமயம் சமத்துவ சமூக அந்தஸ்து கோட்பாட்டை ஏற்கவில்லை; அதற்குமாறாக, மக்களை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என வகைப்படுத்தி ஏற்றத் தாழ்வை ஊட்டி வளர்க்கிறது. இவை தற்போது ஒன்றுக்கொன்று பகைமை ஏறுபடியிலும், அவமதிப்பு இறங்கு படியிலும் நிற்கின்றன. இந்து சமயம் சமூக சமத்துவமுள்ள சமயமாக இருக்க வேண்டு மென்றால், ஆலயப்பிரவேசத்திற்கு வழிவகுக்கும் ஒரு திருத்தத்தை அதன் சட்டத்தொகுப்பில் இடம்பெறச் செய்வது மட்டும் போதாது.

இப்போது செய்ய வேண்டியதெல்லாம் சதுர்வருண சித்தாந்தத்தை இந்து சமயத்திலிருந்து அகற்றி அதனைத் தூய்மைப்படுத்துவதே ஆகும்; ஏனென்றால் இந்த சதுர்வருண சம்பிரதாயம்தான் சகலவித மான ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஆணிவோ; சாதி அமைப்பின் தோற்றுவாய்; இவையெல்லாம் ஏற்றத்தாழ்வின் வெவ்வேறு வடிவங் களாகும். இதைச் செய்யவில்லை என்றால் தாழ்த்தப்பட்ட இனத் தினர் ஆலயப் பிரவேசத்தை நிராகரிப்பார்கள்; இந்து தர்மத்தையும் புறக்கணிப்பார்கள். சதுர்வருண சித்தாந்தமும் சாதிமுறையும் தாழ்த் தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கு ஒவ்வாதவை முரண்பாடானவை. இந்த சித்தாந்தம் இந்து சமயத்தின் அச்சாணியாக, ஆதார அடிப்படை யாக நீடிக்கும்வரை தாழ்த்தப்பட்ட இனத்தினர் தொடர்ந்து தாழ்ந்த வர்களாகவே, கீழானவர்களாகவே கருதப்பட்டு வருவார்கள். தாங்கள் இந்துக்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறுவது தங்களது தாழ்ந்த அந்தஸ்தை, நிலையை தங்கல் வாயாலேயே ஒப்புக்கொள்வதாகும்.

சதுர்வருண, சாதிக்கோட்பாடு கைவிடப்பட வேண்டும்; சாஸ்திரங்க் களிலிருந்து அது அகற்றப்பட வேண்டும்; அப்போதுதான் தாழ்த்தப் பட்ட இனத்தோர் தங்களை இந்துக்கள் என்று கூறிக்கொள்ள முடியும். மாகத்மாகவும் இந்து சீர்திருத்தவாதிகளும் இதனைக் தங்கள் குறிக்கோளாக ஏற்றுக் கொள்வார்களா? இந்தன் பொருட்டுத் துணிந்து போராட அவர்கள் முன்வருவார்களா? மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு இதனை நான் கூறியிருப்பதால், இவ்விஷயத்தில் அவர் களது கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஆனால் மகாத்மா காந்தியும் இந்துக்களும் இதற்குத் தயாராக இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி, இதற்குக் குறைந்த எதுவும் தாழ்த்தப்பட்ட மக்களைத் திருப்திப்படுத்தாது, அவர்களை ஆலயப் பிரவேசத்தை ஏற்கும்படி செய்யாது என்பதை உறுதியாக, முடிவாகத் தெரிவித்துக் கொள் கிறேன். ஆலயப் பிரவேசத்தை ஏற்றுக்கொண்டு அத்துடன் திருப்தி யடைவது என்பது தீமையுடன் சமரசம் செய்துகொள்வதையும், மனித ஆளுமையின் புனிதத்தைப் பலி கொடுப்பதையுமே குறிக்கும்.

