"மக்களின் மனதில் பதிந்திருக்கும் (இந்து) "மதம்' என்ற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்குச் சொல்லப்பட்டது மதமே அல்ல; சட்ட விதிகளே என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள். இதைச் செய்து முடித்ததுமே மதம் என்று சொல்லப்படுகிற இந்தச் சட்ட விதிகளை, சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தார்மீக பலம் உங்களுக்கு தானாகவே வாய்க்கும். இந்து மதத்தை அதாவது, ஒரு சட்டத் தொகுப்பை மதமாக மதிக்கிற வரையில், மக்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முன்வர மாட்டார்கள்... சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள். இதுவே உங்கள் தலையாயக் கடமை.''
-டாக்டர் அம்பேத்கர்

எந்தவொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை அடிப்படை ஆதாரமாகக் கொண்டுதான் இயங்குகிறது. அந்த அங்கீகாரம்தான், அமைப்பு முறையின் உயிர் சக்தியாக விளங்குகிறது. அதன் மதிப்பீடுகள், அமைப்பு முறையின் இயக்கத்தையே தீர்மானிப்பவையாகவும் உள்ளன. அந்த அங்கீகார ஆற்றலைப் பெற்றிருப்பவைகளாக மூன்றைச் சொல்லலாம். அவை சட்டம், சமூகம், மதம் ஆகியனவாகும்.

Yakkan
நீண்ட நெடுங்காலமாக இந்தியாவில் ஆழமாக வேரூன்றி வரும் படிநிலைச் சாதி அமைப்பு முறையை, இந்து மதம் அங்கீகரித்திருக்கிறது. இந்து சமூகமோ சாதி அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. சாதி அமைப்பிற்கு நேர் எதிரான ஜனநாயக அமைப்பிற்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய மண்ணில் இப்போது வரை, இந்து மதத்தின் அங்கீகாரம் பெற்ற சாதி அமைப்புமுறை வலுவாகச் செயல்பட்டு வருகிறது போது, அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஜனநாயக அமைப்புமுறை உயிரற்றதாக மாற்றப்பட்டுள்ளது. அதன் மூலம், நாம் இரண்டு முடிவுகளுக்குச் செல்ல முடியும்.

ஒன்று, ஜனநாயகத்திற்கு நேர் எதிரான இயங்குத் தன்மையைப் பெற்றிருக்கும் சாதி அமைப்பு முறையை அங்கீகரிப்பதன் மூலம், இந்து மதம், இந்திய அரசமைப்பிற்கு எதிரானதாக இருக்கிறது. இரண்டு, அரசமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற ஜனநாயக அமைப்பின் இயங்குத் தன்மையை / உயிராற்றலைக் கட்டுப்படுத்தும் வலிமையை இந்து மதம் சாதியச் சமூகம் பெற்றிருக்கின்றன.

ஜனநாயக அமைப்பு முறையை மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்தின் மாபெரும் அதிகாரத்தையே செயலிழக்கச் செய்து வருகிறது இந்து மதம். இந்து மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்த போதும், மக்களிடையே அது உருவாக்கி வைத்திருக்கும் பாகுபாடும் அநீதியும் நிறைந்த சாதிய / பார்ப்பனியக் கருத்தாளுமைகளை அரசால் மாற்ற இயலவில்லை. ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரத்தைப் பெற்றிருக்கும், நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் அவைகளில் அரசப் பிரதிநிதிகளாய் இருப்போர் பெரும்பாலும் இந்துக்கள்தாம். அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கோ, நிர்வாக விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கோ அரசின் மதிப்பீடுகளுக்கோ பணிந்து செயலாற்றுவதில்லை; அதன் மய்யமான மக்கள் நல மதிப்பீடுகளை மதிப்பதில்லை.

