அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட்டதன் மூலம், ‘தலித் முரசு' அவரது பரந்த, ஆழமான உலகக் கண்ணோட்டத்தையும் நாட்டு மக்கள் மீது அவருக்கு இருந்த அளவற்ற பற்றையும் அக்கறையையும் தெரிந்து கொள்ள உதவியுள்ளது. இந்தியாவிலுள்ள தலித் இயக்கங்கள், கட்சிகள் பெரும்பாலானவை உட்சாதி நலன்களுக்கான அரசியல், பார்ப்பன மய்யம் நோக்கி நகர்தல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், “பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்குமானதாகும். அதன் அடிப்படையில், கூட்டமைப்பை ஒரு சாதி அமைப்பெனக் குற்றம் சாட்ட முடியாது. கூட்டமைப்பு எல்லோரும் பங்கேற்பதாக இல்லாது இருக்கலாம். ஆனால், அனைவரும் பணியாற்ற, ஒருங்கிணைவதற்குத் தகுதியுடைய அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடியதே'' என்னும் வாசகங்கள், அம்பேத்கரின் உருவங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளையும் விளம்பரப் பலகைகளையும் பயன்படுத்தி, அவரது லட்சிய நோக்கில் ஒரு விழுக்காட்டைக் கூடப் பகிர்ந்து கொள்ளாத இன்றைய தலித் கட்சிகள், இயக்கங்கள் பலவற்றின் அறவியல் சீரழிவைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

Ambedkar
1989 - 90 இல் நடந்தது போலவே இன்றும் ஆதிக்க சாதி மாணவர்கள் காலணிகளுக்கு மெருகூட்டும், விளக்குமாறுகளால் தெருக்களைத் துப்புரவு செய்யும் ‘போராட்ட'ங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு மறைமுகமான ஆதரவு கொடுக்கும் வகையில் சில ‘தலித்’ அறிவுஜீவிகள், தங்களது பார்ப்பன தலித் கூட்டணிகளின் கொள்கைப் பிரகடனங்களை மின்னணு, அச்சு ஊடகங்கள் வழியாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், “பிற்படுத்தப்பட்ட, தீண்டத்தகாத, பழங்குடி மக்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்த்த, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு பாடுபடும்'' என்னும் உறுதிமொழி, இந்திய / தமிழக சமுதாயத்தின் சாதியமைப்பில் உள்ள தன்மையான முரண்பாடு பற்றி அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறது.

அவரது ஆழ்ந்த மனிதநேயத்திற்கு மற்றொரு சான்றாக இருப்பது காந்தியார் கொல்லப்பட்ட போது, அதற்குப் பழிவாங்கும் நோக்கில், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கசாதியினர் மீது நடத்திய வன்முறைத் தாக்குதல்களுக்கு அம்பேத்கர் ஒப்புதல் தர மறுத்ததாகும். மக்களிடையே உள்ள பகைமையுணர்வை வன்முறை கொண்டு போக்கிவிட முடியாது என்பதை ஆணித்தரமாக நிறுவும் இந்தத் தேர்தல் அறிக்கை, இந்தப் பகைமை உணர்வைப் போக்குவதற்கு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைச் சொல்கிறது.

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் போக்குவதில் அண்ணல் காட்டிய அக்கறையும் அவர் முன்வைத்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் நம் மனதை நெகிழவைக்கின்றன. இந்தத் தேர்தல் அறிக்கையின் ஒரு கணிசமான பகுதி விவசாயப் பிரச்சனைக்கு குறிப்பாக நலமற்ற விவசாயத் தொழிலாளர் பிரச்சனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களில் “பெரும்பாலானோர் தீண்டத்தகாதவர்களாகவும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவுமே உள்ளனர்'' என்பதைச் சுட்டிக்காட்டும் அறிக்கை, நிலச் சீர்திருத்தம், தரிசு நில மேம்பாடு, கூட்டுப் பண்ணைகள் அமைத்தல் போன்ற நடைமுறைச் சாத்தியமானதும் ஆக்கப்பூர்வமானதுமான ஆலோசனைகளை வழங்குகிறது. “விவசாயிகளின் செழிப்பு, காடுகளைப் பராமரிப்பதில் இருக்கிறது. காடுகளின்றி தேவையான மழைக்கு உத்திரவாதமில்லை. இதனால், இந்தியாவில் விவசாயம் மழையை நம்பிய ஒரு சூதாட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. இனியும் இப்படியே இருக்கும். விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களைக் காடுகளாக்க வேண்டும்'' என்னும் பகுதி, இந்தியாவில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தலைமைக்கும் இருந்திராத ஒரு தொலைநோக்குப் பார்வை, சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பார்வை அண்ணலிடம் இருந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும், இந்தியாவின் மொழி வேறுபாடுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட இந்த அறிக்கை, மொழிவழி மாநிலங்கள் குறித்த மிகச் செறிவான, அய்யத்திற்கு இடந்தராத கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது.

-எஸ்.வி.ராஜதுரை
Pin It