 நான் எடுத்துள்ள இந்த நிலைக்கு எதிராக மகாத்மா காந்தி யும் இந்து சீர்திருத்தவாதிகளும் ஒரு வாதத்தை முன் வைக்கலாம்: அதாவது “ஆலயப் பிரவேசத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது ஏற்றுக் கொள்வது சதுர்வருண, சாதிமுறையை ஒழித்துக்கட்டு வதற்காக இனிமேல் அவர்கள் கிளர்ச்சி செய்வதை எவ்வகையிலும் தடுக்காது” என்று அவர்கள் கூறக்கூடும். இதுதான் அவர்களது குறிக்கோள் என்றால் இப்பிரச்சினைக்கு முடிவான தீர்வு காணும், எதிர்கால வளர்ச்சிக்குப் பாதை திறந்துவிடும் நோக்கத்தோடு இந்தக் கட்டத்திலேயே இந்த வாதத்தை எதிர்கொள்ள விரும்புகிறேன்.

இப்போது ஆலயப் பிரவேசத்தை ஏற்றுக்கொள்வதால் சதுர்வருண, சாதிமுறையை ஒழித்துக்கட்டப் போராடுவதற்கு எனக்குள்ள உரிமையை நான் இழக்கமாட்டேன் என்பது உண்மையே. ஆனால் இந்தப் பிரச்சினை வரும்போது மகாத்மா காந்தி எந்தப் பக்கம் இருப் பார் என்பதுதான் இங்கு கேள்வி. என்னுடைய எதிராளிகளின் முகாமில் இருப்பாரானால் இப்போது அவருடைய முகாமில் நான் இருக்க முடியாது என்பதை நான் அவருக்குக் கூறியாக வேண்டும். என்னுடைய முகாமில் இருப்பாரானால் இப்போதே அதில் அவர் இருக்க வேண்டும்.

 - பி.ஆர். அம்பேத்கர்

வட்டமேசை மாநாட்டில் என்னுடன் சேர்ந்து தாழ்த்  தப்பட்டோரை பிரதிநிதித்துவப்படுத்திய திவான் பகதூர்  ஆர். சீனிவாசனும் ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரிக்க  வில்லை. அவர் ஓர் அறிக்கையில் கூறியதாவது:

“தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சாதி  இந்துக்களின் கோவில்களில் பிரவேசிப்பதற்கு அனுமதிக்  கப்படும்போது, அவர் நால்வகை வருணங்களில் ஏதே  னும் ஒன்றைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார்; அதற்கு  மாறாக அவர் ஐந்தாவது வருணத்தைச் சேர்ந்தவராக  அல்லது கடைசி வருணத்தைச் சேர்ந்தவராக, இன்னும்  சொல்லப் போனால் தாழ்வினும் தாழ்வான சாதியைச்  சேர்ந்தவராக நடத்தப்படுவார்; இது தீண்டப்படாதோர்  என அழைக்கப்படும் கொடுமையிலும் மிகக் கொடிய  இழுக்காகும். அதேசமயம் அவர் எத்தனை எத்தனையோ  விதச் சாதிக்கட்டுப்பாடுகளுக்கும் அவமதிப்புகளுக்கும் ஆளாக்கப்படுவார். அதுமட்டுமல்ல, இவ்வாறு சாதி  இந்துக்களின் கோவில்களுக்குள் பிரவேசிப்பவரைத்  தாழ்த்தப்பட்ட இன மக்களும் வெறுத்தொதுக்குவார்கள்;  கோடானுகோடியான தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்  குள் வேண்டுமானால் பல பிரிவுகளாக பிரிந்திருப்பார்களே அன்றிச் சாதிக் கட்டுப்பாடுகளுக்கு ஒருபோதும்  உடன்படமாட்டார்கள்.

ஆலயப் பிரவேசத்தைச் சட்டத்தின் மூலம் நிர்ப்பந்திக்க  முடியாது. கிராம இந்துக்கள் பகிரங்கமாக அல்லது மறை  முகமாக சட்டத்தை மீறுவார்கள். கிராமத்தின் தாழ்த்தப்பட்டவனுக்கு இது ‘சர்க்கரை’ என்று எழுதி சுவைத்துப்  பார்க்கும்படி அவன் கையில் கொடுக்கப்படும் ஒரு துண்டு  காதிதமே தவிர வேறல்ல.