மாறாக, தங்களையும் தங்கள் முன்னோர்களையும் நீண்ட நெடுங்காலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்து மதத்தின் மரபான ஆச்சாரங்களுக்கும், சடங்கு முறைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், சாதி உணர்வுக்கும், சுய நல வேட்கைக்கும், பாகுபாட்டு உளவியலுக்கும் ஊற்றுக் கண்களாகவே செயல்படுகிறார்கள். அடித்தால் சிதறுண்டு போகும் மந்தைகளாக இந்துக்கள் இருந்தாலும், அவர்கள் பெற்றிருக்கும் "இந்து ஆன்மா', இந்து தர்மத்தின் கட்டுறுதி குலையாமல் கண்காணித்து வருகிறது; பிறக்கும் ஒவ்வொரு மனிதரையும் தனது அடிமையாக்கி ஆள்கிறது.

.
மன்னராட்சிக் காலங்களில் இந்து தர்மம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, அரசு முடிவுகளாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டன. நவீன அரசியல் கருத்துருவாக்கம், மக்கள் அரசமைப்பு உருவாக்கம் போன்ற நாகரீக ஆட்சி முறைகள் ஏற்பட்ட போது, இந்திய நாட்டின் வலுவான "இந்து மகா ஆன்மா'வாகச் செயல்பட்டார் காந்தி. அவரால் வழிநடத்தப்பட்ட காங்கிரசும், அவரது வழிப்பற்றாளர்களும், ஏன் இந்தியா முழுமைக்கும் - காந்தியின் "இந்து மகா ஆன்மா'வின் கட்டளைகளால்தான் நெறிப்படுத்தப்பட்டன.
இந்திய வரலாற்றில் 1932இல்தான் ஜனநாயகத்திற்கான அடிப்படை இடப்பட்டது. இங்கிலாந்து மன்னர் அரசாங்கத்தின் பிரதமர் ஜே. ராம்சே மெக்டொனால்டு அறிவித்த இனவாத தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அதைத் தனது வன்மம் மிகுந்த பட்டினிப் போராட்டத்தால் தடுத்து நிறுத்தினார் காந்தி. அதற்கு அவர் முன்வைத்த காரணம், முழுக்க முழுக்க இந்து மத உணர்வின் பாற்பட்டதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கில அரசு அளித்த "இரட்டை வாக்குரிமை' இந்து மதத்திற்குத் தீங்கிழைக்கக் கூடியது; இந்து சமூகத்திடமிருந்து அம்மக்களை அது நிரந்தரமாகப் பிரித்துவிடும் என்று பேசியது காந்தியின் "இந்து ஆத்மா'. இரட்டை வாக்குரிமையை இழந்த போதிலும், இந்திய மண்ணில் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு அரசியல் - ஆட்சி - அதிகார உரிமையை பூனா ஒப்பந்தத்தின் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர் நிரந்தரமாக்கினார். அது, இந்தியாவின் எதிர்கால அரசியலில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயலாக அமைந்தது.
காந்தியின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே சாதி இந்து காங்கிரஸ் தலைவர்கள், பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர் என்று சொன்னால் அது மிகையாகிவிடாது. அவர்களின் "இந்து ஆத்மா' தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி என்பதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. அத்தகையோரின் வாரிசுகளிடமே இன்றைய ஜனநாயக அமைப்பு முறையும் சிக்குண்டு கிடக்கின்றது. அவர்களின் "இந்து மத உணர்வு' இந்து தத்துவங்களிலிருந்து ஒருபோதும் விலகிச் செல்லாது. ஜனநாயகத்தின் அடிப்படை ஊற்றுக் கண்களாக இருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான உளவியல் - மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால், முகிழ்த்த கொஞ்ச நஞ்ச ஜனநாயக மதிப்பீடுகள் கூட மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்து மத தத்துவார்த்தங்கள் இம்மண்ணில் நீடிக்கும் வரை, இந்திய ஜனநாயகம் ஒரு போதும் மலர்ச்சி பெறப்போவதில்லை. ஒரு சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்குமானால், சாதி அமைப்புமுறை இந்நேரம் தூக்கி எறியப்பட்டிருக்கும். மாறாக, அது ஒரு மதத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதை இந்தியாவின் சாபக்கேடு என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்து மதம், சாதி அமைப்பு முறையை அங்கீகரித்ததன் மூலம், தன்னளவிற்கான நீண்ட நெடிய ஆயுளை அதற்குக் கொடுத்திருக்கிறது. எனவேதான், ஜனநாயகத்தை வலியுறுத்தும் இந்திய அரசமைப்பினால், சாதி அமைப்பு முறை எவ்வித சேதாரம் இல்லாமல் நீடித்து வருகிறது.
