power grid 340அறிவியல் பத்திரிக்கைகள், மாத இதழ்கள் மற்றும் அறிவியல் ஆய்வின் தரவுகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் இலவசமாக சென்றடையும் விதமாக, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை வரைவு புதிதாக செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகெங்கிலும் வெளியாகும் அனைத்து முக்கியமான அறிவியல் இதழ்களுக்கும், ஒட்டுமொத்தமாக சந்தா செலுத்தி, அவற்றை ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் இலவசமாக அணுகும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக  இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த 2021ஆண்டின் முதல் அரையாண்டிற்குள், ஒரே நாடு, ஒரே சந்தா என்ற செயல் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம், வெளிப்படையான அறிவியல் கொள்கையினை வெளியிட உத்தேசித்துள்ளது.

அனைவருக்கும் அறிவியல் - இந்திய அரசின் பொது நிதியுதவியுடன மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆய்வுத்தரவுகள் அனைத்து தரப்பு மக்களையும் இலவசமாக சென்றடைய வகை செய்யும் விதமாக இக்கொள்கையினை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் பொருட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கொள்கை வரைவு இணையத்தில் வெளியிடப்பட்டது.

ஒரே நாடு, ஒரே சந்தா செயல்திட்டம் அறிவியல் இதழ்களுக்கான அடிப்படையான மற்றும் பூரணமான நடவடிக்கை என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அறிவியல் சமூகத்திற்கும், ஒவ்வொரு ஆய்வாளர்களுக்கும் இந் நடவடிக்கை ஒரு முக்கிய தருணமாகும்.

உலகளவில் தலை சிறந்த அறிவியல் இதழ்கள் விலை மிகுதியாக உள்ளதால், எளிதில் ஆய்வு மாணவர்களால் அதற்கு சந்தா செலுத்தி படிக்க இயலாத நிலை உள்ளது. இணையவழியில் ஒரு ஆய்வுக் கட்டுரை வாசிக்க சில பத்து டாலர்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.

மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் கூட குறிப்பிட்ட சில அறிவியல் ஆய்விதழ்களுக்கு மட்டுமே சந்தா செலுத்தி அதனை மாணவர்களுக்கு பயன்படுத்த வழங்குகின்றன.

அரசாங்கமானது, ஒவ்வொரு வருடமும் 2000 கோடி முதல் 3000 கோடி வரை மொத்தமாக சந்தா செலுத்தி, உலகளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 3000 முதல் 4000 அறிவியல் இதழ்களை அனைவரும் அணுகக் கூடிய விதத்தில் நடைமுறையைக் கொண்டு வருதல் அறிவியல் செயல்திட்ட வரைவின் நோக்கமாகும்.

இந்த செயல்திட்டம், இப்போது அறிவியல் புலத்தின் தன்மையையே மாற்றி அனைவருக்கும் அறிவியல் என்ற நிலையை உருவாக்கும் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வரி, வரி செலுத்துவோரின் பணத்திலிருந்தே, பொது நிதியானது அறிவியல் ஆய்வுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆகவே, வரி செலுத்தும் மக்கள் தனியே அறிவியல் இதழ்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் கொள்கை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின்படி, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சுயசார்புள்ளதான இலக்கை நோக்கி நகர வேண்டும் என்பதே நோக்கமாகும். நாட்டின் உற்பத்தியைக் கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டில் உருவாக்குதல் என்ற இருவழிப் பாதையானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,

உருகுவே மற்றும் எகிப்து நாடுகளில் இம்முறை தற்போது செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஒரே நாடு, ஒரே சந்தா திட்டத்தின்படி இந்திய அரசானது அறிவியல் பத்திரிக்கைகள் வெளியிடுவோரிடம் பேரம்பேசி மத்தியப்படுத்தப்பட்ட கட்டணத்தை நிர்ணயிக்கும்.

ஒவ்வொரு தனிநபரும், அறிவியல் இதழ்களில் வெளியாகும் கட்டுரைகளை வாசிக்க வழிவகை செய்யும் திட்டமிது. ஒவ்வொரு நிறுவனமயமாக்கப்பட்ட அறிவியல் இதழ்களுக்கும் தனித்தனியே சந்தா செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகளாவிய தரத்திற்கு தனிநபர் மற்றும் அமைப்புகள் ரீதியாக அடிப்படை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைக் கட்டமைப்புடன் கூடிய சூழ்நிலையை இந்திய நாட்டில் உருவாக்க முற்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாற்றங்களுடன் கூடிய எதிர்காலம் மிக வேகமாக அடியெடுத்து நடைபோட்டு வந்து கொண்டிருக்கும் காலமிது. இத்தகைய மாற்றங்களுக்கு தயாராக, இந்திய அறிவியலுக்கு இந்த வரைவு செயல்திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.

இக்காலத்தில் புதிது புதிதாய் உருவாகிவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை புதிய கண்டுபிடிப்புகளின் வழியே சமாளிக்க இந்த ஒரே நாடு, ஒரே சந்தா திட்டமே சரியான திசையில் வழிகாட்டுவதாக இருக்கும் எனவும் தொழில்நுட்ப அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

‘நேச்சர்“ போன்ற உலகளாவிய அறிவியல் ஆய்விதழ்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்ட சேர்ப்பதில் அறிவியல் உலகம் வெற்றிபெற வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தமிழ் மாத இதழான ‘துளிர்” மற்றும் ஜந்தர்மந்தர், விஞ்ஞானச் சிறகு போன்ற மாணவர்கள் மற்றும் அனைத்து வாசகர்களுக்குமான இதழ்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதில் தற்போது உள்ள பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி வெற்றி பெறுவதே தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அறிவியலாளர்களின் முக்கியப் பணியாகும்.

எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகள் வந்தாலும் அதன் பயன் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதே அறிவியலின் வெற்றியாகும்.

- சுடலைமாடன்