நாட்டின் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் தவிர்ப்  பதற்காக இந்த உண்மைகள் எல்லாம் பொதுமக்களின்  முன் உரிய சமயத்தில் வைக்கப்பட்டுள்ளன.”

எனது அறிக்கையில் திரு. காந்தியின் முன் வைத்த ஒரு கேள்விக்கு அவர் நேரடியாவே பதில் அளித்தார். தாம் தீண் டாமையை எதிர்த்தாலும் சாதியை எதிர்க்கவில்லை என்று அவர் கூறினார். அதனை ஆதரிக்கவே செய்கிறேன், எனவே தீண்டாமையை ஒழிப்பதற்கும் அதிகமாக எனது சமூக சீர்திருத்தத்தை முன்கொண்டு செல்ல மாட்டேன் என்றும் திட்ட வட்டமாகக் கூறினார். எனது நிலையை நிர்ணயிப்பதற்கு இது போதுமானதாக இருந்தது. இதில் மேற்கொண்டு பங்கேற்பதில்லை என்று தீர்மானித்தேன்.

தீண்டப்படாதோர் சமூகத்தின் முக்கிய பிரமுகர் காலஞ் சென்ற திவான் பகதூர் ராஜா தீண்டப்படாதோர் விஷயத்தில் அவர் மிகவும் வருந்தத்தக்க பங்காற்றினார் என்பதை இங்கு கூறாமல் இருக்க முடி யாது. திவான் பகதூர் 1927 ஆம் ஆண்டு முதல் மத்திய சட்டமன்றத் தில் ஒரு நியமன உறுப்பினராக இருந்து வந்தார். சட்டமன்றத்திற்கு உள்ளேயோ வெளியேயோ அவருக்கு காங்கிரசுடன் எந்த ஒட்டும் உறவும் இல்லை. தற்செயலாகவோ, தவறுதலாகவோ காங்கிரஸ் பக்கம் சாய்ந்த தில்லை. உண்மையில் அவர் காங்கிரசிடம் வெறும் குறைகாணுபவராக மட்டுமன்றி, அதன் கடுமையான பகைவராகவும் இருந்தார்.

அவர் அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளராக, அதன் தூண்களில் ஒருவராக இருந்து வந்தார். அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு, அதனைத் தாங்கிப் பிடித்து நிற்பதற்கு அவர் என்றுமே தயங்கிய தில்லை. தீண்டப்படாதோருக்கு தனித் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்  என்ற கோரிக்கையை உறுதியாக ஆதரித்து நின்றார். ஆனால் காங் கிரசோ அக்கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தது.

1932 ஆம் வருட நெருக்கடியின்போது திவான் பகதூர் திடீரென்று அரசாங்கத்தைக் கைகழுவிவிட்டு காங்கிரசின் பக்கம் சேர்ந்து கொண்டார். கூட்டுத் தொகுதி முறையையும் ஆலயப் பிரவேசத்தையும் ஆதரித்து காங்கிரஸ் நடத்திய இயக்கத்தின் ஈட்டிமுனையானார். பொதுவாழ்க்கையில் ஒருவர் இத்தகைய திடீர் மாற்றத்தை மேற்கொள்ளும் போக்கை காண்பது அரிது. இதில் மிகவும் மோசமான, அருவருக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தப் போக்குக்குப் பின்னால் கடைந் தெடுத்த சுயநலம் பதுங்கியிருந்தது என்பதே ஆகும். வட்டமேசை மாநாட்டுக்குத் தீண்டப்படாதோரின் பிரதிநிதியாக அரசாங்கம் அவரை நியமிக்காமல் திவான் பகதூர் ஆர். சீனிவாசனை நியமித்த தானது அவரை பெரிதும் விரக்தியும் ஏமாற்றமும் சீற்றமும் கொள்ளச் செய்தது. இந்திய அரசாங்கம் அவரை நியமிக்காததற்குப் போதிய காரணங்கள் இருந்தன.