இத்தகைய சமூகப் படிப்பினைகளுடன் இந்திய ஜனநாயகத்தை ஆய்வு செய்யப் புகுவோமானால், அது உண்மையான சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் இயங்கவில்லை என்பது விளங்கும். மேலும், எவ்வித ஜனநாயக மரபுகளும் இந்தியச் சமூகத்தில் இதுவரை வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதும் புலனாகும். கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் இந்திய ஜனநாயக அமைப்பிற்கு அதிர்ச்சியளிக்கும் கெடுதல் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது, உலகளாவிய ஜனநாயக மாண்புகளை இந்திய மண்ணில் உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய ஜனநாயகம், "இந்து' ஜனநாயகமாக உருமாற்றம் அடைந்து நிற்கிறது.
எவ்வித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், ஆட்சி அதிகாரக் கைமாறல்களைக் கூட நிகழ்த்தாமல், சாதி அமைப்பு முறைக்கும் அதன் கேடுகளுக்கும் எந்தத் தடையும் ஏற்படுத்தாமல், வறுமையையும் அறியாமையையும் கூட அகற்றாமல், அரை நூற்றாண்டுக்காலம் ஒரு ஜனநாயகம் செயல்பட முடியும் எனில், அது எப்படி உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்? எனவேதான், இந்துக் கட்டமைப்புகளுடன் இணைந்து செல்கிற போலி ஜனநாயகமாக அது மாற்றப்பட்டு விட்டது என்கிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டம், ஒரு ஜனநாயக அமைப்பிற்கு வலுவான பாதுகாப்பையும், தடையின்றி செயலாற்ற வசதிகளையும் அளித்துள்ளது. எந்தவொரு மதச் சார்போடும் ஜனநாயகம் அமைந்துவிடக் கூடாது என்பதால், தன்னை ஒரு "மதச் சார்பற்ற குடியரசு' என்று அறிவிக்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், நடந்திருப்பது என்ன? அது "மதச் சார்புள்ள குடியரசாக'வே மாற்றப்பட்டுள்ளது.
"நிர்வாண சாமி'யின் காலில் விழுந்து வணங்குகிறார் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்; கொலைக் குற்றவாளியாக இருந்தாலும் சங்கரனிடம் தேடிச் சென்று அமைச்சர்கள் ஆசிபெறுகிறார்கள்; பணிபுரியும் அரசு அலுவலகங்களையும், பயணம் செய்யும் அரசு ஊர்திகளையும் - இந்துக் கோயில்களைப் போல் அலங்காரம் செய்து கொள்ளும் இந்திய ஆட்சிப் பணியாளர்கள்; வழக்கிற்குத் தீர்ப்பெழுதும் முன் "ராமஜெயம்' எழுதும் நீதிபதிகள்; நெற்றியில் நாமமிட்டுக் கொள்ளும் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் - இது போன்ற இந்து குறியீடுகளை வெளிப்படையாகத் தாங்கி நிற்பவர்களால் தான் - இந்திய ஜனநாயகம் இந்து ஜனநாயகமாக மாற்றப்பட்டிருக்கிறது.
சமூகத் தளத்தில், குடிமக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து விடாதபடி, பல்வேறு சாதிகளாய் பிரித்து வைத்திருக்கிறது இந்து மதம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதி இந்துக்களின் உள்ளத்தில் வெறுப்பு ஆழமாக வேரூன்றி உள்ளது. அது, ஒரு குடியரசு அமைப்பிலும், நிர்வாகத்திலும், நீதியிலும் தடையின்றி வெளிப்பட்டுத் தீங்கிழைக்கிறது. சாதி இந்துக்களுக்குள்ளேயும் கூட, அதே பாரபட்சமான, இணைய முடியாத பிளவு நீடித்து வருகிறது. எனவே, ஜனநாயகத்தின் அடிப்படையான சகோதரத்துவம் - சமூகத்தில் தழைப்பதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை.
மாறாக, ஏற்கனவே நிலவி வந்த சாதி அமைப்பு முறையில் அதிகாரம் பெற்றிருந்தவர்களும், சமூக மேலாதிக்கம் செலுத்தியவர்களும், நவீன ஜனநாயகத்தின் போக்கையே மாற்றி விட்டிருக்கிறார்கள். தங்களின் சுய லாபங்களுக்கும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றபடி ஜனநாயக நடைமுறையில் தலையிட்டு, அதைத் தங்களுக்கான கருவியாக மாற்றிக் கொண்டனர். அதனால் ஜனநாயகத்தின் பலன்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிட்டவில்லை. சாதி அமைப்பு முறையைப் போலவே ஜன நாயக அமைப்பு முறையும் அநீதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