சைமன் கமிஷன் உறுப்பினர்களையோ, மத்திய சட்டமன்றக் குழு உறுப்பினர்களையோ வட்டமேசை மாநாட்டுக்கு அனுப்புவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. திவான் பகதூர் ராஜா மத்திய சட்டமன்றக் குழு உறுப்பினர். எனவே அவர் நியமிக்கப்படவில்லை. இது நியாயமான விளக்கமாகும். ஆனால் திவான் பகதூர் ராஜாவின் தற்பெருமை உணர்வு இந்த நியாயத்தைக் காண மறுத்தது. எனினும் விரைவிலேயே அவருக்கு உண்மை புலப் பட்டது. சென்னையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட போது அவரது எதிராளி அமைச்சராக்கப்பட்டார்; காங்கிரசுக்கு எவ்வளவோ சேவை செய்திருந்த போதிலும் இவர் கைவிடப்பட்டார். அவர் ஆதரித்த புனா ஒப்பந்தம் மிதித்துத் துவைக்கப்பட்டது.

இதனை எல்லாம் கண்டபோதும் தாம் செய்தது மிகப் பெரிய தவறு என்ற கசப் பான உண்மையை அவர் நிதர்சனமாக் கண்டார்! எனினும், நெருக் கடி மிகுந்த 1932 ஆம் ஆண்டில் திவான் பகதூர் ராஜா காங்கிரசுக்கு தனது முழு ஆதரவை அளித்தார் என்ற எதார்த்தத்தை மறந்துவிட முடியாது. காங்கிரஸ் கூட்டத்தோடு சேர்ந்து ஓடியதோடு நில்லாமல், தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றும் போட்டியில் தான் பின் தங்கிவிடாதபடி மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டார். இது சம்பந்தமாக அவரும் இரண்டு மசோதாக்களை முன்மொழிந்தார். அவற்றில் ஒன்று தீண்டாமை ஒழிப்பு மசோதா; மற்றொன்று குற்ற நடைமுறை திருத்த மசோதா.

 III

திரு. காந்தி தமது இயக்கத்துக்கு எத்தகைய எதிர்ப்பு வந்த போதிலும், அது வைதிக இந்துக்களிடமிருந்து வந்தாலும் சரி, தீண்டப்படாதவர்களிடமிருந்து வந்தாலும் சரி அதுகுறித்துக் கவலைப் படவில்லை. அவர் தமது முயற்சியில் வெறி பிடித்தவர்போல், பித்துப் பிடித்தவர்போல் செயல்படலானார். ஆனால் அவரது இந்த இயக்கத்துக்கு முடிவில் என்ன கதி நேர்ந்தது என்ற கேள்வியைக் கேட்பது சுவையானதாக இருக்கும். ஆனால் இந்த நூலின் குறுகிய வட்டத்திற்குள் இந்த விசாரணையை விவரிப்பதோ, இயக்கம் வெற்றியடைந்து விட்டதாக உரிமை கொண்டாடி அதற்கு ஆதர வாக முன்வைக்கப்படும் எல்லா சான்றுகளையும் இங்கு தருவதோ சாத்தியமில்லை.

சுருக்கமாகக் கூறினால், கோவில்களையும் கிணறுகளையும் தீண்டப்படாதோருக்குத் திறந்துவிடுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் தீண்டாமையை ஒழித்துக்காட்டும் திசை வழியில் சிறிதுகாலம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப சூரத்தனத்திற்குப் பிறகு, திடீரெனப் பொங்கி வழிந்த வேகத்திற்குப் பிறகு இந்துக்களின் மனம் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையில் பழைய நிலைக்கே திரும் பிற்று. ஹரிஜன் இதழில் “வாரத்திற்கு வாரம்” என்ற பகுதியில் வெளி வந்த செய்திகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் படிப்படியாகக் குறைந்த இறுதியில், அடியோடு மறைந்து விட்டன. என்னைப் பொறுத்தவரையில் இந்துக்களில் மனம் இவ்வளவு விரை வில் மரத்துப்போனது பற்றி, முடமாகப் போனது பற்றி நான் வியப் படையவில்லை. ஏனென்றால் ஹரிஜன் பத்திரிகையில் வெளிவரும் ”வாரத்திற்கு வாரம்” என்னும் பகுதி வெளி உலகை நம்ப வைப்பது போல் இந்துக்களின் மார்பகத்தில் மனித நேயம், மனிதாபிமானம், மனிதப் பண்பு என்னும் பால் இந்த அளவுக்குச் சுரக்கும் என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை. உண்மையில் “வாரத்திற்கு வாரம்” பகுதியில் வெளியாகும் செய்திகளில் பெரும்பகுதி சுத்த பித்தலாட்ட மானதாகும்; போலியானதாகும். தீண்டாமையை எதிர்த்துப் போராட இந்துக்கள் உறுதிபூண்டுள்ளனர் என்று உலகை ஏமாற்றுவதற்கு காங்கிரஸ்காரர்கள் கட்டவிழ்த்துவிட்டப் பொய்ப்பிரசாரமே தவிர இது வேறல்ல. அப்படியே உண்மையில் ஒரு சில கோவில்கள் தீண்டப்படாதவர்களுக்குத் திறந்துவிடப்பட்டிருந்தாலும், அவ்வாறு திறந்து விடப்பட்ட்தாக அறிவிக்கப்பட்டுள்ள கோவில்களில் பெரும் பாலானவை சிதைந்து சீர்குலைந்து பாழடைந்து போனவை; நாய் களையும் குரங்குகளையும் தவிர வேறு எவரும் அவற்றைப் பயன் படுத்துவதில்லை. இந்த காங்கிரஸ் இயக்கத்தால் விளைந்த தீய விளைவுகளில் ஒன்றை இங்கு குறிப்பிடுவது அவசியம்; அரசியல் விழிப்பு கொண்ட இந்துக்களை. அது ஒது பொய்யர் பட்டாளமாக்கி விட்டது; காங்கிரசுக்கு உதவுமானால் எந்தப் பச்சைப் பொய்யையும் கூற இந்தத் ‘திருக்கூட்டம்’ தயங்காது. இந்த ஆலயப் பிரவேச இயக் கத்தில் இந்துக்கள் ஆடிய நாடகம் இவ்வாறு பரிதாபகரமாக முடிந்தது; அவர்கள் தரித்த வேடம் களைந்தது. குருவாயூர் ஆலய சத்தியாக் கிரகத்திற்கும், தீண்டப்படாதவர்களின் ஆலயப் பிரவேசம் சம்பந்த மான மசோதாக்களுக்கும் இதே பரிதாபமான கதிதான் நேர்ந்தது. இவையாவும் திரு. காந்தியும் காங்கிரஸ்காரர்களும் கடைப்பிடித்த வழிமுறைகள். ஆதலால் அவற்றைச் சற்று விவரமாக இங்கு கூறி னால் தீண்டப்படாதோர் விஷயத்தில் திரு. காந்தியும் காங்கிரசும் கொண்டுள்ள உண்மையான மனோபாவத்தை, அவர்களது நோக்கை, போக்கை அது வெட்ட வெளிச்சமாக்கும்.

 IV

குருவாயூர் ஆலய சத்தியாக்கிரகத்துடன் தொடங்குவோம். மலபாரில் பொன்னாளி தாலூகாவில் குருவாயூர் என்னுமிடத்தில் கிருஷ்ணர் கோவில் ஒன்று இருக்கிறது. கள்ளிக் கோட்டை ஜமோரின் தான் இந்தக் கோவிலின் தர்மகர்த்தா. மலபாரில் தீண்டப்படா தோரின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் திரு. கேளப்பன் என்ற ஓர் இந்து கோவிலுக்குள் தீண்டப்படாதோரை அனுமதிக்க வேண்டும் என்பதற்காக ஓர் கிளர்ச்சியைத் தொடங்கினார். ஆனால் கோவிலின் தர்மகர்த்தவான கள்ளிக்கோட்டை ஜமோரின் தீண்டப்படாதோ ருக்கு கோவிலைத் திறந்துவிட மறுத்துவிட்டார்; தமது நடவடிக் கைக்கு ஆதரவாக இந்து சமய அறக்கொடை சட்டத்தின் 40 ஆவது பிரிவை மேற்கொள் காட்டினார்; எந்தத் தர்மகர்த்தாவும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கோவில்களின் பழக்க வழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்தப் பிரிவு கூறுகிறது.