சாதி அமைப்பு முறையை, இந்திய ஜனநாயகத்தால் வீழ்த்த முடியாமல் போனதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. சமூகத்தின் மீதும், மக்கள் மீதும் பேராதிக்கம் செலுத்திய இந்து மதத்தின் மீது "இந்திய குடியரசு' எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆங்கில ஆட்சியில் கடைப் பிடிக்கப்பட்டு வந்த "உள்ளதை உள்ளபடியே வைத்திருக்கும்' கொள்கையே குடியரசு இந்தியாவிலும் பின்பற்றப்பட்டது. அதனால், இந்து மதத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்தும் அதன் போக்கிலேயே விட்டு வைக்கப்பட்டன. சாதி அமைப்பு முறையை சட்டத்தின்படி ஒழித்துவிட புரட்சியாளர் அம்பேத்கர் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் "இந்து ஆத்மா'க்களால் தோற்கடிக்கப்பட்டன.

தீண்டாமை - இந்து மதக் குற்றமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நமது குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதை ஒரு சிறு தவறு போல சித்தரிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தடுக்கப்பட்ட தீண்டாமை, இந்து மதத்தின் பெயரால் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவேதான், இன்றளவும் இந்து மத நிறுவனங்களில் "தீட்டுப்பட்டவர்களாகவே' தாழ்த்தப்பட்ட மக்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தின் 372 - ஆவது பிரிவின்படி 97 சதவிகித மக்கள் "சூத்திரர்கள்' என்றுதான் அழைக்கப்படுகின்றனர். சூத்திரர்கள் என்பதற்கு இந்து மதம் அளிக்கும் விளக்கம் "வேசியின் மக்கள்' என்பதாகும். பல இடங்களில், குடிமக்கள் மீது அவமானகரமான கருத்தைக் கொண்டிருக்கும் படியும், இந்து மதத்தின் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் படியும் அரசமைப்புச் சட்டம்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் கிறித்துவம், சீக்கியம் போல இந்து மதத்தையும் ஒரு மதமாக அரசமைப்புச் சட்டம் கருதியது தான் ஜனநாயகத்திற்குக் கேடாக அமைந்துவிட்டது.

பெண்கள் மீது இந்து மதத்தின் "ஆச்சாரங்கள்' காட்டிவரும் கொடிய அடக்குமுறையை இந்திய மண்ணிலிருந்து அடியோடு ஒழிக்க, புரட்சியாளர் அம்பேத்கர் கொண்டுவந்த "இந்து சட்டவரைவு', சட்டமாக்கப்படாமலேயே கைவிடப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கவனிப்பற்று விடப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக, தான் கொண்டு வந்த இந்து சட்டத் தொகுப்பை சட்டமாக்க - இந்திய நாடாளுமன்றம் வழிவிடவில்லை என்பதைக் கண்டித்து, தனது சட்ட அமைச்சர் பதவியை உதறினார் அம்பேத்கர்.

இது போன்று வரலாறு நெடுகிலும், இந்து சாதி அமைப்பைத் தகர்க்க, அரசமைப்பு முறையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் திட்டமிட்டு முறியடிக்கப்பட்டன. அது சமூக சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, இந்திய சமூகத்தில் ஏற்படுத்த முனைந்தவர்களின் தோல்வியன்று; "இந்து ஜனநாயக'மாக இழிந்து நிற்கும் இந்திய ஜனநாயகத்தின் தோல்வியாகும்.

-யாக்கன்

 

Pin It