1932 செப்டம்பர் 20 ஆம் தேதி திரு. கேளப்பன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்; தீண்டப்படா தோர் சம்பந்தமாக ஜமோரின் தமது கருத்துக்களை மாற்றிக் கொள்ளும்   வரை கோவிலின் முன்னர் சுட்டெரிக்கும் வெயிலில் படுத்து உண்ணா விரதம் இருந்தார். இந்தத் தொல்லையிலிருந்தும் இக்கட்டிலிருந்தும் விடுபடும் பொருட்டு ஜமோரின் காந்தியை அணுகினார்; உண்ணா விரதத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி திரு. கேளப் பனை வலியுறுத்தமாறு அவர் திரு. காந்தியைக் கேட்டுக் கொண் டார்.

பத்து தினங்கள் உண்ணாவிரதம் இருந்தபிறகு திரு. காந்தி யின் வேண்டுகோளின் பேரில் திரு. கேளப்பன் 1932 அக்டோபர் 1 ஆம் தேதி மூன்று மாதங்களுக்கு உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தார். ஆனால் இதன் பிறகு ஜமோரின் எதுவும் செய்ய வில்லை. இதன் பேரில் திரு. காந்தி அவருக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். இந்த விஷயத்தில் விரைந்து செயல்படும்படியும் சட்ட மற்றும் இதர இக்கட்டுகளை வெற்றிகரமாகச் சமாளிக்கும்படியும் அதில் அறி வுரை கூறியிருந்தார். மேலும், தமது ஆலோசனையின் பேரிலேயே திரு. கேளப்பன் தமது உண்ணா விரதத்தை நிறுத்தி வைத்ததால், தீண்டப்படாதோர் கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்பாடு செய் வது தமது கடமையாகிவிட்டது என்றும், அவசியமானால் இதன் பொருட்டு திரு. கேளப்பனுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அளவுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் ஜமோ ரினிடம் திரு. காந்தி கூறினார். 1932 நவம்பர் 5 ஆம் தேதி திரு. காந்தி பின்கண்ட அறிக்கையைப் பத்திரிகைகளுக்குத் தந்தார்:

“கேரளத்தில் குருவாயூரில் கோவிலை தீண்டப்படா  தோருக்குத் திறந்துவிடுவது சம்பந்தமாக மற்றொரு  உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டிய சாத்தியக்கூறு  இருக்கிறது. திரு. கேளப்பனின் உண்ணாவிரதம் கிட்டத்  தட்ட அவரை சாவின் விளிம்புக்கு கொண்டுவந்து  விட்டது. இந்நிலைமையில் நான் அவசரமாகக் கேட்டுக்  கொண்டதற்கு இணங்கவே அவர் தமது உண்ணாவிர  தத்தை மூன்றுமாதக் காலத்துக்குத் தள்ளிவைத்தார்.  எனவே, தீண்டப்படுவோரைப் போன்றே தீண்டப்படாத  வர்களுக்கும் 1933 ஜனவரி 1 ஆம் தேதியன்றோ அல்லது  அதற்கு முன்னரோ குருவாயூர் கோவில் திறந்துவிடப்பட  வேண்டும். இல்லையென்றால், அவசியமானால் திரு.  கேளப்பன் மீண்டும் உண்ணாவிரத்தைத் தொடங்கும்  போது, அவருடன் சேர்ந்து நானும் உண்ணாவிரதம்  இருக்க வேண்டியிருக்கும்.”

 ஜமோரின் இதற்கு இணங்க மறுத்து, பின்கண்ட எதிர் அறிக் கையைப் பத்திரிகைகளில் வெளியிட்டார்: “கோவில்களை அவர்ணர்களுக்குத் திறந்து விடுமாறு  கேட்டுக்கொண்டு வெளியிடப்படும் பல்வேறு வேண்டு  கோள்கள் இதில் உள்ள சிரமங்களைப் போதிய அளவுக்கு  கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் வெளியிடப்படுபவை  யாகும். இத்தகைய சூழ்நிலைமையில், ஆலயப் பிரவேச  இயக்கத்தின் ஆதரவாளர்கள் விரும்புவதுபோன்று குரு  வாயூர் கோவிலை அவர்கணர்களுக்குத் திறந்துவிடுவது  என் அதிகாரத்தில் இருப்பதுபோல் நினைப்பது எவ்வகை  யிலும் நியாயமற்றதாகும்.”

இத்தகைய சந்தர்ப்பச் சூழ்நிலைமைகளில் திரு. காந்தி உண்ணாவிரதம் மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகவும் அவசிய மானதாகவும் ஆகிவிட்டது. ஆனால் திரு. காந்தி தாம் கூறியதைப் போல் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவில்லை. மாறாக, அவர் தமது நிலையை மாற்றிக் கொண்டார். கோவில் அமைந்துள்ள பொன்னானி வட்டத்தில் ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த லாம் என்றும், தீண்டப்படாதவர்களுக்குக் கோவில்களைத் திறந்து விடுவதை பெரும்பாலோர் எதிர்க்கின்றனர் என்பது அந்த வாக் கெடுப்பு மூலம் தெரியவந்தால், தாம் உண்ணாவிரதம் இருக்கும் முடிவைக் கைவிடுவதாகவும் அவர் கூறினார். அவ்வாறே ஒரு பொது மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஆனால் வழக்கமாக கோவி லுக்குச் சென்று வருபவர்கள் மத்தியில் மட்டுமே இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. கோவிலுக்குள் செல்ல தகுதியற்றவர்களும், பொது வாக கோவிலுக்குச் செல்லாதவர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் 73 சத வீதத்தினர் வாக்களித்ததாகக் கூறப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவு பின்வருமாறு அமைந்திருந்தது: ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாக 56 சதவீதத்தினர் வாக்களித்தனர்; 9 சதவீதத்தினர் எதிராக வாக் களித்தனர்; 8 சதவீதத்தினர் நடுநிலைமை வகித்தனர்; 27 சதவீதத் தினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த வாக்கெடுப்பில் தெரியவந்த முடிவின்படி உண்ணா விரதத்தை மேற்கொள்ள திரு. காந்தி கடமைப்பட்டிருந்தார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, 1932 டிசம்பர் 26 ஆம் தேதி திரு. காந்தி பத்திரிகைகளில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக சென்னை மேலவை  யில் டாக்டர் சுப்பராயனின் மனுவை அனுமதிப்பது  குறித்த வைசிராயின் முடிவு ஜனவரி 15 ஆம் தேதிக்கு  முன்னர் வெளியிடப்படுவது சாத்தியமில்லையாதலால்,  புத்தாண்டின் இரண்டாம் நாளன்று தொடங்க உத்தேசித்  திருந்த உண்ணாவிரதம் மறுதேதி குறிப்பிடப்படாமல்  ஒத்திவைக்கப்படுகிறது; இன்னும் தெளிவாகக் கூறுவ  தானால் வைசிராயின் முடிவு வெளியிடப்படும் வரை  உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த ஒத்தி  வைப்பை திரு. கேளப்பனும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.”

திரு. காந்தி குறிப்பிடும் வைசிராயின் அறிவிப்பு என்பது சட்டமன்றத்தில் ஆலயப் பிரவேச மசோதாக்கள் கொண்டு வருவ தற்கு வைசிராயின் அனுமதி வழங்கப்படுவதை அல்லது மறுக்கப் படுவதைக் குறிக்கிறது. இந்த அனுமதி இறுதியில் வைசிராயால் அளிக்கப்பட்டது. எனினும் திரு. காந்தி உண்ணா விரதத்தை மேற் கொள்ளவில்லை. அவர் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளாதது மட்டுமல்ல, அது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்ற ரீதியில் அதனை அடியோடு மறந்தும் விட்டார். அப்போது முதல் குருவாயூர் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகம் பற்றி எந்தத் தக வலும் இல்லை. இனறுவரை கூட அதன் கதவுகள் தீண்டப்படா தோருக்கு மூடியே கிடக்கின்றன.

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 4)